என் மலர்
தலைப்புச்செய்திகள்
- புதிய அம்சங்கள் நெக்சான் EV எம்பவர்டு+ A வேரியண்ட் எனப்படும் புதிய வேரியண்டில் கிடைக்கும்.
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 489 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் எலெக்ட்ரிக் மாடலில் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய வேரியண்ட் விலை விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும். டாடா நிறுவனத்தின் பிரபல எலெக்ட்ரிக் கார் விரைவில் ஒரு குறிப்பிடத்தக்க அப்டேட்டை பெற இருக்கிறது.
அதன்படி டாடா நிறுவனம் விரைவில் நெக்சான் EV-இல் லெவல் 2 ADAS சூட் பொருத்த இருக்கிறது. டாடா நிறுவனம் தனது சப் 4-மீட்டர் எஸ்யூவிக்கு இதுவரை மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்பான ADAS சூட் வழங்கவில்லை. இந்த புதிய அம்சங்கள் நெக்சான் EV எம்பவர்டு+ A வேரியண்ட் எனப்படும் புதிய வேரியண்டில் கிடைக்கும். இதில் A என்ற எழுத்து ADAS சூட்-ஐ குறிக்கிறது.
புதிய அப்டேட் உடன் வரும் நெக்சான் எலெக்ட்ரிக் காரில் டாடா தற்போது வழங்கும் அனைத்து சலுகைகளுடன் வரும். கூடுதலாக, இது 45kWh பேட்டரி பேக் பதிப்பில் மட்டுமே வழங்கப்படும். இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 489 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
நெக்சான் EV பெறக்கூடிய லெவல் 2 ADAS அம்சங்களில் ஓட்டுநர் தூக்கத்தில் இருக்கிறாரா என்பதை கண்டறிதல், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், ரியர் கிராஸ் டிராஃபிக் அலெர்ட், ரியர் கொலிஷன் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் கொலிஷன் வார்னிங் ஆகியவை அடங்கும்.
- வீட்டில் மாமியார் வள்ளியம்மாளும், மருமகள் அபிதாவும் மட்டும் இருந்தனர்.
- போலீசாரின் விசாரணையால் அபிதாவின் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
பூந்தமல்லி:
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மணிகண்டன் நகர், காந்தி சாலையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி அபிதா(59), ராஜேந்திரனின் தாய் வள்ளியம்மாள்(88). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு ராஜேந்திரன் வேலை பார்த்த இடத்தில் தங்கி விட்டார்.
வீட்டில் மாமியார் வள்ளியம்மாளும், மருமகள் அபிதாவும் மட்டும் இருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், அபிதாவையும் மாமியார் வள்ளியம்மாளையும் கட்டிப்போட்டு 11 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டார்.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அபிதாவே தனது கள்ளக்காதலனை வரவழைத்து இந்த நகை பறிப்பில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அபிதாவிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது.
அபிதாவிற்கு குழந்தைகள் இல்லை. இதனால் அவர் அடிக்கடி அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வந்தபோது அங்கு வந்த திருநெல்வேலியை சேர்ந்த 35 வயதுடைய வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும் கள்ளக்காதலர்கள் தங்களது நட்பை வளர்த்து அடிக்கடி தனியாக சந்தித்து வந்து உள்ளார். அந்த வாலிபர் அபிதாவிடம் பணம் கேட்கும் போதெல்லாம் தன்னிடம் பணம் இல்லை. ஆனால் வீட்டில் நகைகள் உள்ளது. அதுவும் தனது மாமியாரிடம் உள்ளது என்று கூறி உள்ளார். செலவுக்கு பணம் இல்லாததால் அந்த நகையை திருடி இருவரும் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று திட்டமிட்டனர்.
அதன்படி சம்பவத்தன்று கணவர் வீட்டில் இல்லாததை அபிதா தனது கள்ளக்காதலனிடம் தெரிவித்தார். திட்டமிட்டபடி அந்த கள்ளக்காதலன் வந்து அபிதாவையும், மாமியார் வள்ளியம்மாளையும் கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்து சென்று விட்டார். ஆனால் இதில் கள்ளக்காதலர்களின் திட்டம் சொதப்பியதால் அபிதா சிக்கிக் கொண்டார். முதலில் மாமியார் வள்ளியம்மாளை மட்டும் தாக்கி நகையை பறித்து உள்ளார். பின்னர் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக தன்னையும் கட்டிப்போட்டு விட்டு செல்லுமாறு அபிதா கூறி இருக்கிறார். இதன் பின்னர் அபிதாவையும், வள்ளியம்மாளையும் கட்டிப் போட்டு கள்ளக்காதலன் தப்பி இருக்கிறார்.
போலீசார் வந்து விசாரணை செய்தபோது மாமியார் வள்ளியம்மாள் உட லில் மட்டும் காயங்கள் இருந்தன. ஆனால் அபிதாவின் உடலில் சிறிய காயங்கள் கூட இல்லை. விசாரணையின்போது அபிதா முன்னுக்குபின் முரணான பதில்களை கூறி உள்ளார். மேலும் வள்ளியம்மாள் அணிந்து இருந்த நகையை மட்டுமே கள்ளக்காதலன் பறித்து சென்று இருந்ததால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர் போலீசார் தங்களது பாணியில் விசாரித்தபோது அபிதா கள்ளக்காதலனை வரவழைத்து மாமியாரை கட்டிப்போட்டு நகை பறித்து இருப்பது தெரிய வந்தது.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இதே போல் நகை பறிப்பு சம்பவம் நடந்து உள்ளது. இதனை சமாளித்து போலீசில் புகார் கொடுக்காமல் கள்ளக்காதலனை அபிதா காப்பாற்றி உள்ளார். அதேபோல் தற்போதும் நகை பறித்து போலீசில் சிக்காமல் உல்லாசமாக செலவு செய்யலாம் என்று நினைத்து நகை கொள்ளையில் ஈடுபட்டபோது போலீசாரின் விசாரணையால் அபிதாவின் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதேபோல் கொள்ளை நடந்த நேரத்தில் அப்பகுதியில் அபிதா, கள்ளக்காதலனிடம் நின்று பேசிக் கொண்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சியும் போலீசாருக்கு கிடைத்து உள்ளது. அபிதா போலீசில் சிக்கியது பற்றி அறிந்ததும் தற்போது அவரது கள்ளக்காதலன் தலைமறைவாகி விட்டார். அவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பஞ்சாப்பில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
- சுமார் 2.5 லட்சம் பேர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சண்டிகர்:
வட மாநிலங்களில் பருவ மழை கொட்டி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2.5 லட்சம் பேர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை காரணமாக பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறிவிட்டன.
