search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rail"

    • தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    • செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக செங்கல்பட்டு அருகே ஒத்திவாக்கம் ரெயில் நிலையத்தில் நடை மேடையில் நின்று கொண்டிருந்த மரம் முறிந்து தண்டவாளத்தில் விழுந்தது.

    இதன் காரணமாக அந்த வழியாக ரெயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் தென் மண்டலங்களில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    அதன்பிறகு தண்ட வாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் வரை தாமதமாக வந்தன. சென்னை வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது.

    செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை தாம்பரம், மாம்பலம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் ஆகியோர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஏறி செல்வது வழக்கம். அந்த ரெயில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக வந்ததால் சென்னைக்கு வேலைக்கு செல்பவர்களும், மாணவ-மாணவிகளும் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

    • நீல, சிவப்பு நிற முழுக்கை டீ சர்ட், டவுசரும் அணிந்திருந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை நல்லியான் தோட்டம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் நாகை இருப்புப் பாதை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜு, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து கிடந்தவர் நீல, சிவப்பு நிற முழுக்கை டீ சர்ட், டவுசரும் அணிந்திருந்தார்.

    இது குறித்து இருப்பு பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகையில் வாலிபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சாத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
    • 20-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    மதுரை

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை ரெயில்வே கோட்ட பகுதியில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு ரெயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அறி விக்கப்பட்டுள்ளன. அதன்படி தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20691/20692) சாத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    இதேபோல மதுரை - புனலூர் - மதுரை ரெயில்கள் (16729/16730) சாத்தூர், கோவில்பட்டி ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். மேலும் திருச்சி - ராம நாதபுரம் - திருச்சி ரெயில்கள் (16849/16850) கீரனூர் ரெயில் நிலையத்திலும் கூடுதலாக நின்று செல்லும். இந்த கூடுதல் நிறுத்தங்கள் வருகிற 20-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    மண்டபம் - அஜ்மீர் - மண்டபம் ஹம்சபார் விரைவு ரெயில்கள் (20973/20974) புதுக்கோட்டை, ராமநாத புரம் ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். வருகிற 23-ந்தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது.

    மேலும் மண்டபம் - அயோத்தியா - மண்டபம் ஷிரத்தா சேது எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ராமநாதபுரம், காரைக்குடி ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். வருகிற 24-ந்தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செகந்திராபாத்-ராமநாதபுரம் ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    மதுரை

    செகந்திராபாத்- ராமநாதபுரம்- செகந்திராபாத் சிறப்பு விரைவு ரெயில்களின் சேவையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து தென்மத்திய ரெயில்வே அறிவிப்பு வெளி யிட்டுள்ளது.

    அதன்படி செகந்திரா பாத்- ராமநாதபுரம் சிறப்பு ரெயில் (07695) செப்டம்பர் 6, 13, 20, 27 ஆகிய புதன் கிழமைகளில் செகந்திரா பாத்தில் இருந்து இரவு 09.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.45 மணிக்கு இராமநாதபுரம் வந்து சேரும்.

    மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு ரெயில் (07696) செப்டம்பர் 8, 15, 22, 29 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும். இந்த ரெயில்கள் நலகொண்டா, மிரியால் குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, ஓங்கோல், காவாலி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை.

    திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக் கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்க ளுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடை பெற்று வருகிறது.

    • அதிராம்பட்டினம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டன.
    • ரெயில்வே வாரியத்திற்கு பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    எர்ணாகுளம்- வேளாங்கண்ணி விரைவு ரெயில் செப்டம்பர் 25ஆம் தேதி முதல் பேராவூரணி, அதிராம்பட்டினத்தில் நின்று செல்ல ரெயில்வே வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.

    கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி முதல் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் ( வண்டி எண் . 06035/ 06036) வாரம் ஒரு முறை எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு பட்டுக்கோட்டை வழியாக வேளாங்கண்ணி வரை சென்று மீண்டும் எர்ணாகுளத்துக்கு வந்தடைகிறது.

