search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Airport"

    • பாகிஸ்தானில் தரையிறங்க அனுமதி கோரப்பட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது.
    • பாதுகாப்பு அதிகாரிகள் ஜெர்மன் தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர்.

    ஜெர்மனியில் இருந்து பாங்காக்கை நோக்கி எல்எச்772 லுஃப்தான்சா விமானம் பறந்துக் கொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் பயணித்த ஜெர்மன்- தாய்லாந்தை சேர்ந்த கணவர்- மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    ஆரம்பத்தில் தம்பதி இடையே வாக்குவாதமாக தொடங்கிய பிரச்சனை அதுவே பெரிய தகராறாகவும் மாறியுள்ளது. இதனால், கணவரின் நடத்தையால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி மனைவி விமானியின் உதவியை நாடினார்.

    இதை அடுத்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரப்பட்டது. முன்னதாக, பாகிஸ்தானில் தரையிறங்க அனுமதி கோரப்பட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்நிலையில், லுஃப்தான்சா விமானம் டெல்லி விமான நிலையத்தில் இன்று காலை தரையிறக்கப்பட்டது. பின்னர், கணவரை விமானத்திலிருந்து இறக்கப்பட்டு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிவில் விமான போக்குவரத்து இயக்கநரகத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் ஜெர்மன் தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ள நிலையில் அந்த நபர் விமான நிலைய அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த நபர் இந்திய பாதுகாப்பு அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படுவாரா அல்லது ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்படுவாரா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டு வருகிறது.

    லுஃப்தான்சா விமானம் அதன் டயர்கள் குளிர்ந்தவுடன் தாய்லாந்திற்கு புறப்படும் என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

    • கடந்த இரண்டு வாரத்திற்கு முன் 2.92 கோடி ரூபாய் மிதிப்பிலான தங்கம் பறிமுதல்
    • தற்போது 2.06 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

    வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு, லக்கேஜ் வைக்கும் டிராலியில் மறைத்து தங்கம் கடத்த முயன்றதாக உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இருந்து 5,319 கிராம் எடையுள்ள 50 தங்க செயின்கள் பறிமுதல் செய்திருந்தனர். இதன் மதிப்பு 2.92 கோடி ரூபாய் ஆகும்.

    இந்த நிலையில் இன்று குவைத் நாட்டைச் சேர்ந்த மூன்று பயணிகள் டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களின் உடைமைகளை பரிசோதித்தனர். அப்போது 4 கிலோ தங்கத்தை வெள்ளி முலாம் பூசி மறைத்து கொண்டு வந்ததை கண்டு பிடித்தனர்.

    அதனைத் தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்து, மூன்று பேரையும் கைது செய்தனர். இதன் மதிப்பு 2.06 கோடி ரூபாய் ஆகும். கைது செய்யப்பட்ட அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • ஐந்து கிலோ எடைகொண்ட 50 செயின்கள் பறிமுதல்
    • யாருக்காக பதுக்கி கொண்டு வந்தார்கள் என அதிகாரிகள் விசாரணை

    டெல்லி விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல்: உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 8 பேர் கைதுடெல்லி விமான நிலையத்தில் உஸ்பெகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு மறைத்து கொண்டு வந்த ஐந்து கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூன்று பெண்கள் உள்பட 8 உஸ்பெகிஸ்தானியர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

    அவர்களிடம், தங்கத்தை யாருக்காக கொண்டு வந்துள்ளனர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து 5,319 கிராம் எடைகொண்ட 50 தங்க செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 2.92 கோடி ரூபாய் ஆகும்.

    தற்போது விமான நிலையத்தில் உள்ள லக்கேஜ் டிராலியில் தங்கத்தை கடத்துவது அதிகரித்து வருவதாக அதிகாரகிள் தெரிவித்தனர்.