சட்லஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளம் காரணமாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை எதிரொலியால் செப்டம்பர் 7 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பில் ஏற்பட்ட மோசமான வெள்ளப் பேரழிவுகளில் இதுவும் ஒன்று என மாநில அரசு தெரிவித்துள்ளது.
- திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
- சசிகலா, ஓ.பி.எஸ்.சை சந்தித்ததாகவும், கட்சி மாற போகிறீர்களா எனவும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அ.தி.மு.க., பிரமுகர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது அவரிடம் நிருபர்கள் கே.ஏ. செங்கோட்டையன் 5-ந்தேதி மனம் திறந்து பேசப்போவதாக கூறியுள்ளாரே? என கேள்வி கேட்டபோது, செங்கோட்டையன் 5-ந்தேதி கூறுகிறேன் என தெரிவித்துள்ளார். அவர் என்ன கூறுவார் என பார்ப்போம் என தெரிவித்து விட்டு சென்றார்.
இதனைத்தொடர்ந்து திருமண விழாவிற்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் நிருபர்கள், நீங்கள் சசிகலா, ஓ.பி.எஸ்.சை சந்தித்ததாகவும், கட்சி மாற போகிறீர்களா எனவும் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், நான் சசிகலாவை சந்திக்கவில்லை. அனைத்து கேள்விகளுக்கும் 5-ந்தேதி பதில் கூறுகிறேன் என தெரிவித்தார்.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜய குமாரும், செங்கோட்டையனுடன் முன்னாள் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவும் தனித்தனியாக வந்தனர். இருவரும் அரைமணி நேர இடைவெளியில் ஒருவரை ஒருவர் சந்திக்காத வண்ணம் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்றனர்.
- 52 வயதான ராணி தனது வயதை மறைத்து Filter மூலம் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்டுள்ளார்.
- 52 வயதான ராணிக்கு 4 குழந்தைகள் இருப்பது அருணுக்கு தெரிய வந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அருண் (26) என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் ராணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
52 வயதான ராணி என்ற பெண் தனது வயதை மறைத்து Filter மூலம் புகைப்படத்தை பதிவேற்றி இளம்பெண் போல அருணை ஏமாற்றி வந்துள்ளார்.
முதல்முறையாக ராணியை அருண் நேரில் சந்தித்தபோதே அவளுக்கு 52 வயது என்றும் 4 குழந்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை கண்டு கோபமடைந்த அருண், ராணியை ஏமாற்றி அவரிடம் இருந்து ரூ.1.5 லட்சம் பெற்றுள்ளார்.
பின்னர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் அருணை ராணி அடிக்கடி வற்புறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அருண், ராணியை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அவரது தாவணியை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தூக்கி வீசியுள்ளார்.
ராணியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார் அருணை கைது செய்தனர். கொலை செய்ததை அருண் ஒப்புக்கொண்டதால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஒரு டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்குடன் திராவிட மாடல் அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது.
- உடன்பிறப்புகள் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ்க் கலைகளைப் பயிற்றுவிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் வெளிநாட்டிலிருந்து எழுதும் மடல்.
ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து தலைநகர் இலண்டனுக்கு விமானத்தில் பறந்து செல்லும் நேரத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு இரட்டை இலக்கத்திலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்று முதலிடத்தில் இருப்பதுடன், இந்தியாவிலேயே தொழிற்சாலைகள் அதிகமுள்ள மாநிலமாகவும், வேலைவாய்ப்புகளை 15% வழங்கும் இந்தியாவின் முதன்மை மாநிலமாகவும் திகழ்கிறது என்கிற ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களை உடன்பிறப்புகள் அறிந்திருப்பீர்கள்.
ஒரு டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்குடன் திராவிட மாடல் அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது. அந்த முன்னேற்றத்தை மேலும் விரைவுபடுத்தி, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் சீரான வளர்ச்சியைப் பெறுகிற வகையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் ஆகஸ்ட் 30 அன்று ஐரோப்பியச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினேன். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "2021 முதல் இதுவரை 10 இலட்சத்து 62 ஆயிரத்து 752 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து, 32 இலட்சத்து 81 ஆயிரத்து 32 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன" என்பதையும், இதுவரை நான் பயணம் மேற்கொண்ட ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களையும் அவற்றில் முழுமையடைந்த திட்டங்கள், செயல்பாட்டில் உள்ள திட்டங்கள், உருவாகியுள்ள வேலைவாய்ப்புகள் என அனைத்தையும் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்து, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் ஊடகத்தினரின் உள்ளன்பான வாழ்த்துகளையும் பெற்று விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு முனையத்திற்கு வந்தேன்.
அங்கு எமிரேட்ஸ் விமான சேவையின் 25-ஆம் ஆண்டு விழா கேக் வெட்டும் நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு அமைந்தது. மாண்புமிகு துணை முதலமைச்சர் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களும் உடனிருந்தார். எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, நானும் என் துணைவியாரும், அரசு அதிகாரிகள் மற்றும் உதவியாளர்களுடன் விமானத்தில் துபாய் வழியாக ஆகஸ்ட் 30 சனிக்கிழமை இரவு ஜெர்மனியில் NRW எனப்படும் நார்த்ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தின் தலைநகரான டசெல்டோர்ஃப் விமான நிலையத்தில் தரையிறங்கினோம்.
தமிழ்நாட்டிற்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக உங்களில் ஒருவனான என் வழிகாட்டுதலின்படி முன்கூட்டியே ஜெர்மனி நாட்டிற்கு வந்திருந்த மாண்புமிகு தொழில் - முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரான தம்பி டி.ஆர்.பி.ராஜா விமான நிலையத்தில் அன்புடன் வரவேற்றார். NRW மாநில அரசின் சார்பாகத் தூதரக விவகாரங்கள் மற்றும் அரசு முறை வரவேற்புப் பிரிவைச் சார்ந்த திருமிகு அன்யா டி வூஸ்ட், பெர்லினில் உள்ள இந்திய தூதரகத்தின் பொறுப்பாளர் திரு.அபிஷேக் துபே, ஃப்ராங்க்பர்ட் இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதர் பொறுப்பில் உள்ள திரு.விபா காந்த் ஷர்மா ஆகியோர் மகிழ்வுடன் வரவேற்றனர்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு பெரும் பங்களிப்பைச் செலுத்தி வரும் நிலையில், ஜெர்மனி நாட்டில் உள்ள இந்திய அதிகாரிகளின் வரவேற்பு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. அந்த மகிழ்ச்சியுடன் டசெல்டோர்ஃப் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது ஓர் இன்ப அதிர்ச்சி.
