search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector sandeep nanduri"

    பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை முதல் வருகிற 12-ந் தேதி காலை வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
    தூத்துக்குடி:

    பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை முதல் வருகிற 12-ந் தேதி காலை வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்க தேவி ஆலய திருவிழா நாளை (10-ந்தேதி), நாளை மறுநாள் (11-ந் தேதி) ஆகிய நாட்களில் நடக்கிறது. இந்த விழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் வகையிலும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையிலும் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

    இதனால் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுதவற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு போன்ற அபாயகரமான ஆயுதங்களை ஊர்வலமாக கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து மக்களை அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாக விழாவுக்கு அழைத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த இருந்தால், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த தடை உத்தரவு திருமணம், இறுதி சடங்கு ஊர்வலங்கள், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக உரிய அனுமதி பெற்று நடைபெறும் தேர்தல் பிரசாரங்களுக்கு பொருந்தாது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    144 தடை உத்தரவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் கூடுதலாக சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்று பிரசாரம் செய்தார். #LSPolls
    தூத்துக்குடி:

    தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அனைவரும் முழுமையாக வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்து அவரும் மோட்டார்சைக்கிள் ஓட்டியபடி பங்கேற்றார். அவருடன் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், சப்-கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு ஆகியோரும் பேரணியில் பங்கேற்று இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்தனர்.

    இப்பேரணிக்கு வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கல்லூரி வாயிலில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ, மாணவியர் நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். தொடர்ந்து பாளையங்கோட்டை சாலை வழியாக கலெக்டர் அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன், டி.எஸ்.பி. பிரகாஷ், போலீசார் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். #LSPolls
    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம், கருப்புக்கொடி போன்றவை தேவையில்லாதது என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #Sterlite #SandeepNanduri
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாக கூறி, அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற தொடர் போராட்டத்தின் 100-வது நாளில் வன்முறை வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு மாநில பசுமை தீர்ப்பாயம் ஆலைக்கான அனுமதியை ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டது.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

    இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் அதில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளும் சேர்ந்து வருகிற 24-ந்தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்றும், அன்றைய தினம் வீடுகள், வணிக நிறுவனங்களில் கருப்பு துணி கட்டவும், மக்கள் கருப்பு நிற ஆடை அணிந்தும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில் இது தொடர்பாக இன்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. மேலும் மக்களின் மனநிலைக்கேற்ப ஆலையை திறக்க விடாமல் இருப்பதில் உறுதியாக இருக்கிறோம் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம், கருப்புக்கொடி போன்றவை தேவையில்லாதது. இவ்வாறான செயல்கள் பொதுமக்களை போராட்டத்திற்கு தூண்டுவதாக அமையும். எனவே ஆலைக்கு எதிரான போராட்டங்கள் வேண்டாம்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார். #Sterlite #ThoothukudiCollector #SandeepNanduri
    தூத்துக்குடி மாவட்டத்தில் ஜன 16 மற்றும் 26-ந்தேதிகளில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

    திருவள்ளுவர் தினம் வருகிற 16-ந்தேதியும், குடியரசு தினம் வருகிற 26-ந்தேதியும் கொண்டாடப்பட உள்ளது. இதனால் இந்த 2 நாட்களிலும், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் அனைத்து வகை உரிமதலங்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

    இந்த 2 நாட்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியபட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்களை கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசு சார்பில் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அந்தந்த தாசில்தார் தலைமையில் நடத்தப்படுகிறது. இந்த வாரத்துக்கான முகாம் நாளை (9-ந் தேதி) நடக்கிறது.

    இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா மீளவிட்டான் பகுதி1, ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆழ்வார்கற்குளம், திருச்செந்தூர் தாலுகா மணப்பாடு, சாத்தான்குளம் தாலுகா பள்ளக்குறிச்சி, கோவில்பட்டி தாலுகா பிச்சைத்தலைவன்பட்டி, விளாத்திகுளம் தாலுகா நடுகாட்டூர், எட்டயபுரம் தாலுகா சிந்தலக்கரை, ஓட்டப்பிடாரம் தாலுகா மேலஅரசடி, கயத்தாறு தாலுகா காலாங்கரைபட்டி, ஏரல் தாலுகா சிவகளையில் நடக்கிறது.

    இந்த முகாமில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளன.

    எனவே பொதுமக்கள் இந்த முகாம்களில் மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலயம் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு நவம்பர் 13-ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலயம் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு அடுத்த மாதம்(நவம்பர்) 13-ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அன்று அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ ‍-மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது.

    இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல. எனவே மாவட்டத்தில் உள்ள கருவூலகங்களும், சார்நிலை கருவூலகங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக டிசம்பர் 8-ந்தேதி இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். #EdappadiPalanisamy #SivanthiAditanar #Manimandapam #Tiruchendur
    சென்னை:

    ‘தினத்தந்தி’ அதிபராக இருந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகளை நிகழ்த்தி காட்டிய வித்தகர் ஆவார்.

    பத்திரிகை துறையில் மட்டுமின்றி விளையாட்டு, கல்வி, ஆன்மிகம், சமூக சேவை ஆகிய துறைகளிலும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஏராளமான ஒப்பற்ற நற்பணிகள் செய்து சாதனை படைத்தார்.

    கால் பதித்த துறைகளில் எல்லாம் வரலாற்று தடம் எனும் முத்திரைப் பதித்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஏராளமான விருதுகள், பட்டங்கள் சிறப்பு சேர்த்தன. பத்திரிகை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த அவர் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந்தேதி மரணம் அடைந்தார்.

    சென்னை போயஸ் கார்டனில் அவர் வாழ்ந்த இல்லத்தின் ஒரு பகுதி “நினைவு இல்லம்” ஆக மாற்றப்பட்டு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் ஒப்பற்ற உயர்வான சேவைகளை தமிழக மக்கள் என்றென்றும் போற்றி நினைவு கூற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் திருச்செந்தூரில் அவருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இதையடுத்து திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. திருச்செந்தூரில் பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இறுதியில் திருச்செந்தூர்- தூத்துக்குடி பிரதான சாலையில் ஆதித்தனார் கலை-அறிவியல் கல்லூரிக்கு அருகில் சிவந்தி அகாடமி வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. மொத்தம் 60 சென்ட் இடம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

    அந்த இடத்தில் 78.41 சதுர மீட்டரில் கண்கவர் வகையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நினைவகங்கள்) துறை சார்பில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


    இந்த நிலையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமை செயலகத்திலும், திருச்செந்தூர் சிவந்தி அகாடமி வளாகத்திலும் ஒரே நேரத்தில் நடந்தது.

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன் வரவேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் வீரபாண்டியன்பட்டணத்தில் 60 சென்ட் பரப்பளவில் முழு உருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல்- அமைச்சர் தலைமை ஏற்று தங்கள் திருக்கரங்களால் அடிக்கல் நாட்டும்படி மெத்த பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். அப்போது மங்கல இசை இசைக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) தலைமைச் செயலகத்தில், செய்தித் துறையின் சார்பில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில், 1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

    நாட்டிற்காக பெரும் தொண்டாற்றி பல்வேறு தியாகங்களைச் செய்த தலைவர்கள் மற்றும் சான்றோர்களை சிறப்பிக்கும் வகையிலும், அவர்களின் தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும், நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்களை புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு உருவாக்கி பராமரித்து வருகிறது.

    டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் தனது தந்தை சி.பா.ஆதித்தனாரைப் பின்பற்றி 1959-ம் ஆண்டு தினத்தந்தியின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றார். பத்திரிகை, விளையாட்டு, கல்வி ஆகிய துறைகளில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் ஆற்றிய சேவையை பாராட்டி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.