    ரகசிய தகவலின்படி அதிகாரிகள் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களை வருகைக்கான வாசல் பகுதியில் இடைமறித்து சோதனை செய்தனர். அப்போது லக்கேஜ் டிராலியில் பேஸ்ட் வைத்து ஒட்டி மறைத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    • விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டதில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை.
    • வெடிகுண்டு என நினைத்து தேங்காய் கொண்டு செல்ல சிஐஎஸ்எப் அனுமதிக்கவில்லை என பயணி பேசியிருக்கிறார்

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானம் நேற்று மாலை 4.55 மணியளவில் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது ஒரு ஆண் பயணி செல்போனில் பேசும்போது வெடிகுண்டு என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இது, அருகில் இருந்த பெண் பயணியின் காதில் விழ, அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி விமான ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். விமான ஊழியர்கள், மத்திய தொழிலக பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். பாதுகாப்பு படையினர் வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது.

    செல்போனில் பேசிய ஆண் பயணி, புகார் அளித்த பெண் பயணி இருவரும் கீழே இறக்கப்பட்டு, விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. ஆனால் விமானத்தில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை. ஆனால்  செல்போனில் பேசிய பயணி கைது செய்யப்பட்டு, விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மற்ற பயணிகளுடன் விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

    இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வேலை நிமித்தமாக துபாய்க்கு புறப்பட்ட பயணி தனது தாயுடன் தொலைபேசியில் பேசியபோது, அவரின் அருகில் அமர்ந்திருந்த பெண் பயணிக்கு அந்த உரையாடல் கேட்டுள்ளது. அப்போது, "வெடிகுண்டு இருக்கலாம் என்று பயந்து சிஐஎஸ்எப் வீரர்கள் தனது பையில் தேங்காயை அனுமதிக்கவில்லை, ஆனால் பையில் வைத்திருந்த பான் மசாலாவை கொண்டு செல்ல அனுமதித்தனர்" என பேசியிருக்கிறார். இதில் வெடிகுண்டு என்ற வார்த்தையை கேட்டதும் பெண் பயணி புகார் அளித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ஏரோசிட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
    • குடியுரிமை அதிகாரிகளை ஏமாற்றி டெல்லி விமான நிலையத்தில் இருந்து கனடாவுக்கு செல்ல திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

    புதுடெல்லி:

    டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ஏரோசிட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 10 பேர் அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவர்களை ஏஜெண்டு ஒருவர் கனடா அனுப்பி வைப்பதாகக்கூறி ஏமாற்றி விட்டதாகவும், இருந்தாலும் குடியுரிமை அதிகாரிகளை ஏமாற்றி டெல்லி விமான நிலையத்தில் இருந்து கனடாவுக்கு செல்ல திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

    இதனையடுத்து மோசடி செய்யும் நோக்கில் இருந்ததாகக் கூறி போலீசார் 10 பேரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    ரினாடு, மதன்ராஜ், நிதர்ஷன், பவித்திரன், விகிகரன், அஜித்குமார், சஞ்சய், கதுகுஷன், கிரிராஜ் (இவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள்), மகேந்திர ராஜா (சென்னையைச்சேர்ந்தவர்). இவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • சர்வதேச குழுவான ஏசிஐ மூலம் டெல்லி விமான நிலையம் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாகவும் தேர்வு.
    • 2 மில்லியனுக்கும் குறைவான பயணிகள் பிரிவில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் தேர்வு.

    டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனத்தால் இயக்கப்படும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், ஆண்டுக்கு 40 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பிரிவில் 2022ம் ஆண்டிற்கான விமான நிலைய சேவைத் தரம் வாய்ந்த சிறந்த விமான நிலையத்திற்கான விருதைப் பெற்றுள்ளது. இதனை சர்வதேச குழுவான சர்வதேச விமான நிலைய கவுன்சில் அறிவித்துள்ளது.

    இதேபோல், சர்வதேச விமான நிலைய கவுன்சில் மூலம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் தூய்மையான விமான நிலையமாகவும் டெல்லி விமான நிலையம் தேர்வாகியுள்ளது.