அந்தப் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து நின்று வரவேற்பளித்தனர். குழந்தைகள் பதாகை ஏந்தி அன்பைப் பொழிந்தனர். அவர்களின் பாசம் மிகுந்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு, குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட விவரங்களைக் கேட்டுவிட்டு, கொலோன் நகரில் உள்ள 120 ஆண்டு பெருமையுள்ள எக்ஸல்ஸியர் ஹோட்டலுக்கு வந்தோம்.
புகழ்பெற்ற ரைன் நதியின் கரையோரமாக அது கட்டப்பட்டுள்ளது. கொலோன் நகரின் அந்த ரைன் நதிக்கரையில்தான் வடஐரோப்பாவின் பழமையானதும் உயரமானதுமான தேவாலயம் ஒன்று உள்ளது.
நாங்கள் ஹோட்டலுக்குச் சென்ற அன்றைய இரவு நேரத்திலும் ஹோட்டல் பகுதியிலும் தெருக்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தனர். என்ன விவரம் என்று கேட்டேன். லைட்ஷோ என்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள். கொலோன் நகரில் நடந்த வாணவேடிக்கைகளை ரசித்தபோது மனதெங்கும் தமிழ்நாட்டின் நினைவுகள் மத்தாப்பூகளாகச் சிதறின.
மறுநாள் காலையில் எழுந்ததும், அந்த இனிய வேளையில் ரைன் நதிக் கரையோரமாக நடைப்பயிற்சியை மேற்கொண்டேன். முந்தைய இரவுதான் அங்கே பெருங்கூட்டத்துடன் வாணவேடிக்கை நடந்தது. தின்பண்டங்களுடன் மக்கள் அதனை இரசித்தபடி இருந்தனர். ஆனால், அப்படியொன்று நடந்ததற்கான சுவடே தெரியாமல் அவ்வளவு தூய்மையாக அந்தப் பகுதி இருந்தது. கொலோன் நகர நிர்வாகத்தின் விரைவான -தூய்மையான பணியை வியந்தபடி நடைப்பயிற்சி சென்றேன். ஜெர்மனியர்கள் பலரும் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சியை மேற்கொண்டிருந்தனர். காலை நேரத்தில் நம் பணிகளுக்கான முதல் ஊக்கமாக அமைவது இத்தகைய பயிற்சிதான் என்ற விழிப்புணர்வுடன் அவர்கள் உடல் கட்டமைப்பை சீராக வைத்திருப்பதைப் பார்த்தேன்.
சென்னையில் இருந்தாலும், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்தாலும், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்கு வந்தாலும் காலை நேரத்தில் நடைப்பயிற்சியை மேற்கொள்வதை உங்களில் ஒருவனான நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். பொதுவாழ்வுப் பணிகளில் ஏற்படும் களைப்பு - சலிப்பு எதுவும் என்னை நெருங்கவிடாமல் தொடர்ந்து உழைப்பதற்கு அது ஊக்கசக்தியாக உள்ளது. அன்பு உடன்பிறப்புகளும் நடைப்பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு, உடல்நலன் காத்து, உங்கள் குடும்பத்திற்கும் கழகத்திற்கும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
நடைப்பயிற்சியில் என்னுடன் வந்த தம்பி டி.ஆர்.பி.ராஜா ஜெர்மனியில் எந்தெந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கின்றன, அந்த நிறுவனங்கள் என்ன உற்பத்தி செய்கின்றன, அவற்றின் பின்னணி என்ன என்பது உள்ளிட்ட விவரங்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். அவற்றைக் கவனமாகக் கேட்டுக்கொண்டதுடன், என்னுடைய செயலாளரிடம், தமிழ்நாட்டின் நிலவரங்கள் குறித்து கேட்டேன்.
சென்னையில் அன்றைய இரவு கடுமையான மழை பெய்த விவரம் அறிந்ததும், மாநகராட்சி கமிஷனருக்கு போன் செய்து கேட்டபோது, மணலியில் மட்டும் 27 செ.மீ. மழை பெய்தது என்றும், சென்னையின் பல இடங்களிலும் இரவில் கடும் மழை என்றும் தெரிவித்ததுடன், எந்தப் பகுதியிலும் தண்ணீர் தேங்கவில்லை என்பதையும், சுரங்கப்பாதை எதுவும் மூடப்படவில்லை என்பதையும் தெரிவித்தனர். அதிகாரிகள் குமரகுருபரன், கார்த்திகேயன் மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தினர் களத்தில் நின்று, மழை அதிகமாகப் பெய்த இடங்களில் தண்ணீரை உடனடியாக வெளியேற்றும் பணிகளை முழுமையாக நிறைவேற்றியதைத் தெரிவித்தனர்.
துணை முதலமைச்சர் தம்பி உதயநிதிக்கு போன் செய்து, சென்னையில் இரவு பெய்த கனமழை பற்றிய விவரம் கேட்டபோது, அவர் அனைத்துத் துறைகளுடனும் தொடர்புகொண்டு பணிகளை விரைவுபடுத்தியதையும், சென்னையில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை என்பதையும் தெரிவித்தார். எந்த நாட்டில், எந்த நகரில் இருந்தாலும் உங்களில் ஒருவனான என் மனது தமிழ்நாட்டைத்தான் சுற்றிச் சுழல்கிறது.
அந்த நேரத்தில், மனதை பாரமாக்கும் வகையில் அண்ணன் வீரபாண்டியார் அவர்களின் அன்புத் துணைவியார் திருமதி.லீலா ஆறுமுகம் அவர்கள் மரணமடைந்த செய்தி வந்தது. உடனே, வீரபாண்டியாரின் மகன் தம்பி பிரபுவைத் தொடர்பு கொண்டு இரங்கலைத் தெரிவித்து, ஆறுதல் கூறினேன். நடைப்பயிற்சி முடித்து, ஒரு காபி சாப்பிட்டுவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பி, அன்றைய சந்திப்புகளைத் தொடர்ந்தேன்.
