search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sterlite"

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #SterliteCase #SupremeCourt
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் காரணமாக ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அரசு தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின்  உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் தான் வேதாந்தா நிறுவனம் வழக்குத் தொடர முடியும் எனவும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர முடியாது எனவும் தெரிவித்துள்ளது. எனவே, ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனமும் மேல்முறையீடு செய்திருந்தது.



    இவ்வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேதாந்தா தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார்.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆலைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராகி வாதாடினார். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் பல நோய்கள் ஏற்படுவதாக வைகோ மீண்டும் குறிப்பிட்டார்.

    இன்று பிற்பகல் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும், அனைத்து தரப்பினரும் திங்கட்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். #SterliteCase #SupremeCourt

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம், கருப்புக்கொடி போன்றவை தேவையில்லாதது என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #Sterlite #SandeepNanduri
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாக கூறி, அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற தொடர் போராட்டத்தின் 100-வது நாளில் வன்முறை வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு மாநில பசுமை தீர்ப்பாயம் ஆலைக்கான அனுமதியை ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டது.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

    இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் அதில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளும் சேர்ந்து வருகிற 24-ந்தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்றும், அன்றைய தினம் வீடுகள், வணிக நிறுவனங்களில் கருப்பு துணி கட்டவும், மக்கள் கருப்பு நிற ஆடை அணிந்தும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில் இது தொடர்பாக இன்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. மேலும் மக்களின் மனநிலைக்கேற்ப ஆலையை திறக்க விடாமல் இருப்பதில் உறுதியாக இருக்கிறோம் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம், கருப்புக்கொடி போன்றவை தேவையில்லாதது. இவ்வாறான செயல்கள் பொதுமக்களை போராட்டத்திற்கு தூண்டுவதாக அமையும். எனவே ஆலைக்கு எதிரான போராட்டங்கள் வேண்டாம்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார். #Sterlite #ThoothukudiCollector #SandeepNanduri
    ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க முடியாது என்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். #SterlitePlant #ThoothukudiCollector
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக கடந்த 15-12-18 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவு வந்த உடன், முதல்-அமைச்சர் இது இறுதி உத்தரவு அல்ல, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவில் உள்ள அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்து, சட்டப்படி மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் உச்சநீதிமன்றம் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உடனே ஆலையை திறக்க எந்த இடத்திலும் கூறவில்லை. உச்சநீதிமன்றத்தில் சட்ட வல்லுநர்கள் மூலம் வழக்கு நடத்தப்படும். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை இதே நிலை(ஸ்டேட்டஸ் கோ) நீடிக்கும். உடனடியாக ஆலையை திறப்பதற்கான எந்த உத்தரவும் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வரவில்லை.

    மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தாலும், அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை நடக்கிறது. தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்த நிபந்தனைகளை ஆலை நிர்வாகம் சரி செய்த பிறகு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு மாசுகட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்யும். தற்போது எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை. நிபந்தனைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் நிறைவேற்றியதாகவும் தெரியவில்லை.



    நாங்கள் சட்டரீதியாக தொடர்ந்து போராடி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்பது அரசின் முடிவு ஆகும். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமான இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைதி வழி போராட்டத்தில் மக்கள் பங்கேற்றனர். அரசு நடவடிக்கையால் 13 உயிர்களை இழந்து உள்ளோம். இப்படிப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு எதிராகவே அமைந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து அகற்றப்படும் வரை மக்களின் அமைதி வழி போராட்டங்கள் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #SterlitePlant #ThoothukudiCollector

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், ஸ்டெர்லைட் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்துள்ளது. #Sterlite #SupremeCourt
    சென்னை :

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா பாபு என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜனவரி 21-ம் தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். அதுவரை ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், ஜனவரி 21-ல் தலைமை செயலாளர், வேதாந்தா நிறுவன குழும இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை நேற்று உத்தரவிட்டது.



    இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை இயங்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் முன்னர் அளித்த உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி ஜனவரி மாதத்தில் சுப்ரீம் கோர்ட்டை நாடப்போவதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யவுள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ஆலை நிர்வாகம் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Sterlite #SupremeCourt
    ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. #Sterlite #MaduraiHC
    மதுரை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா பாபு என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜனவரி 21-ம் தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். அதுவரை ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், ஜனவரி 21-ல் தலைமை செயலாளர், வேதாந்தா நிறுவன குழும இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை இன்று உத்தரவிட்டு உள்ளது.



