search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிச்சாங் புயல்"

    • மீனவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறுமாறும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
    • மீனவ கிராமங்களுக்கும் அரசின் நிவாரணம் முழுமையாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மிச்சாங் புயலின் போது ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் காரணமாக வெள்ளநீர் கழிவுகளுடன் எண்ணெய் கழிவு கலந்து எண்ணூர் முகத்துவாரம் பகுதி வழியாக கடலில் கலந்தது. இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் மீனவர்கள் தொழில் செய்யக்கூடிய பகுதிகள் அனைத்தும் எண்ணெய் படலமாக மாறி அப்பகுதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    இதன் காரணமாக, அப்பகுதியில் குடியிருந்த மீனவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் அனைத்தும் எண்ணெய் படலத்தால் சேதமடைந்து, மீனவர்கள் மீன்பிடிக்கும் தொழில் செய்ய முடியாமல், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் மீனவர்கள் கடலிலும், முகத்துவாரத்திலும் மின்பிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில், இந்த விடியா திமுக அரசு எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட சுமார் 6,700 பேருக்கு தலா 7,500/- ரூபாய் நிவாரணமாகவும், மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2,300 மீனவ குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா 12,500/- ரூபாயும், படகுகளை சரிசெய்ய படகு ஒன்றுக்கு 10,000/- ரூபாயும் வழங்கப்படும் என்று விடியா திமுக அரசு அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட இந்நிவாரணம் மிகவும் குறைவாக உள்ளது.


    எனவே, எண்ணெய் கசிவினால் சுமார் 20 நாட்கள் மீன்பிடி தொழிலுக்குப் போகாமல், மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்த நிலையில், தற்போது இந்த அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. எனவே, பாதிக்கப்பட்ட மீனவர்கள் விடியா திமுக அரசை எதிர்த்து, நிவாரணத்தை உயர்த்தி வழங்கக் கோரி வீதிக்கு வந்து போராடிய நிலையில், அவர்களைக் கைது செய்துள்ள விடியா திமுக அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறுமாறும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

    2017-ஆம் ஆண்டு அம்மாவின் ஆட்சியின் போது, காமராஜர் துறைமுகத்தில் இருந்த இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்ட நிகழ்வில் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவ கிராமங்களுக்கும், மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நிவாரணமும், மீன்பிடி படகுகள் மற்றும் சாதனங்களுக்கான நிவாரணமும் வழங்கப்பட்டது.

    மேலும், பெரிய படகு ஒன்றுக்கு 35,000/- ரூபாயும், கண்ணாடி இழை படகிற்கு (FRP) 15,000/- ரூபாயும், கட்டுமரத்திற்கு 10,000/- ரூபாயும் வழங்கினோம். மேலும், மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு முதற்கட்டமாக குடும்பம் ஒன்றிற்கு 5,000/- ரூபாயும், அடுத்தகட்டமாக மீன்பிடி கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த ஒவ்வொரு மீனவருக்கும் தலா 12,000/- ரூபாயும் வழங்கப்பட்டது.

    அதுதவிர, மீனவ மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினராக இருந்த ஒவ்வொரு மீனவ மகளிருக்கும் 10,000/- ரூபாயும், மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணமாக தலா 10,000/- ரூபாயும் வழங்கினோம்.

    எனவே, தற்போது பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளை உதாசீனப்படுத்தாமல், அவர்கள் மீண்டும் மீன்பிடித் தொழில் செய்வதற்கு ஏதுவாக, தற்போதுள்ள விலைவாசியை கருத்திற்கொண்டு ஒவ்வொரு படகிற்கும் நிவாரணமாக 50,000/- ரூபாயும், கண்ணாடி இழை படகிற்கு (FRP) 30,000/- ரூபாயும், கட்டுமரத்திற்கு 20,000/- ரூபாயும், மீன்பிடி வலைக்கு 25,000/- ரூபாயும் வழங்க இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    மேலும், 20 நாட்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல முடியாததால், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிசெய்யும் வகையில் தற்போது அறிவித்துள்ள நிவாரணத் தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்குமாறு இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    எண்ணெய் கசிவு, முகத்துவாரத்தில் இருந்து கடலில் கலந்துள்ள நிலையில், கடற்கரையை ஒட்டியுள்ள, பாதிக்கப்பட்ட அனைத்து மீனவ கிராமங்களையும் கண்டறிந்து, அந்த மீனவ கிராமங்களுக்கும் அரசின் நிவாரணம் முழுமையாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மீனவர்களின் படகுகள் வலைகள் சேதம் அடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
    • மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவொற்றியூர்:

    மிச்சாங் புயலினால் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது எண்ணூர் முகத்து வாரம் பகுதியில் எண்ணெய் கழிவுகள் கலந்தது. இதில் மீனவர்களின் படகுகள் வலைகள் சேதம் அடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த திருச்சிணாங்குப்பம், ஒண்டிக்குப்பம், நல்ல தண்ணி ஓடை குப்பம், திருவொற்றியூர் குப்பம், பலகை தொட்டி குப்பம், கே.வி.கே.குப்பம், பெரிய காசி கோவில் குப்பம், இந்திரா காந்தி குப்பம்.

