search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுச்சேரி பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை வெளியீடு.
    • அரசு, தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கோடை விடுமுறைகள் 29.04.2024 முதல் தொடங்கும்.

    கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மேற்குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய குறிப்புடன், புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலப் பணிகள் இயக்குநரால் வெளியிடப்பட்ட தீவிர வெப்பம் / வெப்ப அலைக்கான பொது சுகாதார ஆலோசனையின் தொடர்ச்சியாக, அனைத்து அரசுகளுக்கும்/தனியார்/சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கோடை விடுமுறைகள் 29.04.2024 முதல் தொடங்கும்.

    இதேபோல், கோவை விடுமுறை முடிந்து 06.06.2024 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




     


    • லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் புலி உலாவுவதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது.
    • புலி வேட நாய் கடந்த 2 நாட்களாக குறிஞ்சி நகர் பகுதியில் உலாவி வருகிறது.

    புதுச்சேரி:

    புலியை பார்த்து பூனை சூடுபோட்ட விடுகதை மாதிரி நாயை புலியாக மாற்ற அதை புலிபோல் பெயிண்ட் அடித்து வீதியில் உலாவவிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது.

    புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் புலி உலாவுவதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது.

    மலைவனப்பகுதியாக இருந்தால் புலி வரும் இங்கு எப்படி புலி வந்தது என்று பொதுமக்களிடையே கேள்வி எழுந்தது. உண்மையிலேயே புலி தான் வருகிறதா? அதனை பார்த்துவிட வேண்டும் என்று இளைஞர்கள் திட்டமிட்டனர்.

    அப்போது புலி வருகிறது என்று சிலர் அங்கு கூச்சலிட்டவாறு சென்றனர்.

    இதனை கேட்ட இளைஞர்கள் சிலர் அங்கு திரண்டு சென்றனர். அவர்கள் புலி என்று சொன்ன விலங்கை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். ஏனென்றால் அது புலி அல்ல புலி வேஷத்தில் இருந்த நாய்.

    அந்தப் பகுதியை சேர்ந்த சில விஷமிகள் தெரு நாய் உடலில் புலியைப் போல கோடுகளை பெயிண்டில் வரைந்து நாயை வீதிகளில் உலாவ விட்டுள்ளனர்.

    இந்த புலி வேட நாய் கடந்த 2 நாட்களாக குறிஞ்சி நகர் பகுதியில் உலாவி வருகிறது. இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    நாய்க்கு புலிவேஷ மிட்ட விஷமிகள் யார்? என்று அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மதுகடை உரிமையாளர்கள் பீர் கேஸ்களை அதிக அளவில் வாங்கி விற்பனைக்கு ஸ்டாக் செய்கின்றனர்.
    • ரூ.100 முதல் ரூ.250 வரையில் விதவிதமான பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் 350-க்கும் மேற்பட்ட மதுபானகடைகள் உள்ளன.

    புதுவையில் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், ஜின், ஓட்கா, டக்கீலா என 1000-க்கும் மேற்பட்ட விதவிதமான பிராண்டு மதுவகைகள் விற்பனையாகிறது. புதுச்சேரியில் கிடைக்கும் மதுரகங்களை ருசி பார்க்க என நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இதேபோல் புதுச்சேரியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் பிராண்டுகள் உள்பட 35 வகையான பீர்கள் முழு பாட்டில்களில் கிடைக்கிறது.

    டின் மற்றும் பின்ட் பாட்டில்களிலும் பீர் சிறிய அளவிலும் கிடைக்கிறது. புதுச்சேரியில் பீருக்கு என தனித்துவமான பார்கள் உள்ளது.

    கோடை காலம் வந்துவிட்டால் மது பிரியர்கள் வெப்பத்தின் தாக்கம், நாவறட்சியில் இருந்து தப்பிக்க பீருக்கு மாறுவது வழக்கம். இதனால் பீருக்கு கடும் கிராக்கி ஏற்படுகிறது.

