search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தேர்தல் நடத்தை விதிகளின்படி புதிய திட்டங்கள், அடிக்கல் நாட்டுதலை வாக்குறுதிகளாக தெரிவிக்க கூடாது.
    • 2 கட்சிகளும் தங்கள் விளக்கத்தை தேர்தல் துறைக்கு அனுப்ப உள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி பிரசாரம் செய்த போது முதியோர் உதவித்தொகை உயர்த்துவது குறித்து பேசினார்.

    இதுதொடர்பாக தேர்தல் துறை கவனத்துக்கு சென்றது. இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு தேர்தல் துறை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    அதில் தேர்தல் நடத்தை விதிகளின்படி புதிய திட்டங்கள், சலுகைகள், நிதி மானியம், அடிக்கல் நாட்டுதலை வாக்குறுதிகளாக தெரிவிக்க கூடாது.

    எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி ஜவகர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல பா.ஜனதா சமூகவலைதள விளம்பரம் தொடர்பாக கட்சியின் பொது செயலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 2 கட்சிகளும் தங்கள் விளக்கத்தை தேர்தல் துறைக்கு அனுப்ப உள்ளன.

    • ரெட்டியார்பாளையம் போலீஸ் மற்றும் உழவர்கரை நகராட்சி அலுவகலத்திலும் புகார் அளித்தனர்.
    • புரிந்துணர்வு இல்லாததால், கன்று குட்டி மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி-விழுப்புரம் சாலை உழவர்கரையில் உள்ள இறைச்சி கடையில் ஒரு கன்று குட்டியை இறைச்சிக்காக வெட்டி கொல்வதற்கு கொண்டு வந்தனர்.

    இதை பார்த்த தனியார் அமைப்பின இறைச்சிக்காக கன்று குட்டிகள், கருவுற்ற கால்நடைகள், நோய்வாய்ப்பட்ட கால்நடைகள், அடிபட்ட மாடுகளை வெட்டக்கூடாது என்பது சட்டம் உள்ளது என எடுத்து கூறினர்.

    ஆனால் இறைச்சி கடை உரிமையாளர் ஏற்கவில்லை. இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீஸ் மற்றும் உழவர்கரை நகராட்சி அலுவகலத்திலும் புகார் அளித்தனர்.

    இது தொடர்பான புரிந்துணர்வு இல்லாததால், கன்று குட்டி மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு, மாவட்ட கலெக்டரை அந்த அமைப்பினர் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து கலெக்டரின் நடவடிக்கையை தொடர்ந்து கன்று குட்டியை ரெட்டியார் பாளையம் போலீசார் மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்பு, உழவர்கரை நகராட்சி நிர்வாகம் இறைச்சிக்காக கொல்லப்பட இருந்த கன்று குட்டியை மீட்டு சென்றது.

    • 3 பேரையும் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
    • சம்மந்தப்பட்ட ஓட்டல் மேலாளர் மற்றும் அதன் இயக்குனர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மேரி உழவர்கரை சிவசக்தி நகரை சேர்ந்த சமூக சேவகர் ஐ.ஜி.வீரராகு. இவரது மனைவி பிரபாதேவி (36). இவர், பா.ஜனதா பிரமுகரான இவர் சம்பவத்தன்று இரவு 10.30 மணியளவில் முத்தியால்பேட்டை தொகுதியில் தேர்தல் பணியை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் இவரும் உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்த பிரியா (40), பூமியான்பேட்டை ஜவகர் நகரை சேர்ந்த கோமதி (44) ஆகியோரும் புதுவை 100-அடி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டனர்.

