search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன்"

    • அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    சென்னை, வியாசர்பாடி, சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மகள் ரோகிணி (வயது25). மதுரவாயலில் உள்ள பிரபல எண்ணை நிறுவனத்தில் ஏரியா வனியோகஸ்தராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்தபோது ஒரு கேனில் பெட்ரோல் வாங்கி அதனை ஒரு பையில் போட்டு மோட்டர் சைக்கிளின் முன்பகுதியில் தொங்க விட்டு இருந்தார். அதே பையில் தனது செல்போனையும் போட்டு இருந்தார். கோயம்பேடு காமராஜர் சாலை, லட்சுமி நகர் முதல் தெருவில் வந்தபோது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது.

    சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் இருந்து பெட்ரோல் கேன் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. சற்று உடல் பருமனாக இருந்த ரோகிணியால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்க முடியவில்லை. இதனால் அவர் தீயில் சிக்கி உடல் கருகினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரோகினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பெட்ரோல் கேனுடன் செல்போனை சேர்த்து வைத்திருந்தபோது செல்போனுக்கு அழைப்பு வந்ததால் கசிந்து இருந்த பெட்ரோலில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவ,மாணவிகள் செல்போனை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
    • விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் மற்றும் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 கோடியே 54 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளையும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

    தொடர்ந்து அமைச்சர் கூறும் ேபாது,

    படித்து கற்றுத்தேர்ந்த மாணவர்கள் நடிகர், நடிகைகள், ஜாதி, மதம் பின்பு செல்வதை தவிர்க்க வேண்டும். படிக்கும் போது பகுத்தறிவோடு படிக்க வேண்டும்.

    பெற்றோர்கள் உழைத்துக்கொ ண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெற்றோர்களின் கனவை நினைவாக்குவதற்கு நாம் படித்து முன்னேற வேண்டும்.

    விழுப்புரத்திலிருந்து அரசுப்பள்ளியில் படித்த வீரமுத்துவேல், விஞ்ஞானியாகி சந்திராயன் 3 என்ற செயற்கைகோளினுடைய திட்ட இயக்குனராக பணியாற்றியவர்.

    விஞ்ஞானத்திலும் மற்ற தொழில்நுட்பத்திலும் வல்லரசு நாடுகள் திரும்பி பார்க்கும் வகையில் நாம் உயர்ந்திருக்கிறோம் என்பதை ஒரு தமிழர் மீட்டுத்தந்திருக்கிறார்

    அதேபோல, ஒவ்வொருவருக்கும் ஒரு தளம் காத்துக்கிடக்கிறது.மாணவ மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அது உடல் நலத்திற்கு தீங்கானது.

    எங்கிருந்தாலும் நல்லவர்கள் வாழ்வார்கள் வாழ்ந்து பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். துன்பப்பட்டு தடைகளை தாண்டி முன்னேறி செல்லும் போது அந்த முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது உறுதியுடன் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சிகளில், டிஆர்ஓ செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, ஆர்டிஓ முருகேசன், அறந்தாங்கி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி, அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர்

    ராஜேஸ்வரி, ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன், பிடிஓக்கள்

    ஆயிஷாராணி, கோகுலகிருஷ்ணன் ஊராட்சி மன்ற தலைவர்கள் துணைத் தலைவர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பூதப்பாண்டி அரசு மருத்துவமனை முன்பு பஸ்ஸில் அவரை ஏற்றிவிட்டு அங்கு நின்ற ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிந்து செல்போன் பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    பூதப்பாண்டி :

    பூதப்பாண்டி ஆண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சொர்பின் (வயது40). பூதப்பாண்டி பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலரான இவர், இன்று காலையில் தனது மனைவியை வேலை க்காக மோட்டார் சைக்கி ளில் அழைத்துச் ெசன்றார். பூதப்பாண்டி அரசு மருத்துவமனை முன்பு பஸ்ஸில் அவரை ஏற்றிவிட்டு அங்கு நின்ற ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மர்ம நபர், தனது தாய்க்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு ரத்தம் தேவை ப்படுவதால், அந்த நபருக்கு போன் செய்ய வேண்டும் என்று கூறி சொர்பின் வைத்திருந்த செல்போனை கேட்டு உள்ளார். அவரும் தனது போனை அந்த நபருக்கு கொடுத்துள்ளார். செல்போனை வாங்கிய அந்த நபர், போனில் பேசிய படியே அங்கிருந்து மாயமாகி விட்டார்.