    இந்த ரெயிலை வாரம் இரு முறை நிரந்தர ரெயிலாக ( 16361/ 16362) இயக்க சில நாட்களுக்கு முன்பு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

    இதனைத் தொடர்ந்து இந்த ரெயில் பேராவூரணி, அதிராம்பட்டினம் ரெயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரி க்கைகள் விடுக்கப்பட்டன.

    இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ரயில்வே வாரியம் செப்டம்பர் 25ஆம் தேதி முதல் வாரம் இருமுறை நிரந்தர ரயிலாக இயக்கப்படும் போது பேராவூரணி, அதிராம்பட்டினம் ரெயில் நிலையங்களில் நின்று செல்வதற்கான அனுமதி வழங்கியது.

    இதனால் ரெயில்வே வாரியத்திற்கு பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    • ரெயிலில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்லக்கூடாது.
    • இணையத்தில் ரெயில் பயணிகள் 13 லட்சம் பேர் ஒரு நாளுக்கு பதிவு செய்கின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி ச.மு.இ மேல்நிலை ப்ப ள்ளியில் இந்திய இரயில்வே யின் எழுச்சிமிக்க பயணம் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கான கருத்தரங்கு பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி தலைமையில் நடந்தது.

    தெற்கு ரயில்வே ஓய்வுபெற்ற அலுவலர் ஆர்.ஞானம்,உடற்கல்வி இயக்குனர் எஸ்.முரளிதரன், ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் கே.கஜேந்திரன்,கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் டி.ராஜராஜன்,ஜி.மார்க்ஸ்பிரியன் முன்னிலை வகித்தனர்.

    இதில் ,திருச்சிராபள்ளி தெற்கு ரயில்வே முதுநிலை கோட்ட இயக்கவியல் மேலாளர் எம்.ஹரிக்குமார் பங்கேற்று பேசுகையில் ரயில்வேத்துறை மிகப்பெரிய நிர்வாகத்துறையாக செயல்படுகிறது.

    நாட்டில் நாள் ஒன்றுக்கு 22ஆயிரம் இரயில்கள் இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டரை கோடி மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர்.

    ஐஆர்டிசி இணையத்தில் ரயில் பயணிகள் 13லட்சம் பேர் நாள் ஒன்றுக்கு பதிவு செய்கின்றனர்.

    திருச்சி தென்ன ரயில்வேயில்13 மாவட்டங்களில் 9ஆயிரத்து 151பேர் பணியாற்றுகின்றனர். ரயில் பயணம் மக்களின் அன்றாட வாழ்வில் அங்கமாக உள்ளது.

    அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.ரயிலில் பயணிக்கும்போது ரயில்வே விதிமுறைகளை மீறி எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள்,எரிபொருட்கள் போன்றவற்றை எடுத்துசெல்வது சட்டப்படி தண்டனைகுரியது.

    அதேபோல் ரயில் தண்டவாளங்களில் சிறுவர்கள் கற்களை வைத்து விளையாடக்கூடாது.

    ரயில் தண்டவாளங்களை பயன்படுத்துவதே தவறுதான். ரயில்கள் முன்பு செல்பி எடுப்பது, வீடியோ பதிவு செய்வது போன்றவற்றை தவிர்க்கவேண்டும் என்றார.

    முன்னதாக ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தலைவர் முஸ்தபா வரவேற்றார். முடிவில் பொருளாளர் நந்தகுமார் நன்றி கூறினார்.

    • காரைக்கால்- தஞ்சாவூர் டெமு ரெயில் திருச்சி ஜங்ஷன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரு வழித்தடத்திலும் இயக்கப்பட உள்ளன.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்த திருவிழாவில் தமிழகம் மற்றும் பல்வேறு வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    அவர்களின் வசதிக்காக கூடுதல் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சில ரெயில்க ளின் சேவைகள் நீட்டிக்கப்பட்டு ள்ளன.

