search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Opposition parties"

    அதிமுக கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாகவும், கட்சியினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami #LSPolls #ADMKAlliance
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அதிமுக தலைமையிலான கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு சதிகளை செய்து வருகின்றன. அதிமுக கூட்டணியைக் கண்டு ஸ்டாலின் மிரண்டுபோய் உள்ளார். அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளன. அடுத்த தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும்.



    பாலில் சிறிதளவு விஷம் கலந்தாலும் பால் கெட்டுவிடும். எனவே தொண்டர்கள் மிகவும் கவனமாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, ஒரு மாத காலமே அவகாசம் இருக்கும். வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டும்.  கூட்டணி கட்சியினரும் கவனமான இருந்து முழு ஒத்துழைப்பு அளித்து தேர்தலை சந்திக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #EdappadiPalaniswami #LSPolls #ADMKAlliance
    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டுவரும் முயற்சியில் மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். #MamataBanerjee #ParliamentElection
    புதுடெல்லி:

    மத்தியில் பா.ஜனதா அரசு மீண்டும் வருவதை தடுக்க எதிர்க்கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

    இதற்காக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து கூட்டணி உருவாக்க முயற்சி நடக்கிறது.

    ஆனாலும், சில மாநிலங்களில் அரசியல் சூழ்நிலை வேறு மாதிரி இருப்பதால் தேசிய அளவிலான கூட்டணியை உருவாக்க முடியவில்லை.

    குறிப்பாக நாட்டின் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தனியாக கூட்டணி அமைத்துள்ளன. இங்கு காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது.

    இதேபோன்று பல மாநிலங்களில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

    இந்த நிலையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் உள்ள தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.

    இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

    ஆனால், சமாஜ்வாடி கட்சி தனது பிரதிநிதி யாரையும் விருந்துக்கு அனுப்பவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சதீஷ்சந்திரமிஸ்ரா அனுப்பப்பட்டு இருந்தார். அவர் சில நிமிடங்கள் மட்டும்தான் விருந்து நிகழ்ச்சியில் இருந்தார். கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் யாரும் இதில் பங்கேற்கவில்லை.

    எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் திட்டம் முழுமை பெறாததையே உணர்த்தும் வகையில் இந்த விருந்து நிகழ்ச்சி அமைந்தது.

    விருந்தில் கலந்துகொண்ட மம்தா பானர்ஜி, டெல்லியிலேயே தங்கி உள்ளார். அவர் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடர்ந்து கையில் எடுத்து செயல்பட்டு வருகிறார்.

    இது சம்பந்தமாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜனதாவை வீழ்த்துவதற்கு மாநில அளவிலும், மத்திய அளவிலும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒருங்கிணைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு அரசியல் கட்டாயம் ஆகும். அப்படி முன்கூட்டியே ஒன்றிணைந்தால்தான் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க முடியும்.



    சில கட்சிகள் (சமாஜ் வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளை குறிப்பிட்டு) தேர்தலுக்கு முன்பு கூட்டணியில் சேர தயங்கலாம். அதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களின் அரசியல் கட்டாயம் அப்படி இருக்கலாம்.

    கம்யூனிஸ்டு கட்சிகள் எங்களுடன் இருப்பார்களா? இல்லையா? என்பது எனக்கு தெரியவில்லை. நேற்றைய கூட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை.

    பா.ஜனதா தேசிய தலைவர்களை மேற்கு வங்காள கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடாமல் தடுப்பதாக பொய்யான தகவல்களை கூறுகிறார்கள்.

    அமித்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டதால் அவரால் பேரணிக்கு வர முடியவில்லை. ஆஸ்பத்திரியில் இருந்து வெளிவந்த பிறகு அவர் மேற்கு வங்காள நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #MamataBanerjee #ParliamentElection

    பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்க முயற்சித்து வருகிறார் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். #ArvindKejriwal #ChandrababuNaidu #Modi
    புதுடெல்லி:

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரண்டு தங்களது ஒற்றுமையை எடுத்துக்காட்டி வருகிறார்கள்.

    இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். டெல்லி ஜந்தர் மந்திரில் நடைபெற்ற கூட்டத்தில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்க முயற்சித்து வருகிறார் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். 

    இதுதொடர்பாக, கெஜ்ரிவால் பேசுகையில், அரசியலமைப்பை சிதைக்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். மேலும், ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்.

    டெல்லியில் இருந்து 40 சிபிஐ அதிகாரிகளை அனுப்பி தேர்வு செய்யப்பட்ட அரசுகள் மீது தாக்குதல் நடத்துகிறார். பாகிஸ்தான் பிரதமர் போல் டெல்லி மற்றும் கொல்கத்தாவை கைப்பற்ற கனவு கண்டு வருகிறார் என குற்றம் சாட்டினார்.



    இதேபோல், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பேசுகையில், நாம் இப்போது அபாயத்தில் உள்ளோம். நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். தற்போது நாம் ஒன்றுபட  வேண்டும். ஏனென்றால், நமக்கு இது கடைசி தேர்தலாகும். நாளை முதல் அவர்கள் எந்த தேர்தலிலும் வெற்றி பெறக்கூடாது என குறிப்பிட்டுள்ளார். #ArvindKejriwal #ChandrababuNaidu #Modi
    கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கான ரோஸ்டர் முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நான்காவது நாளாக மாநிலங்களவை இன்றும் முடங்கியது. #BudgetSession #Budget2019 #RajyaSabha
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். மறுநாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திங்கட்கிழமையில் இருந்து ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, கடந்த மூன்று நாட்களாக  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.  

    இந்நிலையில், இன்று காலை பாராளுமன்றம் கூடியது. மாநிலங்களவையில் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கான ரோஸ்டர் முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர்.  எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.



    2 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் மீண்டும் கோஷங்கள் எழுப்பினர்.

    உறுப்பினர்களை அமைதி காக்கும்படி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார். ஆனால் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்து கோஷமிட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவை நான்காவது நாளாக இன்றும் முடங்கியது. #BudgetSession #Budget2019 #RajyaSabha
    மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்தி வரும் தர்ணா போராட்டம் நீடிக்கும் நிலையில், அவருக்கு 22 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. #MamataDharna #CBIvsMamata
    கொல்கத்தா:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரிப்பதற்காக நேற்று முன்தினம் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென அவரது வீட்டுக்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கொல்கத்தா போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று காவலில் வைத்து, பின்னர் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜி அரசுக்கும் மோதல் உருவாகி உள்ளது.

    போலீஸ் உயர் அதிகாரியிடம் மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.ஐ. விசாரிக்க முயற்சி செய்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று மம்தாபானர்ஜி கண்டனம் தெரிவித்தார். அதோடு அரசிலமைப்பு சட்டத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்கப் போவதாக சொல்லி கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் எதிரில் நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார்.



    அவரை தி.மு.க. சார்பில் கனிமொழி, ஆம் ஆத்மி சார்பில் கெஜ்ரிவால், ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 3-வது நாளாக நீடிக்கிறது. தர்ணா போராட்ட மேடையில் அவருடன் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏராளமானோர் அமர்ந்து இருந்தனர்.

    மேடையில் இருந்தபடியே பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் மம்தா பானர்ஜி, நியாயம் கிடைக்கும் வரை சமரசத்துக்கு இடமே இல்லை என்று அறிவித்துள்ளார். வருகிற 8-ந்தேதி வரை தர்ணா போராட்டத்தை தொடரப் போவதாகவும் கூறியுள்ளார்.

    அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நடத்தும் தனது போராட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்திருந்தார். அதை ஏற்று அவருக்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டுள்ளன.

    மொத்தம் 22 எதிர்க்கட்சிகள் மம்தாபானர்ஜிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இந்த கட்சிகள் அனைத்தும் பிரதமர் மோடி சி.பி.ஐ.யை ஏவி விட்டு மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி உள்ளன.

    மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரவே பா.ஜனதா தலைவர்கள் சி.பி.ஐ. விசாரணையை தீவிரப்படுத்தி இருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். ஆனால் இதை பா.ஜனதா மறுத்துள்ளது.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இது பற்றி கூறுகையில், “மேற்கு வங்காளத்தில் அரசியலமைப்பு சட்டத்தை மம்தாபானர்ஜி தொடர்ந்து மீறி வருகிறார். சி.பி.ஐ. அதிகாரிகளை விசாரணை நடத்தவிடாமல் பிணைக்கைதி போல் பிடித்து வைத்திருந்தார். அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவரும் எண்ணம் மத்திய அரசுக்கு துளி அளவு கூட கிடையாது” என்றார். #MamataDharna #CBIvsMamata
    அரசு ஊழியர்கள் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுகின்றனர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #SellurRaju #Jactogeo
    மதுரை:

    மொழிப்போர் தியாகிகளின் நினைவாக கடைபிடிக்கப்படும் வீர வணக்க நாள் முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ  மற்றும் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தலைமையில் வீரவணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ் மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் அ.தி.மு.க. சார்பில் தமிழனை சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்துள்ளோம்.

    ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் மிகத் தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார், இடைநிலை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு எந்த அளவிற்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார்.

    தற்போது தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளது. எனவே கனிவோடு அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். எனவே ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். எதிர்க்கட்சிகள் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை தூண்டி விடுகின்றனர்.

    இந்தியாவில் எந்த மாநிலமும் பெறாத வகையில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீட்டில் 93 நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டு 68 நிறுவனங்கள் இன்று தொழில் தொடங்கியுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 3 ஆண்டு முதல் 7 ஆண்டு வரையில் செயல்படுத்தப்படும்.

    அந்த வகையில் எடப்பாடி தலைமையில் 2-வது முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. இது மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக ஏறத்தாழ 10 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இதை எதிர்க்கட்சிகள் பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் இந்த அரசையும், இந்த மாநாட்டையும் குறை சொல்லி வருகின்றனர். ஆனால் இளைஞர்கள் இதை வரவேற்று உள்ளன.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அ.தி.மு.க. அரசை பாராட்டியுள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக தமிழ்நாடு உள்ளது என்று பாராட்டி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, திரவியம், எம்.எஸ். பாண்டியன், கிரம்மர் சுரேஷ், பரவை ராஜா, சோலைராஜா, கலைச் செல்வம், பிரிட்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர். #SellurRaju #Jactogeo

    எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பார்த்து பிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டதாகவும், அதன்மூலம் இந்தியாவை காப்போம் என்றும் கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். #Mamata #AntiBJPRally #MKStalin
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    வணக்கம். வங்க மொழியைத் தொடர்ந்து வங்கப் புலிகளுக்கு எனது வணக்கம். சுதந்திர போராட்டத்தில் இந்தியாவும் மேற்கு வங்கமும் முக்கிய பங்காற்றின. இப்போது, இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அழைப்பின்பேரில் இங்கு வந்துள்ளேன். மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை மீட்பதுதான் 2வது சுதந்திர போராட்டம்.



    பிரதமர் மோடி சொன்ன பொய்களில் பெரிய பொய், கருப்புப் பணத்தை மீட்பேன் என்பதுதான். வங்கிக் கணக்கில் பணத்தைப் போடுவேன் என்று கூறிவிட்டு மக்கள் தலையில் கல்லைப் போட்டுவிட்டார். மத்திய பாஜக அரசு மக்களுக்கான அரசு அல்ல, கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. பண மதிப்பு நீக்கம் மற்றும் ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது.

    எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்திருப்பதால் பிரதமர் மோடிக்கு பயமாக உள்ளது. நம்முடைய ஒற்றுமை மோடியை பயம் கொள்ள வைத்துள்ளது. அதன்மூலம் இந்தியாவை நாம் காப்போம். நமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும். மோடி பார்த்து பயப்படும் தலைவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி.

    வேற்றுமையில் ஒற்றுமை என்பதுபோல், நாம் வேறு வேறு மாநிலத்தவர்களாக இருந்தாலும் நமது நோக்கம் ஒன்றுதான். பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும். பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #Mamata #AntiBJPRally #MKStalin
    முத்தலாக் மசோதா குறித்து விவாதிக்க, பாராளுமன்றத்தில் டிசம்பர் 31ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. #Parliment #WinterSession #TripleTalaqBill #OppositionPartiesMeet
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு பின்னர் நேற்று கூடியது. அப்போது, மக்களவையில் முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    மாநிலங்களவையில் இன்று எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்து 2 நாட்கள் விடுமுறை என்பதால் 31-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



    மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் அமளி காரணமாக சபை ஒத்திவைக்கப்பட்டதால் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.

    இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் முத்தலாக் மசோதா குறித்து விவாதிப்பது தொடர்பாக டிசம்பர் மாதம் 31-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. #WinterSession #TripleTalaq Bill #OppositionPartiesMeet
    ரபேல் விவகாரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றம் 6-வது நாளாக முடங்கியது. #WinterSession #ParliamentStalled
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தற்போதைய எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. 12ம் தேதி அவை நடவடிக்கைகள் தொடங்கி நடைபெறுகின்றன. ஆனால், ரபேல், சிபிஐ விவகாரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் மாநிலம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபடுவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.



    இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. இன்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், 6-வது நாளாக பாராளுமன்றம் முடங்கியது. உறுப்பினர்களின் அமளி காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    மாநிலங்களவையில் உறுப்பினர்கள் அமைதிகாக்கும்படி அவைத்தலைவர் தொடர்ந்து கேட்டுக்கொண்டார். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்றும், அவையின் மையப்பகுதிக்கு வந்தும் முழக்கமிட்டனர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து அவையை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் அறிவித்தார். #WinterSession #ParliamentStalled 
    பாராளுமன்றத்தில் சீக்கிய கலவர தீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. #WinterSession #RafaleVerdict #AntiSikhRiotsVerdict
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ந்து ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களும் வழங்கப்படுகின்றன. ஆனால், அவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாததால் உறுப்பினர்கள் போராட்டம் நீடிக்கிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. அப்போது மக்களவையில் ரபேல் வழக்கின் தீர்ப்பு, சீக்கிய கலவர வழக்கின் தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தனி மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தெலுங்குதேசம் கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதுபோன்ற காரணங்களால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து மக்களவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.



    இதேபோல் மாநிலங்களவையில் மேகதாது, காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக மற்றும் திமுக ஆகிய பிரதான கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மற்ற கட்சியினரும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RafaleVerdict #AntiSikhRiotsVerdict
    சபரிமலையில் போலீசாரின் கெடுபிடிகளை கண்டித்து கேரள சட்டசபையில் எதிர்க்கட்சிகள் நேற்று 2-வது நாளாக அமளியில் ஈடுபட்டன. இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது. #KeralaAssemblySession #SabarimalaTempleIssue
    திருவனந்தபுரம் :

    கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. அங்கு தற்போது மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ள நிலையில் இந்து அமைப்புகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி பம்பை, நிலக்கல் மற்றும் சன்னிதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளதுடன், பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர். போலீசாரின் இத்தகைய கெடுபிடிகளுக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

    கேரள சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நேற்று முன்தினம் சட்டசபையில் எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த விவகாரம் 2-வது நாளாக நேற்றும் சட்டசபையில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. காலையில் சட்டசபை கூடியதும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்றவாறே, கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு சபரிமலை விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    அவர்களில் சிலர் சபாநாயகர் ஸ்ரீராமகிரு‌ஷ்ணனின் மேடைக்கு முன்னே கருப்பு துணியால் உருவாக்கப்பட்ட பேனர் ஒன்றை வைத்தனர். அதில், ‘சபரிமலையில் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் கெடுபிடிகள் அனைத்தையும் முற்றிலும் நீக்க வேண்டும்’ என எழுதப்பட்டு இருந்தது.

    இதைப்போல சில எம்.எல்.ஏ.க்கள் அவையின் மையப்பகுதியில் நின்றவாறே ‘சபரிமலையை பாதுகாப்போம்’ என கோ‌ஷமிட்டனர். சிலர் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு எதிராகவும் கோ‌ஷங்களை எழுப்பியதால் சபையில் கடும் அமளி நிலவியது.

    சபரிமலையில் கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், இதனால் பக்தர்கள் ஏராளமான துயர்களை அனுபவித்து வருவதாகவும் கூறிய எதிர்க்கட்சி தலைவர் ரமே‌ஷ் சென்னிதலா, இது தொடர்பாக தாங்கள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    ஆனால் இதற்கு சபாநாயகர் ஸ்ரீராமகிரு‌ஷ்ணன் மறுப்பு தெரிவித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோ‌ஷங்களை எழுப்பியவாறே இருந்தனர். ஒரு கட்டத்தில் கோபமடைந்த சபாநாயகர், உறுப்பினர்கள் அனைவரிடமும் அமைதியாக சபையை நடத்த அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

    ஆனால் அவரது வேண்டுகோளை எதிர்க்கட்சியினர் மதிக்கவில்லை. இதனால் சட்டசபையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக ஸ்ரீராமகிரு‌ஷ்ணன் அறிவித்தார். இதனால் சட்டசபையில் 2-வது நாளாக அலுவல்கள் பாதிக்கப்பட்டன. #KeralaAssemblySession #SabarimalaTempleIssue 
    பக்ரைனில் நடந்த நாடாளுமன்ற தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. #Bakriniparliamentaryelections
    துபாய், 

    பக்ரைனில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள், தேர்தலை புறக்கணிக்க விடுத்த அழைப்புக்கு மத்தியில், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

    வளைகுடா நாடுகளில் ஒன்று பக்ரைன். அங்கு சன்னி பிரிவை சேர்ந்த மன்னர் ஹமாத்தின் ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில் அரசியலமைப்பின் கீழான மன்னராட்சியை ஏற்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரைக் கொண்ட அரசு அமைக்க வேண்டும் என்று ஷியா பிரிவு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் குரல் கொடுத்தனர்.

    இதையொட்டி 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு எதிராக அந்த எதிர்க்கட்சியினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அந்த கிளர்ச்சி, ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் பலவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு நவம்பர் 24-ந்தேதி (நேற்று) தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

    இந்த தேர்தலில் ஷியா பிரிவு எதிர்க்கட்சியான ஷியா அல் வெபாக் மற்றும் மதச்சார்பற்ற வாத் கட்சிகள் போட்டியிடுவதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளன.

    எனவே இந்த தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அந்த கட்சிகள் வலியுறுத்தி அழைப்பு விடுத்தன. இந்த தேர்தல் கேலிக்கூத்தானது, நம்பகத்தன்மையற்றது என கூறி ஜனநாயக ஆர்வலர்கள் பலரும் குரல் கொடுத்துள்ளனர்.

    இதுவும் அங்கு பிரச்சினையை ஏற்படுத்தியது. தேர்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக 6 பேர் இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஷியா அல் வெபாக் கட்சியின் முன்னாள் எம்.பி. அலி ரஷீத் அல் அஷீரியும் அடங்குவார்.

    இந்த அஷீரியும், அவரது குடும்பத்தினரும் தேர்தலை புறக்கணிப்பதாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    இருப்பினும் 40 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு 506 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். பெண் வேட்பாளர்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    தற்போதைய நாடாளுமன்றத்தின் 40 உறுப்பினர்களில் 23 பேர் மட்டுமே இந்த தேர்தலில் போட்டியில் உள்ளனர். நாடாளுமன்றத்துக்கு வரம்புக்குட்பட்ட அதிகாரங்கள்தான் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்று மன்னர் ஹமாத், மக்களை கேட்டுக்கொண்டார். இதே போன்று வேட்பாளர்களும், மக்கள் ஓட்டு போட்டு தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என்று சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

    உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு அழைப்புக்கு மத்தியிலும் வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர். இரவு 8 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது.

    முக்கிய எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்தலின் மூலம் அமைய உள்ள புதிய நாடாளுமன்றம் என்ன செய்து விட முடியும் என்ற கேள்வி எழுந்து உள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். #Bakriniparliamentaryelections
    ×