    தன்னிடம் செல்போன் வாங்கி நபரை சொர்பின் தேடினார். அப்போது தான், அந்த நபர் தனது செல்போனை நூதன முறையில் பறித்துச் சென்ற தை சொர்பின் அறிந்தார். அது குறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து செல்போன் பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • அறிவிக்கப்படாத அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக இன்வெர்ட்டர் செயல் இழந்துவிட்டது.
    • மின்சாரம் இன்றி காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள் திணறினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மண்டலம், கும்ம லட்சுமி புரத்தை சேர்ந்த 8 பேர் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் படுகாயமும், 6 பேர் லேசான காயமும் அடைந்தனர்.

    காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குருபம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயம் அடைந்த 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    ஆனால் அறிவிக்கப்படாத அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக இன்வெர்ட்டர் செயல் இழந்துவிட்டது.

    இதனால் மின்சாரம் இன்றி காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள் திணறினர். பின்னர் தங்களது செல்போனில் உள்ள டார்ச் வெளிச்சத்தில் உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தனர். இதனால் 2 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

    இதனை அறிந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் டாக்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேஷிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.
    • சுரேஷ் இளம் பெண் குளிப்பதை எடுத்த வீடியோவை தனது செல்போனில் இருந்து அழித்தது தெரியவந்தது.

    திருப்பதி:

    பெங்களூரை சேர்ந்த 26 வயது இளம்பெண். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் தனது குடும்பத்தினருடன் காளஹஸ்தி கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். கோவில் அருகே உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.

    இந்த விடுதியில் தொட்டம்பேடு மண்டலத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 24) என்பவர் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று காலை இளம் பெண்ணின் குடும்பத்தினர் லாட்ஜில் இருந்து வெளியே சென்றனர். இளம் பெண் மட்டும் லாட்ஜில் தனியாக இருந்தார்.

    அப்போது இளம்பெண் அறையில் குளித்துக் கொண்டு இருந்தார்.

    லாட்ஜ் ஊழியர் சுரேஷ் ஜன்னல் வழியாக இளம் பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இதனைக் கண்ட இளம் பெண் கத்தி கூச்சலிட்டார். இதுகுறித்து தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விடுதிக்கு விரைந்து வந்து சுரேஷை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேஷிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.

    இதில் சுரேஷ் இளம் பெண் குளிப்பதை எடுத்த வீடியோவை தனது செல்போனில் இருந்து அழித்தது தெரியவந்தது.

    போலீசார் சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோவில் அருகே உள்ள விடுதியில் இதேபோல் ஊழியர் ஒருவர் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுபோன்ற சம்பவங்களால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மீண்டும் நிகழாமல் தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் பறித்த வடமாநில வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது.
    • மாணவர்கள் திருடனை விரட்டிச் சென்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தாராபட்டியை சேர்ந்தவர் ரவி. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரை சேர்ந்தவர் கருப்பையா. இவர்கள் நாள்தோறும் மதுரைக்கு வேலைக்காக வந்து செல்கின்றனர்.

    அதன்படி இன்று காலை பெரியார் பஸ் நிலையம் வந்த 2 பேர் பஸ்சுக்காக காத்திருந்தனர். பஸ் வரும் வரை 2 பேரும் செல்போனை எடுத்து பார்த்துக் கொண்டி ருந்தனர்.

    அப்போது அவர்களை வடமாநில வாலிபர்கள் நோட்டமிட்டதாக தெரிகிறது. அதில் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரவி, கருப்பையா கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கி ருந்து ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த 2 பேரும் திருடன்...திருடன்... என கூச்சலிட்டனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள், மாணவர்கள் திருடனை விரட்டிச் சென்றனர்.

    எல்லீஸ் நகர் பாலம் கீழ்ப்பகுதியில் பிடிபட்ட திருடனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து செல்போன்களை மீட்டனர். இதனைத்தொடர்ந்து அந்த வாலிபர் திடீர்நகர் போலீசில் ஒப்படைக்கப் பட்டார். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்போன் பறிக்க அவருடன் மேலும் 4 பேர் வந்ததாக தெரிகிறது. அவர்கள் யார்? என்பது தொடர்பாகவும், வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த பெரியார் பஸ் நிலையத்தில் நடந்த செல்போன் பறிப்பு சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    • நோட்டுப் புத்தகத்தில் எதற்காக செல்போன் பயன்படுத்துகிறோம். அத்தியாவசிய காரணம் என்ன என்பது குறித்து பதிவு செய்ய வேண்டும்.
    • மாணவர்களுக்கு செல்போன் மூலம் ஆன்லைனில் ஒரு சில பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில அரசு பள்ளி, கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    ஆந்திராவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பணி செய்யும் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் வகுப்பறைக்குள் செல்போன் பயன்படுத்த கூடாது.

    காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை செல்போன்களை வகுப்பறைக்குள் கொண்டு வர க்கூடாது.

    பணிக்கு வரும் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் அங்குள்ள ஒரு அறையில் செல்போன்களை வைத்து விட்டு வகுப்பறைக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்.

    செல்போன் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தால் கல்லூரி முதல்வர் அல்லது பள்ளி தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற வேண்டும்.

    அங்குள்ள நோட்டுப் புத்தகத்தில் எதற்காக செல்போன் பயன்படுத்துகிறோம். அத்தியாவசிய காரணம் என்ன என்பது குறித்து பதிவு செய்ய வேண்டும்.

    அவ்வாறு முன் அனுமதிபெறாமல் முதல் முறையாக செல்போன் பயன்படுத்தினால் எச்சரிக்கை விடப்படும். தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவது தெரிய வந்தால் செல்போன் பறிமுதல் செய்யப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.

    செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு ஆசிரியர்கள் பேராசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மாணவர்களுக்கு செல்போன் மூலம் ஆன்லைனில் ஒரு சில பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அரசின் இந்த முடிவால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் என தெரிவித்தனர். இதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்களும் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • கடந்தவாரம் முதல்-மந்திரி அசோக் கெலாட் 1000 பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச மொபைல்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
    • திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்களை டிஜிட்டல் கல்வியறிவுடன் இணைப்பதாகும்.

    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவி காலம் நிறைவடைவதை தொடர்ந்து விரைவில் இங்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கவும், மீண்டும் ஆட்சி அமைக்கவும் காங்கிரஸ் கட்சி பல்வேறு அதிரடி வியூகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது.

    அதே வேளையில் இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. இதனிடையே ஆளும் காங்கிரஸ் கட்சி பெண்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளது. ஏற்கனவே வீடுகளுக்கு 200 யூனிட்டுக்கு கீழ் மின் கட்டணம் கிடையாது என அறிவித்துள்ள நிலையில் தற்போது அரசு செயல்படுத்தி வரும் இலவச செல்போன் திட்டம் பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்திரா காந்தி ஸ்மார்ட்போன் யோஜனா என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் மொத்தம் 1 கோடியே 40 லட்சம் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 40 லட்சம் பெண்களுக்கு இலவசமாக செல்போன் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை கடந்தவாரம் முதல்-மந்திரி அசோக் கெலாட் 1000 பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச மொபைல்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மொபைலுடன் இலவச இணையமும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்களை டிஜிட்டல் கல்வியறிவுடன் இணைப்பதாகும். இதனால் மாநில அரசு நடத்தும் பல்வேறு திட்டங்களைப் பற்றிய தகவல்களை அவர்கள் எளிதாகப் பெற முடியும் மற்றும் அவர்கள் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த மாநில அரசு தெரிவித்து உள்ளது.

    இந்த திட்டத்தில் பெண்களுக்கு ரியல்மி, ரெட்மி பிராண்டு ஸ்மார்ட் போன்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு மொபைல்போனின் விலை ரூ.5,999 மற்றும் ரூ.6,499 என்கின்றனர்.

    அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள், அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு அல்லது ஐ.டி.ஐ. படிக்கும் மாணவிகள் மற்றும் அரசிடம் இருந்து சமூக ஓய்வூதியம் பெறும் விதவை பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. பின்னர் படிப்படியாக அனைத்து பெண்களுக்கும் வழங்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    அசோக் கெலாட்டை வீழ்த்த பா.ஜ.க. பல்வேறு வியூகங்களை வகுத்த நிலையில் இந்த இலவச ஸ்மார்ட்போன் திட்டம் பெண்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு தனி மதிப்பை பெற்று கொடுத்துள்ளது. இதனால் பா.ஜ.க. திணறும் நிலை ஏற்பட்டு உள்ளது. தேர்தல் நெருங்கும்போது இரு கட்சிகளும் போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபடும் என தெரிகிறது.

    • சம்பவம் அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள சுனாபி நகரில் நடைபெற்றுள்ளது.
    • ‘டைவ்’ அடித்து குதித்து நீந்தி சென்று தனது முதல் முயற்சியிலேயே அந்த செல்போனை மீட்டு கொண்டு வந்து உரியவரிடம் ஒப்படைத்தார்.

    தொலைந்து போன செல்போனை கண்டுபிடிப்பதற்காக வாலிபர் ஒருவர் ஏரியில் குதித்து அதனை மீட்ட வீடியோ பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள சுனாபி நகரில் நடைபெற்றுள்ளது.

    அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஏரியையொட்டி நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக அவரது செல்போன் ஏரிக்குள் விழுந்துள்ளது. இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்து கதறி உள்ளார். இதைப்பார்த்த சைமன் என்ற வாலிபர் உடனடியாக ஏரிக்குள் 'டைவ்' அடித்து குதித்து நீந்தி சென்று தனது முதல் முயற்சியிலேயே அந்த செல்போனை மீட்டு கொண்டு வந்து உரியவரிடம் ஒப்படைத்தார்.

    இதை அங்கிருந்தவர்கள் பார்த்து சைமனை பாராட்டிய காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ 5 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளதோடு, நெட்டிசன்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

    • செல்போன் வாங்கி கேட்டதாகவும் பெற்றோர் பிறகு வாங்கி தருவதாக கூறியதாகவும் தெரிகிறது.
    • இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே நுள்ளிவிளையை சேர்ந்த வர் அசோக். இவருக்கு சத்தியபிரியா என்ற மனை வியும், அபிஷேக் என்ற மகனும், அஸ்மிதா என்ற மகளும் உள்ளனர். அஸ்மிதா (வயது 17) நெய்யூரில் உள்ள மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு முடிந்து விட்டு நர்சிங் படிப்புக்கு விண்ணப்பித்து இருந்தார். அதற்கு வேண்டி செல்போன் வாங்கி கேட்டதாகவும் பெற்றோர் பிறகு வாங்கி தருவதாக கூறியதாகவும் தெரிகிறது.

    இதனால் மன வருத்தத்தில் இருந்த அஸ்மிதா விஷத்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அஸ்மிதா உயிர் இழந்தார். இதுகுறித்து சத்தியபிரியா அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று அதிகாலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் பழைய பஸ் நிலையம் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.
    • அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராஜதுரை கையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர்.

    சேலம்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் அடுத்த காட்டாண்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் வீரபாலன். இவரது மகன் ராஜதுரை (25).

    இவர் இன்று அதிகாலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் பழைய பஸ் நிலையம் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.

    செல்போன் பறிப்பு

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராஜதுரை கையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து ராஜதுரை பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது சேலம் அரிசிபாளையம் ஆர்.டி.பால் தெருவை சேர்ந்த பிரகாசம் மகன் லோகேஷ் (18), பள்ளப்பட்டி நாராயணசாமிபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் பிரகாஷ் (20) என்பது தெரியவந்து.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பிரகாஷ் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவில் ஊழியர் தன்னால் எப்படி குரங்கிடம் இருந்து செல்போனை மீட்டு தர இயலும் என கேட்டார்.
    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பொருளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் நேற்று சுதந்திர தின விடுமுறை நாளை முன்னிட்டு மலைக்கோவிலில் உள்ள முருகனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவ்வாறு கூடி இருந்த பக்தர்களில் சிலர் மலை மீது அமர்ந்திருந்த குரங்குகளை தங்களது செல்போனின் மூலமாக படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

    அப்பொழுது ஒரு பக்தர் குரங்கின் அருகே சென்று போட்டோ எடுத்தார். தனக்கு ஏதோ தருகிறார் என நினைத்த குரங்கு செல்போனை திடீரென பறித்துக் கொண்டு ஓடியது. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர் கூச்சலிட்டார். செல்போனை பறித்த குரங்கு லாவகமாக தப்பி செல்போனை கையில் வைத்துக்கொண்டு மலை மீது உள்ள கட்டிடங்களில் தாவித் தாவி சென்றது. அந்த செல்போனை உணவு பண்டம் என நினைத்து கடித்தது. இதனால் பதறிப்போன பக்தர் செல்போனை கொடுக்குமாறு அந்த குரங்கைத் துரத்திச் சென்றார்.

    ஆனால் குரங்கு வேகமாக வேறு கட்டிடத்துக்கு தாவிச் சென்றது. செல்போனை பறி கொடுத்த பக்தர் அங்கு பணிபுரியும் ஊழியரிடம் சொல்லி செல்போனை மீட்டுத் தருமாறு கேட்டார். ஆனால் கோவில் ஊழியர் தன்னால் எப்படி குரங்கிடம் இருந்து செல்போனை மீட்டு தர இயலும் என கேட்டார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பொருளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குரங்கின் அருகே சென்று செல்போனை வைத்து படம் பிடிக்க வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வாழைப்பழம், தேங்காய், உணவு திண்படம் போன்றவற்றை பறித்துச் செல்லும் குரங்கு தற்போது செல்போனையும் பறித்து சென்றது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×