என் மலர்tooltip icon

    இந்தியா

    • மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிபின் ராம்தாஸ் ஐதராபாத் ஐகோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
    • அசைவ உணவுப் பொருட்கள் விற்பனையை தடுக்க ஒரு கொள்கையை வகுக்குமாறு மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    ஐதராபாத்:

    ஐதராபாத்தின் ரெட் ஹில்ஸில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிபின் ராம்தாஸ் என்பவர் இறைச்சி மற்றும் அசைவ உணவு பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி கோரினார். இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர். இதனை எதிர்த்து அவர் ஐதராபாத் ஐகோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த வழக்கில் வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்தப் பிரச்சனையில் வழிகாட்டுதல்களை வகுக்க உத்தரவிட்டார்.

    மேலும் நீதிபதி கூறுகையில், தெலுங்கானா மாநிலத்தில் கோவில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு 100 மீட்டருக்குள் இறைச்சி மற்றும் அசைவ உணவுப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க ஒரு கொள்கையை வகுக்குமாறு மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    பக்தர்களின் உணர்வுகள், அமைதி, தூய்மை, சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்சனைகளை மனதில் கொண்டு வழிகாட்டுதல்களை வகுக்குமாறு நகராட்சி மற்றும் உள்துறை முதன்மை செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

    இறைச்சி விற்பனை மையங்களைத் திறப்பதற்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவதற்கான விதியைச் சேர்க்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது. இந்த செயல்முறையை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    • ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக சிறுவர்கள் இருவரும் பாதிரியாரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
    • பாதிரியார் சம்பத், பெங்களூருவில் இருப்பதாக வடகரா போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி கல்லேரிபாகம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்(வயது38). கிறிஸ்தவ பாதிரியாராக இருக்கிறார்.

    இவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்தபோது, கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார்.

    அந்த நபருக்கு 6 மற்றும் 12 வயதில் மகன்கள் உள்ளனர். தந்தை வெளிநாட்டில் இருக்கும் நிலையில், சிறுவர்கள் இருவரும் கேரளாவில் இருந்தனர். இந்தநிலையில் சிறுவர்கள் இருவரையும் தான் பராமரிப்பதாக கூறியிருக்கிறார்.

    அதன்படி கேரளா வந்ததும் சிறுவர்கள் இருவரையும் பாதிரியார் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது தனது கட்டுப்பாட்டில் இருந்த அண்ணன்-தம்பியான சிறுவர்கள் இருவருக்கும் பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

    சிறுவர்களை இயற்கைக்கு மாறான முறையில் சித்ரவதைக்கு உள்ளாக்கி இருக்கிறார். ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக சிறுவர்கள் இருவரும் பாதிரியாரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    பாதிரியாரின் தொல்லை நாளுக்குநாள் அதிகரிக்கவே, அதுகுறித்து சிறுவர்கள் இருவரும் தங்களின் தாய்க்கு தெரிவித்துள்ளனர். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவர்களின் தாய், பாதிரியார் மீது வடகரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    தாயின் புகார் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் பாதிரியார் சிறுவர்களிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிரியார் சம்பத்தை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

    ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கு இருக்கிறார்? என்று போலீசார் தேடிவந்தனர்.

    இந்தநிலையில் பாதிரியார் சம்பத், பெங்களூருவில் இருப்பதாக வடகரா போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து பாதிரியாரை பிடிக்க தனிப்படை போலீசார், பெங்களூரு விரைந்தனர்.

