search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உங்களால் குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்க முடியாது.
    • கடந்த 70 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் மதத்தை பாதுகாக்க இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர்.

    லக்னோ:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது.

    5-வது கட்டமாக 49 தொகுதிகளுக்கு வருகிற 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேச மாநிலத்தில் 2 இடங்களில் பிரசாரம் செய்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    அசம்கரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்தியாவின் ஜனநாயக திருவிழா பற்றிய செய்திகள் உலக பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் வருவதை நான் முதல் முறையாக பார்க்கிறேன். இந்தியாவின் அடையாளம் உலகிற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களின் ஆசீர்வாதம் இருப்பதை உலகமே உற்று நோக்குகிறது.

    குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாடியும் சி.ஏ.ஏ. (குடியுரிமை திருத்த சட்டம்) குறித்து பொய்களை பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தன.

    உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் கலவரத்தை ஏற்படுத்தி அவர்கள் தங்களால் இயன்றவரை எரிக்க முயன்றன. இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் மோடி சி.ஏ.ஏ. கொண்டு வந்தார். அவர் போகும் நாளில் சி.ஏ.ஏ. அகற்றப்படும் என்று கூறுகிறார்கள்.

    நீங்கள் ஒரு ஏமாற்றுக்காரர். நாட்டை வகுப்பு வாத தீயில் எரிய செய்தீர்கள்.

    நாட்டில் எங்கிருந்தும் பலத்தை திரட்டி உங்களால் முடிந்ததை செய்யுங்கள். உங்களால் குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்க முடியாது.

    மகாத்மா காந்தியின் பெயரை கூறிக் கொண்டு அவர்கள் (காங்கிரஸ்) அதிகார படிக்கட்டுகளில் ஏறுகிறார்கள். ஆனால் காந்தியின் வார்த்தை அவர்களுக்கு நினைவில் இல்லை.

    இந்த மக்கள் (அண்டை நாடுகளில் வசிக்கும் சிறுபான்மையினர்) எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வரலாம் என்று மகாத்மா காந்தியே உறுதி அளித்தார்.

    கடந்த 70 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் மதத்தை பாதுகாக்க இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் அவர்கள் வாக்கு வங்கியாக இல்லாததால் அவர்களை பற்றி சிந்திக்க காங்கிரஸ் கவலைப்படவில்லை.

    உங்கள் (காங்கிரஸ்) முகமூடியை அவிழ்த்தது மோடிதான். நீங்கள் ஒரு கபடவாதி. வகுப்புவாதி. இந்த நாட்டை 60 ஆண்டுகளாக மதவெறியில் விட்டு விட்டீர்கள்.

    நான் தெளிவாக சொல்கிறேன். இது மோடியின் உத்தரவாதம். மோடியின் உத்தரவாதம் மீது இந்திய மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

    370-வது சட்டப்பிரிவை திரும்ப கொண்டு வந்து வாக்கு வங்கி அரசியலை யாராலும் செய்ய முடியாது. ஸ்ரீநகரில் நடந்த வாக்குப்பதிவில் மக்கள் காட்டிய உற்சாகம் இதன்மூலம் நிரூபணமாகி உள்ளது.

    நாட்டின் பட்ஜெட்டை பிரித்து சிறுபான்மையினருக்கு 15 சதவீதம் ஒதுக்க காங்கிரசும், சமாஜ்வாடியும் விரும்புகின்றன.

