என் மலர்tooltip icon

    இந்தியா

    நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி முயற்சி- பிரதமர் மோடி குற்றச்சாட்டு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி முயற்சி- பிரதமர் மோடி குற்றச்சாட்டு

    • உங்களால் குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்க முடியாது.
    • கடந்த 70 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் மதத்தை பாதுகாக்க இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர்.

    லக்னோ:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது.

    5-வது கட்டமாக 49 தொகுதிகளுக்கு வருகிற 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேச மாநிலத்தில் 2 இடங்களில் பிரசாரம் செய்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    அசம்கரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்தியாவின் ஜனநாயக திருவிழா பற்றிய செய்திகள் உலக பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் வருவதை நான் முதல் முறையாக பார்க்கிறேன். இந்தியாவின் அடையாளம் உலகிற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களின் ஆசீர்வாதம் இருப்பதை உலகமே உற்று நோக்குகிறது.

    குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாடியும் சி.ஏ.ஏ. (குடியுரிமை திருத்த சட்டம்) குறித்து பொய்களை பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தன.

    உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் கலவரத்தை ஏற்படுத்தி அவர்கள் தங்களால் இயன்றவரை எரிக்க முயன்றன. இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் மோடி சி.ஏ.ஏ. கொண்டு வந்தார். அவர் போகும் நாளில் சி.ஏ.ஏ. அகற்றப்படும் என்று கூறுகிறார்கள்.

    நீங்கள் ஒரு ஏமாற்றுக்காரர். நாட்டை வகுப்பு வாத தீயில் எரிய செய்தீர்கள்.

    நாட்டில் எங்கிருந்தும் பலத்தை திரட்டி உங்களால் முடிந்ததை செய்யுங்கள். உங்களால் குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்க முடியாது.

    மகாத்மா காந்தியின் பெயரை கூறிக் கொண்டு அவர்கள் (காங்கிரஸ்) அதிகார படிக்கட்டுகளில் ஏறுகிறார்கள். ஆனால் காந்தியின் வார்த்தை அவர்களுக்கு நினைவில் இல்லை.

    இந்த மக்கள் (அண்டை நாடுகளில் வசிக்கும் சிறுபான்மையினர்) எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வரலாம் என்று மகாத்மா காந்தியே உறுதி அளித்தார்.

    கடந்த 70 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் மதத்தை பாதுகாக்க இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் அவர்கள் வாக்கு வங்கியாக இல்லாததால் அவர்களை பற்றி சிந்திக்க காங்கிரஸ் கவலைப்படவில்லை.

    உங்கள் (காங்கிரஸ்) முகமூடியை அவிழ்த்தது மோடிதான். நீங்கள் ஒரு கபடவாதி. வகுப்புவாதி. இந்த நாட்டை 60 ஆண்டுகளாக மதவெறியில் விட்டு விட்டீர்கள்.

    நான் தெளிவாக சொல்கிறேன். இது மோடியின் உத்தரவாதம். மோடியின் உத்தரவாதம் மீது இந்திய மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

    370-வது சட்டப்பிரிவை திரும்ப கொண்டு வந்து வாக்கு வங்கி அரசியலை யாராலும் செய்ய முடியாது. ஸ்ரீநகரில் நடந்த வாக்குப்பதிவில் மக்கள் காட்டிய உற்சாகம் இதன்மூலம் நிரூபணமாகி உள்ளது.

    நாட்டின் பட்ஜெட்டை பிரித்து சிறுபான்மையினருக்கு 15 சதவீதம் ஒதுக்க காங்கிரசும், சமாஜ்வாடியும் விரும்புகின்றன.

    யோகி ஆதித்யநாத் உ.பி.யில் மாபியா, கலவரக்காரர்கள் மற்றும் மிரட்டி பணம் பறிப்பு ஆகியவற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக ஆட்சியை நடத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×