    ஸ்டெர்லைட் ஆலை 2 மாதங்களில் திறக்கப்படும் என அந்த ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் நேற்று தெரிவித்த நிலையில், மதுரை ஐகோர்ட் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Sterlite #MaduraiHC
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இரண்டு மாதங்களில் திறக்கப்படும் என அந்த ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் இன்று தெரிவித்தார். #Sterlite
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அனைத்துத் தரப்பு கருத்துக்களையும் கேட்ட பிறகே பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது.

    தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்த புதிய விதிமுறைகளை நிறைவேற்ற எங்களுக்கும் இன்னும் நேரம் இருக்கிறது. புதிய நிபந்தனைகளை கடைபிடிப்போம்.



    தூத்துக்குடி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். இரண்டு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அதற்கான அனுமதி கேட்டிருக்கிறோம்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சமூக நலத்திட்டங்கள் வழங்க முடிவு செய்துள்ளோம். 

    15 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படும். 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.  மேலும், ஒரு பள்ளி, ஒரு மருத்துவமனை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். #Sterlite
    தஞ்சையில் ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர். #Sterlite
    தஞ்சாவூர்:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதுடன் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் ஆலையைத் திறப்பதற்கான வழிமுறைகளை வகுத்து, ஆலை இயங்குவதற்கான அனுமதியை மூன்று வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று தஞ்சை ரெயில் நிலையம் முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பினர் பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் காளியப்பன் தலைமை தாங்கினார். அனுமதியின்றி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 40 பேரை தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் போலீசார் கைது செய்தனர். #Sterlite

    ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். #SterliteProtest #NGT
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

    ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் (வேதாந்தா) தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என இன்று உத்தரவிட்டுள்ளது. ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஆலையை திறப்பதற்கான வழிமுறைகளை 3  வாரங்களில் உருவாக்க வேண்டும் என்றும், ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிப்பதற்கு குழு அமைக்க வேண்டும் எனவும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.



    தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்றார்.

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும், ஆலையை திறக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் அமைச்சர் வேலுமணி கூறினார்.

    எனவே, விரைவில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு, ஸ்டெர்லைட் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது.  #SterliteProtest #NGT
    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் புதிய வடிவம் எடுக்கும் என்று வைகோ கூறினார். #sterliteplant #Vaiko
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

    ஸ்டெர்லைட் வழக்கு தற்போது அரசுக்கு விரோதமாக போய்கொண்டு இருப்பதற்கு அ.தி.மு.க. அரசு தான் காரணம். 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு தான் காரணம்.



    தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலையை மூட தீர்ப்பு வரும் என்று தெரியவில்லை. இதனால் போராட்டம் நிற்காது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும். இந்த போராட்டம் புதிய புதிய வடிவம் எடுக்கும். ஆலை அகற்றப்படும் வரை போராட்டம் நடக்கும். ஆனால் வன்முறை இருக்காது. நாங்கள் வன்முறையில் இறங்க மாட்டோம்.

    தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகளிலும் பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் வர அதிக வாய்ப்பு உள்ளது. தேர்தல் எப்போது வந்தாலும் இந்த 20 தொகுதிகளிலும் யார் போட்டியிடுவது என்று தி.மு.க. தலைமை முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #sterliteplant #Vaiko
    ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த நிபுணர் குழு பாரபட்சமாக செயல்பட்டு இருப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. #NGT #TNgovernment #Sterlite
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது.

    அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையையும் சுற்றுப்புற பகுதிகளையும் ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது.

    இதைத்தொடர்ந்து நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தி கடந்த மாதம் 26-ந்தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் தமிழக அரசு இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்றும், ஆலை நிர்வாகத்துக்கு உரிய நோட்டீஸ் அளிக்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நிபுணர் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம், மீண்டும் ஆலையை திறக்க உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில், குழுவினரால் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளுடன் அனுமதிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

    இந்த அறிக்கையை கடந்த 28-ந்தேதியன்று நடைபெற்ற விசாரணையின் போது வாசித்துக் காட்டிய தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், நிபுணர் குழு அறிக்கையின் நகல்களை இரு தரப்புக்கும் வழங்குமாறும் இந்த அறிக்கை தொடர்பாக இரு தரப்பினரும் ஒரு வாரத்தில் தங்கள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 7-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து நேற்று தமிழக அரசு தரப்பில் நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    தமிழக அரசின் வக்கீல் ராகேஷ் சர்மா தாக்கல் செய்த அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான நிபுணர் குழுவை அமைத்தது. ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதன் காரணமாக தூத்துக்குடி பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடுகிறதா? நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்ய மட்டுமே இந்த குழு நியமிக்கப்பட்டது.