    யோகி ஆதித்யநாத் உ.பி.யில் மாபியா, கலவரக்காரர்கள் மற்றும் மிரட்டி பணம் பறிப்பு ஆகியவற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக ஆட்சியை நடத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மக்களுக்கு தீங்கு விளைவிக்கிற தரம் தாழ்ந்த நச்சு கருத்துகளை பிரதமர் மோடி பேச, பேச அவரது தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது.
    • இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிற காலம் ஏற்படுவதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலின் 4 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்து வருவதை சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் மோடி, தமது பரப்புரையில் முன்னுக்குப்பின் முரணான கருத்துகளை கூறிவருகிறார். தொடக்கத்தில் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை முஸ்லிம்களின் தேர்தல் அறிக்கையைப் போல் இருப்பதாக கூறினார். பிறகு, முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகள் பெறுபவர்கள் என்றும் முத்திரை குத்தி, தனியாரிடம் இருக்கும் செல்வங்களை கைப்பற்றி முஸ்லிம்களுக்கு மறுவிநியோகம் செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாகவும், அவதூறான கருத்துகளை கூறினார். ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுகள் நியாயமற்றவை என்ற அடிப்படையில் மக்களால் நிராகரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஒன்றிய பட்ஜெட்டில் 15 சதவிகிதத்தை சிறுபான்மையினருக்கு ஒதுக்க காங்கிரஸ் விரும்புகிறது என்று நேற்று பிரதமர் மோடி மும்பையில் குற்றம்சாட்டி பேசியிருக்கிறார். இதற்கு என்ன ஆதாரம் என்று தெரியவில்லை? காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பொறுத்தவரை இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களும் சம உரிமையோடு, சம வாய்ப்போடு வாழ்வதற்கான உறுதிமொழிகளை தான் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கிற வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால், பிரதமர் மோடி தனது அவதூறு பிரசாரத்தின் மூலம் மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார். அதில் அவர் நிச்சயம் வெற்றி பெற முடியாது என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது.

    பாராளுமன்ற தேர்தல் தொடங்கியதில் இருந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசி வந்த பிரதமர் மோடி, திடீரென அளித்த பேட்டியில் இந்து, முஸ்லிம் பாகுபாடு அரசியல் செய்ய மாட்டேன். அப்படி அரசியல் செய்யும் நாளில் நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவன் ஆகிவிடுவேன் என்று திடீரென தனது கருத்தை மாற்றிக் கொண்டு அந்தர் பல்டி அடித்திருக்கிறார். இதற்கு என்ன காரணமென்றால் மக்களை மதரீதியாக பிளவுபடுத்துவதை எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு எதிராக தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட பரப்புரையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதோடு, இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள 50 சதவிகித வரம்பை உயர்த்துவோம் என்று கூறியதற்கு பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின சமுதாயத்தினரிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், மக்களவை தேர்தல் அரசியல் சூத்திரம் தலைகீழாக மாறி வருகிறது.

    எனவே, மக்களுக்கு தீங்கு விளைவிக்கிற தரம் தாழ்ந்த நச்சு கருத்துகளை பிரதமர் மோடி பேச, பேச அவரது தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது. ராகுல்காந்தி தனது பரப்புரையில் கூறியுள்ளதை போல, 2024 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி ஆட்சி அகற்றப்பட்டு, இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி என்பதே இன்றைய தேர்தல் களம் கூறுகிற செய்தியாகும். இதன்மூலம் இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிற காலம் ஏற்படுவதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மக்கள் எழுந்து நின்று அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும்.
    • குடிமக்கள் முன் வராவிட்டால் பரேலியில் நடந்தது போல உரிமைகள் பறிக்கப்பட்டு சுயமரியாதை நசுக்கப்படும்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.

    இங்குள்ள பரேலி தொகுதியில் கடந்த 7-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

    இந்த தொகுதியில் தலித் வாலிபர் ஒருவர் பா.ஜனதாவுக்கு ஓட்டு போடாமல் இருந்ததாக கூறி கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார். பா.ஜனதாவினர் அவர் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

    காங்கிரஸ் எம்.பி.யும், ரேபரேலி தொகுதி வேட்பாளருமான ராகுல் காந்தி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி இது தொடர்பாக பா.ஜனதாவை கடுமையாக சாடியுள்ளார். அவர் இது குறித்து தனது எக்ஸ் தளப்பதிவில் கூறி இருப்பதாவது:-

    நாங்கள் அனைவரும் இந்த வீடியோவை பார்த்து இருக்கிறோம். இது வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. கோபமாகவும் உணர்ந்தோம். எங்கள் நாட்டு மக்களுக்கு என்ன நடக்கிறது.