    மேலும், சர்வதேச விமான நிலைய கவுன்சில் மூலம் 2 மில்லியனுக்கும் குறைவான பயணிகள் பிரிவில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் சிறந்த விமான நிலையமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    • துபாய் விமானத்தில் வந்த ஒரு பயணியின் உடைமைகளில் தங்கத்தினாலான கைக்கடிகாரம் மற்றும் வைரம் பதித்த கைக்கடிகாரங்கள் பல இருந்தன.
    • தங்கத்தினாலான கைக்கடிகாரம் மற்றும் வைரம் பதித்த கைக்கடிகாரங்கள் மதிப்பு சுமார் ரூ.28 கோடி என மதிப்பிடப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள், வெளிநாட்டு பயணிகளின் உடைமைகளை பரிசோதித்தனர். அப்போது துபாய் விமானத்தில் வந்த ஒரு பயணியின் உடைமைகளில் தங்கத்தினாலான கைக்கடிகாரம் மற்றும் வைரம் பதித்த கைக்கடிகாரங்கள் பல இருந்தன. அவை முறைகேடாக கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து சுங்க அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அந்த கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவற்றின் மதிப்பு சுமார் ரூ.28 கோடி என மதிப்பிடப்பட்டது. டெல்லி விமான நிலையில் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்ட வணிகம் மற்றும் ஆடம்பர பொருட்களின் அதிபட்ச மதிப்பு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகை 60 கிலோ தங்கத்தின் மதிப்புக்கு சமம் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பல மாதங்களாக சம்பளம் வழங்காமல் அலைகழிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்துக்கு எதிராக டெல்லி விமான நிலையத்தில் விமானிகள், பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். #JetAirways
    புதுடெல்லி:

    விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன.

    இந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. அவ்வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

    இதனால், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கி இயக்கும் பல விமானங்களுக்கான வாடகை பாக்கியை செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் வைத்துள்ளது.

    அவ்வகையில், நூற்றுக்கும் அதிகமான விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் பல விமானங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. இந்நிறுவனத்தின் 16 வழித்தடங்கள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன.

    இதுதவிர, வேறுசில காரணங்களுக்காக மேலும் பல விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.

    சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திக்குமுக்காடி வருகிறது. மீண்டும் தலை நிமிரும் வகையில் புத்துயிர் அளிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய்வரை தேவைப்படுகிறது.

    இந்த நிறுவனத்தை நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவந்த நிலையில், தள்ளாட்டத்தில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக ஜெட் ஏர்வேஸ் இயக்குனர் குழுமத்தின் அவசர கூட்டம் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது.



    நீண்டநேர ஆலோசனை மற்றும் விவாதத்துக்கு பிறகு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர்  தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

    ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் இவர்களுக்கு சொந்தமான 51 சதவீதம் பங்குகளை கடன் அளித்த வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் கைப்பற்றி, அவற்றை வேறு நபர்களுக்கு விற்று தங்களுக்கு சேர வேண்டிய தொகையை ஈடு செய்யும் பணியில் இறங்கியுள்ளது.

    இதற்கிடையில், ஏப்ரல் முதல் தேதியில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்த ஜெட் ஏர்வேஸ் விமானிகள் தங்கள் முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்து வரும் 15-ம் தேதியில் இருந்து வேலைநிறுத்தத்தில் குதிப்போம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில், பல மாதங்களாக சம்பளம் வழங்காமலும், தாமப்படுத்தி வழங்கியும் வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிர்வாகத்துக்கு எதிராக டெல்லி விமான நிலையத்துக்குள் இன்று மாலை விமானிகள், பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். #JetAirwaysEmployees #DelhiAirport #JetAirwaysManagement 
    கடும் பனிமூட்டம் காரணமாக இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. #DelhiAirport #FlightsDelayed
    புதுடெல்லி:

    டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விடிந்து வெகுநேரம் ஆகியும் பனி விலகாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்குகின்றனர்.

    பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக டெல்லியில் இன்று விமான போக்குவரத்து முடங்கியது. காலை 7.30 மணி முதல் டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. டெல்லிக்கு வந்த மூன்று விமானங்கள் திருப்பி விடப்பட்டன.



    டெல்லியில் இருந்து வெளியூர் செல்வதற்கு முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு அந்தந்த விமான நிறுவனங்கள் சார்பில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. பயணிகள் விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக, பயணம் செய்யவேண்டிய விமானத்தின் நிலவரத்தை சரிபார்த்துக்கொள்ளும்படி கூறப்பட்டுள்ளது. வானிலை சீரடைந்ததும் விமானங்கள் இயக்கப்படும்.

