search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Floods"

    கேரளாவில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சபரிமலை பம்பை நதி பாலம் உள்ளிட்ட பக்தர்கள் செல்லும் வழித்தடத்தை ரூ.25½ கோடி செலவில் சீரமைக்க இருப்பதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். #sabarimala
    திருவனந்தபுரம்:


    கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டது. இதில் சபரிமலையில் உள்ள பம்பை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதன்காரணமாக பம்பையில் இருந்து சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் இருமுடி கட்டு சுமந்து செல்லும் சாலைகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது. பல இடங்களில் சாலைகள் இருந்த தடமே தெரியாமல் போய்விட்டது.

    பம்பை நதியில் கட்டப்பட்டு இருந்த பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன. தற்போது பம்பையில் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புரட்டாசி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடையும் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்களும் கோவிலுக்கு சென்று வருகிறார்கள்.


    பெரும் சிரமத்திற்கு இடையேதான் பக்தர்கள் சுவாமி அய்யப்பனை தரிசிக்கும் நிலை உள்ளது. வருகிற நவம்பர் மாதம் 16-ந்தேதி மண்டல பூஜை தொடங்க உள்ளது. அப்போது நாடுமுழுவதும் இருந்து சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் திரண்டு வருவார்கள் என்பதால் அதற்குள் சபரிமலையில் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டியது உள்ளது.

    இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் சபரிமலைக்கு சென்று அங்கு நடைபெறும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தற்போது சபரிமலையில் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளையும் முழுமையாக மண்டல பூஜைக்கு முன்பு முடிக்க திட்டமிட்டுள்ளோம். அய்யப்ப பக்தர்கள் தங்கும் மண்டபங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. இவற்றை சீரமைக்க ரூ.25½ கோடி தேவைப்படும். இதற்கான திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைந்து பணிகள் முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #sabarimala
    கேரளா வெள்ள பாதிப்பின் போது பொது மக்களுக்கு உதவிய மீனவருக்கு மஹிந்திரா நிறுவனம் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. #Marazzo



    இந்தியாவின் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்ட கேரளா வெள்ள பாதிப்பு அம்மாநிலத்தில் பல உயிர்களை காவு வாங்கியதோடு, பொருட் சேதங்களையும் ஏற்படுத்தியது.

    இயற்கை சீற்றத்தால் மாநிலமே சீரழிந்த போதும், மனம் தளராமல் களத்தில் இறங்கி பொது மக்களுக்கு உதவி செய்ய பலர் முன்வந்தனர். அவ்வாறு உதவ வந்தவர்களில் ஒருவர் தான் ஜெய்சல் கே.பி. இதேபோன்று ஏராளமான மீனவர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களை காப்பாற்றினர்.



    இவர்கள் சேவையை பாராட்டி மாநில அரசு சார்பில் பாராட்டுச் சான்றிதழ்களை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வழங்கினார்.

    மீனவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்ட போது மழை வெள்ளத்தில் சிக்கிய சில பெண்களை காப்பாற்றி படகில் ஏற்றினார்கள். அப்போது சில பெண்கள் படகில் ஏற சிரமப்பட்டனர். 

    இதை பார்த்த ஜெய்சால் என்ற மீனவர் வெள்ள நீரில் படுத்து தனது முதுகையே படியாக்கி பெண்கள் படகில் ஏற உதவினார். மனிதாபிமானமிக்க இவரது இந்த செயலை சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதைப்பார்த்ததும் அந்த மீனவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது.



    இந்த நிலையில் மீனவர் ஜெய்சாலின் சேவையை பாராட்டி மஹிந்திரா நிறுவனம் ஜெய்சலுக்கு புதிய காரை பரிசாக வழங்கி உள்ளது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள மந்திரி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு காரை மீனவரிடம் வழங்கினார்.

    இதுபற்றி மீனவர் ஜெய்சால் கூறும்போது நான், எதையும் எதிர்பார்க்காமல் மனிதாபிமான அடிப்படையில்தான் வெள்ளத்தின் போது மீட்புப்பணியில் ஈடுபட்டேன். எனக்கு இது போன்ற பரிசு, பாராட்டுக்கள் கிடைக்கும் என்று நினைக்க வில்லை. இந்த காரையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கு பயன்படுத்துவேன் என்றார்.

