search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போதை மயக்கத்தில் ஓடும் ரெயிலில் ஏற முயன்ற தொழிலாளி- 2 கால்களும் துண்டாகின
    X

    போதை மயக்கத்தில் ஓடும் ரெயிலில் ஏற முயன்ற தொழிலாளி- 2 கால்களும் துண்டாகின

    • 2 கால்களும் ரெயிலுக்கும், நடைமேம்பாலத்திற்கும் இடையே சிக்கியது.
    • உயிருக்கு போராடிய அவரை போலீசார் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருப்பூர்:

    சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 42). இவர் திருப்பூர் அவினாசியில் உள்ள சலூன்கடையில் முடிதிருத்தும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று காலை குடிபோதையில் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த அவர் அங்கும் இங்கும் சுற்றி கொண்டிருந்தார். திடீரென ரெயில் நிலைய வளாகத்தில் படுத்து தூங்கினார். இதையடுத்து அங்கு ரோந்து சுற்றி வந்த திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் மாரி முத்துவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் சிரித்து கொண்டே முன்னுக்குப்பின் முரணான பதில்களை அளித்தார். இதையடுத்து அவரை எச்சரித்த போலீசார் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்லுமாறு கூறினர்.

    இருப்பினும் அவர் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து ரெயில் நிலையத்தில் சுற்றியும் வளாகத்தில் படுத்தும் தூங்கினார்.

    இந்நிலையில் பாலக்காட்டில் இருந்து ஈரோடு செல்லும் ரெயில் , திருப்பூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும் பயணிகள் அதில் ஏறி இறங்கினர். பின்னர் ரெயில் புறப்பட்டு செல்லும் போது தூங்கி கொண்டிருந்த மாரிமுத்து திடீரென எழுந்து , புறப்பட்டு சென்ற ரெயிலில் ஏற முயன்றார். போதையில் இருந்ததால் தடுமாறிய அவர் நடைமேம்பாலம்- தண்டவாளத்தின் இடையே விழுந்தார். இதில் அவரது 2 கால்களும் ரெயிலுக்கும், நடைமேம்பாலத்திற்கும் இடையே சிக்கியது.

    ரெயில் வேகமாக சென்றதால் அவரது 2 கால்களும் நசுங்கி துண்டாகின. இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை போலீசார் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போதை மயக்கத்தில் ரெயிலில் சிக்கி தொழிலாளியின் 2 கால்களும் துண்டான சம்பவம் ரெயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×