என் மலர்tooltip icon

    இந்தியா

    • ஒலியைவிட அதிவேகத்தில் நீண்ட தூரம் பயணித்து எதிரி நாட்டு விமானங்களை தாக்கி அழிக்கும்
    • DRDO விஞ்ஞானிகளுக்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

    இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான (DRDO) ஒடிசா கடற்கைரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில், Solid Fuel Ducted Ramjet (SFDR) தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

    நேற்று, செவ்வாய்க்கிழமை காலை 10:45 மணியளவில் SFDR தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட ஏவுகணையை ஏவி இந்த சோதனை நடைபெற்றது.

    ஏவுகணைகள், ஒலியைவிட அதிவேகத்தில் (சூப்பர்சோனிக்) நீண்ட தூரம் பயணித்து எதிரி நாட்டு விமானங்களை தாக்கி அழிக்கும் ஆற்றலை இந்த SFDR தொழில்நுட்பம் வழங்குகிறது.

    சோதனை வெற்றி பெற்ற நிலையில், மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் வான்வழி Long-range Air-to-Air Missiles ஏவுகணைகளை உருவாக்கும் திறன் கொண்ட ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.

    இந்த வெற்றிக்காக DRDO விஞ்ஞானிகளுக்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் தற்காப்புத் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று அவர் கூறியுள்ளார். 

    • மும்பையிலிருந்து கோவைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், பயணிகளுடன் ஓடுபாதையில் புறப்படுவதற்காகக் காத்திருந்தது.
    • ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை முனை பலத்த சேதமடைந்தது.

    மும்பை விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனத்தைச் சேர்ந்த இரு பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நேற்று, மும்பையிலிருந்து கோவைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், பயணிகளுடன் ஓடுபாதையில் புறப்படுவதற்காகக் காத்திருந்தது.

    அப்போது  ஐதராபத்தில் இருந்து இண்டிகோ விமானம் பயணிகளுடன் ஓடுபாதையில் வந்திறங்கியது. இதன் போது இரு விமானிகளும் பக்கவாட்டில் மோதிக்கொண்டன.

    இதில் இரண்டு விமானங்களின் இறக்கை முனைகளும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை முனை பலத்த சேதமடைந்தது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

    விபத்தைத் தொடர்ந்து பயணம் ரத்து செய்யப்பட்டு, விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் பத்திரமாக இறக்கப்பட்டனர்.

    பாதிக்கப்பட்ட பயணிகளை அவர்களது இடங்களுக்கு அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

    விமானங்கள் ஓடுபாதையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

    • அங்கிருந்தவர்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடினர்.
    • திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28 அன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.

    அவரின் இறுதிச் சடங்கு கடந்த வியாழக்கிழமை பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

    அதிக கூட்டத்தை பயன்படுத்திக் கொண்ட திருடர்கள், அங்கிருந்தவர்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடினர்.

    இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு, சுமார் 15 பேர் தங்கள் தங்கச் சங்கிலிகள் மற்றும் பொருட்கள் திருடு போனதாகப் போலீசில் புகார் அளித்தனர்.

    திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 7 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

    அவர்களின் வாக்குமூலம் அடிப்படையில் திருடப்பட்ட பொருட்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  

    • கிரிக்கெட் என்பது அதிகாரிகளால் அல்ல, அது கிரிக்கெட் வீரர்களால்தான்.
    • குறைந்தபட்சம் இந்த அளவு மரியாதையாவது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

    மகாராஷ்டிரா மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெற இருந்தது. தேர்தலையொட்டி சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. ரோகித் பவாருக்கு வேண்டியவர்கள் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் இந்திய வீரரும், பாஜக தலைவருமான கேதர் ஜாதவ் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றம் தேர்தலுக்கு தடைவிதித்தது.

    இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த், ஜாய்மல்யா பாக்சி, விபுல் எம். பன்சோலி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் மும்பை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும், தலைமை நீதிபதி கொண்ட அமர்வு கூறியதாவது:-

    1986-ல் இருந்த 2023 வரை 164 உறுப்பினர்கள் இருந்தனர். 2023 முதல், நீங்கள் ஒரு பிரமாண்டமான குலுக்கலை நடத்தினீர்களா?.