    மஹிந்திரா சார்பில் வழங்கப்பட்டு இருக்கும் மராசோ கார் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரூ.9.99 லட்சம் எனும் துவக்க விலையில் கிடைக்கும் மராசோ தற்சமயம் டீசல் வேரியன்ட் மட்டுமே கிடைக்கிறது. மஹிந்திரா மராசோ மாடலில் 1.5 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 



    இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. மஹிந்திரா மராசோ லிட்டருக்கு 17.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மஹிந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொன் பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

    இந்தியாவில் புதிய மராசோ மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்கி, டாப்-என்ட் மாடலின் விலை ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ‘கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காரணம் இல்லை’, என மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு, மத்திய நீர் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது. #KeralaFloods #Mullaperiyardam
    புதுடெல்லி:

    கேரள மாநிலத்தில் கடந்த மாதம் கனமழை காரணமாக வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த மாநிலம் முழுவதும் பலத்த சேதம் அடைந்தது.

    இதற்கு தமிழக அரசே காரணம் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம்சாட்டினார். முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீரை திறந்து விட்டதால், அந்த தண்ணீர் இடுக்கி அணைக்கு வந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என அவர் தன்னுடைய குற்றச்சாட்டில் தெரிவித்து இருந்தார்.

    மேலும், முல்லைப்பெரியாறு அணையின் உயரத்தை குறைக்கக்கோரி கேரளா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கிலும், வெள்ளப்பெருக்குக்கு தமிழக அரசுதான் காரணம் என்று அந்த மாநில தலைமை செயலாளர் பிரமாண பத்திரத்தில் சுட்டிக்காட்டினார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்து இருந்தார். ‘கேரள மாநில வெள்ளப்பெருக்குக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது காரணம் இல்லை. முல்லைப்பெரியாறில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்கப்படவில்லை. அணையின் நீர்மட்டம் 139 அடிக்கு வந்தபோது 3 முறை எச்சரிக்கை விட்ட பின்னர் படிப்படியாகத்தான் தண்ணீர் திறக்கப்பட்டது. கனமழை காரணமாக ஏற்கனவே அங்கு அணைகள் அனைத்தும் நிரம்பி, உபரிநீர் வெளியேறிய காரணத்தால்தான் கேரளாவில் வெள்ள சேதம் ஏற்பட்டது’ என்று அவர் கூறியிருந்தார்.

    இந்நிலையில் இந்த கருத்தை மத்திய நீர் ஆணையமும் வலியுறுத்தி உள்ளது. கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்திய மத்திய நீர் ஆணையம் அது தொடர்பான அறிக்கையை மத்திய நீர்வள அமைச்சகத்தில் சமர்ப்பித்தது.

    48 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் வருமாறு:-

    கேரளாவில் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை அதிகப்படியான மழை பெய்துள்ளது. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் 287 மி.மீ. மழைதான் அதிகபட்ச மழையாக பதிவாகியுள்ளது. ஆனால் கடந்த மாதம் 758 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட சுமார் 500 மி.மீ. அதிகம் ஆகும். அதிகப்படியான மழை காரணமாகவே அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    வெள்ளப்பெருக்குக்கு முல்லைப்பெரியாறு அணையை திறந்து விட்டது காரணம் இல்லை. முல்லைப்பெரியாறு மட்டுமல்ல, எந்த அணையில் இருந்தும் அதிகளவு நீர் திறந்து விடப்படவில்லை. சரியான அளவுதான் திறந்து விடப்பட்டு உள்ளது. எனவே, வெள்ளப்பெருக்குக்கு எந்த அணையும் காரணம் கிடையாது. மேலும், அணைகள் சரியான நேரத்துக்கு திறக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் தவறானது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  #KeralaFloods #Mullaperiyardam
    பிரதமரை சந்திக்க தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ஆலப்புழா தொகுதி எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் குற்றம்சாட்டினார். #KeralaFlood #KCVenugopal #PMModi
    கொச்சி:

    முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி தலைமையில் கேரள அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் நேற்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து, மாநிலத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து பேச திட்டமிட்டு இருந்தனர்.