    பா.ஜனதா அரசு அரசியலமைப்பு உரிமைகளை அழிக்கிறது. காவி கட்சி அரசியல் அமைப்பை மாற்ற விரும்புகிறது. இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறது.

    மக்கள் எழுந்து நின்று அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும். குடிமக்கள் முன் வராவிட்டால் பரேலியில் நடந்தது போல உரிமைகள் பறிக்கப்பட்டு சுயமரியாதை நசுக்கப்படும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    ராகுல் காந்தி வெளியிட்டு உள்ள மற்றொரு பதிவில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜனதா பொய்களின் தொழிற்சாலையாகும். நான் மீண்டும் சொல்கிறேன். ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு நரேந்திரமோடி பிரதமராக முடியாது. இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் புயல் வீசுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    • அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு இது மூன்றாவது தேர்தல் ஆகும்.
    • ஸ்மிருதி இரானி அமேதியை தனது குடும்பமாக கருதுகிறார்.

    நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஸ்மிருதி இரானி தற்போது ஜவுளித்துறை மந்திரியாக உள்ளார். அவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தையும் வைத்திருக்கிறார்.

    2003-ல், இரானி பாஜ.க.வில் சேர்ந்தார். அடுத்த ஆண்டு, அவர் 2004-ல் மகாராஷ்டிர இளைஞர் பிரிவில் துணைத் தலை வராகப் பொறுப்பேற்றார். அதே ஆண்டு நடைபெற்ற 14-வது மக்களவைக்கான பொதுத் தேர்தலின் போது, அவர் டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் வெற்றிபெறவில்லை.

    2004 டிசம்பரில், பா.ஜனதாவின் தேர்தல் தோல்விக்கு அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் காரணம் என்று கூறிய இரானி, அவர் ராஜினாமா செய்யும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மிரட்டினார். இருப்பினும், பா.ஜ.க.வின் மத்திய தலைமையின் சாத்தியமான நடவடிக்கை யின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அவர் இந்த கோரிக்கையை வாபஸ் பெற்றார்.

    கட்சிக்கு இரானி செய்த பங்களிப்புகள் அவரை பா.ஜ.க.வின் மத்திய குழுவின் செயற்குழு உறுப்பினராக நியமிக்க வழிவகுத்தது. 2009-ம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலின்போது தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

    2010-ம் ஆண்டின் தொடக்கத்தில், இரானி பா.ஜ.க.வின் தேசிய செயலா ளராக நியமிக்கப்பட்டார், மேலும் ஜூன் 24 அன்று, பா.ஜ.க.வின் மகளிர் பிரிவான பா.ஜ.க. மகிளா மோர்ச்சாவின் அகில இந்தியத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

    2011-ல், இரானி பாராளு மன்றத்தில் அறிமுகமானார், குஜராத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் மேல்சபை எம்.பி. ஆக பதவியேற்றார்.

    2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலில், ராகுல் காந்தியை எதிர்த்து உத்தரப்பிர தேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் இரானி போட்டியிட்டார். துரதிர்ஷ்ட வசமாக, அவர் ராகுலிடம் 107,923 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

    என்றாலும் பிரதமர் நரேந்திர மோடி தனது மந்திரி சபையில் மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரியாக ஸ்மிருதி இரானியை நியமித்தார்.

    மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரியாக இரானி பதவி வகித்த காலத்தில், பல்கலைக்கழகங்களில் சீர்திருத்தங்களைத் தொடங்கினார்.

    2016-ல், ஆறு கூடுதல் பல்க லைக்கழகங்களில் புதிய யோகா துறைகளை நிறுவுவதாக அறிவித்தார்.

    2016-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த அமைச்சரவை மாற்றத்தில், இரானி மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் இருந்து ஜவுளித் துறைக்கு மாற்றப்பட்டார்.

    2017-ம் ஆண்டு துணை ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் வெங்கையா நாயுடு ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

    2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில், இரானி அமேதியில் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றார், ராகுல் காந்தியை தோற்கடித்தார்.

    தற்போது மீண்டும் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியை பா.ஜ.க. மேலிடம் களம் இறங்கி உள்ளது.