    அப்போது சிக்கன் பிரியாணியில் இறந்துபோன கரப்பான் பூச்சி கிடந்தது. இதனால் 3 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

    இதுபற்றி அவர்கள். ஓட்டல் மேனேஜர் மற்றும் அதன் இயக்குனருக்கு புகார் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து உடனடியாக பிரபாதேவியின் சகோதரர் பிரகாஷ் அங்கு விரைந்து சென்று 3 பேரையும் காரில் ஏற்றிக் கொண்டு மூலகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அங்கு 3 பேரையும் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பிரபாதேவி பின்னர் இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரில் பாதுகாப்பாற்ற முறையில் தயார் செய்து, கரப்பான் பூச்சி போன்ற பூச்சிகளால் உடலுக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தே, தரமற்ற பிரியாணியை வழங்கி வாந்தி பேதி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளை ஏற்படுத்திய சம்மந்தப்பட்ட ஓட்டல் மேலாளர் மற்றும் அதன் இயக்குனர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் தேர்தல் துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • வாக்காளர் தேர்தல் விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய பொம்மலாட்ட காணொலிகள், உயர்நிலைப் பள்ளி முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் தேர்தல் துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக, நகர பகுதியில் இயங்கும் உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, பாராளுமன்ற தேர்தலில் தவறாது ஓட்டளிக்க வேண்டி, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தனிப்பட்ட கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், தனது பெயரில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள தனிப்பட்ட வேண்டுகோள் கடிதங்களை, நகர பகுதிகளில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கி, அதனை, பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மூலம் அவர்களது பெற்றோர்களிடம் தவறாது சேர்த்திட கேட்டுக்கொண்டார். அதன்படி, 50 ஆயிரம் பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்பப்பட உள்ளது.

    நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, வாக்காளர் தேர்தல் விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய பொம்மலாட்ட காணொலிகள், உயர்நிலைப் பள்ளி முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

    இந்த காணொலிகளை, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வாக்காளர் களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவுறுத்தினார்.

    • 4 கலைஞர்கள் இரவு, பகலாக உழைத்து பைபரால் ஆன 6 பானைகளை செய்துள்ளனர்.
    • சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு பானை பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    இந்தியா கூட்டணியில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

    அவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பானை சின்னத்தை மக்களிடம் கொண்டுசென்று சேர்க்க புதுச்சேரியை சேர்ந்த பழங்குடியினர் விடுதலை இயக்க மாநில செயலாளர் ஏகாம்பரம் முடிவு செய்தார்.

    இதற்காக வில்லியனூரை சேர்ந்த துரை என்ற சிற்ப கலைஞரிடம் 6 பானைகள் செய்ய ஆர்டர் செய்தார்.

    4 கலைஞர்கள் இரவு, பகலாக உழைத்து பைபரால் ஆன 6 பானைகளை செய்துள்ளனர். இந்த பானைகள் ஒவ்வொன்றும் 7 அடி உயரம், 6 அடி அகலம் கொண்டவையாகும்.

    இந்த மெகா சைஸ் பானைகள் சிதம்பரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு பானை பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

    இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் வேட்பாளர் ரவிக்குமார் பிரசாரம் செய்யவும் பானைகள் தயாராகி வருகிறது.

    • எதிர்பார்த்தபடி பீர் வியாபாரம் ஆகாததால் பல நாட்கள் பீர்வகைகள் தேங்கி விடுகின்றன.
    • மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு பீர்களை வாங்கி செல்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் 500-க்கும் மேற்பட்ட மதுபான கடை, பார்கள் உள்ளது.

    கோடை வெயில் தொடங்கியதால் பெரும்பாலான மது பிரியர்கள் பீர் வகைகளை அதிக அளவு வாங்கி அருந்துகின்றனர்.

    பீர்கள் 6 முதல் 8 மாதம் வரை கெடாமல் இருக்க கால நிர்ணயம் உள்ளது. பீர் தயாரிக்கும் தொழிற் சாலைகளில் இருந்து வாங்கி வரப்படும் பீர் வகைகள் சில மதுபான கடைகளில் விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளது.

    அதோடு பண்டிகை காலங்களில் அதிக அளவில் பீர் வியாபாரம் ஆகும் என கருதி மதுக்கடை உரிமையாளர்கள் பெட்டி பெட்டியாக பீர் வகைகளை வாங்கி குடோன்களில் சேமித்து வைக்கின்றனர்.

    ஆனால் எதிர்பார்த்தபடி பீர் வியாபாரம் ஆகாததால் பல நாட்கள் பீர்வகைகள் தேங்கி விடுகின்றன.