    ஆனால் பிரதமரை சந்திக்க தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ஆலப்புழா தொகுதி எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் நேற்று கொச்சியில் நிருபர்களிடம் பேசுகையில் குற்றம்சாட்டினார். பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரி அவரது அலுவலகத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி கடிதம் கொடுத்ததாகவும், ஆனால் பின்னர் அந்த கடிதம் அங்கிருந்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு, கேரள எம்.பி.க்களை சந்திக் குமாறு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டதாகவும் கே.சி.வேணுகோபால் கூறினார்.



    கேரள எம்.பி.க்கள் குழு ஏற்கனவே ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசியுள்ள நிலையில், மீண்டும் அவரை சந்தித்து பேசுவதில் அர்த்தம் இல்லை என்றும் அப்போது அவர் கூறினார். #KeralaFlood #KVVenugopal #PMModi
    கேரள வெள்ள நிவாரணத்துக்கு ம.தி.மு.க. சார்பில் ரூ.35 லட்சம் நிவாரண நிதி மற்றும் பொருள்கள் வழங்குவதாக வைகோ தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    கேரளாவில் வெள்ள நிவாரண பணிக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் நிதி உதவிகள் வழங்கி வருகிறார்கள். தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் கேரளாவுக்கு நிவாரண நிதியும், பொருள்களும் வழங்கி உள்ளனர்.

    இதுபோல ம.தி.மு.க. சார்பிலும் கேரளாவுக்கு ரூ.35 லட்சம் நிவாரண நிதி மற்றும் பொருள்கள் வழங்கப்படுகிறது. இப்பொருள்களை ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ திருவனந்தபுரத்திற்கு நேரில் சென்று வழங்குகிறார். இதற்காக அவர் நிவாரண பொருட்களுடன் நெல்லையில் இருந்து புறப்பட்டார். இன்று காலை நாகர்கோவில் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரள மக்களின் துயரத்தில் ம.தி.மு.க.வும் பங்கெடுத்து கொள்கிறது. இதற்காக ம.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதியும், ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருள்களும் வழங்கப்படுகிறது.

    இதனை நானும், ம.தி.மு.க. நிர்வாகிகளும் திருவனந்தபுரத்திற்கு நேரில் சென்று வழங்குகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கேரளா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் எலி காய்ச்சலுக்கு நேற்று ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. #Leptospirosis #RatFever #KeralaFloodRelief
    திருவனந்தபுரம்:

    கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 488 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

    தற்போது வெள்ளம் வடிந்து, மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. அதே சமயம் மழைக்கு பிந்தைய தொற்றுநோய்களும் கேரள மக்களை அச்சுறுத்தி வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் கடந்த மாதம் 15-ம் தேதியில் இருந்து எலி காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியது. 

    இறந்த எலியின் உடலில் இருந்து வெளியாகும் புழுக்களின் மூலமாகவும், இதனால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் வெள்ள நீரில் கலந்ததாலும் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டது. வேகமாக பரவி வரும் இந்த தொற்று நோய்க்கு நேற்று முன்தினம் 11 பேர் உயிரிழந்தனர். 

    நேற்று எர்ணாகுளம் மற்றும் கோட்டயத்தில் தலா ஒருவர், திருச்சூரில் 8 பேர் என நேற்று மட்டும் 10 பேர் பலியாகினர். இதையடுத்து இதுவரை எலி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 74-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் சிலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்தபோது தொற்றுநோய் பரவி இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



    திருச்சூர் மாவட்டத்தில் 21 பேருக்கு எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் எலி காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிட்டதாகவும், மக்கள் அதுகுறித்து பீதியடைய தேவையில்லை என்றும் மாநில சுகாதாரத்துறை மந்திரி சைலஜா தெரிவித்துள்ளார்.

    மேலும் கோட்டயம் மாவட்டத்தின் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. #Leptospirosis  #RatFever #KeralaFloodRelief 

    கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் வழங்கிய நடிகர் சங்கத்திற்கு கேரள முதல்வர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். #NadigarSangam
    சமீபத்தில் கேரள மாநிலத்தில் வெள்ள பெருக்காலும் மண் சரிவினாலும் கடும் சேதம் ஏற்பட்டு மக்கள் பெரும் துயரத்தையும் உயிரிழப்புகளையும் சந்தித்தனர். இதிலிருந்து மக்களை மீட்டு அம்மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர நிதி உதவி அளிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். 

