search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sterlite Protest"

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்து ஓராண்டு முடிந்த நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நினைவுகள் மக்களை விட்டு இன்னும் அகலவில்லை.
    தூத்துக்குடி:

    தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில் இன்னும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து போனது அந்த நிகழ்வு. அதற்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையின் வருகை மற்றும் செயல்பாடுகள், அதன் விளைவால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், போராட்டங்கள், போராட்டத்தின் இறுதியாக நிகழ்ந்த துப்பாக்கி சூடு, ஆலை மூடல், மீண்டும் திறக்க முயற்சி என ஒரு பார்வை!

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை  போராட்டம் கடந்து வந்த பாதை:

    * 1990: ஆண்டின் ஆரம்ப காலகட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க கோவா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மறுப்பு.

    * 1992: மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி!

    * 1993: மராட்டியத்தில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக ஸ்டெர்லைட் வெளியேற்றப்பட்டது.

    * 1.8.1994: தென் தமிழகத்தின் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு அனுமதி!

    * 14.10.1996: மாசுக்கட்டுப்பாடு வாரியம் நிபந்தனையுடன் அனுமதி!

    * 23.11.1998: ஐகோர்ட்டு ஆணைப்படி ஆலை மூடல் (பிறகு அபராதம் கட்டி ஆலை திறக்கப்பட்டது)

    * 29.3.2013: ஆலையை மூட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு.

    * 31.5.2013: தமிழக அரசின் உத்தரவை தேசிய பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்து ஆலையை திறக்க அனுமதி.

    * 5.2.2018: ஆலையை மூட மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு.

    * 12.2.2018: குமாரரெட்டியாபுரத்தில் மக்கள் 100 நாள் போராட்டம் அறிவிப்பு.

    * மார்ச் 2018: தூத்துக்குடி முழுவதும் கடை அடைப்பு, போராட்டம்.  

    * 9.4.2018: மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு.

    * 21.5.2018: போராட்டங்களுக்கு தடைவிதித்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு. ஆனால், மக்களுக்கு செய்திகள் சரியாக சென்று சேரவில்லை.

    * 22.5.2018: ஏற்கனவே அறிவித்தபடி போராட்டத்தின் 100-வது நாளை குறிக்கும் வண்ணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட மக்கள் பேரணி. போலீஸ் துப்பாக்கி சூடு, 13 பேர் பலி! 65 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி.

    * 23.5.2018: அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் அமைக்க தமிழக அரசு உத்தரவு.

    * செப்டம்பர் 2018: மீண்டும் விசாரணை ஆணையத்தின் காலகட்டம் 6 மாதங்கள் நீட்டிப்பு. அந்த 6 மாதமும் கடந்த நிலையில் இன்று வரை விசாரணை அறிக்கை வெளிவரவில்லை.

    * 28.5.2018: ஸ்டெர்லைட் ஆலையை மூடி மாவட்ட கலெக்டர் சீல் வைத்தார்.

    * 9.10.2018: வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு ஆணை.

    * டிசம்பர் 2018: தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க அனுமதி.

    18.2.2019: தமிழக அரசின் மேல்முறையீட்டில், சுப்ரீம் கோர்ட்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை.

    மன்னார் வளைகுடாவில் இருந்து 25 கிலோ மீட்டர் தள்ளி தான் ஆலை நிறுவப்பட வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த கட்டுப்பாட்டை மீறி 14 கிலோ மீட்டரில் அதுவும் மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் ஆலை நிறுவப்பட்டது. ஆண்டுக்கு 4 லட்சம் டன் காப்பர் தயாரிக்கும் திறன் கொண்டது ஸ்டெர்லைட் ஆலை.

    இதில் ஒரு டன் காப்பர் தயாரிக்கவே 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியேறுகிறது. இதுவரை மிக பிரமாண்டமாக வெளியேறிய கந்தக டை ஆக்சைடு காரணமாக 82 முறை வி‌ஷவாயு கசிந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வி‌ஷவாயு கசிவின் போது மக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம், மூச்சுத்திணறல், வாந்தி, தலைவலி போன்றவை ஏற்பட்டு உடல்நலன் பாதிக்கப்படுகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையால் நிலம், நீர், காற்று மாசுபடுவதாக மக்கள் தொடர்ச்சியாக போராடினர்.

    ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால். இது ஒரு பிரிட்டன் நிறுவனம். இது தமிழகத்தில் செய்துள்ள முதலீடு ரூ.336 கோடி. கடைசியாக 2017-ம் ஆண்டில் மட்டும் இந்த ஆலையின் லாபம் ரூ.1,657 கோடி!

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விவகாரம் ஒரு முக்கிய விவாத பொருளானது. அதன் விளைவு என்ன என்பது மே 23-ல் (நாளை) மக்கள் தீர்ப்பில் தெரியவரும்.

    ஸ்டெர்லைட் ஆலை, ஒரு டன் தாமிரத்துக்கு 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வாயுவை உமிழ்கிறது. இதுவரை, 82 நச்சு வாயு கசிவு சம்பவங்கள் நடந்துள்ளன.

    ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களின் 100-வது நாளையொட்டி, கடந்த ஆண்டு மே 22-ந் தேதி போராட்டக்காரர்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    மக்கள் மனதில் நீங்காத வடுவாக அமைந்த இந்த சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில், அந்த சம்பவத்தை, படமாக இயக்குவதாக இயக்குநர் சந்தோஷ் கோபால் அறிவித்துள்ளார். #May22OruSambavam #TuticorinShootOut
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே 22-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.

    இதில் ஏற்பட்ட கலவரத்தால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இதில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் திரைப்படமாகிறது. ஜல்லிக்கட்டு, பசுமை வழிச்சாலை போன்ற தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளை படமாக்கி வரும் இயக்குநர் சந்தோஷ் கோபால் இந்தப் படத்தையும் எடுக்க உள்ளார்.



    இவர், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்தவர். படத்துக்கு “மே 22 ஒரு சம்பவம்“ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அஹிம்சா புரடக்‌ஷன்ஸ் சார்பில் இரண்டாவது படமாக “மே 22 ஒரு சம்பவம்’’ உருவாகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சுவிட்சர்லாந்து, டாவோஸ்சில் உள்ள உலக பொருளாதார மன்றத்தில் வெளியிடப்பட்டது.

    இதுகுறித்து படத்தின் இயக்குனர் சந்தோஷ் கோபால் பேசுகையில், ‘சமீப காலங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சார்ந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட உள்ளது.

    ஜல்லிக்கட்டு, பசுமை வழிச்சாலை படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகிறது. தமிழகத்தின் இந்த மூன்று பிரச்னைகளுக்கும் காரணம், கார்ப்பரேட். இதனால் கார்ப்பரேட் அரசியலை மையப்படுத்தி கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையப்படுத்தி நான் இயக்கியுள்ள திரைப்படம் விரைவில் வெளியாகும்’’ என்றார். #May22OruSambavam #SterliteProtest #TuticorinShootOut #SanthoshGopal

    தமிழக முதல்வர், தூத்துக்குடி கலெக்டர் மற்றும் அமைச்சர்கள் நீதிமன்றமே உத்தரவிட்டாலும் ஸ்டெர்லைட்டை திறக்க விடமாட்டோம் என்று போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். #SterlitePlant #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட‌னர்.

    அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் ஆலை மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநில, தேசிய மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.

    துப்பாக்கி சூடு தொடர்பான வழக்குகளை முதலில் போலீசாரும், பின்னர் சி.பி.சி.ஐ.டி போலீசாரும் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஆலை தரப்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற மேகாலயா ஐகோர்ட்டு நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் குழுவை அமைத்தது.

    இந்த குழுவினர் கடந்த செப்டம்பர் மாதம் 22, 23-ந் தேதிகளில் தூத்துக்குடிக்கு வந்து ஆய்வு செய்தனர். பொதுமக்களிடம் இருந்தும் மனுக்களை பெற்றனர். பின்னர் சென்னையிலும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பல்வேறு தரப்பினரையும் சந்தித்து மனுக்கள் பெற்றனர்.