    இந்த நிலையில் அவர் அமேதி தொகுதியில் குடும்ப உறவுகளை ஏற்படுத்துவதாக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, அமேதி தொகுதியில் வாக்காளராக மாறியுள்ளார்.

    அமேதி தொகுதியில் உள்ள கவுரிகஞ்ச் பகுதியில் உள்ள மேடன் மாவாய் கிராமத்தில் தனக்கென ஒரு வீட்டைப் பெற்று வாக்காளராக விண்ணப்பித்தார். அவர் இப்போது கிராமத்தின் வாக்காளராக மாறியுள்ளார்.

    ஸ்மிருதி இரானி அமேதியை தனது குடும்பமாக கருதுகிறார். அமேதி குடும்பத்தின் மத்தியில் வாழ்வதற்காக அவர் தனது குடியிருப்பை இங்கு கட்டியுள்ளதாக கூறியுள்ளார்கள்.

    அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு எதிராக ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட்டு இருந்தால் ஏற்பட்டிருக்கும் களத்தின் விறுவிறுப்பு, தற்போது போட்டியில்லை என்பதால் ஏமாற்றம் அளிக்கிறது.

    அதே நேரத்தில், இந்த முறை போட்டி ஒரு புதிய முனையைக் கொண்டுள்ளது: "பியூன்" என்று அழைக்கப்படுபவருக்கும் ஒரு மத்திய மந்திரியும் இடையிலான யுத்தம்.

    இங்கு காந்தியின் தேர்தல் பிரசாரங்களை 40 ஆண்டுகளாக நிர்வகித்து, பா.ஜ.க.வால் "பியூன்" என்று அழைக்கப்பட்ட முகம் தெரியாத காங்கிரஸ் தேர்தல் மேலாளர் கே.எல்.சர்மா போட்டியிடுகிறார். மறுபுறம், ஸ்மிருதி இரானி தன்னைப் போராடி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த மந்திரியாக காணப்படுகிறார், அதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

    சர்மாவின் காந்தி குடும்ப பக்தி அவரது வலிமையான மற்றும் பலவீனமான புள்ளிகள் என்றால், பா.ஜ.க தொண்டர்கள் ஸ்மிருதி இரானியின் செல்வாக்கு மற்றும் அது அவர்களுக்கு எவ்வாறு பலனளிக்கும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு இது மூன்றாவது தேர்தல் ஆகும், 2014 இல் ராகுலிடம் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, 2019-ல் சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    அமேதியில் தான் தொடர்ந்து முன்னிலையில் இருப்பது போன்ற தோற்றத்தை மட்டுமே ஸ்மிருதி இரானி ஏற்படுத்தி வருகிறார். உண்மையில் ஸ்மிருதி இரானிக்கு எதிரான சில அதிருப்தியை அமேதியில் காண முடிகிறது.

    காங்கிரஸ் தனது பிரச்சாரத்தில், அமேதியில் காங்கிரஸ் ஆட்சியின் போது தொடங்கப்பட்டு பா.ஜ.க. ஆட்சியின் கீழ் தடுக்கப்பட்ட திட்டங்களை மேற்கோள் காட்டுகிறது, டிரிபிள் ஐ.ஐ.டி 2016-ல் மூடப்பட்டு பிரயாக்ராஜுக்கு மாற்றப் பட்டது. மெகா புட் பார்க்' மற்றும் ஒரு காகித ஆலை, ஒருபோதும் வெளிச் சத்தைக் காணவில்லை. "பழிவாங்கும் அரசியல்" என்று கூறி, ராஜீவ் காந்தி காலத்தில் வந்த பி.ஹெச்.இ.எல், எச்.ஏ.எல், ஆர்டினன்ஸ் பேக்டரி, சிமென்ட் ஆலை போன்ற திட்டங்களை வாக்காளர்களிடம் காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது.

