search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம்- போராட்டக்குழு அறிவிப்பு
    X

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம்- போராட்டக்குழு அறிவிப்பு

    தமிழக முதல்வர், தூத்துக்குடி கலெக்டர் மற்றும் அமைச்சர்கள் நீதிமன்றமே உத்தரவிட்டாலும் ஸ்டெர்லைட்டை திறக்க விடமாட்டோம் என்று போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். #SterlitePlant #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட‌னர்.

    அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் ஆலை மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநில, தேசிய மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.

    துப்பாக்கி சூடு தொடர்பான வழக்குகளை முதலில் போலீசாரும், பின்னர் சி.பி.சி.ஐ.டி போலீசாரும் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஆலை தரப்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற மேகாலயா ஐகோர்ட்டு நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் குழுவை அமைத்தது.

    இந்த குழுவினர் கடந்த செப்டம்பர் மாதம் 22, 23-ந் தேதிகளில் தூத்துக்குடிக்கு வந்து ஆய்வு செய்தனர். பொதுமக்களிடம் இருந்தும் மனுக்களை பெற்றனர். பின்னர் சென்னையிலும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பல்வேறு தரப்பினரையும் சந்தித்து மனுக்கள் பெற்றனர்.

    மூன்று நாட்களுக்கு முன்பு அந்த குழுவினர் தங்களது ஆய்வு அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம். ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த குழுவின் இந்த அறிக்கை தூத்துக்குடி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர்.

    கிருஷ்ணமூர்த்தி, தமிழ் மாந்தன், வியனரசு

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி:

    தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழு அறிவியல் பூர்வமாகவோ, கள ஆய்வையோ முழுமையாக மேற்கொள்ளவில்லை. இதனால் ஆலைக்கு சார்பாக அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர். இந்த அறிக்கை வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போன்று உள்ளது. இந்த அறிக்கை தூத்துக்குடி மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இதனை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும், அரசும் செய்த கூட்டு சதியாகவே பார்க்கிறோம். ஆலையை நிரந்தரமாக அகற்றும் வரை போராட்டம் தொடரும்.

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை சேர்ந்த வக்கீல் அதிசயகுமார்:

    ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஆலையை மூட வேண்டும் என்ற ஒருமித்த கருத்தில் உள்ளனர். இந்த நிலையில் மக்களுக்கு எதிரான ஒரு பரிந்துரையை குழு சமர்ப்பித்து உள்ளது. ஆகையால் தமிழக அரசு உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். நிரந்தரமாக ஆலையை மூடுவதற்கான வழிமுறையை திட்டமிட்டு அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்றார்.

    நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு:

    ஸ்டெர்லைட் ஆலையை மூடியபோதே முன்னாள் நீதியரசர் ஹரிபரந்தாமன், சந்துரு போன்றோர் அரசாணையில் ஓட்டை உள்ளது. நீதி துறையில் செல்லாது என எச்சரிக்கை மணி அடித்தனர். மக்களும் வலியுறுத்தினார்கள். தமிழக முதல்வர், தூத்துக்குடி கலெக்டர் மற்றும் அமைச்சர்கள் நீதிமன்றமே உத்தரவிட்டாலும் ஸ்டெர்லைட்டை திறக்க மாட்டோம் என்று கூறினார்கள்.

    ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி சுற்றுச்சூழல் மாசுபட்டுள்ளதா? நீர் கெட்டுள்ளதா? கடல் வளம் பாதிக்கப்பட்டுள்ளதா? காற்று மாசுபட்டுள்ளதா? என்பதை பற்றி ஆய்வு செய்யவே நீதியரசர் தருண் அகர்வால் தலைமையிலான குழுவை பசுமை தீர்ப்பாயம் அளித்தது.

    ஆனால் அந்த குழு ஆலையை திறக்க பரிந்துரைப்பதாக கூறுவதற்கு உரிமை இல்லை. வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாக தருண் அகர்வால் குழு வரம்புமீறி செயல்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு 7 நாட்களுக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    எனவே தமிழக அரசு உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு சட்டம் இயற்றியது போல ஸ்டெர்லைட் ஆலையை மூட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். அவ்வாறு செய் ல் அரசின் கொள்கை முடிவு என்று நீதித்துறை தலையிடாது.

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த தமிழ் மாந்தன்:

    தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக உள்ளது. ஆய்வு செய்ய வந்த குழு மக்களிடம் மனுக்கள் வாங்கினார்கள். இந்த வி‌ஷயத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி இருக்க வேண்டும். பசுமை தீர்ப்பாயம் இப்படித்தான் உத்தரவிடும் என எங்களுக்கு தெரியும்.

    ஆலையை ஆய்வு செய்ய வந்த குழுவும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகத்தான் உள்ளது. அந்த குழு மீதும் பசுமை தீர்ப்பாயம் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே பசுமை தீர்ப்பாயத்தை கண்டித்தும் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #SterlitePlant #SterliteProtest
    Next Story
    ×