    இது சிறந்த கிரிக்கெட் வீரர்கள் நிறைந்த ஒரு நாடு. ஓய்வு பெற்றவர்கள் அந்த வரிசையில் மிகச் சிறந்தவர்களாக இருந்தனர். நீங்கள் யாரைக் கொண்டு வருகிறீர்கள்? ஆட்டத்தைப் பற்றித் துளியும் தெரியாதவர்களை... மட்டையை எப்படிப் பிடிப்பது என்று கூடத் தெரியாதவர்களை... என்ன நடக்கிறது என்பது குறித்து நாங்கள் எங்கள் உணர்வுகளை அதிகமாக வெளிப்படுத்தும்படி செய்யாதீர்கள்.

    கிரிக்கெட் என்பது அதிகாரிகளால் அல்ல, அது கிரிக்கெட் வீரர்களால்தான். ஹாக்கி சங்கம் என்பது ஹாக்கி வீரர்களால்தான் அறியப்படுகிறது. குறைந்தபட்சம் இந்த அளவு மரியாதையாவது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

    இவ்வாறு பெஞ்ச் தெரிவித்தது.

    மேலும், மனுதாரர்கள் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள நீதிபதிகள் அனுமதித்ததுடன், புதன்கிழமை இந்த வழக்கை விசாரிக்க உள்ள மும்பை உயர் நீதிமன்றத்தின் முன் அனைத்து வாதங்களையும் முன்வைக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டது. அத்துடன், உயர் நீதிமன்றம் இந்த வாதங்களைக் கருத்தில் கொள்ளும் என்றும், இந்த வழக்கை விரைவாகத் தீர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

    • அண்டை நாடுகளை விட சிறந்த வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்கா உடன் ஏற்பட்டுள்ளது.
    • சீனாவுக்கு 37 சதவீதம், வங்கதேசத்திற்கு 20 சதவீதம், பாகிஸ்தானுக்கு 19 சதவீதம் வரி விதித்துள்ளது.

    இந்தியா- அமெரிக்கா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவை குறைப்பதாக இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் இந்தியா மீதான 50 சதவீதம் வரி விதிப்பை 18 சதவீதமாக குறைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

    இந்தியா- அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்தை இந்திய அரசுதானே முதலில் அறிவிக்க வேண்டும். டிரம்ப் அறிவித்தது ஏன்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

    இதற்கு பியூஷ் கோயல் பதில் அளிக்கும் வகையில் கூறியதாவது:-

    இந்தியா- அமெரிக்கா ஒப்பந்தம் குறித்து டொனால்டு டிரம்ப் அறிவித்தது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பியதை பார்த்தேன். அமெரிக்கா இந்தியா மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தியது. இதனால் அது நீக்கப்பட்டதை அவர்கள் அறிவித்திருக்க வேண்டும்.

    பல தடைகள் மற்றும் பல மாத பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அண்டை நாடுகளை விட சிறந்த வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்கா உடன் ஏற்பட்டுள்ளது.

    போட்டி பொருளாதாரத்திற்கான குறைந்த வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனா, பாகிஸ்தான் நாடுகளை விட இந்தியாவுக்கான வரி விதிப்பு குறைவானதாகும்.

    நெருக்கடியின் கீழ் பிரதமர் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக ராகுல் காந்தி தெரிவிக்கிறார். அவர் மக்களை தவறாக வழி நடத்த விரும்புகிறார். இந்தியாவின் வளர்ச்சி குறித்து அவர் கவலைப்படவில்லை. ராகுல் காந்தியின் பிரச்சனைதான் என்ன?. எதிர்மறையான மனநிலையால் அவர் சாதிக்க விரும்புவது என்ன? என்பதை மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டியிருக்கும்.

    இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.

    சீனாவுக்கு 37 சதவீதம், வங்கதேசத்திற்கு 20 சதவீதம், பாகிஸ்தானுக்கு 19 சதவீதம் வரி விதித்துள்ளது.

    • மக்களவையில் இன்று பேசுவதற்கான ஜனநாயக உரிமை நிராகரிக்கப்பட்டுள்ளது.
    • தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் என்னைப் பேசவிடாமல் செய்ய திட்டமிட்டு முயற்சி நடந்தது.

    புதுடெல்லி:

    எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

    மக்களவையில் இன்று பேசுவதற்கான ஜனநாயக உரிமை நிராகரிக்கப்பட்டுள்ளது.

    என்னை நாடாளுமன்றத்தில் பேச விடாமல் தடுத்தது ஜனநாயகம் மீதான கரும்புள்ளி.

    எதிர்க்கட்சி தலைவரான என்னை மத்திய அரசின் அழுத்தத்தால் சபாநாயகர் பேச விடவில்லை.

    தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் என்னைப் பேசவிடாமல் செய்ய திட்டமிட்டு முயற்சி நடந்துள்ளது.

    மக்களவையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிக்கப்படுகின்றன. இது ஜனநாயகத்தின்மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளார்.

    • மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • தற்போது சட்டமன்ற பாஜக தலைவராக யும்னம் கெம்சந்த் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அமைக்க முயற்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மணிப்பூர் சட்டமன்ற பாஜக கட்சி தலைவராக யும்னம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதனால் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்ததும், யும்னம் கெம்சந்த் சிங் முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.

    மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையை தூண்டி விடுவதாக, முதல்வராக இருந்த பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான ஆடியோவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனால், பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    குகி தலைவர் நெம்சா கிப்ஜென் துணை முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் மறுப்பு.
    • ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவை எதிர்த்து விளையாட இருந்தது. கடைசி நேரத்தில் இந்த போட்டியை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது:-

    விளையாட்டுக்கும் அரசியலுக்கும் இடையேயான வேறுபாட்டை நாம் இப்போது முற்றிலும் நிறுத்திவிட்டோம். மீண்டும் மீண்டும், ஊடகங்கள் மூலம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போட்டி நடக்கும்போதெல்லாம் அது ஒரு போராகவே சித்தரிக்கப்படுகிறது. அதை ஒரு சாதாரண போட்டி போல ஒருபோதும் ஒளிபரப்புவதில்லை.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.

    முன்னதாக,

    வங்கதேசத்தில இந்து நபர்கள் தாக்கப்பட்டதற்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழும்பியது. மேலும், வங்கதேசத்தில் இந்து மக்கள் தாக்கப்படும்போது, ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கெதிராக வங்கதேச வீரர் முஸ்தாபிஜுர் ரகுமான் விளையாடுவதா? எனவும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. கொல்கத்தா அணி அவரை உடனடியாக ரிலீஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும், அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். இதனால், கொல்கத்தா அணியிடம் முஸ்தாபிஜுர் ரகுமானை விடுவிக்க பிசிசிஐ கேட்டுக்கொண்டது.

    அதனடிப்படையில் முஸ்தாபிஜுர் ரகுமான் விடுவிக்கப்பட்டார். இதனால் வங்கதேச கிரிக்கெட் போர்டு கடும் அதிருப்தியடைந்தது. வருகிற 7-ந்தேதி தொடங்கும் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு செல்ல மாட்டோம் எனவும், எங்களுடைய போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தது. ஆனால், ஐசிசி அவர்களின் வேண்டுகோளை நிராகரித்தது. இதனால் வங்கதேசம் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியது.

    வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆதரவு தெரிவித்தது. அதனடிப்படையில் இந்தியாவுக்கு எதிராக லீக் தொடர் போட்டியை புறக்கணிக்கிறோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு எடுத்துள்ளது.

    பாகிஸ்தானுக்கு எதிராக ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிரதமர் மோடி அமெரிக்காவுடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளார்.
    • மோடிக்கும் டிரம்புக்கும் இடையிலான தனிப்பட்ட உறவின் காரணமாக ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளோம்.

    இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:-

    * நமது போட்டியாளர்களை விட சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை நாம் பெற்றுள்ளோம்:

    * இந்த ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச விரும்பினேன். ஆனால் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் உருவாக்கிய விரும்பத்தகாத காட்சிகளால் என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை.

    * இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஏழைகள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள்.

    * பிரதமர் மோடி அமெரிக்காவுடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளார்.