    இதேபோல் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 12 ரெயில்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. #DelhiAirport #FlightsDelayed
    டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை கடத்தி செல்ல முயன்றவரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
    புதுடெல்லி:

    டெல்லி விமான நிலையத்தில் நேற்று ஒருவர் ஹாங்காங் செல்வதற்காக காத்துக்கொண்டு இருந்தார். சந்தேகத்துக்கிடமான அவரது நடவடிக்கைகளால் அவரை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது 1,50,700 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 1 கோடியே 2 லட்சம் ரூபாய் ) அவர் மறைத்து கடத்தி செல்ல முயன்றதை கண்டுபிடித்த அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி, அவரை கைது செய்தனர்.

    இதேபோல் சுமார் 86 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 கிலோ தங்கக்கட்டிகளை கடத்தி செல்ல முயன்ற இன்னொரு நபரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். #forexsmuggling #Delhiairport
    டெல்லிக்கு வந்த ஏர்-ஆசியா விமானத்தில் 19 வயது விளையாட்டு வீராங்கனை பெற்ற குழந்தையை கழிவறையில் வீசிய சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #AirAsia
    புதுடெல்லி:

    மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இருந்து டெல்லிக்கு ஏர்-ஆசியா விமானம் வந்தது. அந்த விமானம் தரையிறங்கும் நேரத்தில் விமான ஊழியர்கள் கழிவறையில் சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு பிறந்து சில மணி நேரமான குழந்தை ஒன்று கிடந்தது. வளர்ச்சி முழுமை அடையாத நிலையில் அந்த சிசு இறந்து இருந்தது.

    பெண் பயணி ஒருவர் கழிவறையில் சிசுவை பெற்றெடுத்து வீசி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் பயணிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதனால் பெண் பயணிகள் விமானத்துக்குள்ளே வைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விமானத்தில் பயணம் செய்த 19 வயது பெண் விளையாட்டு வீராங்கனை, தான் சிசுவை பெற்றெடுத்து கழிவறையில் வீசியதாக கூறினார். இதையடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து விமான நிலைய போலீஸ் அதிகாரி கூறுகையில், தீவிர விசாரணைக்கு பின் 19 வயது விளையாட்டு வீராங்கனை விமான கழிவறையில் குழந்தை பெற்று சிசுவை வீசியதை ஒப்புக்கொண்டார்.

    இது தொடர்பாக இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஏர் ஆசியா விமான நிர்வாகம் தரப்பில் கூறும் போது, “விமான கழிவறையில் சிசு வீசப்பட்டது தொடர்பாக விசாரித்து வருகிறோம். இதனால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

    கர்ப்பம் அடைந்த 19 வயது பெண் அதை மறைப்பதற்காக சிசுவை வெளியே எடுத்து கழிவறையில் வீசி விட்டு தப்ப முடிவு செய்து இருப்பது தெரிய வந்தது. #AirAsia
    அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருளை விழுங்கி கடத்திவந்த பிரேசில் நாட்டுப் பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர். #cocaine #delhiairport
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரிகள் கடந்த 14-ம் தேதி பயணிகளின் உடைமைகளை தீவிரமாக பரிசோதித்து கொண்டிருந்தனர்.

    அப்போது, ஒரு பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை சப்தர்ஜங் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று எக்ஸ்ரே எடுத்தபோது வயிற்றினுள் ஏராளமான கேப்சூல்கள் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து, பிரேசில் நாட்டை சேர்ந்த சுமார் 25 வயது பெண்ணான அவரது வயிற்றுக்குள் இருந்த 106 கேப்சூல்கள் வெளியே எடுக்கப்பட்டன. 14-ம் தேதியில் இருந்து அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணை காவலில் அடைக்கப்பட்டதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தெற்கு அமெரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட்ட வீரியம் மிக்க இந்த போதைப்பொருளை டெல்லியில் உள்ள ஆப்பிரிக்காவை சேர்ந்த இடைத்தரகர்களிடம் ஒப்படைப்பதற்காக அந்தப் பெண் கடத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.  #cocaine #delhiairport
    ×