    புதுநகர் குப்பம், நடுக்காசி கோவில் குப்பம், ஓடை குப்பம் உள்ளிட்ட 12 மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கூறி பெண்கள் உள்பட சுமார் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் பட்டினத்தார் கோவில் அருகில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் உள்பட ஏராளமனோர் பங்கேற்றனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சக்திவேல், உதவி கமிஷனர் சிதம்பர முருகேசன், போக்குவரத்து உதவி கமிஷனர் சீனிவாசன், தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ. இப்ராஹிம், மீன்வளத்துறை இணை இயக்குனர் இந்திரா, திருவொற்றியூர் தாசில்தார் சவுந்தர்ராஜன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. குப்பன் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் எண்ணூர் முகத்துவார கடல் பகுதியில் மீன் பிடித்து வரும் நெட்டுக்குப்பம், தாளங்குப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம், காட்டுக்குப்பம், சிவன் படை வீதி குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவி போதாது, கூட்டுறவு சங்கத்தில் உள்ள ஆண், பெண் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், மீன்பிடி படகுகளுக்கு ரூ.70 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் இன்று காலை பெண்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட னர். அப்போது எண்ணெயில் சேதம் அடைந்த படகு மற்றும் வலைகளை சாலையின் நடுவே போட்டனர்.

    மறியல் போராட்டம் காரணமாக சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர் லாரிகள் சரக்குகளோடு விரைவுச் சாலையில் வரிசையாக நிற்கின்றன. மேலும் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. எண்ணூர் விரைவு சாலையில் திருவொற்றியூரில் இருந்து எண்ணூர் வரை செல்லும் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    • அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
    • முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.

    சென்னை:

    மிச்சாங் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இதையடுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சட்டசபை துணைத் தலைவர் பிச்சாண்டி மற்றும் அரசு தலைமைக் கொறடா செழியன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அமைச்சர்களின் ஒரு மாத ஊதியமான ரூ.35,70,000, திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான ரூ. 91,34,500 என மொத்தம் 1,27,04,500 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்கள்.

    • கோவில்பட்டி பகுதியில் ஏராளமான தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன.
    • தடை செய்ய மத்திய, மாநில, அரசுகளை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி பகுதியில் வரலாறு காணாத மழை காரணமாக பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் வெள்ளச் சேதங்களால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக கோவில்பட்டி நகரின் பிரதான தொழிலான தீப்பெட்டிதொழில் கடும் பாதிப்படைந்து தீப்பெட்டி பண்டல்கள் முடக்கம் ஏற்பட்டு கிட்டத்தட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் வெளி நாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக பெண் பணியாளர்களை வைத்து கோவில்பட்டி பகுதியில் ஏராளமான தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த தீப்பெட்டி ஆலைகளுக்கு ஏற்கனவே கடும்நெருக்கடி உள்ளது. குறிப்பாக சீனாவிலிருந்து வரக்கூடிய சிகரெட்லைட்டர்கள் மிகக்குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் தீப்பெட்டிகள் ஏற்றுமதியில் பல்வேறு சிரமங்களும் தடைகளும் ஏற்பட்டு வருகிறது.

    மலேசியா, சிங்கப்பூர், கொழும்பு, போன்ற இடங்களில் இருந்து தீப்பெட்டிக்கு தேவையான அல்சிசயா என்ற வெள்ளைகுச்சி மரங்கள் கப்பல் மூலமாக தூத்துக்குடியில் கொண்டு வரப்பட்டு தூத்துக்குடியில் இருந்து லாரிகள் மூலம் கோவில்பட்டிக்கு கொண்டு வரப்படும்.

