search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman dead"

    • பணியை முடித்துவிட்டு நேற்று இரவு 10 மணி அளவில் மொபட்டில் அமுதா வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
    • பொன்குறிச்சி நோக்கி வந்த ஈச்சர் லாரி திடீரென பெண் போலீஸ் ஏட்டு ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆயில்பட்டியை சேர்ந்தவர் செல்வம் எலக்ட்ரீசியன். இவரது மனைவி அமுதா (47) இவர் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு கவியரசன் (21), சோலைஅரசு (19) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    அமுதா திருச்செங்கோடு அருகே உள்ள எளையாம்பாளையம் விவேகானந்தா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

    பணியை முடித்துவிட்டு நேற்று இரவு 10 மணி அளவில் மொபட்டில் அமுதா வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அவர் ராசிபுரம் அருகே உள்ள குமாரபாளையம் என்ற பகுதியில் ஒரு பேக்கரி அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே பொன்குறிச்சி நோக்கி வந்த ஈச்சர் லாரி திடீரென பெண் போலீஸ் ஏட்டு ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த பெண் போலீஸ் ஏட்டு அமுதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்திற்கு புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ராசிபுரம் போலீஸ் டி.எஸ்.பி. விஜயகுமார் உள்பட போலீசார் அமுதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அமுதாவின் உறவினர்கள் நூற்றுக்கணக்கான பேர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர்.

    விபத்தில் பலியான அமுதா தடகளப் போட்டியில் பல பரிசுகளை வென்று குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டீ போடுவதற்காக பிரிட்ஜில் இருந்து பால்பாக்கெட்டை எடுத்துள்ளார்.
    • எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து வாணி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வரகுணராமபுரம் பகுதியில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

    இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்ட நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வரகுணராமபுரத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மாரிமுத்துவின் வீட்டில் அவரது மனைவி வாணி வழக்கம்போல் காலையில் எழுந்தார்.

    பின்னர் டீ போடுவதற்காக பிரிட்ஜில் இருந்து பால்பாக்கெட்டை எடுத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து வாணி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக கணவர் மாரிமுத்து மற்றும் உறவினர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தபோது வழியிலேயே உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கணவன்-மனைவி இருவரும் ஏழுமலையின் வீட்டிற்கு சென்று கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.
    • கலைச்செல்வி தீக்குளித்ததை கேள்விப்பட்ட அவரது உறவினர்கள் காலாப்பட்டு போலீசாரை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டு பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சந்திரன். மீனவரான இவரது மனைவி கலைச்செல்வி (வயது 35).

    அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி ராஜகுமாரிக்கு கலைச்செல்வி கடந்த 4 ஆண்டுக்கு முன்பு ரூ.5 லட்சம் வட்டிக்கு கொடுத்தார். அதற்கு அவர் மாதந்தோறும் வட்டி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ராஜகுமாரி வட்டியை சரியாக கொடுக்கவில்லை. கலைச்செல்வி பலமுறை கேட்டும், அவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

    இதற்கிடையே கலைச்செல்வி குடும்பத்தினருக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. எனவே கணவன்-மனைவி இருவரும் ஏழுமலையின் வீட்டிற்கு சென்று கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதுகுறித்து ஏழுமலை காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதையடுத்து சந்திரன், கலைச்செல்வி ஆகியோரை விசாரணைக்கு வரும்படி போலீசார் அழைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணை காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் நடந்தது.

    அப்போது கடன் வாங்கிய ஏழுமலையையும் அவரது மனைவியையும் போலீசார் இருக்கையில் அமர வைத்தும், சந்திரன், கலைச்செல்வியை நிற்க வைத்தும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த கலைச்செல்வி, போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். போலீஸ் நிலையம் முன் நிறுத்தியிருந்த அவரது இருசக்கர வாகனத்தில் கேனில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்துக்கொண்டு போலீஸ் நிலையம் உள்ளே சென்று, தனது பணத்தை தரவில்லை என்றால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.

    பேசிக்கொண்டு இருக்கும் போதே திடீரென அவர் கையில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ குளித்தார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பற்றிக்கொண்டதால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்து சுருண்டு கீழே விழுந்தார்.

    போலீசார் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலைச்செல்வி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    முன்னதாக கலைச்செல்வி தீக்குளித்ததை கேள்விப்பட்ட அவரது உறவினர்கள் காலாப்பட்டு போலீசாரை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.