    அவர்கள் பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு தப்பிச் செல்ல முயன்ற பாதிரியார் சம்பத்தை கைது செய்தனர். பின்பு அவரை கேரளாவுக்கு அழைத்து வந்தனர். சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பாதிரியாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இவர் கேரள மாநிலத்தில் வடகரா, முடப்பிலவு, தட்டொலிக்கரா உள்ளிட்ட பகுதிகள் மட்டுமின்றி, டெல்லி மற்றும் பெங்களூரு, மைசூருவிலும் பாதிரியாராக பணியாற்றி உள்ளார். அந்த இடங்களிலும் அவர் இது போன்று வேறு சிறுவர்களிடம் அத்துமீறினாரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கடந்த மாதம் 31-ந்தேதி பூனையின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் என்.ஜி.ஓ காலனியை சேர்ந்தவர் ஷாம்பவி தேவி. இவர் கடந்த 3 ஆண்டுகளாக தனது வீட்டில் பெண் பூனை ஒன்றை பாசமாக வளர்த்து வருகிறார். பூனைக்கு கடந்த ஆகஸ்டு மாதம் நோய் பாதிப்பு ஏற்பட்டது.

    பூனையை சிகிச்சைக்காக ஷாம்பவி தேவி ராமகிருஷ்ணாபுரம் அடுத்த அழகாபுரியில் உள்ள தனியார் கால்நடை மருத்துவர் கிராந்தி குமாரிடம் அழைத்துச் சென்றார்.

    டாக்டர் பூனையை பரிசோதித்து விட்டு பூனைக்கு சில பிரச்சனைகள் உள்ளதாக தெரிவித்தார். அறுவை சிகிச்சை மூலம் பூனைக்கு சிகிச்சை அளிக்க ரூ.1 லட்சம் செலவாகும் என தெரிவித்தார்.

    செல்ல பூனைக்கு சிகிச்சை அளிக்க ஷாம்பவி தேவி டாக்டரிடம் ரூ.1 லட்சம் கட்டினார். டாக்டர் கிராந்தி குமார் 4 முறை பூனைக்கு அறுவை சிகிச்சை செய்தார். அறுவை சிகிச்சைக்கு பின்னரும் பூனையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்பத்திரிக்கு சென்ற ஷாம்பவி தேவி டாக்டரிடம் அறுவை சிகிச்சை செய்தும் பூனைக்கு உடல்நிலை சரியாகவில்லை என கேட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த டாக்டர் கிராந்தி குமார், ஷாம்பவி தேவியை தாக்கியது மட்டுமல்லாமல் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி பூனையின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. இதனைக் கண்டு வருத்தம் அடைந்த ஷாம்பவி தேவி பூனைக்கு சிகிச்சை அளிக்க போனில் டாக்டரிடம் தெரிவித்தார்.

    அப்போது அவர் உன்னுடைய பூனைக்கு என்னால் சிகிச்சை அளிக்க முடியாது என ஆபாசமாக திட்டினார். இதுகுறித்து ஷாம்பவி தேவி, சைதன்ய புரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாண்டுரங்கிற்கு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் ஆசை இருந்தது.
    • மராட்டியத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதிமுறை உள்ளது.

    மும்பை:

    தெலுங்கானா மாநிலம், நிசாம்பாத் மாவட்டம் எடப்பள்ளி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் கால்வாயில் மிதந்த சிறுமி உடலை மீட்டனர். போலீசார் சிறுமியின் படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு அவளது குடும்பத்தினரை தேடினா்.

    இந்தநிலையில் பிணமாக மீட்கப்பட்ட சிறுமி மராட்டிய மாநிலம், நாந்தெட் மாவட்டம் கேருர் கிராமத்தை சேர்ந்தவள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சிறுமியின் தந்தை பாண்டுரங்கிடம் (வயது28) விசாரணை நடத்தினர். அப்போது பாண்டுரங் பெற்ற மகளை கால்வாயில் தள்ளிவிட்டு கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

    பாண்டுரங் கேருரில் முடி திருத்தும் தொழிலாளியாக உள்ளார். அவருக்கு திருமணம் முடிந்து 6 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் மற்றும் 3 வயதில் மகன் உள்ளார். பாண்டுரங்கிற்கு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் ஆசை இருந்தது. மராட்டியத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதிமுறை உள்ளது.

    எனவே அவர் இதுகுறித்து அங்கு பஞ்சாயத்து தலைவராக உள்ள நண்பர் கணேஷ் ஷிண்டேவிடம் பேசினார். அப்போது அவர்கள் இரட்டை பிள்ளைகளில் மூத்தவளான பிராச்சியை(6) தத்து கொடுப்பது அல்லது கண்ணுக்கு எட்டாத தொலைவுக்கு சென்று விட்டுவிடுவது என்பது பற்றியெல்லாம் யோசித்தனர். பின்னர் இதில் எதுவும் சரிவராது என்று நினைத்து கொலை செய்ய துணிந்தனர்.

    இதன்படி சம்பவத்தன்று பாண்டுரங் மோட்டார் சைக்கிளில் மகள் பிராச்சியை மராட்டிய எல்லையில் உள்ள தெலுங்கானா மாநிலம் எடப்பள்ளியில் உள்ள கால்வாய்க்கு அழைத்துச்சென்றார். அவர் அங்கு சிறுமியை கால்வாயில் தள்ளிவிட்டு ஊருக்கு திரும்பிவிட்டார் என்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக பாண்டுரங்கை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலையில் தொடர்புடைய பாண்டுரங்கின் நண்பரான பஞ்சாயத்து தலைவர் கணேஷ் ஷிண்டேவையும் கைது செய்தனர்.

    தேர்தலில் போட்டியிடும் மோகத்தில் பெற்ற மகளை முடி திருத்தும் தொழிலாளி கொலை செய்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • குழாய் வழியாக கியாஸ் பெறுபவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைவர்.
    • இந்த திட்டத்துக்காக ரூ.242 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

    புதுடெல்லி:

    டெல்லியில் முதல்-மந்திரி ரேகா குப்தா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

    சட்டசபை தேர்தலின் போது ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது.

    இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகையின் போது இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி ரேகா குப்தா நேற்று அறிவித்தார்.

    மேலும் அவர், தகுதியான பயனாளிகளுக்கு கியாஸ் சிலிண்டருக்கான தொகை ரூ.853 அவர்களது வங்கி கணக்கில் ஒவ்வொரு முறையும் வரவு வைக்கப்படும் என்றும், குழாய் வழியாக கியாஸ் பெறுபவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைவர் என்றும் கூறினார்.

    இந்த திட்டத்துக்காக ரூ.242 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    • இந்தியா, அமெரிக்கா மீதான வரிகளையும் தளர்த்தும் என்று தெரிவித்தார்.
    • 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாயத் தயாரிப்புகளை இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

    பிரதமர் மோடியுடன் நேற்று தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவித்தார்.

    ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதி அளித்ததால், இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 25 பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அறிவித்த டிரம்ப், இந்தியா, அமெரிக்கா மீதான வரிகளையும் தளர்த்தும் என்று தெரிவித்தார்.

    அதேநேரம், அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாய  பொருட்களை  இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும் இந்தியாவுடனான ஒப்பந்தம் அமெரிக்க விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என அமெரிக்க விவசாயத்துறை செயலாளர் தெரிவித்தார். இது இந்திய விவசாயிகளைப் பாதிக்குமோ என்ற கவலை எழுந்தது.

    இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்கள் இந்திய விவசாயிகளின் நலன்களை எவ்விதத்திலும் பாதிக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    அதாவது, அமெரிக்காவிலிருந்து பெரும்பாலும் பருத்தி, பாதாம், மற்றும் வால்நட்ஸ் போன்ற இந்தியாவில் தேவை அதிகமாக உள்ள பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும், அரிசி அல்லது கோதுமை போன்ற இந்திய விவசாயிகள் அதிகம் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குப் பாதிப்பு இருக்காது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.   

    • மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இதை தெரிவித்துள்ளார்.
    • வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கான (SMS) கட்டணமாக மட்டும் ரூ.3,387.77 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மூன்று ஆண்டுகளில் 11 பொதுத்துறை வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத கணக்குகளிலிருந்து அபராதமாக மொத்தம் ரூ.8,092 கோடி வசூலித்துள்ளன.

    மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இதை தெரிவித்துள்ளார்.

    அதன்படி, 2022-23 நிதியாண்டில் ரூ.2,407 கோடி, 2023-24 நிதியாண்டில்: ரூ.2,909 கோடி, 2024-25 நிதியாண்டில்: ரூ.2,775 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கான (SMS) கட்டணமாக மட்டும் ரூ.3,387.77 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    • வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்துள்ளான்.
    • தடுக்க முயன்ற போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஒசாஃப் அலி கான் என்பவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம், 11-ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கு போபால் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஒசாஃப் அலி கானை போலீசார் இன்று ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த வழக்கறிஞர்கள், அலி கான் மீதான கோபத்தில் நீதிமன்ற வளாகத்தில் அவனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    தடுக்க முயன்ற போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    வழக்கறிஞர்கள் அலி கானை சரமாரியாகத் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

    • அவர் அணிந்திருந்த விலையுயர்ந்த Louis Vuitton பிராண்ட் பெல்ட் வெளியே தெரிந்தது.
    • பெல்ட் தெரிவதை உணர்ந்த அவர், உடனடியாக அமர்ந்து கொண்டு, மீண்டும் எழுந்து பேசும்போது தனது கோட்-உடையை கொண்டு அந்த பெல்ட்டை மறைக்க முயன்றார்.

    மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பாஜக எம்.பி அனுராக் தாகூர் அணிந்திருந்த ஒரு விலையுயர்ந்த பெல்ட் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று, நாடாளுமன்றத்தில் அமளிக்கு இடையே அனுராக் தாகூர் பேச எழுந்தபோது, அவர் அணிந்திருந்த விலையுயர்ந்த Louis Vuitton பிராண்ட் பெல்ட் வெளியே தெரிந்தது.

    கேமராவில் பெல்ட் தெரிவதை உணர்ந்த அவர், உடனடியாக அமர்ந்து கொண்டு, மீண்டும் எழுந்து பேசும்போது தனது கோட்-உடையை கொண்டு அந்த பெல்ட்டை மறைக்க முயன்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அவர் அணிந்திருந்த பெல்ட்டில் 'LV' என்ற சின்னம் தெளிவாகத் தெரிந்தது. லூயி விட்டான் பெல்ட்கள் பொதுவாக 40,000 ரூபாயிலிருந்து தொடங்குகின்றன. அனுராக் தாகூர் அணிந்திருந்தது போன்ற குறிப்பிட்ட மாடல்கள் 80,000 முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

    நாடாளுமன்றத்தில் ஒரு மூத்த தலைவர் இது போன்ற விலையுயர்ந்த வெளிநாட்டு பிராண்ட் பெல்ட் அணிந்திருந்தது பேசுபொருளாகியுள்ளது.

    • ராணுவத்தில் தங்களது முழு பணிக்காலத்தையும் முடித்துவிட்டு ஓய்வுபெற்ற வீரர்கள், பணி காலத்தில் மாற்றுத்திறனாளி ஆகியிருந்தாலும் வரி விலக்கு கிடையாது.
    • முதலில் அக்னிவீர் திட்டம் நாட்டின் பாதுகாப்பைச் சிதைத்தது, இப்போது மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்தின் மீதான இந்தத் தாக்குதல் ராணுவ வீரர்களின் மன உறுதியைக் குறைக்கும்.

    2026-27 பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான வருமான வரி விலக்கை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

    இதற்கு நாடு முழுவதும் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    பட்ஜெட் அறிவிப்பின்படி, உடல் குறைபாடு காரணமாக ராணுவ சேவையிலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட வீரர்களுக்கு மட்டுமே இனி வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

    ராணுவத்தில் தங்களது முழு பணிக்காலத்தையும் முடித்துவிட்டு ஓய்வுபெற்ற வீரர்கள், பணி காலத்தில் மாற்றுத்திறனாளி ஆகியிருந்தாலும், அவர்களுக்கு இனி அந்த ஓய்வூதியத்திற்கு வரி விலக்கு கிடையாது.

