என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஓடும் ரெயிலில் கட்டி போட்டதால் கழுத்து இறுகி வாலிபர் உயிரிழப்பு- கொலை வழக்கில் 2 பேர் கைது
- கல்குவாரியில் வேலை செய்வதற்காக கடந்த 15ந்தேதி புறப்பட்டு வந்தனர்.
- பிரகாசை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க குவாரியில் பணியாற்றும் சக தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.
சென்னை:
ஈரோட்டில் இருந்து சென்னை வந்த ரெயிலில் பாதுகாப்புக்காக கட்டி போடப்பட்ட வெளி மாநில வாலிபர் கழுத்து இறுகி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும் பயணிகள் அளித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் இந்த விவகாரத்தில் கொலை வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். மிகவும் பரிதாபத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(25), இவர் உட்பட 10 பேர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் வேலை செய்வதற்காக கடந்த 15ந்தேதி புறப்பட்டு வந்தனர். பின்னர் அனைவரும் ஈரோடு கல்குவாரிக்கு சென்று வேலை செய்து வந்தனர்.
அப்போது பிரகாசுக்கு திடீரென மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உடன் பணியாற்றும் சக தொழிலாளர்களுடன் பிரகாஷ் தகராறில் ஈடுபட்டார். இது குறித்து சத்தீஸ்கரில் உள்ள பிரகாசின் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சொந்த ஊருக்கு அழைத்து வருமாறு தெரிவித்துள்ளனர்.
இதைதொடர்ந்து பிரகாசை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க குவாரியில் பணியாற்றும் சக தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.
இதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராம்குமார் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இருவரும் நேற்று பிரகாசை அழைத்துக் கொண்டு சத்தீஸ்கர் செல்வதற்காக ரப்திகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் ஏறி புறப்பட்டனர்.
அப்போது பிரகாஷ் பயங்கரமாக கூச்சலிட்டு பயணிகளுக்கு நொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் ராம்குமாரும் சிறுவனும் சேர்ந்து பிரகாஷின் கை கால்களை கயிற்றால் கட்டி போட்டுள்ளனர். அப்போதும் பிரகாஷ் கூச்சல் போட்டுக்கொண்டே இருந்தார். இதனால் பிரகாசை இருக்கையின் கீழே படுக்க வைத்துள்ளனர்.
பின்னர் அவர் சத்தம் போடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கழுத்தை துணியால் கட்டியுள்ளனர். பின்னர் இருக்கையுடன் சேர்த்து கம்பியால் கட்டிபோட்டனர். அப்போது பிரகாசுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அவர் உயிருக்கு போராடினார். இருக்கைக்கு கீழே தள்ளி படுக்க வைத்திருந்ததால் அது யாருக்கும் தெரியவில்லை. பின்னர் சத்தமில்லாமலேயே பிரகாசின் மூச்சு அடங்கியது. அவர் கழுத்து இறுகி மூச்சு திணறல் ஏற்பட்டு ஓடும் ரெயிலிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதன் பிறகே ரெயில் பயணிகள் பிரகாஷ் இறந்து கிடந்ததை பார்த்தனர். இது தொடர்பாக ரெயில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைத்ததும் ரெயில்வே போலீசிடம் புகார் அளித்தனர். இதையடுத்து சென்ட்ரல் ரெயில்வே இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து பிரகாசின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
பிரகாசின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் ராம்குமாரை கைது செய்தனர். சிறுவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பிரகாசின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சென்னைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.
பாதுகாப்பு என கருதி கழுத்தில் கட்டப்பட்ட துணியே வாலிபருக்கு எமனாக மாறிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.