    அமேதியில் புதிய கோகோ கோலா பாட்டில் ஆலை பற்றி ஸ்மிருதி இரானி பேசுகிறார், மேலும் காந்தி குடும்பம் 50 ஆண்டுகள் தொகுதியில் இருந்தபோதிலும், தனக்கு 5 ஆண்டுகள் மட்டுமே இருந்ததாகக் குறிப்பிட்டு, மேலும் ஆதரவு தேடுகிறார். இப்போது அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு சொந்தமாக வீடு உள்ளது என்பதை அவரும் பா.ஜ.க.வினரும் குறிப்பிடுகின்றனர். மற்றும் விரைவில் பிரதமர் மோடி அமேதியில் திட்டமிடப்பட்ட பிரசார பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

    மறுபுறம், காங்கிரசின் அமேதி மற்றும் ரேபரேலி (ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதி) பிரச்சாரங்களை பிரியங்கா பொறுப்பேற்றுள்ளார். பிரியங்கா ஏற்கனவே சர்மாவுடன் அமேதியில் 15க்கும் மேற்பட்ட "தெருமுனை சந்திப்புகளை செய்திருப்பதால், அவரது நுழைவு காங்கிரஸ் பிரசாரத்தை உற்சாகப்படுத்தியுள்ளது என்று கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

    அமேதியுடன் தனது குடும்பத்தின் பழைய தொடர்பை பிரியங்கா தொடர்ந்து வலியுறுத்துகிறார். ராஜீவ் காந்தியால் அமேதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சர்மாவுக்கு தொகுதியின் ஒவ்வொரு பாதையும் தெரியும் என்கிறார் பிரியங்கா.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்மிருதி இரானியும் கிராமம், கிராமமாக சென்று ஓட்டு வேட்டையாடி வருகிறார். அவர் வெற்றி உறுதி என்று பா.ஜ.க. நம்புகிறது. அவர் எத்தனை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்று எதிர்பார்த்து காத்திருப்பதாக பா.ஜ.க.வினர் கூறி வருகிறார்கள்.

    • தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
    • தமிழகத்துக்கு ராகுல் வந்தபோது நாம் சீட்டுக்காக கையேந்தும் நிலையில் இருப்பதை பார்த்து கவலை தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் காங்கிரஸ் திராவிட கட்சிகளின் தயவில்தான் நிற்க முடியும் என்ற நிலை உருவாகி அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆகிவிட்டது.

    இந்த காலகட்டத்தில் பல தலைவர்கள் பொறுப்புக்கு வந்தும் கட்சியை நகர்த்த முடியவில்லை.

    புதிதாக பொறுப்புக்கு வந்திருக்கும் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கட்சியை கட்டமைத்து தூக்கி நிறுத்தப் போவதாக மாவட்டம் வாரியாக சென்று கொண்டிருக்கிறார். அக்னி தலமான திருவண்ணாமலையில் இருந்து தனது அக்னி பிரவேசத்தை தொடங்கினார். இன்று தர்மபுரியில் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

    தொண்டர்களிடம் பேசும் போது கட்சியின் நிலைமையை சொல்லி கவலைப்பட்டார். அவர் பேசும்போது,

    1967-ம் ஆண்டில் இருந்து 57 ஆண்டுகள் ஏமாந்தது போதும். தேர்தல்களில் தொகுதிகளை கேட்கும் நிலையில் இருந்து தொகுதிகளை பிரித்து கொடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் வளர வேண்டும். காமராஜர் ஆட்சி மீண்டும் மலர பாடு பட வேண்டும். 57 ஆண்டுகள் நாம் அமைதியாக காத்திருந்தோம். இன்னும் 2 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதுவரை நாம் அமைதியாக இருக்க வேண்டும்.

    இத்தனை ஆண்டுகள் வீணாகி விட்டது. வீணாக பதவியை பெற்று பலர் வீட்டில் தூங்குகிறார்கள். பணத்தை பெற்றுக் கொண்டு பதவி கொடுத்தால் குடும்பம் நாசமாகிவிடும்.

    கொடி பிடிக்க கூட இன்று தயங்குகிறார்கள். இருப்பது கொஞ்சம் பேர்தான். அதற்குள் இத்தனை கோஷ்டிகளா? அவமானமாக இருக்கிறது. பணம் இருந்தால் பதவி பெற்றுவிடலாம் என்ற நினைப்பு இருந்தால் இன்றோடு அதை மாற்றி விடுங்கள். உழைத்தால் பதவி தேடி வரும்.