ஆகஸ்ட் 31 மாலையில் நம் தமிழ்ச் சொந்தங்களுடனான சந்திப்பு நேரம். ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்களுடனான சந்திப்பு என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், ஸ்வீடன், நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் 16 மாநிலங்களைச் சேர்ந்த தமிழர்களும் அந்தச் சந்திப்பிற்கு வந்திருந்தனர். கழகத்தின் சார்பில் தம்பி டி.ஆர்.பி.ராஜா செயலாளராக இருந்து தொடங்கிய NRTIA எனும் வெளிநாடு வாழ் இந்தியத் தமிழ்ச் சங்கத்தைத் தற்போது அயலக அணிச் செயலாளர் தம்பி எம்.எம்.அப்துல்லா செயலாளராக இருந்து சிறப்பாக நடத்தி வருகிறார். ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள நமது NRTIA நிர்வாகிகள் நல்ல முறையில் ஒருங்கிணைத்திருந்தனர்.
ஐரோப்பாவில் வசிக்கும் தமிழர்களைக் காண்பதற்கு உங்களில் ஒருவனான நான் தமிழ்நாட்டிலிருந்து சென்றதால், நமது பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை, மேல் துண்டு அணிந்து அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டபோது அங்கிருந்த தமிழர்கள் மகிழ்ந்து வரவேற்றனர். நல்லதொரு வரவேற்புரையை வழங்கினார்கள். அவர்கள் முன், நான் பேச எழுந்தபோது, கடல் கடந்து வாழ்கின்ற தமிழ்ச் சொந்தங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்ற எண்ணம்தான் ஏற்பட்டது.
"நில எல்லைகளும், கடல் எல்லைகளும் நம்மைப் பிரித்தாலும், மொழியும் இனமும் நம்மை இணைக்கிறது. கண்டங்களைக் கடந்துவிட்டாலும் நம்முடைய தொப்புள் கொடி அறுந்துவிடவில்லை" என்பதை அவர்கள் முன் சொன்னபோது கைத்தட்டி வரவேற்றனர். "திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் வளர்ச்சிக்காக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கிறோம். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ஓடோடி வந்து உதவுகிறோம் என்பதைத் சொல்லி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் வகையில் முதலீடு செய்ய வாருங்கள். ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்துடன் தமிழ்நாட்டுக்கு வாருங்கள். உங்கள் உறவாக - உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்" என்ற உறுதியை அளித்தேன்.
எந்த வெளிநாடுகளுக்கு நான் சென்றாலும் அங்கே உள்ள தமிழ்க் குழந்தைகள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பல வகை நடனங்கள், பாடல்கள், பறை இசை, சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுவது வழக்கம். அவற்றைக் கண்டு ரசிக்கும்போது உள்ளூரில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. புதுப்புது கலை வடிவங்களை நாம் இரசித்தாலும் நம் பாரம்பரிய கலைகளை நம் குழந்தைகள் கற்றுக்கொண்டு அதை வெளிப்படுத்தும்போது மனதுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படுவது இயற்கை. உடன்பிறப்புகள் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ்க் கலைகளைப் பயிற்றுவிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஜெர்மனியில் தமிழர்களுடனான சந்திப்பை நடத்துவதில் ஒத்துழைப்பு வழங்கியதுடன் ஐரோப்பாவில் தமிழ்ப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தமிழ்ச் சங்கங்களின் சேவைகளைக் கேட்டு மகிழ்ந்து, அந்த சங்கங்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினேன்.
என்னையும் தங்களில் ஒருவனாகக் கருதிய ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பா வாழ் தமிழர்கள், என்னிடமும் அருகில் இருந்த என் துணைவியாரிடமும் குடும்பம் குடும்பமாக வந்து படம் எடுத்து அன்பை வெளிப்படுத்தினர். அந்தப் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர்.
தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த NRTIA நிர்வாகிகளான துணை அமைப்பாளர்கள் இளந்தென்றல், ஜோசப்பைன் ரம்யா, அபிராமி, கல்வியாளர் நாககுமார் கங்கேஸ்வரன், டசல்டர்ஃப் ஜே.பி.செந்தில்குமார், மியூனிக் சத்தியமூர்த்தி, சாமிநாதன், மேன்ஹெய்ம் மோகன்ராஜ், டூயிஸ்பெர்க் சிஜூ, கொலோன் நிஷாந்த், விசாகர், டுட்லின்கன் டாக்டர் ஆதித்யா, லீப்சிக் கோபிநாத் பாலசுப்பிரமணியன், பசேல் ரேகா உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
சந்திப்பு நிகழ்வு அரங்கிலும் மனதிலும் நிறைவடைந்த நிலையில், புகழ்பெற்ற கொலோன் தேவாலயத்திற்குச் சென்று அதன் பிரம்மாண்டக் கட்டமைப்பைக் கண்டேன். யுனெஸ்கோ அமைப்பினால் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த தேவாலயம் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதைப் பார்த்தபோது நம் தமிழ் மண்ணின் பழங்காலக் கலைப்படைப்புகள் நினைவுக்கு வந்தன. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த தஞ்சை பெரியகோயில் கோபுரமும், ஆழிப்பேரலையை எதிர்கொண்டு குமுரி முனையில் நிற்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையும் மனதில் உயர்ந்து நின்றன.
தேவாலயத்தின் பழமையையும் பெருமையையும் பார்த்தபிறகு அறிவாலயமாகத் திகழும் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்திற்குச் சென்றேன். பழந்தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகள், அண்ணாவின் ஓர் இரவு உள்ளிட்ட பல தமிழ்ப் புத்தகங்களின் முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் நூல்கள் - ஆவணங்களைக் கொண்ட அந்தத் தமிழ்த்துறை மற்றும் நூலகத்தைக் காப்பாற்றும் வகையில் அதன் வளர்ச்சிக்காக திராவிட மாடல் அரசு 2021-இல் ரூ. 1.25 கோடியும், கடந்த ஜூலையில் ரூ. 1 கோடியே 64 ஆயிரமும் என இரண்டு முறை நிதி அளித்துள்ளது. அந்த நிதியைச் சரியாகப் பயன்படுத்தி, ஜெர்மனியில் தமிழ்ப் பணி தொடர்கிறது என மகிழும் வகையில் தமிழ்த்துறை நூலகத்தில் பொறுப்பில் உள்ள Dr.Sven Wortmann, Mr.Sharon Nathan, Mrs.Daria Lambercht ஆகியோரின் தமிழார்வம் அமைந்திருந்தது. தமிழில் எங்களுக்கு வரவேற்பளித்து, ஓலைச்சுவடிகளைப் பராமரிப்பதில் தங்களுக்குள்ள சிரமங்களை அவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டு, சிலவற்றைத் தமிழ்நாட்டில் பாதுகாக்குமாறு சொல்லி வழங்கினர். அவற்றை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஒப்படைத்துப் பாதுகாக்கும் எண்ணத்துடன் பெற்றுக் கொண்டேன்.