    இதனால் காலாவதி தேதி நெருங்கும் பீர்களுக்கு மதுபான கடைகள் ரூ.20 தள்ளுபடி அளித்து விற்பனை செய்கின்றன. ரூ.120 மதிப்பிலான பீர்கள் ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

    மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு பீர்களை வாங்கி செல்கின்றனர்.

    • கட்சி என்கிற வரையறை கோடுகளை எல்லாம் கடந்து இங்கு வந்திருக்கிறேன்.
    • நற்பணி செய்தவர்கள் அனைவரும் இன்று நாட்டுப்பணி செய்யுங்கள்.

    புதுச்சேரி:

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமான நிலையத்துக்கு வந்தார்.

    அங்கிருந்து கார் மூலம் சிதம்பரம் சென்று அங்கு திருமாவளவனை ஆதரித்து பிரசாரம் செய்தார். பின்னர் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    முன்னதாக புதுச்சேரி விமான நிலையம் வந்த கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை நானும் மக்களில் ஒருவன் என்பதால் என் நிலைதான் அவர்களுக்கும் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். மாற்றம் என்பதல்ல, இப்போது முக்கியம், நம்முடைய குடியுரிமை, அரசியலமைப்பு உட்பட எல்லாவற்றையும் தற்காத்து கொள்ளும் நேரம் இது.

    கட்சி என்கிற வரையறை கோடுகளை எல்லாம் கடந்து இங்கு வந்திருக்கிறேன். இந்தியன் என்பதும், தமிழன் என்பதும்தான் இன்று எனக்கு பிரதானமாக தெரி கிறது. நற்பணி செய்தவர்கள் அனைவரும் இன்று நாட்டுப்பணி செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக கமல்ஹாசனை வரவேற்க மக்கள் நீதிமய்ய நிர்வாகிகள் விமான நிலையத்தில் திரண்டு, பேரணியாக அழைத்துச்செல்ல திட்டமிட்டனர். ஆனால் லாஸ்பேட்டை போலீசார் தேர்தல் நன்னடத்தை விதிகளை சுட்டிக்காட்டி, பேரணியாக சென்றால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்தனர்.

    • கடும் வெயிலால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
    • அரசு நலத்திட்டங்களை பெறுவதில்லை என ரேஷன்கார்டை கவுரவ ரேஷன்கார்டாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    கோடைகாலம் தொடங்கியதால் புதுவையில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது.

    காலை 7 மணி முதல் வெப்பம் அதிகரித்து செல்கிறது. சாலையில் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது. கடும் வெயிலால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் முதியோர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலும் கோடை வெப்பம் தகித்து வருகிறது. வெயிலில் வாடிய முதியவருக்கு போலீஸ்காரர் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காரைக்கால் நெடுங்காடு சந்திப்பு சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் முகமது ஹாஜா, அந்த வழியே காலில் செருப்பு அணியாமல் வந்த மூதாட்டியை பார்த்தார்.


    கடும் வெயிலால் நடக்க சிரமப்பட்டு வந்தார். இதைப்பார்த்த போலீஸ்காரர் மூதாட்டியை நிறுத்தி அருகிலிருந்த கடையில் செருப்பு, குடை வாங்கி கொடுத்தார்.

    தொடர்ந்து மூதாட்டிக்கு இளநீர் வாங்கி கொடுத்தார். அந்த வழியே சென்ற முதியோருக்கும் இளநீர் வாங்கி கொடுத்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் போலீஸ்காரரை பாராட்டி வருகின்றனர்.

    இவர் ஏற்கனவே அரசு நலத்திட்டங்களை பெறுவதில்லை என ரேஷன்கார்டை கவுரவ ரேஷன்கார்டாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தலில் கண்டெய்னர் மூலம் பா.ஜனதா வேட்பாளருக்கு பணம் வந்து சேர்ந்துள்ளதாக பேசப்படுகிறது.
    • உலக அளவில் நம் நாடு ஜனநாயக நாடு என பேசப்படுவதற்கே இந்திய தேர்தல் ஆணையத்தினுடைய பாகுபாடற்ற செயல்பாடு முதல் காரணமாக இருக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் நேர்மையாக, வெளிப்படையாக, சமநிலையோடு நடக்கவில்லை. மாநில உள்துறை அமைச்சராக போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளருக்கு அரசு எந்திரங்கள் முழுமையாக தேர்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக துணை நிற்கின்றன.