    ஆனால் இந்த குழு இவற்றையெல்லாம் விட்டு விட்டு ஆலையை மூடியது தவறா? என்று ஆய்வு செய்வதற்கு எந்த அதிகாரமும் இல்லை, இந்த குழு தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டு உள்ளது.

    இந்த குழு பாரபட்சமாக செயல்பட்டு இருக்கிறது. குழுவின் அறிக்கை முற்றிலும் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. தமிழக அரசு தரப்பில் முன்வைத்த வாதங்களில் உள்ள உண்மை நிலவரங்களை இந்த குழுவின் அறிக்கை கவனத்தில் கொள்ளவில்லை. இந்த குழு எந்த இடத்திலும் நிலத்தடி நீர், தாமிரக்கழிவு தொடர்பாக உருவாகும் சுற்றுச்சூழல் மாசு பற்றி சரிவர ஆய்வு நடத்தவில்லை. அது தொடர்பாக எதுவும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஸ்டெர்லைட் ஆலையால் தொடர்ச்சியாக அந்த பகுதியில் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த ஆலையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக தேவையான வாய்ப்புகள் ஆலைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டன. இதனை தன்னுடைய கவனத்தில் எடுத்துக் கொள்ளாத நிபுணர் குழு, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எந்த வாய்ப்பும் வழங்காமல் ஏதோ உடனடியாக இந்த முடிவை எடுத்தது போல சித்தரித்து உள்ளது முற்றிலும் தவறாகும்.

    மேலும், ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல்முறையீட்டு ஆணையத்திடம் ஏற்கனவே ஸ்டெர்லைட் நிறுவனம் மனு தாக்கல் செய்து உள்ளது.

    இந்த நிலையில் இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க முகாந்திரம் ஏதும் இல்லை. இந்த குழுவின் நியமனம் மற்றும் அதன் அறிக்கை ஆகியவற்றுக்கும் முகாந்திரம் ஏதும் இல்லை.

    இவ்வாறு தமிழக அரசின் பதில் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. #NGT #TNgovernment #Sterlite

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் மூடப்பட்ட பிறகு அப்பகுதியில் காற்று மாசு கணிசமாக குறைந்துள்ளது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. #Sterlite #Airpollution
    சென்னை:

    தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 23 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் தாமிர ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், பொதுமக்களுக்கு நோய் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறி ஆலையை சுற்றியுள்ள கிராமத்தினர் போராட்டம்  நடத்தினர்.
     
    இதற்கிடையே, ஆலையை விரிவாக்கம் செய்ய நிர்வாகம் திட்டமிட்டதால் போராட்டம் தீவிரமானது. கடந்த மே மாதம் பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடகோரி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற போது வன்முறை வெடித்தது. 
    அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.  இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு ஆணை பிறப்பித்தது.  இதையடுத்து ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது.
     
    இந்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் மூடப்பட்ட பிறகு அப்பகுதியில் காற்று மாசு கணிசமாக குறைந்துள்ளது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.



    இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தரவு பட்டியலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் காற்று மாசு குறைந்துள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்றின் தரம் தொடர்பான தரவு பட்டியலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    தூத்துக்குடியில் காற்றின் தரம் பற்றிய தரவு பட்டியல் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் காற்றில் சல்பர் டை ஆக்சைடு கணிசமாக குறைந்துள்ளது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.  #Sterlite #Airpollution
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.#Sterlite #thoothukudiProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாப்பிள்ளை யூரணி ஜெ.ஜெ.நகர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் தலைவர் முருகேசன் தலைமையில் பொது மக்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் ஊரில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகிறோம். இங்குள்ள மக்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நடமாடும் மருத்துவ வாகனம் மூலமாக தேவையான மருத்துவ வசதிகள் தவறாமல் செய்து கொடுக்கப்பட்டு வந்தது.

    மேலும் எங்கள் பகுதியிலுள்ள மிகவும் கஷ்டப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, அடிப்படை வசதிகள், கோவிலுக்கான நிதியுதவி என பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் செய்து வந்தனர்.இதனால் எங்கள் பகுதி மக்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் பயன் அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் சிலரது சூழ்ச்சியாலும், தேவையில்லாத வதந்தியாலும் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான பொய்பிரச்சாரம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினைகளால் தமிழக அரசு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்துவிட்டது.

    ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டு விட்டதால் அதனை நம்பி வாழ்ந்து வந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு எங்களைப் போன்ற பல்வேறு பகுதி கிராம மக்களுக்கும் கிடைத்து வந்த அனைத்து வசதிகளும், நலத்திட்ட உதவிகளும் தடைபட்டு முடங்கியுள்ளது.

    எனவே ஸ்டெர்லைட் தொழிற்சாலை மீண்டும் செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Sterlite #thoothukudiProtest
    ×