search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "triple talaq bill"

    முத்தலாக் மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் உறுப்பினர்களும், காவிரி பிரச்சனையை முன்வைத்து தமிழக எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabha #RajyaSabhaadjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று  முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில் காலையில் காவிரி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    2 மணிக்கு பின்னர் அவை கூடியபோது பாராளுமன்ற தேர்வு குழுவின் (செலக்ட் கமிட்டி) பரிசீலனைக்கு அனுப்பி வைக்காமல் முத்தலாக் மசோதாவுக்கு சட்ட வடிவம் கொடுக்க முயற்சிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசினார்.

    இந்த மசோதா பல கோடி முஸ்லிம்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதே கருத்தை வலியுறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரெக் ஓ பிரியனும் பேசினார்.



    அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதனால், 15 நிமிடங்களுக்கு அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.

    அதன்பின்னரும், பல்வேறு பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஜனவரி இரண்டாம் தேதிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக துணை சபாநாயகர் அறிவித்தார். #RajyaSabha #RajyaSabhaadjourned #tripletalaq #tripletalaqbill 
    முத்தலாக் மசோதாவுக்கு மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி, மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என அறிவித்து உள்ளது. #TripleTalaq #RajyaSabha #Venugopal
    கொச்சி:

    இஸ்லாமிய மதத்தினர் பின்பற்றும் முத்தலாக் விவகாரத்து முறையை தடை செய்யும் வகையில் மத்திய அரசு சிறப்பு மசோதா உருவாக்கி உள்ளது. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா கடந்த வாரம் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து மாநிலங்களவையில் இந்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மசோதாவுக்கு மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி, மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என அறிவித்து உள்ளது.

    இது குறித்து கட்சியின் எம்.பி.யான வேணுகோபால், நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘முத்தலாக் மசோதாவை மக்களவையில் 10 எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. பல்வேறு பிரச்சினைகளில் அரசை ஆதரிக்கும் அ.தி.மு.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கூட எதிர்ப்பு தெரிவித்தன. இந்த கட்சிகளுடன் இணைந்து மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். இந்த மசோதாவை தற்போதைய வடிவத்தில் நிறைவேற்ற விடமாட்டோம்’ என்று தெரிவித்தார். முத்தலாக் மசோதாவில் கடுமையான பிரிவுகள் இருப்பதாக கூறிய வேணுகோபால் எம்.பி., சிவில் தவறை குற்றமாக கருதுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு இந்த மசோதா உதவாது என்றும் அவர் கூறினார். #TripleTalaq #RajyaSabha #Venugopal
    முத்தலாக் முறையை தடை செய்து தண்டனைக்குரிய குற்றமாக்கும் மசோதா வரும் 31-ம் தேதி பாராளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. #TripleTalaqBill #RaviShankarPrasad #RajyaSabha
    புதுடெல்லி:

    கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு பின்னர் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் கூடியபோது, மக்களவையில் முத்தலாக் மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

    மாநிலங்களவையில் நேற்று எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதா வரும் 31-ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று தெரிவித்துள்ளார். #TripleTalaqBill #RaviShankarPrasad #RajyaSabha
    முத்தலாக் மசோதா குறித்து விவாதிக்க, பாராளுமன்றத்தில் டிசம்பர் 31ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. #Parliment #WinterSession #TripleTalaqBill #OppositionPartiesMeet
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு பின்னர் நேற்று கூடியது. அப்போது, மக்களவையில் முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    மாநிலங்களவையில் இன்று எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்து 2 நாட்கள் விடுமுறை என்பதால் 31-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



    மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் அமளி காரணமாக சபை ஒத்திவைக்கப்பட்டதால் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.

    இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் முத்தலாக் மசோதா குறித்து விவாதிப்பது தொடர்பாக டிசம்பர் மாதம் 31-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. #WinterSession #TripleTalaq Bill #OppositionPartiesMeet
    முத்தலாக் மசோதா முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் நேரடியாக தலையிடுவதாகவும், இந்த மசோதா தேவையில்லை என்றும் மக்களவையில் நடந்த விவாதத்தின்போது அதிமுக எம்பி அன்வர் ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். #TripleTalaqBill #AnwharRaajhaa
    புதுடெல்லி:

    மக்களவையில் இன்று முத்தலாக் மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அதிமுக எம்பி அன்வர் ராஜா பேசியதாவது:-

    முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் இந்த முத்தலாக் சட்டம் நேரடியாக தலையிடுகிறது. இந்திய அரசியலமைப்பு அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இந்த மசோதா உள்ளது. உணர்ச்சிகரமான விஷயத்தில் கண்மூடித்தனமாக மத்திய அரசு செயல்படுகிறது. முத்தலாக் பிரச்சனையில் கணவருக்கு 3 ஆண்டு சிறைதண்டனை விதிப்பது நியாயமற்றது. இஸ்லாமிய ஆண்களுக்கு எதிரான இந்த சட்டத்தை நான் எதிர்க்கிறேன்.

    இந்த மசோதாவை கொண்டு வருவதால் மத்திய அரசு என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? கண்துடைப்புக்காகவே மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. தற்போதைய வடிவில் இந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது. இதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும். எனவே, இந்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்.


    இந்த முத்தலாக் தடை மசோதா தேவையில்லை. அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து மசோதா நிறைவேறாமல் தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அன்வர் ராஜா பேசினார். இந்த விவாதத்தில் அன்வர் ராஜா தமிழில் பேசியது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், 20 இஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் முறை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் ஏன் அதை செய்ய முடியாது? என்று கேள்வி எழுப்பினார். இதை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். #TripleTalaqBill #AnwharRaajhaa
    பாராளுமன்றத்தில் முத்தலாக் மசோதா மீதான விவாதத்தின்போது அதனை எதிர்க்க உள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். #TripleTalaqBill #MallikarjunKharge
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் இன்று முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா (முத்தலாக் மசோதா) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என பட்டியலிடப்பட்டது. ஆனால் காங்கிரஸ் எம்பிக்களின் தொடர் அமளி காரணமாக விவாதத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    ரபேல் விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மறுத்துவிட்டார். 12 மணிக்கு நேரம் ஒதுக்குவதாக கூறினார். ஆனால் அதனை காங்கிரஸ் எம்பிக்கள் ஏற்காமல் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.


    அதன்பின்னர் பாராளுமன்றத்திற்கு வெளியே மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களிடம் கூறுகையில், முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக கூறினார்.

    ‘முத்தலாக் மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு எங்கள் கருத்துக்களை முன்வைப்போம். வரைவு மசோதாவானது மதவிவகாரத்தில் தலையிடும் வகையில் உள்ளது. எனவே, மத விவகாரத்தில் அரசு தலையீடு இருக்கக்கூடாது என்று மத்திய அரசிடம் முறையிட உள்ளோம்’ என்றார். #TripleTalaqBill #MallikarjunKharge

    மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் சட்ட மசோதா நாளை விவாதத்திற்கு வர உள்ளதால் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் ஆஜராகுமாறு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். #tripletalaq #tripletalaqBill
    புதுடெல்லி:

    முஸ்லிம் மதத்தினரிடையே மனைவியை கணவர் திடீரென்று விவாகரத்து செய்யும் முத்தலாக் முறையை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் முத்தலாக் சட்ட மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

    ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அங்கு முடங்கிவிட்டது.

    எனவே, அவசர சட்டம் மூலம் இந்த மசோதாவுக்கு உயிரூட்டும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. இதற்காக சில திருத்தங்கள் செய்யப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் கடந்த 19-9-2018 அன்று அவசர சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால், ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட எந்தவொரு அவசர சட்டமும் ஆறுமாத காலத்துக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற்று சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும். 

    எனவே, தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத் தொடரில் முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக மக்களவையில் கடந்த வாரம் திங்கட்கிழமை முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது நாளை (27-ம் தேதி) விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் நாளை பாராளுமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற ‘கொறடா’ நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார். 