    மூன்று நாட்களுக்கு முன்பு அந்த குழுவினர் தங்களது ஆய்வு அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம். ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த குழுவின் இந்த அறிக்கை தூத்துக்குடி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர்.

    கிருஷ்ணமூர்த்தி, தமிழ் மாந்தன், வியனரசு

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி:

    தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழு அறிவியல் பூர்வமாகவோ, கள ஆய்வையோ முழுமையாக மேற்கொள்ளவில்லை. இதனால் ஆலைக்கு சார்பாக அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர். இந்த அறிக்கை வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போன்று உள்ளது. இந்த அறிக்கை தூத்துக்குடி மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இதனை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும், அரசும் செய்த கூட்டு சதியாகவே பார்க்கிறோம். ஆலையை நிரந்தரமாக அகற்றும் வரை போராட்டம் தொடரும்.

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை சேர்ந்த வக்கீல் அதிசயகுமார்:

    ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஆலையை மூட வேண்டும் என்ற ஒருமித்த கருத்தில் உள்ளனர். இந்த நிலையில் மக்களுக்கு எதிரான ஒரு பரிந்துரையை குழு சமர்ப்பித்து உள்ளது. ஆகையால் தமிழக அரசு உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். நிரந்தரமாக ஆலையை மூடுவதற்கான வழிமுறையை திட்டமிட்டு அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்றார்.

    நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு:

    ஸ்டெர்லைட் ஆலையை மூடியபோதே முன்னாள் நீதியரசர் ஹரிபரந்தாமன், சந்துரு போன்றோர் அரசாணையில் ஓட்டை உள்ளது. நீதி துறையில் செல்லாது என எச்சரிக்கை மணி அடித்தனர். மக்களும் வலியுறுத்தினார்கள். தமிழக முதல்வர், தூத்துக்குடி கலெக்டர் மற்றும் அமைச்சர்கள் நீதிமன்றமே உத்தரவிட்டாலும் ஸ்டெர்லைட்டை திறக்க மாட்டோம் என்று கூறினார்கள்.

    ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி சுற்றுச்சூழல் மாசுபட்டுள்ளதா? நீர் கெட்டுள்ளதா? கடல் வளம் பாதிக்கப்பட்டுள்ளதா? காற்று மாசுபட்டுள்ளதா? என்பதை பற்றி ஆய்வு செய்யவே நீதியரசர் தருண் அகர்வால் தலைமையிலான குழுவை பசுமை தீர்ப்பாயம் அளித்தது.

    ஆனால் அந்த குழு ஆலையை திறக்க பரிந்துரைப்பதாக கூறுவதற்கு உரிமை இல்லை. வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாக தருண் அகர்வால் குழு வரம்புமீறி செயல்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு 7 நாட்களுக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    எனவே தமிழக அரசு உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு சட்டம் இயற்றியது போல ஸ்டெர்லைட் ஆலையை மூட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். அவ்வாறு செய் ல் அரசின் கொள்கை முடிவு என்று நீதித்துறை தலையிடாது.

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த தமிழ் மாந்தன்:

    தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக உள்ளது. ஆய்வு செய்ய வந்த குழு மக்களிடம் மனுக்கள் வாங்கினார்கள். இந்த வி‌ஷயத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி இருக்க வேண்டும். பசுமை தீர்ப்பாயம் இப்படித்தான் உத்தரவிடும் என எங்களுக்கு தெரியும்.

