search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sterlite"

    வேதாந்தா நிறுவனம் வழங்கிய ரூ.100 கோடி வைப்புத்தொகையை முறையாக செலவழிக்காத விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். #Sterlite
    புதுடெல்லி:

    கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பி.சிவகுமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளின் மேம்பாட்டுக்காக வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் ரூ.100 கோடி வைப்புத்தொகை தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்டது.

    அந்த தொகை முறையாக செலவிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அந்த தொகையில் இருந்து இதுவரை வெறும் ரூ.7 கோடி மட்டுமே செலவிடப்பட்டு உள்ளது. எனவே, அந்த வைப்புத்தொகையை முறையாக செலவு செய்யாத தமிழக அரசு, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    விசாரணை தொடங்கியதும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #Sterlite #SterliteCopper #SupremeCourt
    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி ஒரே நேரத்தில் 45 ஆயிரம் பேர் எப்படி மனு அளித்தார்கள்? என்றும், ஆலையை திறந்தால் மீண்டும் போராடுவோம் என்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் தெரிவித்தனர். #ThoothukudiSterlite
    சென்னை:

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் மில்டன், சுரேஷ் சக்தி முருகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் இருக்கிறார்கள். இதுதொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை முழுமையாகவும், முறையாகவும் நடைபெற வேண்டும். தமிழக அரசு, பசுமை தீர்ப்பாயம் கமிட்டி முன்பு முறையாக விசாரணையை நடத்த வேண்டும்.

    நிலம், நீர், காற்று மாசுபட்டு இருக்கிறது என்ற ஆவணங்களை தொகுத்து தமிழக அரசு வழங்க வேண்டும். துப்பாக்கி சூட்டில் பலியான சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. போலீஸ் இதுவரை உரிய ஆவணங்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கவில்லை. உடனே சி.பி.ஐ. இதை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை தொடங்க வேண்டும். அப்படி சி.பி.ஐ. விசாரணையை தொடங்கும்போது, மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் முன்வந்து புகார் அளிப்பார்கள்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து தூத்துக்குடி மக்கள் சிலர் பேசினர். அதன் விவரம் வருமாறு:-

    பண்டாரம்பட்டியை சேர்ந்த சுரலி:-

    எங்கள் பகுதியில் 35 பெண்களுக்கு கர்ப்ப பை இல்லை. இதுபோல் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு ஸ்டெர்லைட் ஆலை தான் காரணம். அரசு, எங்கள் பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். கடந்த 23-ந் தேதி மனு கொடுக்க சென்றோம். அப்போது மனு பெறப்பட்ட இடத்தை சுற்றி ஆயிரம் போலீசார் நின்றார்கள்.

    இப்படி நின்றால் யார் மனு கொடுக்க வருவார்கள். அதுவும் தனித்தனியாக மனு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதற்கு 2 மணி நேரம் தான் கால அவகாசம் வழங்கினர். அந்த குறுகலான இடத்தில் 7 லட்சம் பேர் 2 மணி நேரத்தில் எப்படி தனித்தனியாக மனு அளிக்க முடியும்?. ஓட்டுப்போடுவதற்கு மட்டும் எத்தனை இடங்களை அமைத்து கொடுக்கும் அரசு, மனு அளிக்கும்போது அதுபோல் நிறைய இடங்களை ஒதுக்கினால் என்ன?

    ஆனால் சென்னையில் பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி ஒரே நேரத்தில் 45 ஆயிரம் பேர் மனு அளித்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள். அதை மட்டும் எப்படி அனுமதித்தார்கள்?. ஒருவேளை ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால், நாங்கள் மீண்டும் போராடுவோம். இனி அரசிடம் கோரிக்கை வைக்கமாட்டோம். கேள்வி தான் கேட்போம்.

    குமரெட்டியாபுரத்தை சேர்ந்த மகேஷ்:-

    கடந்த மே மாதம் 22-ந் தேதி வரை தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தான் செயல்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு கொடுத்த ஆணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மக்கள் வாழும் பகுதியில் இதுபோன்ற தொழிற்சாலை வைக்கக்கூடாது என்று அவசர சட்டம் இயற்ற வேண்டும். பசுமை தீர்ப்பாயத்தின் குழுவினரின் ஆய்வு வெறும் கண்துடைப்பு தான். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது.