    மதுகடை உரிமையாளர்கள் பீர் கேஸ்களை அதிக அளவில் வாங்கி விற்பனைக்கு ஸ்டாக் செய்கின்றனர். வழக்கமான காலத்தை விட கோடை காலத்தில் 3 முதல் 5 மடங்கு பீர்கள் விற்பனையாகிறது.

    வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த ஒவ்வொரு கோடையிலும் புதிய பீர்களும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டும் அதுபோல் புதிய ரக 2 பீர்கள் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.100 முதல் ரூ.250 வரையில் விதவிதமான பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது. வெயில் தாக்கம் அதிகரிப்பால் பீர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


    பொதுவாகவே பீர்களை சில் கூலிங்காக குடிப்பது தனி ருசி தரும். இதனால் பீர் கேட்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் சில் கூலிங் பீர் கேட்கின்றனர். கொஞ்சம் குறைவான சில் கூலிங் இருந்தாலும் வாடிக்கையாளர் பீரை மாற்றி புல் சில் தரும்படி கேட்கின்றனர்.

    இதனால் கூலர்களில் தொடர்ந்து பீர்களை போட்டு கடை விற்பனையாளர்கள் நிரப்பி வருகின்றனர். கடைகளில் உள்ள கூலர்களை விட வாடிக்கையாளர் கோரிக்கை அதிகம் என்பதால் விற்பனையாளர்கள் திணறுகின்றனர்.

    சில கடைகளில் பீரை கூலிங் செய்ய அதிக கூலர்கள் இல்லாதது சில் கூலிங் பீருக்கு தடுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சில் கூல் பீர் கிடைப்பதில்லை என்ற புகார் வாடிக்கையாளர் மத்தியில் எழுந்துள்ளது.

    • ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.
    • அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியர்.

    இவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என இரட்டை ஆண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு (வயது 26). இதில் ஹேமசந்திரன் பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து விட்டு டிசைனிங் பணியில் உள்ளார். ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியில் உள்ளார்.

    இதில் ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் சென்னை பம்மல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நல்ல படங்கள் எப்போது வெளிவந்தாலும் அதை பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதையே ‘கில்லி’ படம் காட்டுகிறது.
    • சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே அனைத்து தரப்பினரும் ரசிகர்களாக உள்ளார்கள்.

    புதுச்சேரி:

    இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த 'ரத்னம்' திரைப்படம் நாளை மறுநாள் 26-ந்தேதி வெளியாக உள்ளது.

    புதுவையிலும் 'ரத்னம்' திரைப்படம் வெளியாகிறது. திரைப்படம் வெளியாக உள்ள சண்முகா திரையரங்குக்கு வந்த இயக்குனர் ஹரி, விஷால் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். இதன்பின் இயக்குனர் ஹரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    விஷாலுக்கு 3-வது திரைப்படமாக இந்த படத்தை இயக்கி உள்ளேன். மிகப்பெரிய வெற்றியை இந்த திரைப்படம் கொடுக்கும். மக்கள் அனைவரும் திரையரங்குக்கு வந்து படத்தை பார்க்க வேண்டும். சாலையில் செல்லும்போது ஒரு பிரச்சனையை கண்டால் யாரும் உதவ முன்வருவதில்லை. வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

    அப்படி உதவும் இளைஞனின் ஒரு கதை தான் இது. 'கில்லி' திரைப்படம் மறுபடியும் திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. நல்ல படங்கள் எப்போது வெளிவந்தாலும் அதை பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதையே இந்த படம் காட்டுகிறது.

    இது போன்ற படங்களை பார்க்கும்போது நாமும் நல்ல படங்களை எடுக்க வேண்டும் என்று இயக்குனர்களுக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நடிகர்களுக்கு ஒரு தரப்பினர் மட்டுமே ரசிகர்களாக இருப்பார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே அனைத்து தரப்பினரும் ரசிகர்களாக உள்ளார்கள். தலைவர் படம் என்றால் சொல்ல தேவையில்லை. அவர் படம் எப்போது வந்தாலும் முதல் நாளில் பார்ப்பேன். எந்த ஒரு இயக்குனரும் சாதிகளை முன்வைத்து படங்களை இயக்குவதில்லை.

