search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sterlite Copper Factory"

    வேதாந்தா நிறுவனம் வழங்கிய ரூ.100 கோடி வைப்புத்தொகையை முறையாக செலவழிக்காத விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். #Sterlite
    புதுடெல்லி:

    கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பி.சிவகுமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளின் மேம்பாட்டுக்காக வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் ரூ.100 கோடி வைப்புத்தொகை தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்டது.

    அந்த தொகை முறையாக செலவிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அந்த தொகையில் இருந்து இதுவரை வெறும் ரூ.7 கோடி மட்டுமே செலவிடப்பட்டு உள்ளது. எனவே, அந்த வைப்புத்தொகையை முறையாக செலவு செய்யாத தமிழக அரசு, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    விசாரணை தொடங்கியதும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #Sterlite #SterliteCopper #SupremeCourt
    அமில கசிவை சரிசெய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்க உத்தரவிட கோரி பொது மேலாளர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். #Sterlite
    மதுரை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு கடந்த 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி ‘சீல்’ வைத்தது.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்க கோரி அதன் பொது மேலாளர் சத்தியபிரியா மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது. கடந்த 16-ந்தேதி கந்தக அமிலம் குழாயில் கசிவு ஏற்பட்டது. அப்போது இரவு நேரம் என்பதாலும், மின் இணைப்பு இல்லாததாலும் உரிய நேரத்துக்கு சென்று குழாயில் ஏற்பட்ட கசிவை தடுக்க முடியவில்லை.

    இதேபோல எல்.பி.ஜி. கியாஸ் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் ஏராளமாக உள்ளன. இவை தொடர்ந்து பராமரிக்கப்படாமல் இருந்தால் குழாய்களில் கசிவோ, வேறு ஏதேனும் ஆபத்துகள் உண்டாகவோ வாய்ப்புகள் உள்ளன. இதனால் தொழிற்சாலையை சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே ஸ்டெர்லைட் ஆலைக்குள் பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட பணியாளர்களை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்ப உத்தரவிட வேண்டும்.

    பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தற்காலிகமாக மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #Sterlite
    தூத்துக்குடியில் மக்கள் நிம்மதியாக வாழ்வை தொடர கைது நடவடிக்கையை போலீசார் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மனு கொடுத்தார். #Thoothukkudi #Sterlite
    தூத்துக்குடி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நேற்று மதியம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தூத்துக்குடி மாநகரில் கடந்த மாதம் 22-ந் தேதி நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து அன்றும், 23-ந் தேதியும் நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் நீதிமன்ற பிணையில் உள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் சாதாரண மக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. தினசரி நள்ளிரவு நேரங்களில் போலீசார் வீடுகளில் கதவுகளை தட்டி பெண்களை மிரட்டி ஆண்களை கைது செய்வது நியாயமற்றது ஆகும்.

    இயல்புநிலை படிப்படியாக திரும்பி வரும்போது இத்தகைய நடவடிக்கைகள் மீண்டும் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கூடங்கள் விடுமுறைக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகள் படிப்பு தொடர முடியாத நிலையில் உள்ளனர்.

    எனவே தூத்துக்குடி மாநகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இயல்பு நிலை திரும்பி, மக்கள் நிம்மதியாக வாழ்வை தொடர உடனடியாக கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. #Thoothukkudi #Sterlite
    தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் அங்கு பணிபுரிந்த நான்காயிரம் ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர். இதனால், அவர்களது எதிர்காலம் கேள்வி குறியாகி உள்ளது. #Sterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு கடுமையாக இருந்ததையடுத்து ஆலையை மூடக்கோரி பலகட்ட போராட்டங்கள் நடந்தது. கடந்த 22-ந்தேதி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்பிறகு அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதிகாரிகள் அந்த ஆலைக்கு சீல்வைத்தனர்.

    ஆலை மூடப்பட்டதால் அங்கு பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் வேலை இழந்துள்ளனர். ஸ்டெர்லைட்டில் 1100 நிரந்தர ஊழியர்களும், 3 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களும் பணியாற்றி வந்தனர்.

    ஆலை மூடப்பட்டாலும் அவர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளம் இப்போது வழங்கப்பட்டு உள்ளது. அதாவது நிரந்தர ஊழியர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்கி இருக்கிறார்கள். ஒப்பந்த ஊழியர்களுக்கு பின்னர் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் அடுத்த மாதம் முதல் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதனால் ஊழியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

    இங்கு வேலை பார்த்த நிரந்தர ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கிடைத்து வந்தது. எனவே நிரந்தர ஊழியர்களில் 500லிருந்து 600 பேர் வரை தூத்துக்குடியிலேயே சொந்தமாக வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். ஊழயர்களில் பலருக்கு ஆலை நிர்வாகவே வீடு வழங்கியுள்ளது. பலர் வாடகை வீடுகளிலும் இருக்கிறார்கள்.


    மீண்டும் ஆலை இயக்கப்படுமா? இல்லை நிரந்தரமாக மூடப்படுமா? என்பது இன்னும் சரியாக தெரியாததால் அவர்கள் குழப்பத்தில் சிக்கி தவிக்கிறார்கள். ஸ்டெர்லைட் போராட்டம் கலவரமாக மாறியபோது ஸ்டெர்லைட் ஊழியர்கள் பலர் தாக்கப்பட்டனர். அவர்களது குடியிருப்புகளும் தாக்கப்பட்டன.