    தற்போது தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக அப்படி வரக்கூடிய மரத்தடிகள் கோவில்பட்டி கொண்டுவர முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் வெள்ளபெருக்கு காரணமாக கோவில்பட்டி அருகே உள்ள திட்டக்குளம் தொழில்பேட்டையில் உள்ள சிப்காட் பகுதியில் உள்ள அனைத்து தீப்பெட்டிகுச்சி தயாரிக்கும் கம்பெனிகள் இயங்கமுடியாத சூழ்நிலைகள் உள்ளது. மேலும் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த ரூ.100 கோடி தீப்பெட்டி பண்டல்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாத சூழ்நிலையால் தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவில்பட்டியில் கடந்த ஒரு வாரமாக மேகமூட்டமும் சிறு மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் தீப்பெட்டிதொழில் மிக மிக பாதிப்படைந்துள்ளது.

    அது மட்டுமல்ல கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டிஆலைகள் அதிகம் வருவதற்கு காரணமே கந்தகபூமி என கோவில்பட்டி அழைக்கப்படுவதால் கடுமையான வெயில் காரணமாக தீப்பெட்டிகளில் குச்சிகளில் மருந்துகள் முக்கபட்டு அதை காயவைக்கும் வசதி, தீப்பெட்டி அட்டைப்பெட்டிகள் ஒட்டி அதை காயவைக்கும் வசதி, எந்த ஒருஹீட்டர் வசதியும் இல்லாமல் சர்வசாதாரணமாக செய்யமுடிந்தது.

    தற்போது கோவில்பட்டி பகுதி கொடைக்கானல், ஊட்டி, போன்ற வானிலையில் உள்ளதால் குச்சியை காயவைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே அரசு போர்க்கால நடவடிக்கையாக தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்னர்.

    இது குறித்து தமிழ்நாடு தீபெட்டிஉற்பத்தியாளர் சங்கதலைவர் ஆர்.எஸ்.சுரேஷ் கூறும் போது, ஏற்கனவே எங்களுக்கு அடிமேல் அடிவிழுகின்றது. சிகரெட்லைட்டர் சீனாவிலிருந்து மிகக்குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் தீப்பெட்டி பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    அதை தடை செய்ய மத்திய, மாநில, அரசுகளை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். இருப்பினும் கூட சீனசிகரெட் லைட்டர்கள் மிகமலிவான விலையில் சட்டவிரோதமாக மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த நாங்கள் மேலும் இப்பொழுது இந்த கோவில்பட்டி பகுதியில் உள்ள வானிலை காரணமாக தயார் செய்யப்பட்ட தீப்பெட்டிகளை வெளிமாநிலங்களுக்கு அனுப்பமுடியாமல் மிகசிரமம் அடைந்து வருகின்றோம் என்றார்.

    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அத்தொகையும் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • நிவாரணத் தொகையினை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

    கொசஸ்தலை ஆற்றில், எண்ணூர் முகத்துவார பகுதியில் கடந்த 05.12.2023 அன்று ஏற்பட்ட எண்ணெய் கசிவினை அகற்றிட தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிகழ்வில் காட்டுக்குப்பம், சிவன்படை குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம் நெட்டுக்குப்பம் வ.உ.சி.நகர், உலகநாதபுரம் மற்றும் சத்தியவாணி முத்து நகர் ஆகிய கடலோர மீனவ கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளில் எண்ணெய் படிந்து சேதம் ஏற்பட்டது. மேலும், இக்கிராமங்களை சார்ந்த மீனவர்கள் எண்ணெய் கசிவினால் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல இயலாததால் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அத்தொகையும் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து, கூடுதலாக எண்ணெய் கசிவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மேற்கண்ட மீனவ கிராமங்களை சார்ந்த 2,301 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.12,500 வீதமும், மேலும் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரிசெய்திட படகு ஒன்றிற்கு தலா ரூ.10,000 வீதமும் மொத்தம் 3 கோடி ரூபாய் அரசினால் ஒப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சென்னை மாநகராட்சி மண்டலம் 1, வார்டு 4, 6, மற்றும் 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதம், மொத்தம் 5 கோடியே 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிவாரணத் தொகையினை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே, மிச்சாங் புயல் கனமழையினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு 8 கோடியே 68 லட்சம் ரூபாய் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் 4,034 உள்சாலைகளும், 87 பேருந்து வழிடத்தட சாலைகளும் சேதம் அடைந்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
    • சாலைகள் சேதம் அடைந்ததில் கோடம்பாக்கம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது.

    சென்னை:

    சென்னையில் புயல் மழையால் சாலைகள் கடுமையாக சேதம் அடைந்தன. நகரில் உள்ள பேருந்து சாலைகள், தெருக்களில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக மாறின. ஒரு சில இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    வெள்ளத்தில் பெரும்பாலான சாலைகள் மிகவும் மோசமடைந்த நிலையில் அவற்றை உடனே சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. புதிய சாலைகள் போடுவதற்கு காலதாமதமாகும் என்பதால் தற்சமயம் பள்ளங்களை நிரப்புவதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.

