search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi Sterlite Factory"

    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடைபெற்று இன்று 100-வது நாளையொட்டி தூத்துக்குடியில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பு திருப்பலி இன்று மாலை நடக்கிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், போராட்டக்குழுவினர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த மே மாதம் 22-ந்தேதி இதன் 100-வது நாளில் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முடிவு செய்தனர்.

    இதற்கு போலீசார் அனுமதி வழங்காததால் போராட்டத்தில் தடியடி, துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் 13 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்துள்ளது.

    இந்நிலையில் துப்பாக்கி சூடு நடைபெற்று இன்று 100-வது நாளையொட்டி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் மற்றும் சின்னகோவிலில் சிறப்பு திருப்பாலி நடத்த முடிவு செய்தனர். ஆனால் இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா அனுமதி வழங்கவில்லை.

    இதையடுத்து அவர்கள் தூத்துக்குடியில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் தனித்தனியாக சிறப்பு திருப்பலி இன்று மாலை 6 மணிக்கு நடத்துவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறா வண்ணம் தூத்துக்குடியில் போலீஸ் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலும் புகார் அளித்திருந்தார். இதற்கு தமிழக அரசு பதில் அளிக்கும் விதமாக ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் லிவிங்ஸ்டன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தின் நகல் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த கடிதம் விவரம் வருமாறு:-

    ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமத்தினர், தங்களது உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரி அளித்து இருந்த விண்ணப்பத்தைத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், 9.4.2018 அன்று ஏற்க மறுத்ததுடன், ஆலையை இயக்கக் கூடாது என, 12.04.2018 அன்று ஆணை பிறப்பித்தது.

    அதைச் செயல்படுத்துவதற்கான நடைமுறைகளையும், மின் இணைப்பைத் துண்டித்தும், 23.05.2018 அன்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, 24.05.2018 அன்று, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு, அதன்படி, 28.05.2018 அன்று ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

    இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    இந்த தகவலை ம.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ளது.
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் கலவரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் 5 நாட்கள் நடத்திய சோதனை இன்றுடன் நிறைவு பெற்றது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.

    ஏற்கனவே தேசிய, மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்தியது. துப்பாக்கி சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் 5 வழக்குகளுக்கும் தலா ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வ‌ருகிறார்கள்.

    இதனிடையே சென்னையில் இருந்து தடயவியல் துறை கூடுதல் இயக்குனர் திருநாவுக்கரசர் தலைமையில் உதவி இயக்குனர்கள் விசாலாட்சி, மணிசேகர், வல்லுனர் சண்முகசுந்தரம், வெடிகுண்டு நிபுணர்கள் வாசுதேவன், பிள்ளை ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கடந்த 23-ந்தேதி தூத்துக்குடிக்கு வந்தனர்.

    துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்கள் மற்றும் வன்முறை, தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் அவர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். நேற்று 4-வது நாளாக போலீசாரின் கள ஆய்வு நடைபெற்றது. பொதுமக்கள் பேரணியாக சென்ற பகுதிகளில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் துணையோடு ஆய்வில் ஈடுபட்டார்கள்.


    கலவரத்தின் போது எரிக்கப்பட்டும், அடித்து சேதப்படுத்தப்பட்ட நிலையிலும் கிடந்த சுமார் 150 வாகனங்களை சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் அருகே தங்களது கட்டுப்பாட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வைத்து உள்ளனர். இந்த வாகனங்களில் ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா? என்பது குறித்து அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உதவியுடன் வாகனங்களின் விவரங்கள் கண்டறியப்பட்டன.

    அனைத்து வாகனங்களிலும் அதிநவீன கருவிகளின் துணையுடன் துல்லியமாக சோதனை செய்தனர். மாவட்ட போலீஸ் மோட்டார் பிரிவு மெக்கானிக்குகள் வரவழைக்கப்பட்டு சேதமடைந்த ஒவ்வொரு வாகனத்தின் பேட்டரியையும் கழற்றி ஆய்வு செய்த‌னர். குறிப்பாக கல்வீச்சில் சேதமடைந்த போலீஸ் வாகனங்களில் வெகுநேரம் சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து சோதனையை இன்று சி.பி.சி.ஐ.டி போலீசார் நிறைவு செய்தார்கள்.

    சோதனை நிறைவை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி வளாகத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இரவு நேரத்தில் கண்காணிக்கும் பொருட்டு ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. கண்ணாடி உடைக்கப்பட்டு இயங்கக்கூடிய நிலையில் உள்ள வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகனங்களில் பாதுகாப்பு கருதி பேட்டரிகள் அகற்ற‌ப்பட்டன.

