search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    57 வருடங்களாக காங்கிரசை வளர்க்காமல் விட்டு விட்டோம்- செல்வப்பெருந்தகை கவலை
    X

    57 வருடங்களாக காங்கிரசை வளர்க்காமல் விட்டு விட்டோம்- செல்வப்பெருந்தகை கவலை

    • தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
    • தமிழகத்துக்கு ராகுல் வந்தபோது நாம் சீட்டுக்காக கையேந்தும் நிலையில் இருப்பதை பார்த்து கவலை தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் காங்கிரஸ் திராவிட கட்சிகளின் தயவில்தான் நிற்க முடியும் என்ற நிலை உருவாகி அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆகிவிட்டது.

    இந்த காலகட்டத்தில் பல தலைவர்கள் பொறுப்புக்கு வந்தும் கட்சியை நகர்த்த முடியவில்லை.

    புதிதாக பொறுப்புக்கு வந்திருக்கும் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கட்சியை கட்டமைத்து தூக்கி நிறுத்தப் போவதாக மாவட்டம் வாரியாக சென்று கொண்டிருக்கிறார். அக்னி தலமான திருவண்ணாமலையில் இருந்து தனது அக்னி பிரவேசத்தை தொடங்கினார். இன்று தர்மபுரியில் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

    தொண்டர்களிடம் பேசும் போது கட்சியின் நிலைமையை சொல்லி கவலைப்பட்டார். அவர் பேசும்போது,

    1967-ம் ஆண்டில் இருந்து 57 ஆண்டுகள் ஏமாந்தது போதும். தேர்தல்களில் தொகுதிகளை கேட்கும் நிலையில் இருந்து தொகுதிகளை பிரித்து கொடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் வளர வேண்டும். காமராஜர் ஆட்சி மீண்டும் மலர பாடு பட வேண்டும். 57 ஆண்டுகள் நாம் அமைதியாக காத்திருந்தோம். இன்னும் 2 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதுவரை நாம் அமைதியாக இருக்க வேண்டும்.

    இத்தனை ஆண்டுகள் வீணாகி விட்டது. வீணாக பதவியை பெற்று பலர் வீட்டில் தூங்குகிறார்கள். பணத்தை பெற்றுக் கொண்டு பதவி கொடுத்தால் குடும்பம் நாசமாகிவிடும்.

    கொடி பிடிக்க கூட இன்று தயங்குகிறார்கள். இருப்பது கொஞ்சம் பேர்தான். அதற்குள் இத்தனை கோஷ்டிகளா? அவமானமாக இருக்கிறது. பணம் இருந்தால் பதவி பெற்றுவிடலாம் என்ற நினைப்பு இருந்தால் இன்றோடு அதை மாற்றி விடுங்கள். உழைத்தால் பதவி தேடி வரும்.

    ஒரு நொடி கூட இனி தாமதிக்காமல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

    எவ்வளவு காலம் இன்னொரு கட்சியிடம் எங்களுக்கு தொகுதிகள் கொடுங்கள் என கையேந்தி நிற்பது தமிழகத்துக்கு ராகுல் வந்தபோது நாம் சீட்டுக்காக கையேந்தும் நிலையில் இருப்பதை பார்த்து கவலை தெரிவித்தார். ஒரு காலத்தில் நாம் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை பங்கிட்டு கொடுத்தோம். அந்த நிலையை மீண்டும் நாம் ஏற்படுத்த வேண்டும். மீண்டும் காமராஜர் ஆட்சி என்பதில் குறியாக இருப்போம் எனக் கூறினார்.

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளே இருக்கும் நிலையில் செல்வப்பெருந்தகையின் இந்த அதிரடி பேச்சுகள் மூலம் கூட்டணி என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது பற்றி கட்சி நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் வேறு விதமாக சொன்னார். அவர் கூறியதாவது:-

    இருக்கும் கொஞ்சம் பேரை தேர்தல் வரை உசுப்பேற்றி அழைத்து செல்வதுதான். வடிவேல் பாணியில் சொல்வ

    தென்றால் இதெல்லாம் 'சும்மா...' என்கிறார் நகைச்சுவையாக.

    Next Story
    ×