search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானம்"

    • டோயாமா விமான நிலையம் நோக்கி ஏ.என்.ஏ.-வின் போயிங் 737-800 விமானம் புறப்பட்டது.
    • அவசர அவசரமாக நியூ சிடோஸ் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.

    ஜப்பானை சேர்ந்த ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு (ஏ.என்.ஏ.) சொந்தமான விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சப்போரோவின் நியூ சிடோஸ் விமான நிலையத்தில் இருந்து டோயாமா விமான நிலையம் நோக்கி ஏ.என்.ஏ.-வின் போயிங் 737-800 விமானம் புறப்பட்டது.

    பயணத்தை துவங்கிய சில நிமிடங்களில் இந்த விமானத்தின் காக்பிட் பகுதி கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் அவசர அவசரமாக நியூ சிடோஸ் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.

    இந்த விமானத்தில் மொத்தம் 59 பயணிகள், ஆறு பணியாளர்கள் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. விமான கண்ணாடியில் ஏற்பட்ட விரிசலால் விமானத்தை இயக்குவதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    முன்னதாக அலாஸ்கா ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான போயிங் 737-9 விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அவசர அவசரமாக தரையிறங்கிய சம்பவம் அரங்கேறியது. இந்த விமானத்தின் கதவுகளில் ஒன்று நடுவழியில் திறந்ததே இதற்கு காரணம் ஆகும். இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானத்தின் கதவு தனியே பிரிந்து கீழே விழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • விமானம் வங்காளதேச நாட்டு தலைநகர் டாக்காவுக்கு திருப்பி விடப்பட்டது.
    • சிரமத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கவுகாத்தி:

    மும்பையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. அதில் 178 பயணிகள் இருந்தனர். அப்போது கவுகாத்தியில் கடும் பனிமூட்டம் நில வியதால் விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து விமானம் வங்காளதேச நாட்டு தலைநகர் டாக்காவுக்கு திருப்பி விடப்பட்டது. அந்த விமானம் இன்று அதிகாலை 4 மணிக்கு டாக்கா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    இதுகுறித்து விமான நிறுவனம் கூறும்போது, "கவுகாத்தியில் மோசமான வானிலை காரணமாக மும்பையில் இருந்து கவுகாத்திக்கு சென்ற இண்டிகோ விமானம் வங்காளதேசத்தின் டாக்காவிற்கு திருப்பிவிடப்பட்டது.

    டாக்காவில் இருந்து கவுகாத்திக்கு விமானத்தை இயக்க மாற்றுக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த சிரமத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.

    • இண்டிகோ விமான சேவை தொடக்க விழா காணொலி மூலம் இன்று நடந்தது.
    • உத்தரபிரதேசத்தில் 1 மாதத்துக்குள் 5 புதிய விமான நிலையங்கள் திறக்கப்படும்.

    லக்னோ:

    அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக அயோத்தியில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி கடந்த 30-ந்தேதி திறந்து வைத்தார்.

    இந்நிலையில் அயோத்தி-அகமதாபாத் இடையேயான இண்டிகோ விமான சேவை தொடக்க விழா காணொலி மூலம் இன்று நடந்தது. உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் லக்னோவில் இருந்தும், மத்திய விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா டெல்லியில் இருந்தும் விழாவில் இணைந்தனர்.

    அப்போது யோகி ஆதித்யநாத் பேசும்போது, வருகிற 22-ந்தேதி அயோத்தி விமான நிலையத்துக்கு 100 விமானங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

    ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறும்போது, "உத்தரபிரதேசத்தில் 1 மாதத்துக்குள் 5 புதிய விமான நிலையங்கள் திறக்கப்படும். இதன்மூலம் அங்கு 19 விமான நிலையங்களாக உயரும்" என்றார்.