தமிழ் மணம் வீசிய கொலோன் பல்கலைக்கழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் நேரம் போனதே தெரியவில்லை. உலகின் எந்த மூலையிலிருந்தோ தமிழ் மீது ஆர்வம் கொண்டு ஆய்வில் ஈடுபடும் மொழியியல் அறிஞர்களுக்கு இந்த நூலகம் துணை நிற்பதையும், நூலகங்களின் பயனையும் தேவையையும் கருதி, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் சென்னையில் அமைத்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போல, திராவிட மாடல் ஆட்சியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டிருப்பதுடன் திருச்சி, கோவை ஆகிய நகரங்களிலும் உலகத் தரத்திலான நூலகங்கள் அமைக்கப்பட்டு வருவதை எண்ணி மகிழ்ந்தபடியே கொலோன் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியே வந்தேன்.
ஜெர்மனியில் இரவு 8 மணிக்கு மேல்தான் இருட்டுகிறது. அதுவரை சூரியன் ஒளி வீசுகிறான். இருட்டும் நேரத்தில் ஹோட்டலுக்குத் திரும்பியபோது இரவு நேரத் தமிழ்நாட்டு உணவு ஏ2பி உணவத்திலிருந்து வந்திருந்ததுடன், கடலூர் தொ.மு.ச.வின் மூத்த நிர்வாகியின் மகளான திருமதி. அகிலா நாராயணன் அவர்கள் நடத்தும் மெட்ராஸ் கபேவிலிருந்தும் சுவையான உணவு வந்திருந்தது. தமிழ்நாட்டின் கைப்பக்குவத்துடனான இரவு உணவை முடித்துக் கொண்டு உறங்கச் சென்றேன்.
செப்டம்பர் 1 - திராவிட மாதத்தின் முதல் நாள். கழகத் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரான தம்பி டி.ஆர்.பி.ராஜா ஆண்டுதோறும் அணியின் சார்பில் முன்னெடுக்கும் திராவிட மாதம் நிகழ்ச்சிகளைப் பற்றிய முன்னோட்டக் காணொளியை அனுப்பியிருந்தார். திராவிட மாதத்தின் முதல் நாள், ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாட்டிற்கு முக்கியமான நாள். முதலீடுகளை ஈர்க்கும் நாள். கொலோன் நகரத்திலிருந்து புறப்பட்டு, டசல்டோர்ஃப் நோக்கிப் பயணித்தோம். ஒரு மணி நேர கார் பயணத்தில், நிறுவனங்கள் குறித்தும், எந்தெந்தத் துறையில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும், அதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் எவ்வளவு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் தொழில்துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி.ராஜா, எனது செயலாளர் உமாநாத் ஐ.ஏ.எஸ். ஆகியோருடன் ஆலோசித்தபடியே சென்றேன்.
டசல்டோர்ஃப் நகரில் ஐந்து நிறுவனங்களுடன் தனித்தனிச் சந்திப்புகள். முதல் நிறுவனமாக உலகப் புகழ்பெற்ற பி.எம்.டபிள்யூ கார் நிறுவனத்துடனான சந்திப்பு. நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, பி.எம்.டபிள்யூ காரில் கையெழுத்திட்ட படத்தை அந்த நிறுவனத்தினர் எனக்குப் பரிசாக அளித்தபோது நெகிழ்ந்தேன். பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் குறித்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் நடைபெற்றன. அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து இ.பி.எம் பாப்ஸ்ட், நார்-ப்ரீம்ஸ், நார்டெக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
அவர்களிடம் நான், சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு 2024-இல் ஒப்பந்தம் போடப்பட்டு, அடுத்த சில மாதங்களில் தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டி, ஒன்றரை ஆண்டுக்குள் உற்பத்தியைத் தொடங்கிய வியட்நாம் நாட்டின் வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அரசு தரப்பிலான ஒத்துழைப்பு, அவர்களின் மின்வாகன உற்பத்திக்கேற்ற திறன்மிகு பணியாளர்களைச் சொந்த மாவட்டத்திலேயே உருவாக்கித் தந்தது, முதல் கார் விற்பனையை நானே நேரில் சென்று தொடங்கி வைத்தது உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் முழுமையான ஒத்துழைப்புகளை விளக்கினேன். மிகுந்த நம்பிக்கையுடன் அவர்கள் முதலீடு செய்ய முன்வந்தனர். தமிழ்நாட்டிற்கு 3,201 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
மதிய உணவு நேரம் நெருங்கியிருந்தது. தொழில் நிறுவனங்களுடன் சந்திப்பு நிகழ்ந்த இடத்திற்கு அருகில் ஒரு கார் மியூசியம் இருப்பதை அறிந்ததும் எனக்கு ஆர்வம் அதிகமானது. பழைய கார்களின் அருங்காட்சியகம் அது. எனக்கு பழைய நாட்களின் நினைவுகள் வந்தன. இளைஞரணி தொடங்கப்பட்டு அதன் கிளைகளை மாநிலம் முழுவதும் தொடங்கியபோது, ஒவ்வொரு ஊராக கார்ப்பயணம்தான். அப்போதைய இளைஞரணி மாநில நிர்வாகிகள் அனைவரும் ஒரே காரில்தான் நெருக்கியடித்து உட்கார்ந்து பயணிப்போம். கார் ஓட்டுவது நான்தான். இரவு நேரத்தில் மற்ற நிர்வாகிகள் காரிலேயே தூங்கிவிடுவார்கள். எனக்குக் காரில் ஏறினால் அப்போதும் இப்போதும் தூக்கம் வராது. அதனால் விடிய விடிய கார் ஓட்டிச் செல்வேன். அப்போதிருந்த கார்களைவிட இப்போது அதிநவீன கார்கள் வந்துவிட்டாலும், பழைய கார்கள் என்றால் இளமையான நினைவுகள்தான்.