    மேலும், டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் இரண்டு முறை சென்னை மாநகர ஷெரீப்ஆகவும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும் பணியாற்றினார். இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 22.11.2017 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் “தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும். இதற்கான பணி 2018-2019ம் ஆண்டு எடுத்துக்கொள்ளப்படும்” என அறிவித்திருந்தார்.


    அதன்படி, டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் பணிகளை போற்றுகின்ற வகையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன் பட்டணம் கிராமத்தில் 60 சென்ட் பரப்பளவில், 1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள, முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் க.பாண்டிய ராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன்.

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர்வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் பொ. சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நிறைவில் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் முனைவர் பொ.சங்கர் நன்றி கூறினார். அவர் கூறியதாவது:-

    பத்திரிகை துறையில் முத்திரை பதித்த மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் திருச்செந்தூர் வட்டம் வீர பாண்டியன் பட்டணத்தில் கட்டப்பட உள்ள மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்-அமைச்சர் அவர்களுக்கு எங்கள் துறைச் சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    அதுபோல விழாவில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்த துணை முதல்- அமைச்சர் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், தலைமை செயலாளருக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருச்செந்தூரில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர். #EdappadiPalanisamy #SivanthiAditanar #Manimandapam #Tiruchendur
    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு ரூ.1.34 கோடியில் மணிமண்டபம் கட்ட அரசாணை வந்துள்ளதால் அதற்கான பணி விரைவில் தொடங்கும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #SivanthiAditanar
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் இன்று கூறியதாவது:-

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மற்றும் இசை மேதை நல்லப்ப சுவாமிகள் ஆகிய இருவருக்கும் இன்று பிறந்த நாள். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு ரூ.1.34 கோடியில் மணிமண்டபம் கட்ட அரசாணை வந்துள்ளது. மணிமண்டபம் கட்டும் பணி விரைவில் தொடங்கும்.

    அதே போல் நல்லப்ப சுவாமிக்கு விளாத்திகுளத்தில் ரூ.20 லட்சத்தில் நினைவு தூண் கட்ட அரசாணை வந்துள்ளது. நல்லப்ப சுவாமி பிறந்த நாள் அமைச்சர் தலைமையில் அரசு விழாவாக இன்று மாலை கொண்டாடப்படுகிறது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த பசுமை தீர்ப்பாயம் நியமித்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் பொதுமக்களிடம் நேற்று கருத்து கேட்டனர். ஆய்வுக்குழுவிடம் மொத்தம் 2 ஆயிரத்து 500 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


    ஸ்டெர்லைட் ஆலையில் தாமிர தாதுவை அகற்ற அந்த நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதை வாங்கக்கூடிய நபர்கள் வந்ததும் தாமிர தாது அகற்றும் பணி தொடங்கும்.

    தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்து வைக்கப்பட்டுள்ள 55 ஆயிரம் டன் மலேசிய மணல் இருப்பு உள்ளது. அதில் கோர்ட்டு உத்தரவுப்படி முதல் கட்டமாக 11 ஆயிரம் டன் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை நாளை தொடங்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SivanthiAditanar #thoothukudicollector #sandeepnanduri
    தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு- இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து தீர்வு காணப்படும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி வட்டம் கோரம்பள்ளம் பகுதி - 2 , ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு, கோவில்பத்து, திருச்செந்தூர் வட்டம் சேர்ந்த மங்கலம், சாத்தான்குளம் வட்டம் கருங்கடல், கோவில்பட்டி வட்டம் தோணுகால்,

    விளாத்திகுளம் வட்டம் சங்கரலிங்கபுரம், எட்டயபுரம் வட்டம் ராஜாப்பட்டி, ஓட்டப்பிடாரம் வட்டம் ஜெகவீரபாண்டியாபுரம், கயத்தார் வட்டம் காமநாயக்கன்பட்டி, ஏரல் வட்டம் கீழ்பிடாகை கஸ்பா கிராமங்களில் நாளை (7-ந் தேதி) வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது.