    ஒரு நொடி கூட இனி தாமதிக்காமல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

    எவ்வளவு காலம் இன்னொரு கட்சியிடம் எங்களுக்கு தொகுதிகள் கொடுங்கள் என கையேந்தி நிற்பது தமிழகத்துக்கு ராகுல் வந்தபோது நாம் சீட்டுக்காக கையேந்தும் நிலையில் இருப்பதை பார்த்து கவலை தெரிவித்தார். ஒரு காலத்தில் நாம் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை பங்கிட்டு கொடுத்தோம். அந்த நிலையை மீண்டும் நாம் ஏற்படுத்த வேண்டும். மீண்டும் காமராஜர் ஆட்சி என்பதில் குறியாக இருப்போம் எனக் கூறினார்.

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளே இருக்கும் நிலையில் செல்வப்பெருந்தகையின் இந்த அதிரடி பேச்சுகள் மூலம் கூட்டணி என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது பற்றி கட்சி நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் வேறு விதமாக சொன்னார். அவர் கூறியதாவது:-

    இருக்கும் கொஞ்சம் பேரை தேர்தல் வரை உசுப்பேற்றி அழைத்து செல்வதுதான். வடிவேல் பாணியில் சொல்வ

    தென்றால் இதெல்லாம் 'சும்மா...' என்கிறார் நகைச்சுவையாக.

    • இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்ததும் ஜாதி அடிப்படையில் நாடு தழுவிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
    • பா.ஜனதா தலைமையிலான அரசு அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி ஆகியவற்றை மிகவும் தவறாக வழி நடத்துகிறது.

    காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று ராஞ்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதம் அடிப்படையில் வாக்காளர்களை பிரித்தவர் பிரதமர் மோடி. தற்போது இந்து- முஸ்லிம் அரசியல் பற்றி பேசவில்லை என பொய் சொல்கிறார். பிரதமர் மோடி தற்போது அவுட்கோயிங் (வெளியேறும்) பிரதம மந்திரியாகியுள்ளார். தொடக்க கால வாக்குப்பதிவுக்குப் பிறகு அவரின் விரக்தி இதை காட்டுகிறது. அமித் ஷா அவுட்கோயிங் உள்துறை மந்திரி. ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு பொய்கள் என்ற தொற்றில் இருந்த நாம் விடுபடுவோம்.

    இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்ததும் ஜாதி அடிப்படையில் நாடு தழுவிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்படும். பா.ஜனதா தலைமையிலான அரசு அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி ஆகியவற்றை மிகவும் தவறாக வழி நடத்துகிறது. அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்.

    நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் பா.ஜனதா அரசு மிகவும் பலவீனமாக காணப்பட்டது. இந்தியா கூட்டணி ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டது. நாங்கள் இந்த தேர்தலில் அதுபோன்ற நிறுவனங்களை பாதுகாக்க போராடி வருகிறோம். வளங்கள் பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறித்து காங்கிரஸ் பேசாது. ஆனால், உள்ளடக்கிய பகிர்ந்தளிப்பு பேசியது.

    இவ்வாறு ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தேசிய செயலாளராக இருந்த ராதிகா கெரா கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகினார்.
    • காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ராதிகா கேரா பாஜகவில் இணைந்தார்.

    காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தேசிய செயலாளராக இருந்த ராதிகா கெரா கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிய ஊடகப் பிரிவு தேசிய செயலாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பர பிரிவு தலைவர் பவன் கெரா வெளியிட்டுள்ளார்.

    • ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா அரசியலில் இருந்து விலகுவதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்
    • ஜெயந்த் சின்ஹா பாஜக அரசில் மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

    பாஜக எம்.பி ஜெயந்த் சின்ஹாவின் மகன் ஆஷிர் சின்ஹா இன்று ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    பருவ நிலை மாற்றம் தொடர்பாக பணியாற்றவுள்ளதா கூறி, ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா அரசியலில் இருந்து விலகுவதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

    ஜெயந்த் சின்ஹா பாஜக அரசில் மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், ஜெயந்த் சின்ஹா எம்.பி ஆக உள்ள ஹசாரிபாக் தொகுதியில் அவருக்கு பதிலாக ஹசாரிபாக் சதார் தொகுதி எம்.எல்.ஏ மனிஷ் ஜெய்ஸ்வாலை வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது.