கார் மியூசியத்தில் பென்ஸ் கம்பெனியின் உலகின் முதல் கார் இருந்தது. மூன்று வீல்களை மட்டுமே கொண்ட அந்த காரை இயக்கிப் பார்த்தேன். இங்கிலாந்து அரசர் பயன்படுத்திய கார், இளவரசர் பயன்படுத்திய முதல் ரேஸ் கார், ரஷ்ய அதிபர் பயன்படுத்திய கார், உள்ளிட்ட பல நிறுவனங்களின் பலவகைக் கார்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும், வாழ்க்கை விரைந்து பயணிப்பதையும் நினைவுபடுத்தும் சிறப்பான அந்த மியூசியத்தைப் பார்த்துவிட்டு, மதிய உணவுக்குப்பிறகு முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குப் புறப்பட்டேன்.
NRW மாநில அரசின் சார்பில் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அவரைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் தொழில்துறை செயலாளர் அருண் ராய் ஐ.ஏ.எஸ் பேசும்போது, இந்தியாவில் தமிழ்நாடு எந்தளவு பொருளாதாரத் துறையில் வளர்ந்துள்ளது என்பதையும், தேசிய சராசரியைவிடத் தமிழ்நாடு உயர்ந்திருப்பதன் காரணம், தொழில் வளர்ச்சிக்கேற்ற தமிழ்நாட்டில் உள்ள கட்டமைப்புகள் ஆகியவை பற்றி சிறப்பாக விளக்கி, முதலீடு செய்யும்படி கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டில் ஏற்கெனவே முதலீடு செய்து, உற்பத்தியைத் தொடங்கியுள்ள நிறுவனங்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது, அங்கு வந்திருந்த முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.
தொழில் – உற்பத்தி - வர்த்தகம் மூன்றின் நுணுக்கங்களையும் நன்கறிந்திருக்கும் தொழில்துறை அமைச்சரான தம்பி டி.ஆர்.பி.ராஜா பேசும்போது, "ஐரோப்பாவின் இதயத்துடிப்பாக ஜெர்மனி உள்ளது. அதுபோல இந்தியாவின் இதயத்துடிப்பு தமிழ்நாடு. இரண்டுமே உற்பத்தித் துறையை வளர்த்தெடுக்கும் அரசுகள். தமிழ்நாட்டில் நீங்கள் நம்பிக்கையுடன் முதலீடுகளை செய்யலாம்'' என்று சொல்லி, கடந்த நான்காண்டுகால திராவிட மாடல் அரசில் தமிழ்நாடு பெற்றுள்ள வளர்ச்சியை சிறப்பாக விளக்கினார்.
என்னுடைய முதல் ஜெர்மனி பயணத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டு உரையைத் தொடங்கும்போது, இந்தியா எனும் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இருக்கிற தமிழ்நாடு என்கிற மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராகப் பங்கெடுப்பதில் உள்ள மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்துகொண்டு, நான் வெறும் முதலீட்டுக்காக இங்கு வரவில்லை என்பதையும், ஜெர்மனி - தமிழ்நாடு எனும் இரண்டு பொருளாதார அரசுகளுக்கிடையே பாலம் அமைக்க வந்திருக்கிறேன் என்பதையும் சுட்டிக்காட்டினேன். ஜெர்மனியைப் போலவே தமிழ்நாட்டிலும் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட்டு வருவதையும், நிறுவனங்களுக்கேற்ற திறனை ஊக்குவிக்கும் பயிற்சிகள் வழங்கப்படுவதையும் எடுத்துக்கூறி, தொழில்வளர்ச்சிக்கு தேவையான அத்தனை வசதிகளையும் உங்களுடனான ஒரு பார்ட்னர் போல அரசு செய்து தரும் என்ற உறுதியை அளித்து, இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது என்ற நம்பிக்கையை விதைத்தேன்.
இந்தியாவில் பல மாநிலங்கள் இதுபோன்ற முதலீட்டாளர் மாநாட்டிற்கு ஜெர்மனியில் முயற்சித்ததையும், நாம் நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில்தான் தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்கட்டமைப்பை அறிந்துகொள்ள முடிந்தது என்றும் அங்கு வந்திருந்த முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.
எந்த நாட்டில் முதலீடுகளை ஈர்க்கிறோமோ அந்த நாட்டிற்கு, முதலீட்டாளர் மாநாட்டை நடத்தும் மாநிலத்தின் முதலமைச்சரே நேரில் வந்து முதலீட்டாளர்களிடம் விளக்கும்போதுதான் தெளிவும் நம்பிக்கையும் கிடைக்கிறது, அதன் மூலம் முதலீடுகளை ஈர்க்க முடியும் என்பதற்கு NRW மாநிலத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாடு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு, தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புக்கும் தேவையான முதலீடுகளை இத்தகைய சந்திப்புகள் மூலம் ஈர்க்க முடிகிறது என்ற நிறைவு உங்களில் ஒருவனான எனக்கு ஏற்பட்டது.
காலையில் நடந்த நிறுவனங்களுடனான சந்திப்பு, மாலையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் 26 நிறுவனங்களுடன் 15 ஆயிரத்து 320 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 7,020 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
செப்டம்பர் 2 அன்று காலையில் NRW மாநிலத்தின் மினிஸ்டர்-பிரசிடென்ட்டை சந்திக்கும் நிகழ்வு. NRW-வின் மினிஸ்டர் பிரசிடென்ட் திரு. ஹென்ரிக் வுஸ்ட் என் மீது அன்புகொண்டு, நாங்கள் தங்கியிருந்த இடத்திற்குத் தனது அரசின் உயரதிகாரிகளுடன் தனது கான்வாயையும் அனுப்பியிருந்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சரான உங்களில் ஒருவனான எனக்கு ஜெர்மனி நாட்டின் ஒரு மாநிலத் தலைமை அமைச்சர் முழு மரியாதை அளித்து தன் இடத்திற்கு அழைத்ததை, தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட மரியாதையாகவே கருதுகிறேன்.