    இதனிடையே துப்பாக்கி சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட 303 ரக துப்பாக்கிகள் 5, எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகள் 5, கைத்துப்பாக்கிகள் 3 ஆகியவற்றை போலீசார் சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    துப்பாக்கி சூட்டின்போது போலீசார் பயன்படுத்திய தோட்டாக்கள் இன்னும் ஒப்படைக்கப்படாத நிலையில் பொதுமக்களிடமும் சில தோட்டாக்கள் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. அவற்றை சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைக்கவேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
    அமில கசிவை சரிசெய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்க உத்தரவிட கோரி பொது மேலாளர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். #Sterlite
    மதுரை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு கடந்த 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி ‘சீல்’ வைத்தது.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்க கோரி அதன் பொது மேலாளர் சத்தியபிரியா மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது. கடந்த 16-ந்தேதி கந்தக அமிலம் குழாயில் கசிவு ஏற்பட்டது. அப்போது இரவு நேரம் என்பதாலும், மின் இணைப்பு இல்லாததாலும் உரிய நேரத்துக்கு சென்று குழாயில் ஏற்பட்ட கசிவை தடுக்க முடியவில்லை.

    இதேபோல எல்.பி.ஜி. கியாஸ் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் ஏராளமாக உள்ளன. இவை தொடர்ந்து பராமரிக்கப்படாமல் இருந்தால் குழாய்களில் கசிவோ, வேறு ஏதேனும் ஆபத்துகள் உண்டாகவோ வாய்ப்புகள் உள்ளன. இதனால் தொழிற்சாலையை சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே ஸ்டெர்லைட் ஆலைக்குள் பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட பணியாளர்களை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்ப உத்தரவிட வேண்டும்.

    பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தற்காலிகமாக மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #Sterlite
    “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு கையகப்படுத்திய நிலங்கள் விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும்” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #Sterlite #TNMinister #KadamburRaju
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலில் மீன்பிடிக்க செல்ல 15 அடி நீளமும், 150 எச்.பி. திறனும் கொண்ட விசைப்படகுகள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 24 அடி நீளமும், 240 எச்.பி. திறனும் கொண்ட பெரிய விசைப்படகுகளில் சென்று கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மீன வர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதை ஏற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அத்தகைய பெரிய விசைப்படகுகளையும் கடலில் மீன்பிடிக்க அனுமதித்து உடனே அரசாணை பிறப்பித்தார்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எப்படி சட்டம்-ஒழுங்கை பாதுகாத்தாரோ, அதேபோன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரும் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருகின்றனர்.

    தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 23 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்று உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதித்தது. அது மக்களின் உணர்வு பிரச்சினை.

    ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, 99 நாட்கள் நடந்த போராட்டத்துக்கு தமிழக அரசு தடை விதிக்கவில்லை. 43 நாட்கள் முன்னதாகவே ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க மறுத்து, அதனை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது.

    தி.மு.க. ஆட்சிக்காலத்தில் துணை முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோதுதான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிக்கு அனுமதி வழங்கப்பட்டு, 240 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு கையகப்படுத்திய நிலங்கள் மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.  #Sterlite #TNMinister #KadamburRaju
    தூத்துக்குடியில் மக்கள் நிம்மதியாக வாழ்வை தொடர கைது நடவடிக்கையை போலீசார் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மனு கொடுத்தார். #Thoothukkudi #Sterlite
    தூத்துக்குடி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நேற்று மதியம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தூத்துக்குடி மாநகரில் கடந்த மாதம் 22-ந் தேதி நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து அன்றும், 23-ந் தேதியும் நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் நீதிமன்ற பிணையில் உள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் சாதாரண மக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. தினசரி நள்ளிரவு நேரங்களில் போலீசார் வீடுகளில் கதவுகளை தட்டி பெண்களை மிரட்டி ஆண்களை கைது செய்வது நியாயமற்றது ஆகும்.

    இயல்புநிலை படிப்படியாக திரும்பி வரும்போது இத்தகைய நடவடிக்கைகள் மீண்டும் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கூடங்கள் விடுமுறைக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகள் படிப்பு தொடர முடியாத நிலையில் உள்ளனர்.

    எனவே தூத்துக்குடி மாநகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இயல்பு நிலை திரும்பி, மக்கள் நிம்மதியாக வாழ்வை தொடர உடனடியாக கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. #Thoothukkudi #Sterlite
    ×