    நாட்டில் நடக்கும் சாதிய சிந்தனைகளை வைத்து மட்டுமே படங்கள் எடுக்கிறார்கள். சினிமா என்பது சாதி, மதம், மொழி என இதற்கெல்லாம் அப்பாற்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து விஷால் ரசிகர்களுடன் அவர் செல்பி எடுத்துக்கொண்டார். தொடர்ந்து நகர பகுதிக்கு வந்த இயக்குனர் ஹரி நேரு வீதி, பாரதி வீதி, குபேர் அங்காடி பகுதிகளுக்கு சென்று அங்கிருந்த வியாபாரிகளிடம் 'ரத்னம்' படம் பற்றி கூறி திரையரங்கில் பார்க்க அழைப்பு விடுத்தார்.

    • வழக்கமாக தேர்தலுக்கு முன்பு மதுபான கடைகள் இரவு 11 மணிவரை செயல்பட்டன.
    • தேர்தல் முடிந்துள்ள நிலையிலும் தற்போது வரை மதுபான கடைகள் இரவு 10 மணியோடு மூடப்பட்டு வருகின்றன.

    புதுச்சேரி:

    புதுவையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மதுக்கடைகள் இரவு 10 மணிக்கே மூடதேர்தல் துறை உத்தரவிட்டது. மேலும் 10 மணிக்கு மேல் மது கடைகள் திறந்து இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று புதுவை கலால் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இதனால் மதுகடை உரிமையாளர்கள் இரவு 9.30 மணிக்கே மதுகடைகளை மூடிவிடுகின்றனர். தற்போது வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்ந்துள்ளது.

    வழக்கமாக தேர்தலுக்கு முன்பு மதுபான கடைகள் இரவு 11 மணிவரை செயல்பட்டன. சுற்றுலா உரிமம் பெற்ற மதுபார்கள் இரவு 12 மணி வரை இயங்கின.

    தேர்தல் முடிந்துள்ள நிலையிலும் தற்போது வரை மதுபான கடைகள் இரவு 10 மணியோடு மூடப்பட்டு வருகின்றன. இதனால் வியாபாரம் பாதித்து அரசுக்கு கிடைக்கும் வருமானமும் குறைகிறது.

    இதைத் தொடர்ந்து மதுபான விற்பனை நேரத்தை முன்பு போல் இரவு 11 மணி வரை மேற்கொள்ள அனுமதிக்கக்கோரி கலால்துறை தேர்தல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு ருத்ரேஷ் ஜாமீனில் வெளியே வந்தார்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு பெரியார் நகர் 12-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ருத்ரேஷ்(வயது28). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். ஒரு பெண் குழந்தை உள்ளது.

    பெயிண்டர் வேலை செய்து வந்த ருத்ரேஷ் சமீப காலமாக கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த கவுதம் என்பவரும் கஞ்சா விற்று வந்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் கஞ்சா விற்பதில் தொழில் போட்டி இருந்து வந்தது.

    கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இது தொடர்பாக இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கவுதமனை கத்தியால் ருத்ரேஷ் வெட்டினார். இதில் கவுதமனுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இந்த சம்பவத்தில் ருத்ரேஷ் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ருத்ரேஷ் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள கங்கை முத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

    இந்த பால்குட ஊர்வலத்தில் ருத்ரேசின் தாய் மற்றும் சகோதரியும் பங்கேற்றதால் அதனை காண ருத்ரேஷ் கோவில் எதிரே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் கவுதமன் மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேர் வந்தனர். இதனை கண்டதும் ருத்ரேஷ் ஏதோ விபரீதம் நடக்கப்போவதை அறிந்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் அந்த கும்பல் சுற்றி வளைத்து ருத்ரேசை சரமாரியாக அரிவாளால் தலையில் வெட்டியது.