    ஆலையை ஆய்வு செய்ய வந்த குழுவும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகத்தான் உள்ளது. அந்த குழு மீதும் பசுமை தீர்ப்பாயம் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே பசுமை தீர்ப்பாயத்தை கண்டித்தும் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #SterlitePlant #SterliteProtest
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று 2-வது நாளாக விசாரணையை தொடங்கினர். #ThoothukudiFiring #CBI
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 99 போலீசாரும், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் காயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக சிப்காட், தென்பாகம், வடபாகம், முத்தையாபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு தமிழக அரசு மாற்றியது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணையை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி ஐகோர்ட்டு ஆணை பிறப்பித்தது.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை கடந்த 8-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதன்பேரில் சென்னை சி.பி.ஐ. சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவு துணை சூப்பிரண்டு ரவி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தார். சி.பி.ஐ. சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தல், பயங்கர ஆயுதங்களை வைத்து தாக்குதல், சந்தேக மரணங்கள் உள்ளிட்ட 13 சட்டப்பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    இந்த நிலையில் சி.பி.ஐ. சூப்பிரண்டு சரவணன் தலைமையில் வழக்கு விசாரணை அதிகாரியான சி.பி.ஐ. சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவு துணை சூப்பிரண்டு ரவி மற்றும் 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் தூத்துக்குடிக்கு வந்து விசாரணையை தொடங்கினர்.


    முதல்கட்டமாக அவர்கள் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையம், தென்பாகம், வடபாகம், ஆயுதப்படை வளாகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வழக்கு தொடர்பாக ஆவணங்களை சேகரித்தனர்.

    சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்களுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்த ஆவணங்களை ஒப்பிட்டு பார்த்தனர். இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடங்கினர்.

    அப்போது தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையம், தென்பாகம், வடபாகம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அடுத்தக் கட்ட நடவடிக்கையில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #ThoothukudiFiring #CBI
    தடையை மீறி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேசிய வழக்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு தூத்துக்குடி மாஜிஸ்திரேட்டு கோர்ட் ஜாமீன் வழங்கியது. #ThirumuruganGandhi
    தூத்துக்குடி:

    மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் திருமுருகன் காந்தி. இவர் மீது சென்னையில் தேச துரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். குண்டர் சட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்ட வழக்கில் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்த நேற்று திருமுருகன்காந்தி சென்னை புழல் சிறையில் இருந்து பாளை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார். நள்ளிரவு 1 மணியளவில் திருமுருகன் காந்தி வந்த வேன் பாளை சிறையை வந்தடைந்தது.

    பின்பு பாளை சிறையில் அடைக்கப்பட்ட திருமுருகன் காந்தி இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி அழைத்து செல்லப்பட்டார்.

    தூத்துக்குடியில் கடந்த மார்ச் மாதம் தடையை மீறி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேசியபோது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்த‌து. இந்த வழக்கில் திருமுருகன் காந்தி நீதிபதி தமிழ்செல்வி முன்னிலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அவருக்கு நீதிபதி தமிழ் செல்வி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதனிடையே மற்ற வழக்குகளில் திருமுருகன் காந்திக்கு ஜாமீன் கிடைக்காததால் அவர் மீண்டும் சிறையில் அடைக்க அழைத்து செல்லப்பட்டார். திருமுருகன் காந்தி ஆஜர்படுத்தப்பட்டதையொட்டி தூத்துக்குடி கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப‌ட்டிருந்தது. #Sterlite #ThirumuruganGandhi
    மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவரை மாற்றி உள்ளதால் ஸ்டெர்லைட்டை ஆலையை திறக்க அரசு துணை போகிறதா? என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். #Ramadoss #Sterlite

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சுற்றுச் சூழல்துறை செயலாளராகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் திறம்பட பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்காக அந்த ஆலையின் நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், திடீரென செய்யப்பட்டுள்ள இந்த இடமாற்றம் கண்டிக்கத்தக்கது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு உள்ளிட்ட யாராலும், எதுவும் செய்ய முடியாது என்ற அதிகாரத்திமிரில் அதன் நிர்வாகம் இருந்தபோது, அது செய்துள்ள விதிமீறல்கள் அனைத்தையும் பட்டியலிட்டு அந்த ஆலையை மூடும்படி கடந்த மே 23-ந் தேதி ஆணையிட்டவர் நசிமுதீன் ஆவார்.

    அந்த ஆணையின் அடிப்படையில்தான் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக ஆணையை மே 29ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்தது. கடந்த 15 மாதங்களாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக உள்ள அவருக்குத் தான் ஆலையின் அத்துமீறல்கள் குறித்த விவரங்கள் அத்துபடியாகும்.