    கலைச்செல்வி தீக்குளித்த போது பணியில் இருந்த போலீசார் மற்றும் கடன் வாங்கி விட்டு பணத்தை திரும்ப கொடுக்காமல் இருக்கும் ராஜகுமாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பொதுமக்கள், உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் அவர்கள் மீண்டும் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் காலாப்பட்டு போலீஸ் நிலைய அதிகாரி இளங்கோ, உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோரை புதுவை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி.ஸ்ரீனிவாஸ் உத்தரவிட்டுள்ளார்.

    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ரேவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் ரேவதியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை யமுனா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 53). இவர் பூந்தமல்லி -பாரிவாக்கம் சந்திப்பு, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக கட்டுமான பொருட்களை ஏற்றிவந்த லாரி திடீரென சாலையோரம் நடந்து சென்ற ரேவதி மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ரேவதியின் கால்கள் இரண்டும் நசுங்கியது. இதில் அவர் அலறி துடித்தார்.

    விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் ரேவதியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதுபற்றி அறிந்ததும் ரேவதியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்கள் விபத்து ஏற்படுத்திய லாரியை சிறை பிடித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ரேவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • ஆட்டோவுக்குள் இருந்த ஷைலேஷ், அவரது மனைவி, மகன், மகள் மற்றும் ஆட்டோவின் டிரைவர் ஆகிய 5பேரும் ஆற்றுக்குள் விழுந்தனர்.
    • ஆற்றுக்குள் ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானது மட்டுமின்றி, அந்த பெண்ணின் மகன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் வெண்மணி பகுதியை சேர்ந்தவர் ஷைலேஷ்(வயது43). இவரது மனைவி ஆதிரா (31). இவர்களது மகள் கீர்த்தனா(11), மகன் காசிநாத்(3). நேற்று ஷேலேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆட்டோவில் மாவேலிக் கரைக்கு சென்றார்.

    ஆட்டோவை சபானோ சஜூ என்பவர் ஓட்டிச் சென்றார். மாவேலிக்கரை அருகே உள்ள கொல்லக்கடவு என்ற பகுதியில் சென்ற போது, அவர்கள் சென்ற ஆட்டோ திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, அச்சன்கோவில் ஆற்றுக்குள் கவிழ்ந்தது.

    ஆட்டோவுக்குள் இருந்த ஷைலேஷ், அவரது மனைவி, மகன், மகள் மற்றும் ஆட்டோவின் டிரைவர் ஆகிய 5பேரும் ஆற்றுக்குள் விழுந்தனர். இந்த பயங்கர விபத்தை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் ஆதிரா படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார். ஆற்றுக்குள் விழுந்துகிடந்த ஷைலேஷ், அவரது மகள் கீர்த்தனா, ஆட்டோ டிரைவர் சபானோ சஜூ ஆகிய 3 பேரையும் மீட்டனர். ஆட்டோ விழுந்த ஆற்றில் தண்ணீர் அதிகளவில் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் ஷைலேஷின் மகன் காசிநாத் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டான். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் ஆதிராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். காயமடைந்த ஷைலேஷ் உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் காசிநாத்தை போலீசாரும், மீட்பு படையினரும் தொடர்ந்து தேடி வருகின்றனர். ஆற்றுக்குள் ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானது மட்டுமின்றி, அந்த பெண்ணின் மகன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • எதிர்பாராதவிதமாக காருக்கு முன்னால் சென்ற டெம்போ சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி கொண்டது.
    • சாலை மோசமாக இருந்ததால் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் வழியிலேயே நோயாளி இறந்து விட்டார்.

    குனியமுத்தூர்:

    கோவை மாநகராட்சி 87-வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் சக்தி நகரை சேர்ந்தவர் பாப்பாத்தி என்ற நாகம்மாள்(வயது70). ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்.

    இவரது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து நாகம்மாள், தனது மகன் ராஜபாண்டியனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த நாகம்மாளுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரது மகன் ராஜபாண்டி தாயை காரில் அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார். கார் சக்தி நகர் பகுதியில் சென்ற போது முன்னால் ஒரு டெம்போ சென்றது.

    கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், சக்தி நகர் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் சாலையில் பள்ளங்கள் இருப்பது எதுவுமே தெரியவில்லை.