    இதில் ருத்ரேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த கும்பல் பைக்கில் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    இதனை பார்த்ததும் பால்குடம் ஏந்தி வந்த பெண்களும், அங்கிருந்த பொதுமக்களும் அலறி அடித்து ஓடினர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ருத்ரேசை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ருத்ரேஷ் பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் காரணமாக பெரியார் நகர் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • எனக்கு வாக்களித்த புதுச்சேரியின் 4 பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • புதுச்சேரியில் வாக்களர்களுக்கு பா.ஜனதா பணம் கொடுத்ததாக கூறும் புகாரை அ.தி.மு.க. ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பா.ஜனதா பணம் கொடுத்ததாக கூறுவதை அ.தி.மு.க. நிரூபிக்க வேண்டும் என மாநில உள்துறை அமைச்சரும், புதுச்சேரி தொகுதி பா.ஜனதா வேட்பாளருமான நமச்சிவாயம் கூறியுள்ளார்.

    காரைக்காலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மக்களவைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். தேர்தல் நடந்து முடிந்த நிலையில் காரைக்காலில் உள்ள பா.ஜனதா மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளேன்.

    எனக்கு வாக்களித்த புதுச்சேரியின் 4 பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தொடக்கத்தில் இருந்தே சொன்னதுபோல வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.

    வெற்றி பெற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படுவது உடனடியாக அமல்படுத்தப்படும். காரைக்காலில் மருத்துவமனை மேம்பாடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய வெற்றி பெற்ற பின்னர் எம்.பி. என்ற முறையில் பாடுபடுவேன். அனைத்து பிராந்தியங்களையும் உள்ளடக்கிய புதுச்சேரி மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பாடுபடுவேன்.

    புதுச்சேரியில் வாக்களர்களுக்கு பா.ஜனதா பணம் கொடுத்ததாக கூறும் புகாரை அ.தி.மு.க. ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது குறித்து நான் ஏற்கனவே கூறியுள்ளது போல மத்திய அரசுடன் பேசி அனைத்து கட்ட முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

    • வெளியூர்களில் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் குடியிருப்பவர்கள் அன்றைய தினம் புதுச்சேரி வந்தனர்.
    • புஸ்சிவீதி, அண்ணாசாலை, நேருவீதி உள்ளிட்ட முக்கிய சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. அதற்காக வெளியூர்களில் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் குடியிருப்பவர்கள் அன்றைய தினம் புதுச்சேரி வந்தனர்.

    தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால், நேற்று மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு ஆயத்தமானார்கள். அத்துடன் வார இறுதி நாளான நேற்று வெளி மாநிலசுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகரித்து இருந்தது.

    அவர்கள் புதுவையில் கடற்கரை, பாரதி பூங்கா, படகு குழாம், மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றனர்.

    புதுச்சேரி கடற்கரைசாலை, பாண்டி மெரினா பீச்சில் பகலில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது. ஆனால் மாலையில் கூட்டம் அலை மோதியது.

    அங்கு அவர்கள் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை எச்சரித்து கடலில் இருந்து வெளியேற்றினர்.

    புஸ்சிவீதி, அண்ணாசாலை, நேருவீதி உள்ளிட்ட முக்கிய சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஒயிட்டவுன் பகுதிகளில் நாகரீக உடை அணிந்த பெண்கள் ஒய்யாரமாக நடந்தது வந்ததை காண முடிந்தது. அங்குள்ள கட்டிடங்களில் வரைந்திருக்கும் ஒவியங்களின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் சுற்றுலா பயணிகள், மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர்.

    தொடர் விடுமுறை முடிவடைந்த நிலையில் வாக்களிக்க வந்தவர்கள், சுற்றுலா வந்தவர்கள் நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு திருப்பினர்.

    இதனால் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.