பயண நேரத்தில், சென்னையில் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையில், அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், கோவி.செழியன் ஆகியோர் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பையும் அதில் நான்காண்டு காலத் தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள், வாக்குறுதி தராமலேயே நிறைவேற்றப்பட்ட முன்னோடித் திட்டங்கள் ஆகியவை குறித்து விளக்கப்பட்டதையும் கேட்டறிந்தேன். அதுபோல, இந்தியா மீது அமெரிக்க அதிபர் விதித்த வரிச்சுமையால் தமிழ்நாட்டின் தொழில் மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்படுவதைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தி.மு.க.வும் தோழமைக் கட்சிகளும் திருப்பூரில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் பற்றிய விவரங்களையும் கேட்டேன். ஜெர்மனி சாலைகளிலும் தமிழ்நாட்டு நினைவுகளே எனக்குள் பயணித்தன.
ஒன்றரை மணி நேரம் கழித்து, NRW மாநிலத்தின் தலைமைச் செயலகத்தை அடைந்தோம். வாசலிலேயே காத்திருந்து வரவேற்றார் மினிஸ்டர்-பிரசிடென்ட் ஹென்ரிக் வுஸ்ட். கற்களால் பழமையாகக் கட்டப்பட்டிருந்த தலைமைச் செயலகக் கட்டடத்தின் உள்ளே சென்றால் அதிநவீனமாக இருந்தது. அங்கிருந்த விசிட்டர் புத்தகத்தில், "NRW - தமிழ்நாடு இணைந்து வெற்றிபெறுவோம்" என எழுதிக் கையெழுத்திட்டேன்.
முதலீட்டாளர் மாநாட்டை டசல்டோர்ஃப்பில் நடத்தியது பற்றியும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உள்ள வாய்ப்புகள் குறித்து அறிந்ததையும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் ஹென்ரிக் வுஸ்ட். தமிழ்நாட்டுடன் எந்தெந்த வகையில் NRW இணைந்து செயல்படுவது என்பது குறித்து அவர் என்னிடம் ஆலோசித்தார். திறன் மிகுந்த பணியாளர்கள் பற்றி பேசும்போது, "நான் முதல்வன் திட்டம் என்பது எனது கனவுத் திட்டம். அதன் மூலம் பல இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் நிறுவனங்களுக்கேற்ற திறன் பயிற்சி அளிக்கிறோம். உங்கள் நிறுவனங்களுக்கு தேவைப்படும் திறன் பயிற்சியை நான் முதல்வன் மூலம் அளித்து, அதற்கேற்ற பணியாளர்களை வழங்கத் தயாராக இருக்கிறோம்" என்றேன்.
தமிழ்நாட்டின் பாரம்பரியப்படி ஹென்ரிக் வுஸ்ட் அவர்களுக்குப் பட்டுத்துண்டு அணிவித்துச் சிறப்பித்தேன். பாரம்பரிய ஓவியம் ஒன்றையும் பரிசளித்தேன். அவரும் அவர்கள் மாநிலத்தின் பாரம்பரியப் பொருட்கள் அடங்கிய பரிசுக்கூடையை அன்புடன் வழங்கினார். அவரிடம் விடைபெற்று, திரும்பி வரும்போது வழியில் ஒரு தமிழர் நடத்தும் உணவகத்தில் சாப்பிட்டோம்.
ஏறத்தாழ தமிழ்நாடு அளவுக்கான மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடான ஜெர்மனிக்கு மேற்கொண்ட பயணத்தில் தமிழ்ச் சொந்தங்களுடனான சந்திப்பு, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், NRW மாநிலத்தின் தலைமை அமைச்சருடன் கலந்துரையாடல் எனத் திட்டமிட்டபடி வெற்றிகரமாக அனைத்தும் நிறைவேறிய மகிழ்வுடன், லண்டன் நகருக்கு விமானத்தில் பறக்கத் தொடங்கினேன்.
அங்கே உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், உலகின் ஒப்பற்ற சிந்தனையாளரான நம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்துவைத்து, சுயமரியாதை இயக்க நூற்றாண்டை முன்னிட்டுப் புத்தகங்களை வெளியிட்டு உரையாற்றுகிறேன். லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு. அன்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் லண்டன் தமிழ்ச் சொந்தங்களைச் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
- பிசிசிஐ அனுமதியுடன் கோலி லண்டனில் உடற்தகுதியை நிரூபித்தார் .
- கேப்டன் ரோகித்சர்மாவும் உடல் தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்றார்.
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள டெஸ்ட் கேப்டன் சுப்மன்கில், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு உடல் தகுதிக்கான சோதனை நடத்தப்பட்டது. பெங்களூரில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறப்பு மையத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் இருவரும் தேர்ச்சி பெற்றனர். இதே போல ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் ரோகித்சர்மாவும் உடல் தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்றார்.
இதனிடையே லண்டனில் இருந்தபடியே விராட் கோலி.உடற்தகுதியை உறுதிப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற இந்திய வீரர்கள் பெங்களூரு வந்து உடற்தகுதியை நிரூபிக்கையில், லண்டனில் இருந்தபடியே விராட் கோலி. உடற்தகுதியை பிரூபித்துள்ளார்.
பிசிசிஐ அனுமதியுடன் லண்டனில் உடற்தகுதியை நிரூபித்திருந்தாலும், ரோஹித் உள்ளிட்ட மற்ற வீரர்கள் வரும்போது இவருக்கு மட்டும் ஏன் விலக்கு என பலரும் கேள்வி எழுப்புவதால் இது விவாதப் பொருளாகியுள்ளது.
- செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து 32 பக்கங்களுக்கு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.
- தேர்தல் வாக்குறுதிகள் பற்றிய விளக்கம் வெறும் 12 வரிகள் மட்டும் தான்.
சென்னை :
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருப்பது மட்டுமின்றி, சொல்லப்படாத பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்திருக்கிறார். திமுகவின் அகராதியில் பொய் என்ற சொல்லுக்கு பெருமிதம் என்று புதிதாக பொழிப்புரை எழுதியிருக்கிறார்கள் போலும். அதனால் முதலமைச்சர் மீண்டும், மீண்டும் பொய் சொல்லி விட்டு, அதை பெருமிதம் என்று நினைத்துக் கொள்கிறார்.
திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 மட்டும் தான் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு. அதற்கு பதிலளிப்பதாகக் கூறி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட 3 அமைச்சர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். மொத்தம் ஒரு மணி நேரத்திற்கு செய்தியாளர்கள் சந்திப்பு நீடித்தது; ஆனால், அதில் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அமைச்சர்கள் விளக்கியது அரை நிமிடம் தான். இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து 32 பக்கங்களுக்கு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் தேர்தல் வாக்குறுதிகள் பற்றிய விளக்கம் வெறும் 12 வரிகள் மட்டும் தான். இதைத் தான் விரிவான தரவுகளுடன் அமைச்சர் விளக்கியதாக முதலமைச்சர் கூறுகிறார்.
