search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தலாக் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    X

    முத்தலாக் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. #TripleTalaqBill
    புதுடெல்லி:

    மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது.

    கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதற்காக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது.

    ஆனாலும், கட்சிகளிடையே ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படாததால் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியபின் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததால், முத்தலாக் மசோதா மீண்டும் கிடப்பில் உள்ளது. எனவே, அவசர சட்டம் மூலம் முத்தலாக் நடைமுறைக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது.


    இந்நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    முத்தலாக் வழக்கில் கைதானால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறலாம், முத்தலாக்கில் கணவன், மனைவி குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க முடியும், முத்தலாக் வழங்கியபின் கணவன்-மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால் அபராதம் செலுத்தி மீண்டும் சேர்ந்து வாழலாம் ஆகிய மூன்று முக்கிய திருத்தங்களுடன் இந்த அவசர சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. #TripleTalaqBill #TripleTalaqOrdinace
    Next Story
    ×