    அதன் அடிப்படையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற தொகையை நேரடியாக அனுப்பிவைக்குமாறு நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அனைத்து திரைத்துறையினரிடமும் வேண்டுகோள் வைத்தார். 

    முதல் கட்டமாக நடிகர் சங்கம் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தது. இதனை தொடர்ந்து நடிகர் நடிகைகள் மற்றும் திரைத்துறையினர் அனைவரும் பெரும் தொகைகள் நிதி உதவியாக அளித்து வருகின்றனர். நடிகர் சாங்த்தின் ஒத்துழைப்புக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து கேரளா முதல்வர் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

    மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க அரசு எல்லா நடவடிக்கைகளையும் வேகமாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
    கேரள மாநிலத்தில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திய வெள்ளத்தின் எதிரொலியாக, மாநிலத்தின் அனைத்து கொண்டாட்டங்களையும் அடுத்த ஓராண்டுக்கு ஒத்திவைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகள் உருக்குலைந்தன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணியிலும், அதற்காக நிதி திரட்டும் பணியிலும் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.



    இந்நிலையில், கேரள மாநிலத்தில் வழக்கமாக நடைபெறும் சர்வதேச திரைப்பட கண்காட்சி உள்ளிட்ட அனைத்து கொண்டாட்டங்களையும் அடுத்த ஓராண்டுக்கு ஒத்திவைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், நிதி சேமிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தவும் கேரள அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. #KeralaFloods
    கேரளாவில் வெள்ளத்தில் அடித்த சென்றதாக கருதிய சபரிமலை பம்பை ஆற்றுப்பாலம் 5 மீட்டர் உயரத்திற்கு மணலால் மூடியிருந்ததால் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பத்தனம்திட்டா மாவட்டம் பம்பை ஆற்றில் கடந்து செல்ல வேண்டும்.

    இதற்காக பம்பை ஆற்றின் மீது 2 பாலங்கள் கட்டப்பட்டிருந்தன. இந்த 2 பாலங்களும் கடந்த மாதம் கேரளாவை புரட்டிப்போட்ட பேய் மழையில் சேதமானது. மழை பெய்த போது பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் போக்கும் மாறியது.

    இதில் பம்பை ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலங்களும் காணாமல் போனது. பாலத்தை வெள்ளம் அடித்துச் சென்றதாக அதிகாரிகள் கருதினர்.

    இதையடுத்து பம்பை ஆற்றின் மீது புதிய பாலம் கட்ட அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக ஏற்கனவே பாலம் அமைந்திருந்த பகுதியில் சீரமைப்பு பணி தொடங்கியது. கடந்த 3 நாட்களாக பொக்லைன் எந்திரங்கள் மூலம் பாலப்பகுதியில் தேங்கி இருந்த மணல் அகற்றப்பட்டது.

    அப்போது 5½ மீட்டர் ஆழத்தில் ஏற்கனவே இருந்த பாலம் மணல் மூடி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய போது பாலம் ஆற்றுமணலில் மூழ்கி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து சீரமைப்புக் குழுவினர் பாலத்தின் மீது மூடிக்கிடந்த மணலை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பாலத்தின் உறுதி தன்மையை சோதிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த ஆய்வுக்கு பிறகு பாலத்தை மீண்டும் பயன்படுத்த முடியுமா? என்பது தெரியவரும். அதே நேரம் இந்த பாலத்திற்கு பதில் ஏற்கனவே அரசு திட்டமிட்டப்படி இங்கு புதிய பாலம் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் எத்தகைய மழை வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டாலும் போக்குவரத்து பாதிக்காத அளவில் இப்பாலத்தை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு பணிகளும் நடந்து வருகிறது. #KeralaFloods
    கேரள மாநில வெள்ள நிவாரணத்துக்கு தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒருமாத சம்பளம் ரூ.96.40 லட்சத்தை வழங்கினர்.
    சென்னை:

    கேரள வெள்ள நிவாரணத்துக்கு தி.மு.க. சார்பில் ஏற்கனவே ரூ.1 கோடி வழங்கப்பட்டு இருந்தது. தி.மு.க. எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சார்பில் 1 மாத ஊதியம் வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி டெல்லி மேல்சபை உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் 1 மாத சம்பளம் ரூ.96.40 லட்சத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் கேரளாவுக்கு நேரில் சென்று வழங்கினார்.