    1998 ஆம் ஆண்டிலிருந்து ஜெயந்த் சின்ஹா குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஹசாரிபாக் தொகுதியில் போட்டியிட்டு வந்த நிலையில், இந்த தேர்தலில் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி - அதானியை வசைபாடுவதை ராகுல்காந்தி நிறுத்திவிட்டார் என மோடி பேசியிருந்தார்.
    • "மோடி தனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசுகிறாரா?" என ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

    அண்மையில் பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்தார். கரீம்நகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது "காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) ரபேல் விவகாரத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக 5 தொழிலதிபர்கள் பற்றியே பேச ஆரம்பித்தார்.

    பின்னர் அவர் அம்பானி, அதானி பற்றி பேசினார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி- அதானியை வசைபாடுவதை நிறுத்திவிட்டார்.

    காங்கிரஸ் கட்சிக்கு டெம்போ லோடு பணம் வந்து சேர்ந்ததா?. ஒரே இரவில் அம்பானி- அதானியை வசைபாடுவதை நிறுத்திய நீங்கள் என்ன ஒப்பந்தம் செய்தீர்கள்" என்று பிரதமர் மோடி பேசினார்.

    அந்த சமயத்தில், "மோடி தனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசுகிறாரா?" என ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ராகுல்காந்தி மீண்டும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "இன்று நான் லக்னோ விமான நிலையத்தில் இருக்கிறேன். லக்னோ, மும்பை, அகமதாபாத், மங்களூரு, கவுகாத்தி, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் வரை அனைத்து விமான நிலையங்களையும் 50 ஆண்டுகளுக்கு பிரதமர் தனது 'டெம்போ நண்பர் அதானியிடம் ஒப்படைத்துள்ளார். இதற்கு எத்தனை டெம்போவில் காசு வாங்கினீர்கள் என்பதை நரேந்திர மோடி பொதுமக்களிடம் சொல்வாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

    அதானியும் அம்பானியும் காங்கிரஸ் கட்சிக்கு கறுப்புப் பணம் தருகிறார்கள் என்று 5 நாட்களுக்கு முன்பு தானே மோடி கூறினார். எப்போது சிபிஐ, அமலாக்கத்துறையை அனுப்ப போகிறீர்கள். சீக்கிரமாக விசாரணையை ஆரம்பியுங்கள்" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    மேலும் விமான நிலையத்தில் இருந்த அதானி நிறுவனத்தின் விளம்பரங்களையும் சுட்டிக் காட்டி அவர் விமர்சனம் செய்துள்ளார்.

    • கட்சி ரீதியாக மொத்தம் 78 மாவட்டங்கள் உள்ளன.
    • அழகிரியின் ஆதரவாளர்களாக 40 மாவட்ட தலைவர்கள் இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரசுக்கு புதிய மாநில தலைவர்கள் வந்ததும் அவர்களது ஆதரவாளர்களை மாவட்ட தலைவர்களாக நியமிப்பது வழக்கம்.

    தற்போது செல்வப்பெருந்தகை தேர்தல் நேரத்தில் பொறுப்பேற்றதால் நிர்வாகிகள் யாரையும் மாற்றவில்லை.

    இந்த நிலையில் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணுவதற்கு 20 நாட்கள் இருப்ப தால் இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி புதிய மாவட்ட தலைவர்களை தேர்வு செய்ய செல்வப்பெருந்தகை திட்டமிட்டுள்ளார். இதற்காக நேற்று முதல் மாவட்ட வாரியாக சென்று ஆய்வு கூட்டங்கள் நடத்தி வருகிறார். நேற்று திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். இன்று திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆய்வு செய்தார்.