    இதனால் ஸ்டெர்லைட் ஊழியர்கள் தங்கள் வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊர் அல்லது உறவினர்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். தற்போது ஒன்றிரண்டு பேர் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு வந்த ஒரு ஊழியரை நேற்று பக்கத்து வீட்டினர் தாக்கி இருக்கிறார்கள். இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் பின்னர் பிரச்சினை வரக்கூடாது என்பதால் அவர் போலீசில் கூட புகார் செய்யவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இவ்வாறு சிக்கல்கள் இருப்பதால் ஊரை விட்டு சென்ற ஊழியர்களும் திரும்பி வர பயப்படுகிறார்கள். இப்போது குழந்தைகளுக்கு பள்ளிகள் தொடங்கிவிட்டன. எனவே கட்டாயம் திரும்பிவர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆலை மூடப்பட்டதால் வேலை பறிபோகும் நிலை இருப்பதால் இனியும் தூத்துக்குடியில் வசிக்க முடியுமா? என்ற கேள்வியும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பலர் ஆலை சம்பளத்தை நம்பி கடன் வாங்கி வீடு கட்டி இருக்கிறார்கள். கார் போன்ற வாகனங்கள் வாங்கி இருக்கிறார்கள். மேலும் பல்வேறு வி‌ஷயங்களுக்காகவும் கடன் வாங்கி இருக்கிறார்கள். அவர்களால் இனி இந்த கடனை அடைக்க முடியுமா? என்ற பயம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் இனி சம்பளம் வராவிட்டால் என்ன செய்வது, வேறு எந்த வேலையை தேடி செல்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். பள்ளிகள் திறந்து விட்டதால் தங்கள் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் இப்போது செலுத்த வேண்டும். அதற்கும் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். வேலை பறிபோனால் தொடர்ந்து குழந்தைகளை அதே பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க முடியுமா? என்ற கவலையும் உள்ளது. பலர் இப்போதே வேறு வேலை கிடைக்குமா? என்று தேடத்தொடங்கி விட்டனர்.

    இதுபற்றி ஒரு அதிகாரி கூறும்போது ஸ்டெர்லைட்டில் வேலை பார்த்த ஊழியர்கள் பெரும்பாலானோர் மாதம் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் பெற்றனர். புதிதாக வேலை தேடி சென்றால் ரூ.10 ஆயிரம் கூட கிடைப்பது கடினம். எனவே ஊழியர்களின் நிலைமை மோசமாக உள்ளது என்று கூறினார்.

    கலவரத்தின் போது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடியிருப்புகள் தாக்கப்பட்டதால் குழந்தைகள் பலர் பீதியில் இருப்பதாகவும், பள்ளிக்கு செல்ல பயப்படுவதாகவும் ஊழியர் ஒருவர் கூறினார். #Sterlite
    துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த வாலிபரின் கால் அகற்றப்பட்டது. ஒரே மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதாக அவரது பெற்றோர் கதறி அழுதனர். #SterliteProtest #Thoothukudi
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்தவர் கிளாட்வின். சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் பிரின்ஸ்டன் (வயது 22). இவர் பாலிடெக்னிக் படித்து உள்ளார். தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பிளாண்ட் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.

    இவர் கடந்த 22-ந் தேதி வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள இந்திய உணவுக்கழக குடோன் அருகே சென்றபோது, அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் வலது காலில் குண்டு பாய்ந்தது.

    இதனால் அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிரின்ஸ்டனின் வலது கால் முட்டுக்கு கீழே சிதைந்துவிட்டது. இதனால் அவரது காலை அகற்ற வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தினர்.

    இதையடுத்து பிரின்ஸ்டனின் வலது கால் முட்டுக்கு கீழ் பகுதி ஆபரேசன் மூலமாக முழுமையாக அகற்றப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரின்ஸ்டன் நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

    இதுகுறித்து பிரின்ஸ்டனின் பெற்றோர் கதறி அழுதபடி கூறியதாவது:-


    பிரின்ஸ்டன் எங்களுக்கு ஒரே மகன். இதனால் மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்தோம். அவன் எப்போதும் எங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே சென்னையில் கிடைத்த வேலைக்கு கூட அனுப்பாமல் இருந்தோம். சமீப காலமாக தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான்.

    கடந்த 22-ந் தேதி அவன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றபோது, போராட்டம் நடந்து உள்ளது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் பிரின்ஸ்டனின் வலது காலில் துப்பாக்கி குண்டு துளைத்தது. இதில் ரத்தவெள்ளத்தில் கிடந்த பிரின்ஸ்டனை ஆம்புலன்சு மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளனர். அவனுக்கும், போராட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    இந்தநிலையில் பிரின்ஸ்டனின் வலது காலில் முட்டுக்கு கீழ் பகுதி சிதைந்துவிட்டது என்றும், அதை ஆபரேசன் மூலம் அகற்ற வேண்டும் என்றும் டாக்டர் அறிவுறுத்தினார்கள். அதன்படி எங்களது மகனின் வலது கால் அகற்றப்பட்டு உள்ளது. எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். அவனது வருமானத்தை மட்டுமே நாங்கள் நம்பியிருந்தோம். அவனது கால் அகற்றப்பட்டதால் அவனது எதிர்காலம் மட்டுமின்றி எங்களது எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிட்டது.

    ஆஸ்பத்திரியில் அவனை சந்தித்த துணை முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் அரசு வேலை தருவதாக கூறி உள்ளனர். காலை இழந்து உள்ள பிரின்ஸ்டனுக்கு கூடுதல் நிவாரணமும், அரசு வேலையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கண்ணீருடன் கூறினர். #Sterlite #SterliteProtest #Thoothukudi
    ×