    • இந்திய விமான பயணிகளில் 60 சதவீதம் பேர் இண்டிகோ விமான சேவையை பயன்படுத்துகிறார்கள்.
    • இண்டிகோ நிறுவனம் சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் குட்டி விமானங்களையும் இயக்கி வருகிறது.

    சென்னை:

    இந்தியாவில் தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்களில் இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனம் அதிக விமானங்களை இயக்கி வருகிறது.

    இந்திய விமான பயணிகளில் 60 சதவீதம் பேர் இண்டிகோ விமான சேவையை பயன்படுத்துகிறார்கள்.

    மற்ற விமான நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இண்டிகோ விமான கட்டணம் குறிப்பிட்ட கால அளவில் முன்பதிவு செய்தால் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் இண்டிகோ நிறுவனம் தனது கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறது.

    200-க்கும் மேற்பட்ட பயணிகளை சுமந்து செல்லும் பெரிய விமானங்களில் முன் இருக்கைகள் மற்றும் ஜன்னல் ஓர இருக்கைகளை விரும்புபவர்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையை இண்டிகோ நிறுவனம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி முன் இருக்கைகளை தேர்வு செய்பவர்கள் வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும். அதுபோல ஜன்னல் ஓர இருக்கைகளை விரும்பி முன் பதிவு செய்பவர்கள் கூடுதலாக ரூ.1,500 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இண்டிகோ நிறுவனம் சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் குட்டி விமானங்களையும் இயக்கி வருகிறது. அந்த விமானங்களில் கட்டண உயர்வு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறதா? என்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

    • சென்னையில் இருந்து விமானம் மூலம் அந்தமானுக்கு சிறப்பு சுற்றுலா திட்டமிட்டுள்ளது.
    • வருகிற 23-ந்தேதி புறப்படும் இந்த சுற்றுலா 6 நாட்களை கொண்டதாகும்.

    சென்னை:

    இந்திய ரெயில்வேயின் சுற்றுலாப் பிரிவான ஐ.ஆர்.சி.டிசி. பல விமான சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது சென்னையில் இருந்து விமானம் மூலம் அந்தமானுக்கு சிறப்பு சுற்றுலா திட்டமிட்டுள்ளது.

    வருகிற 23-ந்தேதி புறப்படும் இந்த சுற்றுலா 6 நாட்களை கொண்டதாகும். ஹேவ்லாக், நீல், போர்ட் பிளேர் ஆகிய இடங்களை சுற்றி பார்க்கவும் தங்கும் வசதி, உணவு, கப்பல் கட்டணம், விமான கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, பயண காப்பீடு அனைத்தையும் உள்ளடக்கிய கட்டணம் ஒருவருக்கு ரூ.51,500 ஆகும். இந்த தகவலை சுற்றுலா மேலாளர் மாலதி ரத்தினம் தெரிவித்துள்ளார்.

    • விமானம் சிக்கிக் கொண்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரல்.
    • விமானம் சிக்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து அசாமிற்கு கொண்டு செல்லப்பட்ட விமானம் ஒன்று பீகாரில் உள்ள மேம்பாலம் அடியில் நேற்று சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே விபத்து ஒன்றில் சிக்கி சேதமான இந்த விமானத்தை அசாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, பீகார் மாநிலம் மோத்திஹரி பகுதியில் உள்ள பிப்ரகோதி என்கிற மேம்பாலத்தின் அடியில் விமானம் சிக்கிக் கொண்டது.

    இதனால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிறகு, லாரி ஓட்டுனர்கள் மற்றும் பொது மக்களின் உதவியுடன் பெரும் போராட்டத்திற்கு பிறகு விமானம் வெளியில் எடுக்கப்பட்டது.

    மேம்பாலம் அடியில் விமானம் சிக்கிக் கொண்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதேபோல், கடந்த நவம்பர் மாதம் கொச்சியில் இருந்து ஐதராபாத்திற்கு விமானம் கொண்டு செல்லப்பட்டபோது ஆந்திரா மாநிலத்தில் உள்ள பபாட்லா மாவட்டத்தில் மேம்பாலம் அடியில் சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • அதில் இருந்தவர்கள் நிலை என்ன என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.
    • நாங்கள் முறையான திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளோம்.