    தெற்கு வீரபாண்டியபுரத்தை சேர்ந்த விஜயபாஸ்கர்:-

    என்னுடைய வீட்டில் 2 பேருக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையால் நோய் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை என்று பொய் சொல்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பணம், வேலை கொடுத்து சரிகட்டிவிடுகிறார்கள். என்னையும் அப்படி அழைத்தார்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சட்டமுறைப்படி எதையும் செய்ய முடியவில்லை. மீண்டும் ஸ்டெர்லைட் வரக்கூடாது. அப்படி வந்தால் தற்கொலைக்கு தான் போவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.   #ThoothukudiSterlite
    ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வாலா, அதிக மக்கள் ஆலைக்கு எதிராக இருப்பதாக தெரிவித்துள்ளார். #ThoothukudiSterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது.



    இதையடுத்து, தூத்துக்குடிக்கு வந்தடைந்த அந்த ஆய்வுக்குழு ஆலையை ஆய்வு செய்தது. பின்னர் இன்று அப்பகுதி மக்களிடம் கருத்துக்கள் அடங்கிய மனுக்களை பெற்றது. ஆலைக்கு ஆதரவு அளிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இந்நிலையில், மக்களின் மனுக்களை பெற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தருண் அகர்வால், மக்களிடம் கருத்துகள் அடங்கிய மனுக்களை பெற்றுவிட்டதாகவும், மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    தேவைப்பாட்டால் மீண்டும் ஆய்வு நடத்தப்படும் எனவும், மக்கள் பெரும்பாலானோர் மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இருப்பதாகவும் ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வால் கூறியுள்ளார்.

    தூத்துக்குடியில் ஆய்வை முடித்த ஆய்வுக்குழு நாளை சென்னை திரும்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #ThoothukudiSterlite
    கருணாஸின் அவதூறு பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என அமைச்சர் ஜெயக்குமார் இன்று கேள்வி எழுப்பியுள்ளார். #MKStalin #Jayakumar #Karunas
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    என்னை அரிச்சந்திரன் என கூறிய கருணாஸுக்கு நன்றி. சாதி ரீதியாக பேசிய கருணாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவரான ஸ்டாலின் இன்னும் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?.

    ஊழல் குறித்து பேச திமுக, காங்கிரசுக்கு தகுதி இல்லை. ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தடையாக இருக்கிறது. ஸ்டாலின் அதனை கண்டிக்காதது ஏன்?. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டதுதான். திறக்கப்படும் என்ற பேச்சுக்கு இடமே இல்லை. 
    ஸ்டெர்லைட் அலை விவகாரம் தொடர்பாக பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையிடு மனு தாக்கல் செய்துள்ளது. #ThoothukudiIncident #SterliteProtest

    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க நீதிபதி எஸ்.ஜே. வசிப்தார் தலைமையில் குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.ஜே. வசிப் தார் பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியாவார்.

    நீதிபதி வசிப்தார் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.


    இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையிடு மனு தாக்கல் செய்துள்ளது. இதுபற்றி தமிழக அரசு வக்கீல் யோகேஷ் கன்னா கூறுகையில், நீதிபதி வசிப்தார் பசுமை தீர்ப்பாயத்தின் விசாரணை நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. ஆனால் அவர் தன்னிச்சையாக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி இருப்பதை ஏற்க முடியாது என்றார். #ThoothukudiIncident #SterliteProtest

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இரு தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரியதால், மேலும் 4 வாரங்கள் அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #ThoothukudiSterlite #SupremeCourt
    புதுடெல்லி:

    ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை தொடர்பாக ராமசுப்பு என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு ஒன்றை முன்பு தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் அதை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட்டதாகவும், ஆனால் வழக்கை முறையாக விசாரிக்காமல், ஆலை இயங்க அனுமதி அளித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியதாகவும், அந்த தீர்ப்பை தள்ளுபடி செய்து ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.



    மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த மனு கடந்த மே மாதம் 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தனர்.