    சென்னையில் 4,034 உள்சாலைகளும், 87 பேருந்து வழிடத்தட சாலைகளும் சேதம் அடைந்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணி தொடங்கியுள்ளது. ஆர்.கே. மடம் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளங்களை தொழிலாளர்கள் சரி செய்தனர்.

    சாலைகள் சேதம் அடைந்ததில் கோடம்பாக்கம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 1056 சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. மாம்பலம், தியாகராய நகர், கோடம்பாக்கம் பகுதியில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நீண்ட நாட்கள் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றதால் சாலைகளில் அதிக பள்ளம் ஏற்பட்டு உள்ளன.

    ராயபுரம் மண்டலத்தில் 567 சாலைகள், அண்ணாநகர் மண்டலத்தில் 396 சாலைகளை அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர். அண்ணாநகரில் 12068 சதுர மீட்டருக்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன.

    தேனாம்பேட்டை மண்டலத்தில் 381, திரு.வி.க. நகர் 331, மாதவரம் 273, தண்டையார்பேட்டை 214, சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. மற்ற மண்டலங்களில் 200-க்கும் குறைவான சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

    தெருக்களில் பள்ளம் இருந்தால் 1913-க்கு புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இதுகுறித்து கமிஷனர் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறுகையில்,

    மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலைகள் சிமெண்ட் கலவைகள் மூலம் நிரப்பப்படுகின்றன. வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக இந்த பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    சாலைகளில் உள்ள சிறிய பள்ளங்கள் முதல் பெரிய குழி வரை இந்த கலவையின் மூலம் நிரப்பப்படும். தேவையான இடங்களுக்கு தார் சாலைகளும் போடப்படும். ஜனவரி மாதத்திற்கு பிறகு தான் புதிய சாலை சீரமைக்கும் பணி நடைபெறும் என்றார். 

    • 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.
    • மத்திய அரசு கொடுத்த நிதியை சரியாக செலவழிக்கவில்லை.

    டெல்லி:

    மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * மழை குறித்த எச்சரிக்கையின் அடிப்படையில் அரசு எடுத்த குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிகை நடவடிக்கை என்ன?

    * சென்னையில் ரூ.4000 கோடியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்து முரணான கருத்தை அமைச்சர்கள் கூறினார்கள்.

    * முதலில் 95 சதவீதம் பணிகள் நிறைவடைந்ததாக ஒரு அமைச்சர் கூறினார். பின்னர் 42 சதவீதம் மட்டும் நிறைவு பெற்றதாக மற்றொரு அமைச்சர் கூறுகிறார்.

    * மழைநீர் வடிகால் பணிகள் 42 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றதாக கூறினார்கள். அதிலும் சந்தேகம்.

    * மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது.


    * 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

    * சென்னை வானிலை ஆய்வு மையம் தாமதமாக எச்சரிக்கை வழங்கியது என்ற குற்ச்சாட்டை ஏற்க முடியாது.

    * சென்னை வானிலை ஆய்வு மையத்தில் உள்ள கருவிகள் அதிநவீனமானவை.

    * காப்பீட்டு நிறுவனங்கள் டிச.19ம் தேதியே சென்னை அம்பத்தூரில் உள்ள நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தின.

    * 4 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது தமிழ்நாட்டு முதலமைச்சர் டெல்லியில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனையில் இருந்தார்.

    * வெள்ள பாதிப்பின் போது டெல்லியில் இருந்து கொண்டு, மத்திய அரசை குறை கூறுவது நியாயமா?

    * மத்திய அரசு கொடுத்த நிதியை சரியாக செலவழிக்கவில்லை.

    * தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது.

    * இந்தியாவில் இதற்கு முன்பு எப்போதும் தேசிய பேரிடர் என்ற ஒன்று இதுவரை அறிவிக்கப்பட்டதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ள பாதிப்பு குறித்து அறிந்தவுடன் உள்துறை அமைச்சரை சந்தித்து உதவி கோரினேன்.
    • தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்ட இடங்களில் இருந்து விமானப்படை மூலம் பலரை மீட்டெடுத்தோம்.

    டெல்லி:

    மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தென்மாவட்டங்களில் ஒரு வருடத்திற்கு பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் கொட்டித் தீர்த்துள்ளது.