    கடந்த 2014, மார்ச் 8-ம் தேதி கோலா லம்பூரில் இருந்து மலேசியா நோக்கி புறப்பட்ட எம்.எச்.370 என்ற விமானம் ரேடார்களில் இருந்து காணாமல் போனது. ரேடார்களில் இருந்து மாயமான எம்.எச். 370 விமானம் எங்கு சென்றது, அதில் இருந்தவர்கள் நிலை என்ன என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.

    கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக காணாமல் போயிருக்கும் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 370-ஐ கண்டுபிடிக்க புது திட்டம் உள்ளதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். லண்டனில் உள்ள ராயல் ஏரோனாடிக்கல் சொசைட்டியில் நடைபெற்ற விரிவுரையில் புதிய வகை தேடலின் மூலம் பத்து நாட்களில் காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க முடியும் என்று வான்வெளி துறை நிபுணர்கள் ஜீன்-லுக் மார்சண்ட் மற்றும் விமானியான பேட்ரிக் பெல்லி தெரிவித்தனர்.

    "நாங்கள் முறையான திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளோம். எங்களிடம் திட்டம் உள்ளது.. இந்த பகுதி மிகவும் சிறியது, புதிய வகை வழிமுறைகளை கையாளும் போது பத்து நாட்கள் வரை ஆகலாம். ஆனால், இது விரைவில் நிறைவுபெறும் வகையில் இருக்கும். எம்.எச். 370 பாகங்கள் கண்டுபிடிக்கும் வரை, அதற்கு என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது," என ஜீன்-லுக் மார்சண்ட் தெரிவித்தார்.

    • கடந்த 14-ந் தேதி பிரான்ஸ் நாட்டின் வெட்ரி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.
    • பயணிகள் அனைவரும் 3 நாட்களாக விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர்.

    பாரீஸ்:

    துபாயில் இருந்து மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவாவுக்கு 303 இந்தியப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் கடந்த 14-ந் தேதி (வியாழக்கிழமை) பிரான்ஸ் நாட்டின் வெட்ரி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.

    இந்த விமானம் மூலம் மனித கடத்தல் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வந்ததையடுத்து பிரான்ஸ் அதிகாரிகள் இந்த விமானத்தைத் தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் பேசி வருவதாகவும், இந்திய பயணிகளுக்கு உரிய வசதிகள் வழங்க கேட்டுக் கொண்டுள்ளதாகவும் மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்தது.

    மேலும், இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டது. இந்நிலையில், பயணிகளிடம் விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும், பயணிகள் இன்று முதல் தங்கள் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியானது. பயணிகள் அனைவரும் 3 நாட்களாக விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். இன்று அந்த விமானம் புறப்பட்டு சென்றது.

    • பயணிகள் விமான நிறுவன கவுண்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மதியம் ஒரு மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்துள்ளனர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் இன்று அதிகாலை 1.40 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. 168 பயணிகள் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏற தயாராக இருந்தனர். விமானி பரிசோதித்தபோது விமானத்தில் எந்திர கோளாறு இருப்பதை கண்டுபிடித்தார்.

    இதைத்தொடர்ந்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் விமானம் புறப்பட தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிறுவன கவுண்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

    இன்று மதியம் ஒரு மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக பயணிகள் தவித்தபடி இருந்தனர்.

    • பாகிஸ்தானில் தரையிறங்க அனுமதி கோரப்பட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது.
    • பாதுகாப்பு அதிகாரிகள் ஜெர்மன் தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர்.