    பெரும்பாலான மாற்றுத்திறனாளி வீரர்கள் தங்களது பணிக்காலத்தை முடித்த பிறகே ஓய்வு பெறுகிறார்கள். எனவே அரசின் இந்த முடிவால் பலர் பாதிக்கப்படுவர்.

    பணியின் போது காயமடைந்து அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளி ஆகும் வீரர்களுக்கு, நிர்வாகப் பணிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. அவர்கள் ஓய்வு பெறும்போது வரி விலக்குடன் கூடிய கூடுதல் ஓய்வூதியம் மற்றும் மருத்துவச் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன.

    தற்போது அந்த வரி விலக்குச் சலுகையை அரசு பறிக்கப்பட்டுள்ளது நாட்டின் பாதுகாப்பிற்காகப் போராடி ஊனமுற்ற வீரர்களின் உரிமைகளைப் பறிப்பதாக இருப்பதாகப் முன்னாள் ராணுவ வீரர்கள் அமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது.

    முன்னாள் மேஜர் ஜெனரல் ஷைல் ஜா இது குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில், "முதலில் அக்னிவீர் திட்டம் நாட்டின் பாதுகாப்பைச் சிதைத்தது, இப்போது மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்தின் மீதான இந்தத் தாக்குதல் ராணுவ வீரர்களின் மன உறுதியைக் குறைக்கும்" என்று விமர்சித்துள்ளார். 

    • சிறு விஷயத்துக்காக சிவம் குப்தாவிற்கும், உணவு டெலிவரி செய்யும் 3 இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • இதில் அவர் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    டெல்லியில் உணவு டெலிவரி ஊழியர்கள் தொழிலதிபரை ஹெல்மெட்டால் அடித்துக் கொன்ற சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சிவம் குப்தா (36).

    கடந்த ஜனவரி 3 இரவு, டெல்லியின் மிகவும் நெரிசலான பகுதியான Connaught Place-இல் சிறு விஷயத்துக்காக சிவம் குப்தாவிற்கும், உணவு டெலிவரி செய்யும் 3 இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், தங்கள் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டுகளால் சிவம் குப்தாவை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சுமார் 16 நாட்கள் உயிருக்குப் போராடிய சிவோம் குப்தா, சிகிச்சை பலனின்றி ஜனவரி 19-ஆம் தேதி உயிரிழந்தார்.

    சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, 2 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மூன்றாவது நபரைத் தேடி வருகின்றனர்.

     

    • ஒலியைவிட அதிவேகத்தில் நீண்ட தூரம் பயணித்து எதிரி நாட்டு விமானங்களை தாக்கி அழிக்கும்
    • DRDO விஞ்ஞானிகளுக்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

    இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான (DRDO) ஒடிசா கடற்கைரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில், Solid Fuel Ducted Ramjet (SFDR) தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

    நேற்று, செவ்வாய்க்கிழமை காலை 10:45 மணியளவில் SFDR தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட ஏவுகணையை ஏவி இந்த சோதனை நடைபெற்றது.

    ஏவுகணைகள், ஒலியைவிட அதிவேகத்தில் (சூப்பர்சோனிக்) நீண்ட தூரம் பயணித்து எதிரி நாட்டு விமானங்களை தாக்கி அழிக்கும் ஆற்றலை இந்த SFDR தொழில்நுட்பம் வழங்குகிறது.

    சோதனை வெற்றி பெற்ற நிலையில், மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் வான்வழி Long-range Air-to-Air Missiles ஏவுகணைகளை உருவாக்கும் திறன் கொண்ட ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.

    இந்த வெற்றிக்காக DRDO விஞ்ஞானிகளுக்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் தற்காப்புத் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று அவர் கூறியுள்ளார். 

    ×