search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவுக்கு உலக வங்கி ரூ.388 கோடி கடன் உதவி - பினராயி விஜயனிடம் அதிகாரிகள் தகவல்
    X

    கேரளாவுக்கு உலக வங்கி ரூ.388 கோடி கடன் உதவி - பினராயி விஜயனிடம் அதிகாரிகள் தகவல்

    முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து பேசிய உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகள் கேரள மாநில மறு கட்டமைப்பு பணிகளுக்கு உடனடியாக ரூ.388 கோடி கடன் உதவி வழங்கப்படும் என தெரிவித்தனர். #KeralaFloods #WorldBank
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெய்த பேய் மழையால் மாநிலத்தின் ஒட்டு மொத்த கட்டமைப்பும் பலத்த சேதம் அடைந்தது.

    சாலைகள், வீடுகள், மின் கம்பங்கள், பயிர் நிலங்கள், வாகன சேதம் என மாநிலத்தின் மொத்த சேத மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடியை தாண்டும் என்று முதல் கட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

    மழை ஓய்ந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் கேரளாவை மறு கட்டமைக்க பல்வேறு நிறுவனங்கள் உதவி கரம் நீட்டி உள்ளது.

    கேரளாவில் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவி மூலம் பல்வேறு திட்டங்கள் ஏற்கனவே நடந்து வந்தது. தற்போது மழை பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்படுத்த உலக வங்கி கூடுதல் கடன் உதவி வழங்க முன் வந்தது.

    இதையடுத்து உலக வங்கிக்கான இந்திய தலைமை அதிகாரி ஹிஷ் சாம் அப்து, ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய தலைமை அதிகாரி கெஞ்சியோக்கா யாமோ ஆகியோர் நேற்று திருவனந்தபுரம் சென்றனர். அங்கு மாநில நிதி மந்திரி தாமஸ் ஐசக், தலைமை செயலாளர் டோம் ஜோஸ் மற்றும் நிதித்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    இச்சந்திப்புக்கு பிறகு உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகள் முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து பேசினர். அதன் பிறகு அவர்கள் கேரள மாநில மறு கட்டமைப்பு பணிகளுக்கு உடனடியாக ரூ.388 கோடி கடன் உதவி வழங்கப்படும் என தெரிவித்தனர்.



    இந்த நிதி மூலம் கேரள மாநில அணைகளின் பராமரிப்பு, சாலைகள் சீரமைப்பு, மின் கட்டமைப்பை சரி செய்தல் போன்ற பணிகள் நடைபெறும். உலக வங்கி அளிக்கும் நிதி உதவியைபோல ஆசிய வளர்ச்சி வங்கியும் கடன் உதவி வழங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுபோல சர்வதேச நிதி ஆணையம் மூலமும் கடன் உதவிகள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் பயிர் கடன்கள், விவசாய மறு கட்டமைப்பு, பயிர் நிலங்களில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படும்.

    மேலும் தனியார் நிதி நிறுவனங்கள் மூலமும் நீண்ட கால கடன் உதவி பெறவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். #KeralaFloods #WorldBank
    Next Story
    ×