    இந்த கூட்டங்களில் தற்போதைய மாவட்ட தலைவர்களின் செயல்பாடு பற்றியும், தொடர்ந்து பதவியில் அவர்களை நீட்டிக்கலாமா என்பது பற்றியும் ஆலோசிக்கிறார்கள். கட்சி ரீதியாக மொத்தம் 78 மாவட்டங்கள் உள்ளன. கடந்த முறை கே.எஸ்.அழகிரி மாநில தலைவராக பொறுப்பேற்றதும் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், இளங்கோவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாவட்ட தலைவர் பதவிகளை வழங்கினார். அவர்களின் சிபாரிசுப்படி அந்த மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

    அழகிரியின் ஆதரவாளர்களாக 40 மாவட்ட தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களை மாற்றிவிட்டு தனது ஆதரவாளர்களை நியமிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி புதிதாக மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

    ஓட்டு எண்ணிக்கை ஜூன் 3-ந்தேதி முடிந்ததும் புதிய தலைவர் நியமனம் உடனடியாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.

    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து உழைக்கும் பெண்களுக்கும் வருடத்திற்கு 1 லட்சம் வழங்கப்படும் அறிவித்திருந்தது.
    • இந்த மாற்றம் உங்கள் ஒவ்வொருவரின் ஒற்றை ஓட்டுகளால் உண்டாகும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    ஜூலை 1, 2024 அன்று, அனைத்து உழைக்கும் குடும்பத்தை சேர்ந்த பெண்களின் வங்கி கணக்கிலும், ரூ. 8,500 போடப்படும் என ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    மேலும், இது ஜூலை முதல் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் என்றும் இந்த மாற்றம் உங்கள் ஒவ்வொருவரின் ஒற்றை ஓட்டுகளால் உண்டாகும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து உழைக்கும் பெண்களுக்கும் வருடத்திற்கு 1 லட்சம் வழங்கப்படும் என்று அக்கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் அந்த 1 லட்ச ரூபாயை 12 பங்காக பிரித்து மாதம் 8,500 ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார். 

    • தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது.
    • இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி. லோகூர், அஜித் பி.ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என். ராம் ஆகியோர் பாராளுமன்றத் தேர்தலின் முக்கிய பிரச்சனைகள் குறித்து பொது தளத்தில் விவாதம் நடத்த பிரதமர் மோடிக்கும், ராகுல் காந்திக்கும் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினர்.

    இந்த கடிதம் கிடைத்தவுடனே அழைப்பை ஏற்றுக் கொண்ட ராகுல்காந்தி, பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் என நேற்று முன்தினம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். இந்நிலையில் இதுவரை பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

    அத்தகைய விவாதத்தை நடத்துவதற்கு நரேந்திர மோடிக்கு துணிவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மடியில் கனம் இருப்பதால் ராகுல்காந்தியுடன் விவாதிக்க நரேந்திர மோடி தயாராக இல்லை.

    விலைவாசி உயர்வு, வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மறுப்பு, பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு, கொரோனா தொற்றினால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பு, பொருளாதார பாதிப்பு, மோடியின் சலுகையினால் அதானி, அம்பானி சொத்து குவிப்பு, ஏழை, எளியவர்களின் வாழ்வாதாரம் இழப்பு, மாநில உரிமைகள் பறிப்பு போன்ற நடவடிக்கைகள் காரணமாக நரேந்திர மோடி திரும்ப ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு கடுகளவு கூட இல்லை என்று அறிவார்ந்த அரசியல் வல்லுநர்களும், பாரபட்சமற்ற தேர்தல் கணிப்பாளர்களும் நாள்தோறும் கருத்துகளை கூறி வருகிறார்கள்.

    இதனால் பதற்றமும், அச்சமும் அடைந்த பிரதமர் மோடியும், பா.ஜ.க.வினரும் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி, அச்சுறுத்தி வெற்றி பெற்று விடலாம் என்கிற கனவை நாளுக்கு நாள் ராகுல்காந்தி தகர்த்து வருகிறார்.

    இதன்மூலம் தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது. இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது. இந்த பின்னணியில் தான் ராகுல்காந்தியோடு நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடி அஞ்சி பின் வாங்குவதில் வியப்பொன்றும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×