    • நகரங்களில் உள்ள படித்தவர்கள் ஓட்டு சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையை ஆற்றுவதில்லை.
    • ஜனநாயக திருவிழாவில் அனைவரும் கூடி பங்கேற்றால் தான் ஓட்டு பதிவு அதிகரிக்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் 78.90 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இது, கடந்த தேர்தலை காட்டிலும் 2.35 சதவீதம் குறைவாகும்.

    மொத்தமுள்ள 10,23,699 களில் 8,07,724 பேர் மட்டுமே ஓட்டளித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ள 2,19,422 வாக்காளர்கள் ஓட்டளிக்கவில்லை.

    வாக்கு பதிவு குறைந்தது குறித்து புதுச்சேரி தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-

    ஓட்டு பதிவு குறைவிற்கு வெயிலை ஒரு காரணமாக சொன்னாலும், மேலும் பல காரணங்கள் உள்ளன. சட்டசபை தேர்தல் என்றாலும், பாராளுமன்ற தேர்தல் என்றாலும் படிப்பறிவு இல்லாத மக்கள் திரண்டு வந்து ஓட்டளிக்கின்றனர். ஆனால் நகரங்களில் உள்ள படித்தவர்கள் ஓட்டு சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையை ஆற்றுவதில்லை.

    மாநிலத்தின் கல்வியறிவு 85.8 சதவீதம் உள்ளது. அப்படி இருந்தாலும் நகர பகுதியில் வசிப்பவர்கள் ஓட்டுச்சாவடியில் வரிசையில் நின்று ஓட்டளிக்க தயக்கம் காட்டுகின்றனர். இது ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு பதிவில் சரிவை ஏற்படுத்தி வருகிறது.

    மேலும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பல்வேறு நாடுகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக பிரான்ஸ், சிங்கப்பூர், அரபு நாடுகளில் பலரும் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றாலும் எந்த ஒரு தேர்தலிலும் புதுச்சேரிக்கு வந்து ஓட்டளிப்பதில்லை. இப்போது இவர்கள் கோடை விடுமுறைக்காக தங்களது குடும்பத்தினரையும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து சென்று விட்டனர். இதனால் அவர்களது குடும்பத்தினரும் ஓட்டளிக்கவில்லை. இதன் காரணமாக ஓட்டு பதிவு சரிந்து விட்டது. அதுபோல, 40 ஆயிரம் மாணவ-மாணவிகள் உயர் கல்வி பயில பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர். ஓட்டு போட ஒருநாள் மட்டுமே விடுமுறை என்பதாலும் இவர்களில் பலர் ஓட்டளிக்க வில்லை.

    தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் ஐ.டி., உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் ஓட்டுப்பதிவுக்கு வர நினைத்தாலும், அவர்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை கிடைப்பதில்லை. டெல்லியில் உள்ள ஒருவர் ஓட்டளித்துவிட்டு மறுநாளே எப்படி டெல்லி செல்ல முடியும்? இதுபோல ஒவ்வொருவருக்கும் ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், அதை ஏற்க முடியாது. ஜனநாயக திருவிழாவில் அனைவரும் கூடி பங்கேற்றால் தான் ஓட்டு பதிவு அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ஒவ்வொரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பலரும், நமச்சிவாயம் மூலம் தொழில் ரீதியாக பலன் பெற்றுள்ளனர்.
    • ஓட்டுப் பதிவு முடிந்து விட்ட நிலையில் ‘கருப்பு ஆடுகள்’ மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    நடந்து முடிந்த புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கும், பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்திற்கும் நேருக்கு நேராக கடும் போட்டி நிலவியது.

    பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயம், புதுச்சேரி காங்கிரஸ் மாநில தலைவராக பொறுப்பு வகித்தவர். மேலும் அமைச்சரவையிலும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். இதனால் 30 தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அவருக்கு பரிச்சயமானவர்களாக உள்ளனர்.

