search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட மக்கள் நிருபர்களுக்கு பேட்டியளித்த காட்சி.
    X
    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட மக்கள் நிருபர்களுக்கு பேட்டியளித்த காட்சி.

    ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் போராடுவோம் - தூத்துக்குடி மக்கள் பேட்டி

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி ஒரே நேரத்தில் 45 ஆயிரம் பேர் எப்படி மனு அளித்தார்கள்? என்றும், ஆலையை திறந்தால் மீண்டும் போராடுவோம் என்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் தெரிவித்தனர். #ThoothukudiSterlite
    சென்னை:

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் மில்டன், சுரேஷ் சக்தி முருகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் இருக்கிறார்கள். இதுதொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை முழுமையாகவும், முறையாகவும் நடைபெற வேண்டும். தமிழக அரசு, பசுமை தீர்ப்பாயம் கமிட்டி முன்பு முறையாக விசாரணையை நடத்த வேண்டும்.

    நிலம், நீர், காற்று மாசுபட்டு இருக்கிறது என்ற ஆவணங்களை தொகுத்து தமிழக அரசு வழங்க வேண்டும். துப்பாக்கி சூட்டில் பலியான சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. போலீஸ் இதுவரை உரிய ஆவணங்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கவில்லை. உடனே சி.பி.ஐ. இதை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை தொடங்க வேண்டும். அப்படி சி.பி.ஐ. விசாரணையை தொடங்கும்போது, மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் முன்வந்து புகார் அளிப்பார்கள்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து தூத்துக்குடி மக்கள் சிலர் பேசினர். அதன் விவரம் வருமாறு:-

    பண்டாரம்பட்டியை சேர்ந்த சுரலி:-

    எங்கள் பகுதியில் 35 பெண்களுக்கு கர்ப்ப பை இல்லை. இதுபோல் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு ஸ்டெர்லைட் ஆலை தான் காரணம். அரசு, எங்கள் பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். கடந்த 23-ந் தேதி மனு கொடுக்க சென்றோம். அப்போது மனு பெறப்பட்ட இடத்தை சுற்றி ஆயிரம் போலீசார் நின்றார்கள்.

    இப்படி நின்றால் யார் மனு கொடுக்க வருவார்கள். அதுவும் தனித்தனியாக மனு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதற்கு 2 மணி நேரம் தான் கால அவகாசம் வழங்கினர். அந்த குறுகலான இடத்தில் 7 லட்சம் பேர் 2 மணி நேரத்தில் எப்படி தனித்தனியாக மனு அளிக்க முடியும்?. ஓட்டுப்போடுவதற்கு மட்டும் எத்தனை இடங்களை அமைத்து கொடுக்கும் அரசு, மனு அளிக்கும்போது அதுபோல் நிறைய இடங்களை ஒதுக்கினால் என்ன?

    ஆனால் சென்னையில் பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி ஒரே நேரத்தில் 45 ஆயிரம் பேர் மனு அளித்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள். அதை மட்டும் எப்படி அனுமதித்தார்கள்?. ஒருவேளை ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால், நாங்கள் மீண்டும் போராடுவோம். இனி அரசிடம் கோரிக்கை வைக்கமாட்டோம். கேள்வி தான் கேட்போம்.

    குமரெட்டியாபுரத்தை சேர்ந்த மகேஷ்:-

    கடந்த மே மாதம் 22-ந் தேதி வரை தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தான் செயல்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு கொடுத்த ஆணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மக்கள் வாழும் பகுதியில் இதுபோன்ற தொழிற்சாலை வைக்கக்கூடாது என்று அவசர சட்டம் இயற்ற வேண்டும். பசுமை தீர்ப்பாயத்தின் குழுவினரின் ஆய்வு வெறும் கண்துடைப்பு தான். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது.

    தெற்கு வீரபாண்டியபுரத்தை சேர்ந்த விஜயபாஸ்கர்:-

    என்னுடைய வீட்டில் 2 பேருக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையால் நோய் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை என்று பொய் சொல்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பணம், வேலை கொடுத்து சரிகட்டிவிடுகிறார்கள். என்னையும் அப்படி அழைத்தார்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சட்டமுறைப்படி எதையும் செய்ய முடியவில்லை. மீண்டும் ஸ்டெர்லைட் வரக்கூடாது. அப்படி வந்தால் தற்கொலைக்கு தான் போவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.   #ThoothukudiSterlite
    Next Story
    ×