    இதைத்தொடர்ந்து, நாளை பாராளுமன்றத்தில் வெடிக்கப்போகும் சர்ச்சை என்னவாக இருக்கும்? என அரசியல் நோக்கர்கள் புருவங்களை உயர்த்தியவாறு, பரபரப்படைந்தனர். சில திருத்தங்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள முத்தலாக் மசோதாவின்மீது காரசாரமான விவாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்த முறையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என்றால் இந்த அவசர சட்டத்தை மேலும் 6 மாதகாலம் நீட்டிக்குமாறு ஜனாதிபதியை மத்திய அரசு வலியுறுத்தவும் வாய்ப்புள்ளது, குறிப்பிடத்தக்கது. #tripletalaq  #tripletalaqBill #tripletalaqordinance #LokSabha
    பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அமல்படுத்தப்பட்ட முத்தலாக் அவசர சட்ட மசோத இஸ்லாமிய பெண்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது என்று ராமதாஸ் கூறியுள்ளார். #TripleTalaq #TripleTalaqOrdinance
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இஸ்லாமியப் பெண்களின் திருமண உறவை பாதுகாப்பதற்காக முத்தலாக் முறையை தடை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது. ஆனால், இஸ்லாமியப் பெண்களின் கண்ணியம் மற்றும் கவுரவத்தைப் பாதுகாக்க மத்திய அரசின் அவசரச் சட்டம் எந்த வகையிலும் பயனளிக்காது.

    உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்துவதற்கு ஏற்ற கருவி அல்ல. இது இஸ்லாமியப் பெண்களுக்கு எதிரானதாகவே அமையும்.


    மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தின்படி முத்தலாக் கூறி இஸ்லாமியப் பெண்களுடனான திருமண உறவை முறித்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டுள்ளது. இது பிணையில் வெளிவரக்கூடிய குற்றம் தான் என்றாலும் கூட, காவல் நிலையத்தில் பிணை பெற முடியாது; நடுவர் நீதிமன்றத்திற்கு சென்று தான் பிணை பெற முடியும் என்று சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.

    இந்த அம்சங்கள் இஸ்லாமிய இணையரிடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக பிணக்கை பெருக்கி விடும். அவ்வாறு பிணக்கு ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் கிடைக்க வழியின்றி போய்விடும். அத்தகைய சூழலில் இஸ்லாமியப் பெண்களின் கண்ணியத்தை எவ்வாறு காக்க முடியும்?

    இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டத்தை ரத்து செய்துவிட்டு, இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்துடன் ஆலோசனை நடத்தி புதிய சட்ட முன் வரைவை உருவாக்கி நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முத்தலாக் என்ற பெயரில் முஸ்லிம் பெண்கள் மீது தனக்கு கரிசனம் உள்ளது என்ற கயமை நாடகம் ஆடி, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அவசரக் கோலத்தில் மக்களவையில் இச்சட்டத்தை நிறைவேற்றி தற்போது அதற்கு அமைச்சரவை மூலம் ஒப்புதல் பெற்றுள்ளது.

    உரிமையியல் தொடர்பான பிரச்சினையைக் குற்றவியல் சட்டமாக மாற்றும் இந்த அவசர சட்டம் முஸ்லிம்களை பழிவாங்குவதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது.

    அதிக அளவில் முஸ்லிம்களை சிறையில் அடைக்க வேண்டும் என்ற பா.ஜ.க.வின் எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் இச்சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தலையீடு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் தரப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு நேர் எதிரானதாகவும் அமைந்துள்ளது.

    எனவே, மத்திய அரசு சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு எதிராகக் கொண்டு வந்துள்ள இந்தச் சட்டத்தை உடனே திரும்பப் பெறவேண்டும் எனவும், இல்லையேல் இந்த அவரச சட்டம் ரத்து செய்யப்படும் வரை ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மக்களைத் திரட்டி தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி போராடும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TripleTalaq #TripleTalaqOrdinance #Ramadoss
    முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. #TripleTalaqBill
    புதுடெல்லி:

    மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது.

    கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதற்காக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது.