    * ஒட்டுமொத்த தேசமும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறது

    * பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் இடையிலான தனிப்பட்ட உறவின் காரணமாக இந்தியா அமெரிக்காவுடன் ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

    * கால்நடை வளர்ப்பு, விவசாயம் மற்றும் பால்வளத் துறைகளின் நலன்களை பிரதமர் மோடி கருத்தில் கொண்டுள்ளார்.

    * அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா, முக்கியத்துவம் வாய்ந்த விவசாயம் மற்றும் பால்வளத் துறைகளின் நலன்களைப் பாதுகாத்துள்ளது

    * வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு ஒரு நல்ல சகுனம்

    இவ்வாறு பியஷ் கோயல் தெரிவித்தார்.

    • இந்திய பொருட்கள் மீது டிரம்ப் 50 சதவீதம் கூடுதல் வரி விதித்திருந்தார்.
    • தற்போது அதை 18 சதவீதமாக குறைப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்தியா- அமெரிக்கா இடையில் வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அமெரிக்கா விதித்த காலக்கெடுவிற்குள் இந்தியா ஒப்பந்தத்திற்கு முன்வரவில்லை.

    இதனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 25 சதவீதம் கூடுதல் வரி விதித்தார். பின்னர், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரித்தார். அதை மீறி வாங்கினால் இதற்கென்று தனியாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றார்.

    இருந்தபோதிலும் இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொண்டிருந்தது. இதனால் மொத்தமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தார் டிரம்ப்.

    இந்த நிலையில்தான் நேற்றிரவு டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் மோடியிடம் டெலிபோன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் இந்திய பொருட்களுக்கான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கிறேன் என டிரம்ப் அறிவித்தார்.

    இந்தியா- அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்தை பாஜக-வினர் பாராட்டி வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் "அமெரிக்காவின் வரி விதிப்பு 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுவது மிக சிறந்த செய்தி. இந்தியாவின் ஏற்றுமதி இனிமேல் அதிகரிக்கும்" என்றார்.

    • மத்தியப் பிரதேச விளையாட்டு விழாவின் நிறைவு விழாவில் சிவராஜ் சிங் சௌகான் கலந்துகொண்டார்.
    • சிவராஜ் சிங் சவுகான் பேட்டிங் செய்ய ஜடேஜா அவருக்கு பந்துவீசினார்.

    மத்தியப் பிரதேச விளையாட்டு விழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. 

    இந்த விழாவில் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    அப்போது அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேட்டிங் செய்ய ஜடேஜா அவருக்கு பந்துவீசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • பாதிக்கப்பட்டவர்களுடன் டெல்லியில தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தார்.
    • தேர்தல் ஆணையம் பாஜக-வுக்கு இடைத்தரகராக செயல்படுவதாக குற்றச்சாட்டு.

    வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் SIR பணி நடைபெற்று வருவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

    உண்மையான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. முரண்பாடு இருப்பதாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, நீண்ட வரிசையில் மக்களை காக்க வைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், SIR பணியால் பலர் உயிரிழந்துள்ளனர் எனக் குற்றம்சாட்டியுனார்.

    இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பில் பிரதிநிதிகள் ஆகியோருடன் மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாரை சந்தித்தார். அப்போது, பேசிக்கொண்டிருந்தபோது, பாதிலேயே மம்தா பானர்ஜி வெளியேறினார்.

    தேர்தல் ஆணையம் பாஜக-வின் இடைத்தரகராக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார். இந்த நிலையில் இன்று பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளுடன் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    * எங்களுக்கு பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் எல்லோரும் SIR-ஆல் பாதிக்கப்பட்டவர்கள். இதுபோன்ற நான் லட்சக்கணக்கான மக்களை இங்கு அழைத்து வர முடியும்.

    * SIR-ஆல் பாதிக்கப்பட்டவர்கள், தங்களை பாதுகாத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    * தேர்தலுக்கு சற்று முன்னதாக SIR நடத்தப்படுவது ஏன்?

    * எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டுமெ நடத்தப்படுகிறது. 4 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. 3 மாநிலங்களில் SIR நடைபெற்று வருகிறது. பாஜக ஆளும் அசாமில் நடத்தப்படவில்லை.

    * எந்தவித திட்டமும் இல்லாமல் 2 முதல் 3 மாதங்களில் நடத்தி முடிப்பது சாத்தியமாகுமா?

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    ×