திமுக அரசு உண்மையாகவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அவற்றின் வரிசை எண் வாரியாக எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன? அவற்றுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? அதனால் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர்? என்ற விவரங்களை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். இதைத் தான் பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நேர்மையான அரசாக இருந்தால், வெள்ளை அறிக்கை வெளியிடாமல் அஞ்சி நடுங்கி ஓடுவது ஏன்?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பெரும் குறையே நாட்டிலும், அவரது அரசிலும் என்ன நடக்கிறது? என்பதே அவருக்கு தெரியாது என்பது தான். அவரைச் சுற்றியுள்ளவர்கள் என்ன கூறுகிறார்களோ, அவை அனைத்தையும் உண்மை என்று நம்பி அவர் பேசிக் கொண்டுருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் அறிவாளிகள். அவர்கள் மு.க.ஸ்டாலின் சொல்லும் பொய்களை எல்லாம் உண்மை என்று நம்ப மாட்டார்கள். பொய்யுரைப்போருக்கு வழங்க வேண்டிய தண்டனையை வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் வழங்குவார்கள் என கூறியுள்ளார்.
- பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
- தனது சகோதரர் கே.டி.ராமாராவை கவிதா எச்சரித்தார்.
பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவுக்கும், அவரது மகள் கவிதாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் வெடித்தது. சகோதரர் ராமா ராவுடனும் மோதல் வெடித்தது.
இதற்கிடையே, கட்சியின் நிர்வாகிகளை வெளிப்படையாக விமர்சித்து பேசினார் கவிதா. மேலும், கட்சி தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இதனால், பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து கவிதாவை சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும், கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சஸ்பெண்ட் நடவடிக்கையை தொடர்ந்து பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவித்துள்ளார்.
மேலும், உறவினர்களான ஹரிஷ் மற்றும் சந்தோஷ் ராவ் ஆகியோர் நமது குடும்பத்தை அழிக்க திட்டமிட்டுள்ளனர் என்று தனது சகோதரர் கே.டி.ராமாராவை கவிதா எச்சரித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் தனது தந்தை மற்றும் சகோதரரை தோற்கடிக்க ஹரிஷ் ராவ் பிரச்சாரத்திற்கு நிதியளித்ததாகவும் கவிதா குற்றம் சாட்டினார்.
- தீபா உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
- மழைநீர் வடிகால் பணிகளை இனியாவது பாதுகாப்பு நெறிமுறைகளையோடு மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை சூளைமேடு பகுதியில் நேற்றைய தினம் , மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மூடப்படாமல் இருந்த மழை நீர் பணி பள்ளத்தை பல மாதங்களாக முடூவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், அக்கறையற்று நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்தினால் இந்த உயிர் பலி நடந்திருந்திருக்கிறது.
உயிரிழந்த பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கையில், சுமார் அரை மணி நேரம் அவர் உயிருக்குப் போராடியதாக வரும் தகவல்கள் பதைபதைக்க வைக்கின்றன.
மழைநீர் வடிகால் பணிகள், 95%, 97% முடிவடைந்து விட்டன என்று நான்கரை ஆண்டுகளாக சதவீதக் கணக்கு போட்ட பொம்மை முதல்வர் அரசின் அமைச்சர்களும், சென்னை மேயரும் இந்த உயிரிழப்புக்கு சொல்லப்போகும் பதில் என்ன?
ஆண்டுதோறும் நடக்கும் இது போன்ற மரணங்களை ஒருபோதும் ஏற்கமுடியாது. இதெல்லாம் எந்த பேக்கேஜில் வரும் என்று மு.க.ஸ்டாலின் சொல்வாரா?
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை;
மழைநீரும் வடிந்த பாடில்லை;
அப்பாவி உயிர்கள் பறி போவதைத் தடுக்க வக்கில்லை;
இப்படிப்பட்ட ஒரு அவல ஆட்சி இருந்து என்ன பயன்?
தீபா உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் இந்த அரசு உடனடியாக வழங்கவேண்டும்.
மழைநீர் வடிகால் பணிகளை இனியாவது பாதுகாப்பு நெறிமுறைகளையோடு மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கத் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.
- கூட்டணி தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகம், புதுச்சேரி மாநிலத்தில் யாருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவரின் வழிகாட்டுதலின்படி வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.
இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு, புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று வார இதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைச் செய்தியாக வெளியிட்டுள்ளது.
இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது. இது போன்ற வதந்திகளை பரப்பும் ஊடகத்தின் பொய்ச் செய்திகளை மக்கள் புறக்கணித்து விடுவார்கள். கூட்டணி தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகம், புதுச்சேரி மாநிலத்தில் யாருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்களின் விவரங்களைக் கழகத் தலைவர் அவர்கள் விரைவில் அறிவிப்பார். தேர்தல் நிலைப்பாடு குறித்தும் கழகத் தலைவர் அவர்களின் முடிவே இறுதியானது. எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக யூகத்தின் அடிப்படையில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடும் நிலநடுக்கத்தால் 1400-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
- 1500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 6.0 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இடுபாடுகளில் சிக்கி ஏராளமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுவரை 1400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 2500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் மக்கள் உயிரிழந்த செய்தி அறிந்து கடும் வேதனையடைந்தேன். ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தியா 21 டன் நிவாரண உதவிப் பொருட்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. இந்தியா அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள் ஆப்கானிஸ்தான் சென்றடைந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
போர்வைகள், கூடாரங்கள், சுகாதாரப் பொருட்கள், நீர் சேமிப்பு டேங்குகள், ஜெனரேட்டர்கள், சமையலறை பாத்திரங்கள், சிறிய நீர் சுத்திகரிப்பான்கள், அத்தியாவசிய மருந்துகள், சக்கர நாற்காலிகள், நீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் உள்ளிட்டவைகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இந்தியா தொடர்ந்து அங்குள்ள சூழ்நிலைகளை கவனித்து வருகிறது. வரும் நாட்களில் கூடுதலாக மனிதாபிமான உதவிகளை இந்தியா அனுப்பி வைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.