    அவற்றின் விவரம் வருமாறு :-

    காரைக்கால்- தஞ்சாவூர் டெமு ரெயில் (06835) இன்று முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை திருச்சி ஜங்ஷன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி - வேளாங்கண்ணி முன்பதிவில்லா டெமு ரெயில் (06866) திருச்சி ஜங்ஷனில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    வேளாங்கண்ணி- தஞ்சாவூர் முன்பதிவில்லா டெமு ரயில் (06863)வேளாங்கண்ணியில் இருந்து அதிகாலை 3.05 மணிக்கு புறப்பட்டு 5.35 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.

    விழுப்புரம்- நாகப்பட்டினம்- விழுப்புரம் முன்பதிவில்லா டெமு ரயில் (06865/ 06864) இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை, செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரு வழித்தடத்திலும் இயக்கப்பட உள்ளன.

    அதன்படி விழுப்புரத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12.50 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும்.

    மறு வழித்தடத்தில் நாகப்பட்டி னத்தில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 5.40 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

    நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி முன்பதிவில்லா டெமு ரெயில் (06857/ 06858) (06868/ 06867) நாளை முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை இயக்கப்படுகிறது.

    இதில், வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் (06858) ரெயில் வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினத்தை பிற்பகல் 12.55 மணிக்கு சென்றடையும்.

    மறு வழித்தடத்தில் நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி (06857) ரயில், நாகப்பட்டினத்தில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    இதேபோல, வேளாங்கண்ணி- நாகப்பட்டினம் (06868) ரெயில், வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு, நாகப்பட்டினத்துக்கு பிற்பகல் 2.20 மணிக்கும், நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி ரெயில் (06867) நாகப்பட்டினத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, வேளாங்கண்ணிக்கு பிற்பகல் 3.50 மணிக்கும் சென்றடையும்.

    மேற்கண்ட தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ராசிபுரம் வழியாக சேலத்திற்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடைகிறது.
    • மறு மார்க்கமாக சேலத்தில் இருந்து தினமும் மதியம் 2.05 மணிக்கு புறப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் இருந்து நாமக்கல் வழியாக சேலத்திற்கு நேரடி ரெயில் சேவை ஏற்படுத்தி தரவேண்டும் அனைத்து தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் மயிலாடுதுறை –திருச்சி, திருச்சி- கரூர், கரூர்-சேலம் ஆகிய 3 ரெயில்களின் இணைந்த சேவைக்கான கருத்துரு ஒன்றை தென்னக ரெயில்வே கடந்த பிப்ரவரி மாதத்தில் ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பியது.

    அதற்கு ரெயில்வே வாரியம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.

    தற்போது இந்த இணைக்க ப்பட்ட ரெயிலுக்கான கால அட்டவணை இறுதி செய்யப்பட்டு நாளை (திங்கட்கிழமை) முதல் மயிலாடுதுறை- சேலம் இடையே கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக நேரடி ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.

    மயிலாடுதுறை-சேலம் புதிய விரைவு ரெயில் தினமும் காலை 6.20 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும். இந்த ரெயில் குத்தாலம் , நரசிங்கம்பேட்டை, ஆடுதுறை ,திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், கும்பகோணம், தாராசுரம், சுவாமிமலை, சுந்தர பெருமாள் கோவில், பாபநாசம், திட்டை ,பசுபதி கோவில் , தஞ்சை, ஆலக்குடி, பூதலூர் ,திருவெறும்பூர், திருச்சி, கரூர், நாமக்கல், ராசிபுரம் வழியாக சேலத்திற்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடைகிறது.

    மறு மார்க்கமாக சேலத்தில் இருந்து தினமும் மதியம் 2.05 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மயிலாடுதுறையை இரவு 9.40 மணிக்கு வந்தடைகிறது.

    தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து முதன் முதலாக நாமக்கல் வழியாக சேலத்திற்கு நேரடி ரெயில் சேவை கிடைத்துள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ரெயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றியதற்காக அனைத்து தரப்பினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    • நாளை காலை ரெயில் புறப்பட்டு மறுநாள் இரவு வேளாங்கண்ணி சென்றடையும்.
    • அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 12.30 மணிக்கு செகந்தராபாத் சென்றடையும்.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு மும்பை, செகந்திரபாத் ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் இரு மார்க்கமாக இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி மும்பை பாந்திரா ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.15 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் ( வண்டி எண். 09047) புறப்பட்டு மறுநாள் இரவு 8.35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    மறுமார்க்கமாக வேளாங்க ண்ணியில் இருந்து 29-ம் தேதி அதிகாலை 4.50 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரெயில் ( வண்டி எண்.09048) மறுநாள் மாலை 5.30 மணிக்கு மும்பை வதோதரா ரயில் நிலையத்துக்கு சென்றடையும்.

    இதேபோல் செகந்திரா பாத்- வேளாங்கண்ணி சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்.07125) அடுத்த மாதம் ( செப்டம்பர்) 4-ம் தேதி காலை 8.40 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    மறு வழிதடத்தில் வேளாங்கண்ணி- செகந்திராபாத் சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்.07126) அடுத்த மாதம் 6-ம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 12.30 மணிக்கு செகந்தராபாத் சென்றடையும்.

    இதேபோல் செகந்தி ராபாத்- வேளாங்கண்ணி இடையே மற்றொரு சிறப்பு கட்டண ரெயில் ( வண்டி எண்.07127) செகந்திராபாத்தில் இருந்து அடுத்த மாதம் 8-ம் தேதி காலை 8 .40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    மறு வழித்தடத்தில் வேளாங்கண்ணியில் இருந்து ( வண்டி எண்.07128) அடுத்த மாதம் 10-ம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு செகந்திராபாத் சென்ற டையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2 கால்களும் ரெயிலுக்கும், நடைமேம்பாலத்திற்கும் இடையே சிக்கியது.
    • உயிருக்கு போராடிய அவரை போலீசார் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருப்பூர்:

    சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 42). இவர் திருப்பூர் அவினாசியில் உள்ள சலூன்கடையில் முடிதிருத்தும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று காலை குடிபோதையில் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த அவர் அங்கும் இங்கும் சுற்றி கொண்டிருந்தார். திடீரென ரெயில் நிலைய வளாகத்தில் படுத்து தூங்கினார். இதையடுத்து அங்கு ரோந்து சுற்றி வந்த திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் மாரி முத்துவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் சிரித்து கொண்டே முன்னுக்குப்பின் முரணான பதில்களை அளித்தார். இதையடுத்து அவரை எச்சரித்த போலீசார் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்லுமாறு கூறினர்.

    இருப்பினும் அவர் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து ரெயில் நிலையத்தில் சுற்றியும் வளாகத்தில் படுத்தும் தூங்கினார்.

    இந்நிலையில் பாலக்காட்டில் இருந்து ஈரோடு செல்லும் ரெயில் , திருப்பூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும் பயணிகள் அதில் ஏறி இறங்கினர். பின்னர் ரெயில் புறப்பட்டு செல்லும் போது தூங்கி கொண்டிருந்த மாரிமுத்து திடீரென எழுந்து , புறப்பட்டு சென்ற ரெயிலில் ஏற முயன்றார். போதையில் இருந்ததால் தடுமாறிய அவர் நடைமேம்பாலம்- தண்டவாளத்தின் இடையே விழுந்தார். இதில் அவரது 2 கால்களும் ரெயிலுக்கும், நடைமேம்பாலத்திற்கும் இடையே சிக்கியது.