    ஒவ்வொரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பலரும், நமச்சிவாயம் மூலம் தொழில் ரீதியாக பலன் பெற்றுள்ளனர். இதனால் பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

    'நீங்கள் பா.ஜனதாவுக்கு நேரடியாக ஓட்டு சேகரிக்க வேண்டாம். ஆனால் காங்கிரஸ் பிரசாரத்துக்கு செல்லாமல் ஒதுங்கி இருந் தால்போதும் என நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இதனை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடல்நிலை சரியில்லை என கூறி பிரசாரத்தில் பங்கேற்காமல் 'எஸ்கேப்' ஆகிவிட்டனர். இதுதவிர வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்கும் பணியில் வேகம் காட்டவில்லை.

    இதுகுறித்த தகவல் காங்கிரஸ் தலைவர்களுக்கு கிடைத்துள்ளது. அதிர்ச்சி அடைந்துள்ள அவர்கள், ஓட்டுப் பதிவு முடிந்து விட்ட நிலையில் 'கருப்பு ஆடுகள்' மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

    தேர்தல் பணிகளில் பங்கேற்காமல் புறக்கணித்த காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டியல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    • சொந்த தொகுதியான மண்ணாடிப்பட்டில் நமச்சிவாயம் அதிக ஓட்டு களை பெற்று முன்னிலை வகிப்பார் என பலரும் பந்தயம் கட்டி வருகின்றனர்.
    • அரசியல் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாய் பந்தயமாக கட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற பா.ஜனதா வேட்பாளராக நமச்சிவாயம், காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம், அ.தி.மு.க. வேட்பாளராக தமிழ்வேந்தன் போட்டியிட்டனர். அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 26 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

    ஓட்டுப் பதிவு நேற்று முன்தினம் நடந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற போவது யார் என்பது குறித்து டீ கடை, ரியல் எஸ்டேட் அலுவலகம், வணிக நிறுவனங்கள், நண்பர்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சியினரிடையே கடும் விவாதம் ஏற்பட்டு வருகிறது. இது ஒரு கட்டத்தில் சூதாட்டமாக உருமாறியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என ஒரு தரப்பினரும், பா.ஜனதா வேட்பாளர் வெற்றிக் கனியை பறிப்பார் என இன்னொரு தரப்பினரும் பந்தயம் கட்டி வருகின்றனர். இதற்காக, லட்சக்கணக்கில் பந்தயம் கட்டப்பட்டு வருகிறது.

    இதுமட்டுமல்லாமல், வில்லியனுார் தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., பெற்ற ஓட்டுகளை விட ஒரு ஓட்டாவது கூடுதலாக காங்கிரஸ் வேட்பாளருக்கு கிடைக்கும் என ஒரு தரப்பினரும், வாய்பே இல்லை. இம்முறை வில்லி யார் தொகுதியில் நமச்சிவாயம் அதிக ஓட்டுகளை பெற்று தொகுதியில் முதலாவதாக வருவார் என எதிர்தரப்பினரும் ஆயிரக்கணக்கான ரூபாயை பந்தயம் கட்டி வருகின்றனர். இதுபோன்ற சூதாட்டம், மண்ணாடிப்பட்டிலும் களை கட்டி உள்ளது. சொந்த தொகுதியான மண்ணாடிப்பட்டில் நமச்சிவாயம் அதிக ஓட்டு களை பெற்று முன்னிலை வகிப்பார் என பலரும் பந்தயம் கட்டி வருகின்றனர்.

    இன்னொரு பக்கம், இந்த முறை சரித்திரம் மாறும் மண்ணாடிப்பட்டில் வைத்திலிங்கமே அதிக ஓட்டுகளை பெற்று சாதிப்பார் என எதிர்தரப்பினரும் பணத்தை பந்தயமாக கட்டி வருகின்றனர். அரசியல் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாய் பந்தயமாக கட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் தீர்வு ஜூன் 4-ந் தேதி தெரிந்து விடும்.

    ×