    அவரது பிரசாரத்தின் போது காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு பிரசாரத்தின் போதும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து வருகின்றன. ஆனால் இதை தேர்தல் துறை கண்டு கொள்ளவில்லை.

    தற்போது வயது முதிர்ந்தவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் வீட்டில் இருந்தே தபால் ஓட்டு போடப்படுகிறது. இது சம்பந்தமான அரசு துறை ஊழியர்களை தன்வசப்படுத்திக் கொண்டு அவர்களது விலாசப்பட்டியலை பா.ஜனதாவினர் கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஓட்டுக்கும் நேரிடையாக வீட்டிற்கே சென்று ரூ.500 பணம் கொடுக்கின்றனர்.

    இது சர்வ சாதாரணமாக வெளிப்படையாக நடக்கிறது. இந்த தேர்தலில் கண்டெய்னர் மூலம் பா.ஜனதா வேட்பாளருக்கு பணம் வந்து சேர்ந்துள்ளதாக பேசப்படுகிறது. அந்த பணம் முக்கிய நிர்வாகிகளிடம் பிரித்து கொடுக்கப்பட்டு ஒவ்வொரு ஓட்டுக்கும் சுமார் ரூ.1000 வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.

    உலக அளவில் நம் நாடு ஜனநாயக நாடு என பேசப்படுவதற்கே இந்திய தேர்தல் ஆணையத்தினுடைய பாகுபாடற்ற செயல்பாடு முதல் காரணமாக இருக்கிறது. ஆனால் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியை பொருத்தமட்டில் இந்த தேர்தலில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு வருகிறது.

    இந்திய தேர்தல் ஆணையம் இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து மத்திய ரிசர்வ் காவல் படையினரின் கண்காணிப்பிலும், புதுவை மாநிலத்திற்கு நேர்மையான தேர்தல் நடத்தும் அதிகாரிகளை கூடுதலாக நியமனம் செய்து நடைபெற இருக்கும் இந்த பாராளுமன்ற தேர்தலில் அதிகார பலம், பணம் பலம், மிரட்டல்கள் இவற்றை தடுத்த நிறுத்த வேண்டும்.

    புதுவை அரசு நிர்வாகமே ஒருதலைப்பட்சமாக பா.ஜனதா வேட்பாளருக்கு தேர்தல் பணி ஆற்றுவதால் நடைபெற இருக்கும் புதுவை பாராளுமன்ற தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளைஞர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர்.
    • போலீசாரின் இந்த நூதன தண்டனையை கடற்கரைக்கு வந்தவர்கள் வியந்து பார்த்து சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை கடல் மிகவும் ஆபத்தானது ஆகும். இதை அறியாமல் சுற்றுலா பயணிகள் உள்பட பலரும் கடலில் இறங்கி குளிக்கின்றனர்.

    புத்தாண்டு தினத்தன்று கடலில் குளித்த மாணவ-மாணவிகள் 4 பேர் அலையில் சிக்கி பலியானார்கள். அதைத் தொடர்ந்து கடலில் இறங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாள்தோறும் காலை முதல் மாலை வரை போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சென்று கடலில் இறங்குவதை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

    பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடற்கரையில் பல இடங்களில் விழிப்புணர்வு வாசகங்களுடன் அறிவிப்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் நேற்று இளைஞர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை எச்சரிக்கை செய்து வெளியே அழைத்து வந்தனர்.

    அதோடு நிற்காமல், கொளுத்தும் வெயிலில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடற்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பதாகைகளில் எழுதியுள்ள வாசகங்களை வாசிக்க செய்தனர்.

    சுமார் 1½ கி.மீ. தூரத்துக்கு அவர்களை நடத்தியே அழைத்து சென்று அனைத்து விழிப்புணர்வு பதாகைகளிலும் எழுதியுள்ள வாசகங்களை படித்த பின்னரே அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் இந்த நூதன தண்டனையை கடற்கரைக்கு வந்தவர்கள் வியந்து பார்த்து சென்றனர்.