    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நசிமுதீனுக்கு இருக்கும் புரிதலும், அனுபவமும் புதிய அதிகாரி ‌ஷம்பு கல்லோலிகருக்கு இருக்க வாய்ப்பில்லை.

    அடுத்த 10 நாட்களில் தேசியப் பசுமைத் தீர்ப்பாய குழுவின் விசாரணை தொடங்கவுள்ள நிலையில், அதற்குள்ளாக ஸ்டெர்லைட் குறித்த அனைத்து பின்னணி தகவல்களையும் அறிந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்வது சாத்தியமற்றதாகும். இது ஸ்டெர்லைட் விவகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிப்பதில் தமிழக அரசுக்கு தொடக்கத்தில் இருந்தே விருப்பம் இல்லை. மக்கள் எழுச்சிக்கும், அரசியல் அழுத்தத்துக்கும் பணிந்து தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்தது. இப்போது ஸ்டெர்லைட் தடை விலக வேண்டும் என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதாகத் தெரிகிறது.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடைதான் அப்பகுதி மக்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியை யும் அளித்துள்ளது. தமிழக அரசு இப்போது இழைத்து வரும் துரோகங்கள் மற்றும் தவறுகளால் ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டால் அதையும், அதனால் ஏற்படும் தீய விளைவுகளையும் அங்குள்ள மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

    எனவே, சுற்றுச் சூழல் துறை செயலாளர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீனை இடம் மாற்றும் முடிவை கைவிட்டு, ஸ்டெர்லைட் சிக்கல் ஓயும் வரை அப்பதவியில் அவர் நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கிளாஸ்டன் என்பவரை, விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்படவே, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    தூத்துக்குடி போராட்டத்தில் தொடர்புடையவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரித்து வருகிறது ஆணையம். இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட கிளாஸ்டன் என்பவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    விசாரணை ஆணையத்தில் வரும் 29-ம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராகுமாறும், வரும் போது உடன் ஒருவரை அழைத்து வர வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 173 வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiSterlite #SterliteProtest #SterliteCases
    மதுரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த போராட்டம் மற்றும் வன்முறை தொடர்பாக தூத்துக்குடி சிப்காட், தூத்துக்குடி வடக்கு, தெற்கு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி மதுரை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளன.



    இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், துப்பாக்கி சூடு மற்றும் போராட்டம் தொடர்பாக மே 22ம் தேதி பதிவு செய்யப்பட்ட 173 வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர். 173 வழக்குகளையும் குற்ற வழக்கு எண் 191-ன் கீழ் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின்படி குற்ற வழக்கு எண் 191-ஐ தவிர்த்து மற்ற வழக்குகளில் யாரையும் போலீசார் கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #ThoothukudiSterlite #SterliteProtest #SterliteCases

    ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வக்கீல் ஹரிராகவன் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்தது. #ThoothukudiIncident #SterliteProtest #NSADetention
    மதுரை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்கள் அதிகாரம் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஹரிராகவன் மீது போராட்டத்தை தூண்டியதாக பல்வேறு காவல் நிலையங்களில் 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் அவருக்கு ஐகோர்ட் மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தது சட்டவிரோதமானது என்றும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவரது மனைவி சத்தியபாமா ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தூத்துக்குடி கலெக்டர் நாளை (புதன்கிழமை) ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தனர்.



    அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, அவருக்கு நீதிபதிகள் அறிவுரைகள் வழங்கியதுடன், வக்கீல் ஹரிராகவன் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    “குற்றம் செய்யாதவரை தண்டிக்க கூடாது. ஒருவரின் சுதந்திர உரிமையை பறிக்கும் நோக்கில் காவல்துறையினர் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. உங்களுடைய ஒரு கையெழுத்து தனிநபரின் சுதந்தரத்தைப் பறிக்கும் என்பதை நினைவில் கொண்டு உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் இதுபோன்று செயல்படக்கூடாது. நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டும்’ என கலெக்டருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். #ThoothukudiIncident #SterliteProtest #NSADetention
    வக்கீல் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்த வழக்கில் தமிழகம் ஜனநாயக நாடா? போலீஸ் நாடா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தூத்துக்குடி கலெக்டர் நாளை கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர். #SterliteProtest
    மதுரை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்கள் அதிகாரம் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஹரிராகவன் மீது போராட்டத்தை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக போலீசார் அவரை கைது செய்ய தேடியபோது மதுரை மாவட்ட கோர்ட்டில் சரண் அடைந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி காவலில் வைக்கப்பட்ட வக்கீல் ஹரிராகவன் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்கி கடந்த 24-ந்தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் வக்கீல் ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இது சட்டவிரோதமானது, அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவரது மனைவி சத்தியபாமா மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சி.பி.செல்வம், பசீர்அகமது முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜராகி வாதாடினார்.


    அவர் வாதாடுகையில், மனுதாரரின் கணவருக்கு ஸ்டெர்லைட் வழக்கில் ஜாமீன் வழங்கி 24-ந்தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் 26-ந்தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஸ்டெர்லைட் வழக்கில் இதுவரை 90 பேருக்கு ஜாமீன் பெற்றுக்கொடுத்துள்ளோம். ஆனால் அவர்கள் மீது அடுத்தடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசாரின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்றார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இது ஜனநாயக நாடா? போலீசாரின் அதிகாரத்திற்குட்பட்ட சர்வாதிகார நாடா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி கலெக்டர் நாளை (புதன்கிழமை) ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். #ThoothukudiIncident #HighCourt #SterliteProtest
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. #Thoothukudisterlite #Sterliteprotest

    சென்னை:

    தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதால் கடந்த மே மாதம் ஆலை மூடப்பட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா குரூப் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

    வேதாந்தா நிறுவனம் வெளியிட்ட 2017-18-ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையில், கடந்த மார்ச் மாதம் ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளுக்கான செப்பு உலோகத்தை உருக்கும் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இயக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்ததுடன் பல்வேறு விளக்கங்கள் கேட்டு அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது. ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு ஆலையை திறக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இந்த ஆலையால் ஆலையைச் சுற்றிலும் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து என தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பயம் காரணமாகவே வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெற்றன. 2013-ம் ஆண்டு சட்ட ரீதியாக பெறப்பட்ட அனுமதியை தொடர்ந்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் எந்த சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது என்பதை நிரூபிப்போம். இந்த ஆலையில் இருந்து எந்த அமிலக் கழிவும் வெளியாவதில்லை. எனவே நிலத்தடிநீர் மாசுபடுவதற்கு வாய்ப்பு இல்லை என்று உள்ளூர் நிலத்தடிநீர் மையம் தெரிவித்துள்ளது.

    சுற்றுச்சூழல் மாசுபடுவது தான் அந்தப் பகுதியில் முக்கிய பிரச்சினையாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்கிறோம். ஸ்டெர்லைட் ஆலை மட்டும் அங்கு இல்லை. அனல் மின்நிலையம், சாயத் தொழிற்சாலைகள் மற்றும் சிறிய-பெரிய அளவிலான 60-க்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள் உள்ளன. நாங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வந்தோம். இதுதொடர்பான பேச்சு வார்த்தைக்கு திறந்த மனதுடன் இருக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.#Thoothukudisterlite #Sterliteprotest

    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு சுய தொழில் தொடங்க  அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆட்டோ வழங்கினார். #kadamburRaju
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுய தொழில் தொடங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மரிய சிலுவை என்பவருக்கு சுய தொழில் தொடங்க பெருநிறுவனங்களில் சமூக பொறுப்பாண்மை திட்டத்தின் கீழ் ஆட்டோவினை வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், சப்-கலெக்டர் அனு,கலெக்டரின் நேர்முக உதவியாளர் தியாகராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால்,துணை கலெக்டர் முத்துமாதவன், முன்னாள் எம்.எல்.ஏ.மோகன்மற்றும் பலர் கலந்து கொண்டனர். #kadamburRaju
    ×