    முகாம்களில் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொது மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 24-ந் தேதி நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்களை கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 24-ந் தேதி நாளை அம்மா திட்ட முகாம் நடக்க உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தாலுகாவில் பேரூரணி கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகாவில் மூலக்கரை கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் விட்டிலாபுரம், கோவில்பத்து கிராமத்திலும், சாத்தான் குளம் தாலுகாவில் மீரான் குளம் பகுதி 2 கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகாவில் ஜமீன்தேவர்குளம் கிராமத்திலும், விளாத்தி குளம் தாலுகாவில் சின்னூர், மாவிலோடை கிராமங்களிலும், எட்டயபுரம் தாலுகாவில் ஈராச்சி கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் கீழமுடிமண் கிராமத்திலும், கயத்தாறு தாலுகாவில் தொட்டன்பட்டி கிராமத்திலும், ஏரல் தாலுகாவில் இருவப்ப புரம் பகுதி1 கிராமத்திலும் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடக்க உள்ளது.

    இந்த முகாமில் மக்கள் குறைகளை தீர்க்கும் வகையில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக் களை கொடுக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தூத்துக்குடியில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியேற்றினார். மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. #IndependenceDay
    தூத்துக்குடி:

    நாடு முழுவதும் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. விழாவில் கலந்து கொள்ள மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி காலை 9.13 மணி அளவில் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்துக்கு வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி 9.15 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

    பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சின்ராம், ஜெபராஜ், பிரகாஷ் உள்பட போலீசார் 36 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கினார். தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி, புறாக்கள், பலூன்களை பறக்கவிட்டார்.

    விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 160, கூட்டுறவுத்துறை மூலம் ரூ.8½ லட்சம், வேளாண்மைத்துறை மூலம் ரூ.4 லட்சத்து 41 ஆயிரத்து 250, தாட்கோ மூலம் ரூ.24 லட்சத்து 96 ஆயிரத்து 682, மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.12 லட்சத்து 74 ஆயிரம், மகளிர் திட்டம் மூலம் ரூ.9 லட்சத்து 12 ஆயிரத்து 833 உள்பட மொத்தம் 10 துறைகள் மூலம் 59 பயனாளிகளுக்கு ரூ.64 லட்சத்து 72 ஆயிரத்து 750-க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    விழாவில் எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி நல்லாயன் செவித்திறன் குறைவுடையோர் பள்ளி, கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி காரப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், உதவி கலெக்டர் பிரசாந்த், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன், கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போருக்கு 75 சதவீதம் மானியத்தில் மின்சாரத்தில் இயங்கும் புல்வெட்டும் கருவி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய கால்நடை குழுமத்தின் 2017-18ம் ஆண்டு திட்டப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு 75 சதவீதம் மானியத்தில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மின்சாரத்தில் இயங்கும் புல்வெட்டும் கருவி வழங்கப்பட உள்ளது.

    இந்த கருவியை பெற தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் 2 கால்நடைகள் வளர்ப்போர்கள், 0.5 ஏக்கர் புல்வளர்ப்புக்கு இடம் மற்றும் புல்வெட்டும் கருவிக்கு 25 சதவீதம் தொகையை செலுத்த விருப்பம் உள்ளவராக இருக்க வேண்டும்.

    மேலும், சுயஉதவிக்குழு உறுப்பினர் ஒரு கால்நடை வளர்ப்போராகவும், குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கால்நடை தீவனப்பயிர் வளர்ப்பவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கு முன்பு இதுபோன்ற சலுகைகளை அரசிடம் இருந்து பெற்றவராக இருக்கக்கூடாது.

    மேற்கண்ட தகுதியுடைய, புல்வெட்டும் கருவி தேவைப்படும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அந்தந்த பகுதி கால்நடை மருந்தகத்தில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×