    • கேரளத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்டு இடையே அரசியல் மோதல் போக்கு நிலவுகிறது.
    • கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் நாங்கள் வைத்திலிங்கதிற்கு ஆதரவு தரவில்லை‌.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவையில் 4 பிராந்தியங்கள் உள்ளன.

    இதில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே மாகி பிராந்தியம் உள்ளது. கேரளத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்டு இடையே அரசியல் மோதல் போக்கு நிலவுகிறது. இது மாகி பிராந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியா கூட்டணியில் போட்டியிடும் புதுவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு கம்யூனிஸ்ட்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மாகியில் உள்ள இந்தியா கூட்டணிக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவு அளிக்காமல் பிரசாரமும் செய்யாமல் சுயேட்சைக்கு வாக்களிக்க முடிவு எடுத்துள்ளனர்.

    இதுகுறித்து மாகி கம்யூனிஸ்டு நிர்வாகிகள் கூறியதாவது:-

    புதுவை இந்தியா கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு பிரசாரம் செய்யவும் வாக்களிக்கவும் இங்குள்ள தொழிலாளர்கள் விரும்ப மாட்டார்கள். இதை புதுவையில் உள்ள கட்சி தலைமைக்கு தெரிவித்து விட்டோம் நாங்கள் கேரளம் கண்ணூர் மாவட்ட செயலகத்தில் இணைந்துள்ளோம்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் நாங்கள் வைத்திலிங்கதிற்கு ஆதரவு தரவில்லை. மக்கள் நீதி மையம் வேட்பாளரைதான் ஆதரித்தோம். இந்த முறையும் காங்கிரசுக்கு வாக்களிக்க முடியாது பிரசாரமும் செய்ய முடியாது. ஏனெனில் இது கேரளாவில் உள்ள காங்கிரசுடன் எங்கள் மோதலை நீர்த்துப் போக செய்யும். அதனால் நாங்கள் சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களிப்போம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் ராஜாங்கம் கூறுகையில்:-

    மாகி நிலவரத்தை கட்சி தலைமை அறிந்துள்ளது. பா.ஜனதாவுக்கு எதிரான வாக்குகள் பிளவு படாமல் இருக்க கட்சி தலைமை வழிவகை செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

    இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் சலீம் கூறுகையில்:-

    கூட்டணியின் ஒற்றுமையை பாதிக்கும் வகையில் எதுவும் செய்ய கூடாது. வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க மாகியில் முயற்சிகள் எடுப்போம் என்றார்.

    • சொத்து விபரங்களை அவர் கூறினால் நன்றாக இருக்கும்.
    • நம்ம புதுச்சேரியிலும் இவ்வளவு பெரிய பணக்காரர் இருக்கிறார் என்ற பெருமை கிடைக்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயம் ரூ.1000 கோடி அளவுக்கு சொத்து வைத்துள்ளார் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பிரசாரத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறினார்.

    இந்த நிலையில் உப்பளம் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து வாக்கு சேகரித்த முதலமைச்சர் ரங்கசாமி, நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து பிரசாரம் செய்தார்.

    பா.ஜனதா வேட்பாளரும், உள்துறை அமைச்சருமான நமச்சிவாயத்துக்கு ரூ.1000 கோடி சொத்து உள்ளதாக நாராயணசாமி கூறியுள்ளார். இவருக்கு ரூ.1000 கோடி சொத்துன்னா, அவருக்கு எத்தனை ஆயிரம் கோடி சொத்து இருக்கும்?


    அவர் முதலமைச்சர், மத்திய அமைச்சர், பிரதமர் அலுவலக இணை அமைச்சர், 15 ஆண்டு ராஜ்யசபா எம்.பி.யாக இருந்துள்ளார். அப்படியென்றால் அவரிடம் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும்? அவரிடம் உள்ள சொத்து விபரங்களை அவர் கூறினால் நன்றாக இருக்கும்.

    நம்ம புதுச்சேரியிலும் இவ்வளவு பெரிய பணக்காரர் இருக்கிறார் என்ற பெருமை கிடைக்கும், எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். அவர் எதையாவது சொல்லனும் என போகிற போக்கில் சொல்லிக் கொண்டே போகிறார்.

    இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

    ×