    கேரள முதல்-மந்திரி பிரனாயி விஜயன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுவிட்டதால் முதல்-மந்திரி பொறுப்பு வகிக்கும் தொழில் துறை மந்திரி ஜெயராசனிடம் மா.சுப்பிரமணியம் காசோலைகளை வழங்கினார்.

    அதோடு சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்கில் 50 டன் கேரள சிகப்பு அரிசியும், ஆழப்புழா மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கேரளாவில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரவி வரும் எலிக்காய்ச்சலுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். #KeralaFloods #KeralaRatFever
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தன. சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 483 பேர் உயிரிழந்துள்ளனர்.



    தற்போது வெள்ளம் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கி உள்ள நிலையில், சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்பு பகுதிகளில் தொற்றுநோய்கள் ஏற்படத் தொடங்கி உள்ளன. குறிப்பாக எலிக்காய்ச்சல் பரவி வருகிறது.

    இந்த காய்ச்சலுக்கு இன்று வரை 12 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எலிக்காய்ச்சலுக்கு நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறி உள்ளார். #KeralaFloods #KeralaRatFever
    முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து பேசிய உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகள் கேரள மாநில மறு கட்டமைப்பு பணிகளுக்கு உடனடியாக ரூ.388 கோடி கடன் உதவி வழங்கப்படும் என தெரிவித்தனர். #KeralaFloods #WorldBank
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெய்த பேய் மழையால் மாநிலத்தின் ஒட்டு மொத்த கட்டமைப்பும் பலத்த சேதம் அடைந்தது.

    சாலைகள், வீடுகள், மின் கம்பங்கள், பயிர் நிலங்கள், வாகன சேதம் என மாநிலத்தின் மொத்த சேத மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடியை தாண்டும் என்று முதல் கட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

    மழை ஓய்ந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் கேரளாவை மறு கட்டமைக்க பல்வேறு நிறுவனங்கள் உதவி கரம் நீட்டி உள்ளது.

    கேரளாவில் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவி மூலம் பல்வேறு திட்டங்கள் ஏற்கனவே நடந்து வந்தது. தற்போது மழை பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்படுத்த உலக வங்கி கூடுதல் கடன் உதவி வழங்க முன் வந்தது.

    இதையடுத்து உலக வங்கிக்கான இந்திய தலைமை அதிகாரி ஹிஷ் சாம் அப்து, ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய தலைமை அதிகாரி கெஞ்சியோக்கா யாமோ ஆகியோர் நேற்று திருவனந்தபுரம் சென்றனர். அங்கு மாநில நிதி மந்திரி தாமஸ் ஐசக், தலைமை செயலாளர் டோம் ஜோஸ் மற்றும் நிதித்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    இச்சந்திப்புக்கு பிறகு உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகள் முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து பேசினர். அதன் பிறகு அவர்கள் கேரள மாநில மறு கட்டமைப்பு பணிகளுக்கு உடனடியாக ரூ.388 கோடி கடன் உதவி வழங்கப்படும் என தெரிவித்தனர்.



    இந்த நிதி மூலம் கேரள மாநில அணைகளின் பராமரிப்பு, சாலைகள் சீரமைப்பு, மின் கட்டமைப்பை சரி செய்தல் போன்ற பணிகள் நடைபெறும். உலக வங்கி அளிக்கும் நிதி உதவியைபோல ஆசிய வளர்ச்சி வங்கியும் கடன் உதவி வழங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுபோல சர்வதேச நிதி ஆணையம் மூலமும் கடன் உதவிகள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் பயிர் கடன்கள், விவசாய மறு கட்டமைப்பு, பயிர் நிலங்களில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படும்.

    மேலும் தனியார் நிதி நிறுவனங்கள் மூலமும் நீண்ட கால கடன் உதவி பெறவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். #KeralaFloods #WorldBank
    ×