    * வெள்ள பாதிப்பு குறித்து அறிந்தவுடன் உள்துறை அமைச்சரை சந்தித்து உதவி கோரினேன்.

    * தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்ட இடங்களில் இருந்து விமானப்படை மூலம் பலரை மீட்டெடுத்தோம்.

    * இந்த வருடத்திற்கு கொடுக்க வேண்டிய ரூ.900 கோடியில் முதல் தவணையாக ரூ.450 கோடியும், முன்னதாகவே இரண்டாவது தவணையாக ரூ.450 கோடியும் வழங்கப்பட்டது.

    * சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் மிகவும் அதிநவீனமானது.

    * சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கையை 5 நாட்கள் முன்கூட்டியே அறிவித்தது.

    * ஒவ்வொரு 3 மணிநேரத்திற்கும் வானிலை ஆய்வு மையம் மூலம் கனமழை குறித்த அப்டேட் கொடுக்கப்பட்டது.

    * முன்னெச்சரிக்கை முறையாக கிடைக்கவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடலில் தேங்கி உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • எண்ணெய் கழிவு கலந்த இடத்தில் பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    திருவொற்றியூர்:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது எண்ணூர் கடல்பகுதியில் எண்ணெய் கழிவு கலந்தது. இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடுகளிலும் எண்ணெய் படலம் படர்ந்து பொது மக்களுக்கு பல்வேறு உடல் ரீதியான பிரச்சினையும் ஏற்பட்டது. எண்ணூர் முகத்துவார பகுதி மற்றும் கடலில் தேங்கி உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி இன்று காலை எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டார்.

    அவர் எண்ணூர் சிவன் படை குப்பம், கமலாம்பாள் நகர் பகுதிகளில் எண்ணெய் கழிவு கலந்த இடத்தில் பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    • மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை.
    • தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் மத்திய அரசின் முப்படைகளும் இறங்கி சிறப்பாக பணியாற்றி வருகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.

    கோவிலில் மூலவர், சண்முகர், தட்சிணாமூர்த்தி, சூரசம்ஹாரமூர்த்தி, பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் அவர் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை. முறையாக பயன்படுத்தினால் கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கும்.

    மேலும் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் மத்திய அரசின் முப்படைகளும் இறங்கி சிறப்பாக பணியாற்றி வருகிறது. வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட மக்களிடம் நேரடியாகக் கேட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்து கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 500-க்கும் மேற்பட்டோர் பழைய கரிகாட்டுக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சோழிங்கநல்லூர்:

    மிச்சாங் புயல் காரணமாக மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை அரசு சார்பில் ரேசன்கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மழை வெள்ளத்தின் போது திருப்போரூர் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி உள்ள 3,4,10, -ம் வார்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழை வெள்ளத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்டு தவித்தனர். ஆனால் அங்கு வசிப்ப வர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப் படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பழைய கரிகாட்டுக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கானாத்தூர் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார், திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி, வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புயல் மழையால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். எங்கள் பகுதியில் மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கி பொருட்கள் சேதம் அடைந்தன. 4 நாட்களுக்கு மின்சாரம் தடைப்பட்டது. ஆனால் எங்களுக்கு நிவாரணத்தொகை வழங்காதது ஏன்? என்று கூறி பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி பொது மக்களை கலைந்து போகச் செய்தனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தென்மாவட்டங்களிலும் அதி கனமழையால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
    • தென் மாவட்டங்களில் மழையால் பாதிப்புகளைச் சந்தித்துள்ள மக்களுக்கு உரிய நிவாரணத் தொகைகளும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை, முழுக் கரும்பு அடங்கிய தொகுப்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கும் பரிசுத் தொகுப்பை வழங்க தமிழக அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மிச்சாங் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன.

    இதனால், சுமாா் 30 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1,486 கோடியே 93 லட்சம் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு தென்மாவட்டங்களிலும் அதி கனமழையால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சேதங்களைச் சீர் செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா். மேலும், தென் மாவட்டங்களில் மழையால் பாதிப்புகளைச் சந்தித்துள்ள மக்களுக்கு உரிய நிவாரணத் தொகைகளும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

    மழை, வெள்ளத்தால் எட்டு மாவட்டங்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ள சூழலில், பொங்கல் பரிசுத் தொகுப்பை எப்படி வழங்குவது என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. ரொக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கலாமா? என்பது தொடா்பாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அதிகார பூா்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என தலைமை செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளைப் பாா்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தூத்துக்குடி சென்றுள்ளாா்.

    அவா் இன்றிரவு சென்னை திரும்புகிறார். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×