    ரெயில் வேகமாக சென்றதால் அவரது 2 கால்களும் நசுங்கி துண்டாகின. இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை போலீசார் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போதை மயக்கத்தில் ரெயிலில் சிக்கி தொழிலாளியின் 2 கால்களும் துண்டான சம்பவம் ரெயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    • சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அந்த வாலிபர் முதுகில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்து பொதுமக்கள் குட்ஷெட் நிலைய அதிகாரி பிரகாஷ்குமாரிடம் தெரிவித்தனர். அவர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அந்த வாலிபர் முதுகில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். அவர் தண்டவாளத்தை கடக்கும் போது அந்த வழியாக சென்ற ரெயில் மோதி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்த வாலிபரின் மார்பில் கமலா எனவும் கையில் மணி எனவும் பச்சை குத்தப்பட்டிருந்தது. இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதையடுத்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்குவாரியில் வேலை செய்வதற்காக கடந்த 15ந்தேதி புறப்பட்டு வந்தனர்.
    • பிரகாசை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க குவாரியில் பணியாற்றும் சக தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.

    சென்னை:

    ஈரோட்டில் இருந்து சென்னை வந்த ரெயிலில் பாதுகாப்புக்காக கட்டி போடப்பட்ட வெளி மாநில வாலிபர் கழுத்து இறுகி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும் பயணிகள் அளித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் இந்த விவகாரத்தில் கொலை வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். மிகவும் பரிதாபத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(25), இவர் உட்பட 10 பேர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் வேலை செய்வதற்காக கடந்த 15ந்தேதி புறப்பட்டு வந்தனர். பின்னர் அனைவரும் ஈரோடு கல்குவாரிக்கு சென்று வேலை செய்து வந்தனர்.

    அப்போது பிரகாசுக்கு திடீரென மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உடன் பணியாற்றும் சக தொழிலாளர்களுடன் பிரகாஷ் தகராறில் ஈடுபட்டார். இது குறித்து சத்தீஸ்கரில் உள்ள பிரகாசின் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சொந்த ஊருக்கு அழைத்து வருமாறு தெரிவித்துள்ளனர்.

    இதைதொடர்ந்து பிரகாசை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க குவாரியில் பணியாற்றும் சக தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.

    இதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராம்குமார் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இருவரும் நேற்று பிரகாசை அழைத்துக் கொண்டு சத்தீஸ்கர் செல்வதற்காக ரப்திகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் ஏறி புறப்பட்டனர்.

    அப்போது பிரகாஷ் பயங்கரமாக கூச்சலிட்டு பயணிகளுக்கு நொந்தரவு கொடுத்துள்ளார்.

    இதனால் ராம்குமாரும் சிறுவனும் சேர்ந்து பிரகாஷின் கை கால்களை கயிற்றால் கட்டி போட்டுள்ளனர். அப்போதும் பிரகாஷ் கூச்சல் போட்டுக்கொண்டே இருந்தார். இதனால் பிரகாசை இருக்கையின் கீழே படுக்க வைத்துள்ளனர்.

    பின்னர் அவர் சத்தம் போடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கழுத்தை துணியால் கட்டியுள்ளனர். பின்னர் இருக்கையுடன் சேர்த்து கம்பியால் கட்டிபோட்டனர். அப்போது பிரகாசுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அவர் உயிருக்கு போராடினார். இருக்கைக்கு கீழே தள்ளி படுக்க வைத்திருந்ததால் அது யாருக்கும் தெரியவில்லை. பின்னர் சத்தமில்லாமலேயே பிரகாசின் மூச்சு அடங்கியது. அவர் கழுத்து இறுகி மூச்சு திணறல் ஏற்பட்டு ஓடும் ரெயிலிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதன் பிறகே ரெயில் பயணிகள் பிரகாஷ் இறந்து கிடந்ததை பார்த்தனர். இது தொடர்பாக ரெயில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைத்ததும் ரெயில்வே போலீசிடம் புகார் அளித்தனர். இதையடுத்து சென்ட்ரல் ரெயில்வே இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து பிரகாசின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பிரகாசின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் ராம்குமாரை கைது செய்தனர். சிறுவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பிரகாசின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சென்னைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.

    பாதுகாப்பு என கருதி கழுத்தில் கட்டப்பட்ட துணியே வாலிபருக்கு எமனாக மாறிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×