    ஆனாலும், கட்சிகளிடையே ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படாததால் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியபின் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததால், முத்தலாக் மசோதா மீண்டும் கிடப்பில் உள்ளது. எனவே, அவசர சட்டம் மூலம் முத்தலாக் நடைமுறைக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது.


    இந்நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    முத்தலாக் வழக்கில் கைதானால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறலாம், முத்தலாக்கில் கணவன், மனைவி குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க முடியும், முத்தலாக் வழங்கியபின் கணவன்-மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால் அபராதம் செலுத்தி மீண்டும் சேர்ந்து வாழலாம் ஆகிய மூன்று முக்கிய திருத்தங்களுடன் இந்த அவசர சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. #TripleTalaqBill #TripleTalaqOrdinace
    மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப் படாததற்கு ராகுல் காந்தியும், காங்கிரசும் தான் காரணம் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. #MonsoonSession #TripleTalaqBill
    புதுடெல்லி:

    முத்தலாக் சட்ட மசோதா, முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது. 

    தற்போதைய மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதற்காக மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது.

    இதையடுத்து முத்தலாக் மசோதாவை நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், கட்சிகளிடையே ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படாததால் தாக்கல் செய்யப்படவில்லை. மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியபின் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. 

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. எனவே, முத்தலாக் மசோதா மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், இதுதொடர்பாக பாராளுமன்ற விவகார துறை மந்திரி ஆனந்த் குமார் கூறுகையில், பிரதமர் மோடி முஸ்லிம் பெண்களின் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். எனவே தான், முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்ற கடைசி வரை போராடினோம்.

    ஆனால், முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்ற விடாமல் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் தடுத்து விட்டனர். அவர்கள் தான் முத்தலாக் சட்ட மசோதா நிறைவேறாததற்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். #MonsoonSession #TripleTalaqBill
    மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கட்சிகளிடையே ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படாததால் தாக்கல் செய்யப்படவில்லை. #MonsoonSession #TripleTalaqBill
    புதுடெல்லி:

    முத்தலாக் சட்டமசோதா, முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது.

    தற்போது நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதற்காக மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு, நேற்று மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது.

    இதையடுத்து முத்தலாக் மசோதாவை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால்,  கட்சிகளிடையே ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படாததால் இன்றும் தாக்கல் செய்யப்படவில்லை. மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியபின் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.



    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. கூட்டத் தொடரை மேலும் நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்பதால், முத்தலாக் மசோதா மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    முத்தலாக் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று தாக்கல் செய்யப்படவில்லை என மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். மழைக்கால கூட்டத் தொடர் இன்றுடன் முடிவதால், அடுத்து நடைபெற உள்ள குளிர்கால கூட்டத் தொடரில்தான் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். #MonsoonSession #TripleTalaqBill
    முத்தலாக் சட்ட மசோதா நீண்ட இழுபறிக்குப் பிறகு மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. #MonsoonSession #TripleTalaqBill
    புதுடெல்லி:

    முத்தலாக் சட்டமசோதா, முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது.

    இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டது.

    இந்நிலையில் முத்தலாக் மசோதாவில் சர்ச்சைக்குரிய சில அம்சங்களை நீக்கி விட்டு மத்திய அரசு சில திருத்தங்களை செய்துள்ளது. குறிப்பாக முத்தலாக் வழக்கில் கைது செய்யப்படும் நபர்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற விதிமுறை திருத்தம் செய்யப்பட்டு ஜாமீன் பெறலாம் என மாற்றப்பட்டுள்ளது. இச்சட்ட மசோதாவில் மூன்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார். இந்த திருத்தப்பட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.



    இதையடுத்து முத்தலாக் மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மாநிலங்களவையின் அலுவல்களில் இன்று முத்தலாக் மசோதா இடம் பெற்றுள்ளது. இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால், மீண்டும் மக்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். மக்களவை ஒப்புதல் கிடைத்ததும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்ததும் சட்டமாகும்.

    மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தால் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது. #MonsoonSession #TripleTalaqBill

    ×