    அப்போது எதிர்பாராதவிதமாக காருக்கு முன்னால் சென்ற டெம்போ சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி கொண்டது. எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

    பின்னால் காரில் நாகம்மாள் நெஞ்சுவலியால் துடித்து கொண்டிருந்தார். டெம்போ சென்றால் தான் அந்த இடத்தை விட்டு நகர முடியும் என்ற நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் ராஜபாண்டி தவித்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டத்திற்கு பிறகு பொக்லைன் எந்திரம் உதவியுடன் டெம்போ மீட்கப்பட்டது. அதன்பின்னரே ராஜபாண்டி தனது தாயை அழைத்து கொண்டு வேக, வேகமாக ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். ஆனால் நாகம்மாள் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் காரிலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதனை அறிந்த ராஜபாண்டி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சாலையானது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்து விட்டால் இதில் நடந்து செல்வதே சிரமமாக இருக்கும். இது தொடர்பாக எவ்வளவோ முறை புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க கோரியும் மாநகராட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தற்போது சாலை மோசமாக இருந்ததால் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் வழியிலேயே நோயாளி இறந்து விட்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இனிமேலாவது இந்த சாலையை முறையாக சீரமைத்து தருவதற்கு மாநகராட்சி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மோசமான சாலையால் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் மின்வாரிய பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பாலவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ. நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வேகத்தடையில் டிராக்டர் வேகமாக ஏறி இறங்கியது.
    • விபத்து குறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்தியபாமா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கரடிபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். மாம்பழ வியாபாரி. இவரது மனைவி நிர்மலா (வயது 33). கேசவன் திருவள்ளூர் அருகே திருப்பாச்சூரில் உள்ள மாந்தோப்பை குத்தகைக்கு எடுத்து உள்ளார். நேற்று மாலை அவர் அங்கிருந்து மாம்பழங்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு சென்றார். டிராக்டரை கேசவன் ஓட்டினார். அவரது மனைவி நிர்மலா அருகில் அமர்ந்து இருந்தார்.

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ. நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வேகத்தடையில் டிராக்டர் வேகமாக ஏறி இறங்கியது.

    இதில் நிலை தடுமாறிய நிர்மலா டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிர்மலா இறந்தார்.

    இது குறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்தியபாமா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஓங்கூர் டோல்கேட் அருகே வரும் போது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவரில் மோதியது.
    • விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவனம்:

    சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (19) கல்லூரி மாணவர்.

    இவர் திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் புதூர் கிராமத்தில் தனது உறவினர் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி முடித்துவிட்டு தனது தாய் அனுசியாவுடன் சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அடுத்த ஓங்கூர் டோல்கேட் அருகே வரும் போது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் அனுசியா தவறி விழுந்து பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மகன் கண் முன் பலியானார். மாணவர் சூர்யா படுகாயங்களுடன் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்தை போலீசார் சரி செய்தனர். மகன் கண் எதிரே தாய் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • வேனில் பயணம் செய்தவர்கள் காப்பாற்றுமாறு அபய குரல் எழுப்பினர்.

    கொடைக்கானல்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுற்றுலா வந்தனர். மதுரை-ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு கொடைக்கானல் வந்தனர். அங்கு சுற்றுலா இடங்களை கண்டு ரசித்த பின்னர் பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி பழனி மலைச்சாலை வழியாக வேன் சென்று கொண்டிருந்தது. 5-வது கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    வேனில் பயணம் செய்தவர்கள் காப்பாற்றுமாறு அபய குரல் எழுப்பினர். இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி 21 பேரையும் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தஞ்சாவூரை சேர்ந்த மாரியம்மாள் (வயது45) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மேற்கு மாம்பலம் திருவள்ளுவர் சாலையை சேர்ந்த ஆனந்தன் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
    • பிறந்தநாள் அன்று அதிகாலையில் மேற்கொண்ட பைக் டாக்சி பயணம் சேவிகாவின் உயிரை குடித்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    சென்னை:

    சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தை சேர்ந்தவர் சேவிகா. 34 வயதான இவர் அழகு கலை நிபுணர் ஆவார். தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்களுக்கு மேக்கப் போடும் பணியை சேவிகா செய்து வந்தார்.

    சேவிகாவுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். இந்த நிலையில் நேற்று பணிக்கு சென்ற அவர் வேலை முடிந்து மாம்பலம் தலையாரி தெருவில் உள்ள தோழியின் வீட்டில் போய் தங்கினார். இன்று காலை 4 மணி அளவில் சேவிகா தனது பிறந்தநாளையொட்டி வியாசர்பாடியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் வாழ்த்து பெற ஆசை ஆசையாக புறப்பட்டார்.

    மேற்கு மாம்பலத்தில் இருந்து சேவிகா பைக் டாக்சியை பதிவு செய்து அதில் பயணித்தார். தேனாம்பேட்டை வழியாக வியாசர்பாடி நோக்கி பைக் டாக்சி சென்றது.