    ஜெர்மனியில் இருந்து பாங்காக்கை நோக்கி எல்எச்772 லுஃப்தான்சா விமானம் பறந்துக் கொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் பயணித்த ஜெர்மன்- தாய்லாந்தை சேர்ந்த கணவர்- மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    ஆரம்பத்தில் தம்பதி இடையே வாக்குவாதமாக தொடங்கிய பிரச்சனை அதுவே பெரிய தகராறாகவும் மாறியுள்ளது. இதனால், கணவரின் நடத்தையால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி மனைவி விமானியின் உதவியை நாடினார்.

    இதை அடுத்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரப்பட்டது. முன்னதாக, பாகிஸ்தானில் தரையிறங்க அனுமதி கோரப்பட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்நிலையில், லுஃப்தான்சா விமானம் டெல்லி விமான நிலையத்தில் இன்று காலை தரையிறக்கப்பட்டது. பின்னர், கணவரை விமானத்திலிருந்து இறக்கப்பட்டு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிவில் விமான போக்குவரத்து இயக்கநரகத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் ஜெர்மன் தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ள நிலையில் அந்த நபர் விமான நிலைய அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த நபர் இந்திய பாதுகாப்பு அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படுவாரா அல்லது ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்படுவாரா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டு வருகிறது.

    லுஃப்தான்சா விமானம் அதன் டயர்கள் குளிர்ந்தவுடன் தாய்லாந்திற்கு புறப்படும் என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

    • முதல் இலகுரக தேஜாஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம் விமானப்படையில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.
    • பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு இன்று சென்றார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் (எச்.ஏ.எல்.) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனம் சார்பில் இந்திய விமானப்படைக்கு வேண்டிய விமான உதிரிபாகங்கள், எந்திரங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இலகுரக போர் விமானம் தயாரிப்பில் எச்.ஏ.எல். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 

    இதற்கிடையே, புதிதாக தயாரிக்கப்பட்ட முதல் இலகுரக தேஜாஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம் விமானப்படையில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு இன்று சென்றார். அங்கு தயாரிக்கப்படும் போர் விமானங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில் ஏறி பறந்தார்.

    போர் விமான பயணித்திற்கு பிறகு பிரதமர் மோடி தனது அனுபவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேஜஸ் போர் விமானத்தில் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு செழுமைப்படுத்தியது. நமது நாட்டின் உள்நாட்டுத் திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது. மேலும், நமது தேசிய திறன் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பயணிகள் விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று மாலை 6.25 மணியளவில் விமானம் புறப்படதயாராக இருந்தது. அதில் 154 பேர் பயணம் செய்ய இருந்தனர். அவர்கள் அனைவரும் மாலை 5 மணிக்கு முன்னதாகவே பாதுகாப்பு சோதனை அனைத்தையும் முடித்து விட்டு விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.

    ஆனால் எதிர் முனையில் வர வேண்டிய விமானம் தாமதமானதால் டெல்லி விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இரவு 8 மணி வரையில் விமானம் புறப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். அவர்களை விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். பின்னர் இரவு 9.25 மற்றும் 10 மணியளவில் விமானம் புறப்படும் என்று அடுத்தடுத்து தெரிவித்தும் விமானம் புறப்படவில்லை.

    இதேபோல் சென்னையில் இருந்து இரவு 7 மணிக்கு, அகமதாபாத் செல்ல வேண்டிய அதே நிறுவன மற்றொரு விமானமும் இரவு 10 மணி வரையில் புறப்படவில்லை. இதனால் அந்த விமானத்தில் பயணம்செய்ய இருந்த 162 பயணிகளும் டெல்லி பயணிகளுடன் சேர்ந்து போராட்டம் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் உள்நாட்டு விமான முனையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து 6.25 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய விமானம் 4 மணி நேரம் தாமதமாக, இரவு 10.35 மணிக்கும், இரவு 7 மணிக்கு அகமதாபாத் செல்ல வேண்டிய விமானம் இரவு 10.50 மணிக்கும் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ×