search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டுவர மம்தா தீவிர முயற்சி
    X

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டுவர மம்தா தீவிர முயற்சி

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டுவரும் முயற்சியில் மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். #MamataBanerjee #ParliamentElection
    புதுடெல்லி:

    மத்தியில் பா.ஜனதா அரசு மீண்டும் வருவதை தடுக்க எதிர்க்கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

    இதற்காக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து கூட்டணி உருவாக்க முயற்சி நடக்கிறது.

    ஆனாலும், சில மாநிலங்களில் அரசியல் சூழ்நிலை வேறு மாதிரி இருப்பதால் தேசிய அளவிலான கூட்டணியை உருவாக்க முடியவில்லை.

    குறிப்பாக நாட்டின் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தனியாக கூட்டணி அமைத்துள்ளன. இங்கு காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது.

    இதேபோன்று பல மாநிலங்களில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

    இந்த நிலையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் உள்ள தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.

    இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

    ஆனால், சமாஜ்வாடி கட்சி தனது பிரதிநிதி யாரையும் விருந்துக்கு அனுப்பவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சதீஷ்சந்திரமிஸ்ரா அனுப்பப்பட்டு இருந்தார். அவர் சில நிமிடங்கள் மட்டும்தான் விருந்து நிகழ்ச்சியில் இருந்தார். கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் யாரும் இதில் பங்கேற்கவில்லை.

    எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் திட்டம் முழுமை பெறாததையே உணர்த்தும் வகையில் இந்த விருந்து நிகழ்ச்சி அமைந்தது.

    விருந்தில் கலந்துகொண்ட மம்தா பானர்ஜி, டெல்லியிலேயே தங்கி உள்ளார். அவர் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடர்ந்து கையில் எடுத்து செயல்பட்டு வருகிறார்.

    இது சம்பந்தமாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜனதாவை வீழ்த்துவதற்கு மாநில அளவிலும், மத்திய அளவிலும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒருங்கிணைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு அரசியல் கட்டாயம் ஆகும். அப்படி முன்கூட்டியே ஒன்றிணைந்தால்தான் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க முடியும்.



    சில கட்சிகள் (சமாஜ் வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளை குறிப்பிட்டு) தேர்தலுக்கு முன்பு கூட்டணியில் சேர தயங்கலாம். அதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களின் அரசியல் கட்டாயம் அப்படி இருக்கலாம்.

    கம்யூனிஸ்டு கட்சிகள் எங்களுடன் இருப்பார்களா? இல்லையா? என்பது எனக்கு தெரியவில்லை. நேற்றைய கூட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை.

    பா.ஜனதா தேசிய தலைவர்களை மேற்கு வங்காள கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடாமல் தடுப்பதாக பொய்யான தகவல்களை கூறுகிறார்கள்.

    அமித்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டதால் அவரால் பேரணிக்கு வர முடியவில்லை. ஆஸ்பத்திரியில் இருந்து வெளிவந்த பிறகு அவர் மேற்கு வங்காள நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #MamataBanerjee #ParliamentElection

    Next Story
    ×