    மேற்கு மாம்பலம் திருவள்ளுவர் சாலையை சேர்ந்த ஆனந்தன் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பின்னால் சேவிகா அமர்ந்து பயணம் செய்தார். அண்ணாசாலையில் உள்ள காமராஜர் அரங்கம் அருகில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சேவிகா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

    பிறந்தநாள் அன்று அதிகாலையில் மேற்கொண்ட பைக் டாக்சி பயணம் சேவிகாவின் உயிரை குடித்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததால் விபத்தில் சிக்கி கீழே விழுந்தபோது சேவிகாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது.

    இதில்தான் அவர் உயிரிழந்துள்ளார். சேவிகாவின் உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை பார்த்து உறவினர்களும், தோழிகளும் கதறி அழுதனர். ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சேவிகாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    லாரி மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற வாலிபர் ஆனந்தன் சிராய்ப்பு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    சேவிகாவின் உயிரை பறித்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. அந்த லாரியை போலீசார் தேடி வருகிறார்கள். டிப்பர் லாரி யாருக்கு சொந்தமானது? அதனை ஓட்டி வந்த டிரைவர் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அனிதா போட்டிருந்த துப்பட்டா எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் சிக்கி கொண்டது.
    • அனிதாவை சிகிச்சைக்காக தருமபுரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் சவுளூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி அனிதா (வயது35). கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து தொப்பூரில் உள்ள கெங்களாபுரம் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தனர்.

    கடை முன்பு மின்சாரத்தால் இயங்கக்கூடிய கரும்பு சாறு பிழியும் எந்திரம் உள்ளது. அதில் கரும்பு ஜூஸ் போட்டு விற்பனை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை அனிதா வழக்கம்போல் கடையில் கரும்பு சாறு பிழியும் எந்திரம் முன்பு நின்று கரும்பு சாறு பிழித்து கொண்டிருந்தார். அவர் தனது கழுத்தை சுற்றி துப்பாட்டா போட்டிருந்தார்.

    அப்போது அனிதா போட்டிருந்த துப்பட்டா எதிர்பாராதவிதமாக அந்த எந்திரத்தில் சிக்கி கொண்டது. இதில் அவரது கழுத்தை இறுக்கியதால் மூச்சு விட முடியாமல் திணறினார்.

    உடனே அவரது கணவர் பிரபு ஓடிவந்து எந்திரத்தின் மின்சாரத்தை துண்டித்தார். பின்னர் அனிதாவை சிகிச்சைக்காக தருமபுரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பிரபு தொப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன், குடியிருப்பு பகுதி, தேயிலை தோட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் யானையின் நடமாட்டம் தெரியவில்லை.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறையை சேர்ந்தவர் ஆனந்தகுமார்(வயது43). டீக்கடைக்காரர். சம்பவத்தன்று காலை கடையை திறக்க சென்ற அவரை காட்டு யானை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உடலை எடுக்கவிடாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காட்டு யானையை பிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    அவர்களின் கோரிக்கையை ஏற்று, முதுமலையில் இருந்து சீனிவாசன், விஜய் என்ற கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன.

    வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன், குடியிருப்பு பகுதி, தேயிலை தோட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் யானையின் நடமாட்டம் தெரியவில்லை. இருப்பினும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே நேற்று இரவு மீண்டும் யானை தாக்கியதில் ஒரு பெண் உயிரிழந்தார்.

    ஓவேலி பாரம் பகுதியை சேர்ந்த மும்தாஜ் என்ற மாலு தனது கணவர் குஞ்சாலியுடன் தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை மும்தாஜை துதிக்கையால் தூக்கி சாலையில் போட்டு காலால் மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தன் கண்முன்னே மனைவி யானை தாக்கி இறந்ததை பார்த்து அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டு கொண்டே ஊருக்குள் ஓடினார்.

    அவரது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்தனர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து, யானையை விரட்டினர்.

    இதற்கிடையே தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது அப்பகுதி பொதுமக்கள் உடலை எடுக்கவிடமால் போராட்டம் நடத்தினர். இரவு தொடங்கிய போராட்டம் நள்ளிரவு வரை 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் டீக்கடைக்காரர் ஆனந்தகுமார் பலியான நிலையில் நேற்று இரவு மீண்டும் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்துள்ளது, எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வீட்டை விட்டு வெளியில் வரவே அச்சமாக உள்ளது. இங்கு சுற்றி திரியும் யானையை கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களுடன், வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது யானையை விரட்ட உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
    ×