search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 4 ஆயிரம் சாலைகள் சீரமைக்கும் பணி தொடங்கியது
    X

    சென்னையில் 4 ஆயிரம் சாலைகள் சீரமைக்கும் பணி தொடங்கியது

    • சென்னையில் 4,034 உள்சாலைகளும், 87 பேருந்து வழிடத்தட சாலைகளும் சேதம் அடைந்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
    • சாலைகள் சேதம் அடைந்ததில் கோடம்பாக்கம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது.

    சென்னை:

    சென்னையில் புயல் மழையால் சாலைகள் கடுமையாக சேதம் அடைந்தன. நகரில் உள்ள பேருந்து சாலைகள், தெருக்களில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக மாறின. ஒரு சில இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    வெள்ளத்தில் பெரும்பாலான சாலைகள் மிகவும் மோசமடைந்த நிலையில் அவற்றை உடனே சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. புதிய சாலைகள் போடுவதற்கு காலதாமதமாகும் என்பதால் தற்சமயம் பள்ளங்களை நிரப்புவதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.

    சென்னையில் 4,034 உள்சாலைகளும், 87 பேருந்து வழிடத்தட சாலைகளும் சேதம் அடைந்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணி தொடங்கியுள்ளது. ஆர்.கே. மடம் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளங்களை தொழிலாளர்கள் சரி செய்தனர்.

    சாலைகள் சேதம் அடைந்ததில் கோடம்பாக்கம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 1056 சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. மாம்பலம், தியாகராய நகர், கோடம்பாக்கம் பகுதியில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நீண்ட நாட்கள் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றதால் சாலைகளில் அதிக பள்ளம் ஏற்பட்டு உள்ளன.

    ராயபுரம் மண்டலத்தில் 567 சாலைகள், அண்ணாநகர் மண்டலத்தில் 396 சாலைகளை அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர். அண்ணாநகரில் 12068 சதுர மீட்டருக்கு சாலைகள் சேதம் அடைந்துள்ளன.

    தேனாம்பேட்டை மண்டலத்தில் 381, திரு.வி.க. நகர் 331, மாதவரம் 273, தண்டையார்பேட்டை 214, சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. மற்ற மண்டலங்களில் 200-க்கும் குறைவான சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

    தெருக்களில் பள்ளம் இருந்தால் 1913-க்கு புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இதுகுறித்து கமிஷனர் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறுகையில்,

    மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலைகள் சிமெண்ட் கலவைகள் மூலம் நிரப்பப்படுகின்றன. வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக இந்த பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    சாலைகளில் உள்ள சிறிய பள்ளங்கள் முதல் பெரிய குழி வரை இந்த கலவையின் மூலம் நிரப்பப்படும். தேவையான இடங்களுக்கு தார் சாலைகளும் போடப்படும். ஜனவரி மாதத்திற்கு பிறகு தான் புதிய சாலை சீரமைக்கும் பணி நடைபெறும் என்றார்.

    Next Story
    ×