    இந்தநிலையில், இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பதிவாளர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரியதால், மேலும் 4 வாரங்கள் அவகாசம் அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  #ThoothukudiSterlite #SupremeCourt #Tamilnews 
    ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 17-ம் தேதி விசாரிக்க உள்ளது. #SterliteProtest #NGT
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்தது.  இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணியை மேற்கொள்ள பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 9-ந்தேதி அனுமதி அளித்தது.

    இந்த தீர்ப்பு தமிழக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.



    இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணியை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதியை எதிர்த்தும்,  தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் தமிழக அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  தமிழக அரசின் சார்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பு கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 17-ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. #SterliteProtest #NGT
    ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ள நிலையில், இது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். #Sterlite
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது, ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. 

    இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதில், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் தரக்கூடாது என்று அக்கறை காட்டிய தமிழக அரசு, ஸ்டெர்லைட் விவகாரத்தில் அந்த அக்கறையை காட்டவில்லை என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டி உள்ளார். #Kanimozhi #EdappadiPalanisamy
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் தரக்கூடாது என்று அக்கறை காட்டிய தமிழக அரசு, ஸ்டெர்லைட் விவகாரத்தில் அந்த அக்கறையை காட்டவில்லை என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டி உள்ளார்.

    இதுதொடர்பாக கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வேதாந்தா நிறுவனம், அதன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினை திறந்து நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மே 22-ந்தேதி 13 பேர் கொல்லப்பட்ட பிறகு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.


    வேதாந்தா இந்த தடையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜரானார். வேதாந்தா போன்ற பெரிய நிறுவனத்தை எதிர்த்து வழக்காடுகையில் முதல் நாளே போதுமான கலந்தாலோசனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

    ஆனால் இதற்கான ஆலோசனை, வழக்கு 10.30-க்கு தொடங்க இருந்த நிலையில் அரைமணி நேரம் முன்னதாக 10 மணிக்கு நடைபெற்றுள்ளது. ஏன் தாமதம் என்றால் சி.எஸ். வைத்தியநாதன், தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்தார்.

    கலைஞருக்கு இடம் தரக் கூடாது என்பதில் முனைப்பு காட்டிய எடப்பாடி பழனிசாமி அந்த அக்கறையை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் காட்டியிருந்தால் இத்தோல்வி நிகழ்ந்திருக்காது. எடப்பாடி பழனிசாமி வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுதியை குலைத்துக் கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். #Karunanidhi #Kanimozhi #EdappadiPalanisamy
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி கிடையாது என்றும், நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ளலாம் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. #NGT #SterlitePlant
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு அப்போது நடந்த தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந்தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.



    இந்த மனு தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களான நீதிபதிகள் ஆதர்ஷ்குமார் கோயல், டாக்டர் ஜவாத் ரகீம், எஸ்.பி.வங்டி, டாக்டர் நகின்நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ராகேஷ் திவிவேதி உள்ளிட்டோரும், ஸ்டெர்லைட் தரப்பில் மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், பினாகி மிஸ்ரா ஆகியோரும் ஆஜரானார்கள். இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க மனுதாக்கல் செய்துள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் ஆஜரானார்.

    அரிமா சுந்தரம் தன்னுடைய வாதத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு பிறப்பித்துள்ள 5 உத்தரவுகளையும் ரத்துசெய்ய வேண்டும் என்று கூறி, ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து விவரிக்க தொடங்கினார்.

    சி.எஸ்.வைத்தியநாதன் குறுக்கிட்டு, அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகளில் கோர்ட்டுகளோ, தீர்ப்பாயங்களோ தலையிட முடியாது. இதே போன்ற மனுவை வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டிலும் தாக்கல் செய்துள்ளது என்றார்.

    அரிமா சுந்தரம் வாதிடுகையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்பும் நாங்கள் முறையிட்டோம். தமிழக அரசு பிறப்பித்துள்ள அனைத்து ஆணைகள் மீதும் மேல்முறையீடு செய்வதற்கு முகாந்திரம் உண்டு என்று கூறினார்.

    உடனே தமிழக அரசு தரப்பில் வாதிடும்போது, ஆலையை மூடுவதற்கு பிறப்பித்த ஆணை மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி வெளியிட்டதாகும். இதன் மீது இவர்கள் மேல்முறையீடு செய்ய முடியாது. இந்த மனுவின் ஏற்புத்தன்மை கேள்விக்குரியது என்றனர்.

    இதற்கு நீதிபதிகள் உங்கள் வாதத்தை ஏற்க முடியாது. மனுதாரர்கள் தங்கள் வாதத்தை தொடரலாம் என்றனர்.

    பின்னர் ஸ்டெர்லைட் தரப்பில் வாதிடுகையில், இந்த பிரச்சினை 1996-ம் ஆண்டில் இருந்து அரசியல்வாதிகளால் உள்நோக்கத்துடன் கிளறப்பட்டு வருகிறது. இவர்கள் கூறும் வகையில் சுற்றுச்சூழலுக்கு மாசு எதுவும் ஏற்படவில்லை. பொதுமக்களிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை. எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றனர்.

    வக்கீல் ராகேஷ் திவிவேதி தன்னுடைய வாதத்தில், ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி அருகில் உள்ள நதிகளும் மாசுபடுகின்றன. இந்த ஆலை வெளியேற்றும் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை. இந்த ஆலைக்கு சுப்ரீம் கோர்ட்டு 2013-ம் ஆண்டு ரூ.100 கோடி அபராதம் விதித்தது. உடனடியாக ஒரு குழு அமைத்து ஆய்வை மேற்கொண்டால் அங்குள்ள மாசுக்கேட்டை நிரூபிக்க முடியும் என்றார்.

    இதற்கு ஸ்டெர்லைட் சார்பில், நாங்களும் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றுதான் கூறுகிறோம். தற்போது ஆலையை பராமரிக்க எங்களுக்கு இடைக்கால அனுமதி வேண்டும் என்றனர்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், ஆலையில் நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி அளித்தது. மேலும் நிர்வாக ரீதியிலான பணிகளுக்காக ஆலைக்குள் ஊழியர்களை அனுமதிக்க வேண்டும், ஆலை இயங்காமல் இருப்பதை தூத்துக்குடி கலெக்டர் கண்காணிக்க வேண்டும். ஆலையில் அமில கசிவை கண்காணிக்க தனி அதிகாரியை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் இந்த அதிகாரியும் இணைந்து ஆலையால் ஏற்பட்ட மாசு தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள், ஆலை எக்காரணம் கொண்டும் இயங்க அனுமதி கிடையாது. நிர்வாக பணிகள் மட்டும் மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்டனர்.

    மாசு தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்ய 10 நாள் அவகாசம் அளிக்கும்படி தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டது. அந்த ஆதாரங்களை 20-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட தீர்ப்பாயம், வழக்கு விசாரணையை 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.  #NGT #SterlitePlant #tamilnews 
    ஸ்டெர்லைட் ஆலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதா? என்ற சசிகலா புஷ்பா எம்.பி.யின் கேள்விக்கு மத்திய இணை மந்திரி அர்ஜுன் ராம் மேஹ்வால் பதிலளித்துள்ளார். #Sterlite #MansoonSession
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள சிப்காட் வளாகத்தில் நிலத்தடி நீரின் நிலை என்ன?, மாசுபட்டுள்ளதா? என்று மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா எம்.பி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய இணை மந்திரி அர்ஜுன் ராம் மேஹ்வால் எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்துள்ளார்.

    அதில், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்திய ஆய்வில், அங்கு நிலத்தடி நீரில் மத்திய தரக்கட்டுப்பாடு ஆணையம் அங்கீகரித்ததை விட அதிகளவிலான தனிமங்கள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. லெட், கேட்மியம், குரோமியம், மாங்கனீசும் இரும்பு மற்றும் அர்செனிக் ஆகிய தனிமங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட நீரில் உள்ளது. 

    ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடத்திய ஆய்வில், நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பலமடங்கு தனிமங்கள் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. எனினும், நிலத்தடி நீரில் உள்ள மாசுக்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி 2 கிராம பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். #thoothukudiProtest #Sterlite
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.

    இதனால் அங்கு பணிபுரிந்த பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை.ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்த பணியாளர்கள், லாரி உரிமையாளர்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    இந்நிலையில் இன்று தெற்கு வீரபாண்டியபுரம், மீளவிட்டான் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வேலையில்லாமல் வருமானமின்றி தவிப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். #thoothukudiProtest #Sterlite
    ×