search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அயோத்யா"

    • அரிச்சல்முனை பகுதி ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய பகுதியாக கருதப்படுகிறது.
    • பிரதமரின் வருகையொட்டி 7 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பு.

    ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தனுஷ் கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதி. சாலையின் இருபுறமும் கடல் சூழ காட்சி தரும் தனுஷ்கோடி உலகில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் தனுஷ்கோடி செல்லாமல் ஊர் திரும்புவதில்லை.

    தனுஷ்கோடிக்கு எளிதாக சென்று வரும் வகையில் முகுந்தராயர் சத்திரத்தில் இருந்து அரிச்சல்முனை வரை புதிதாக சாலை அமைக்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த அரிச்சல்முனை பகுதி ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய பகுதியாக கருதப்படுகிறது. 

    அதாவது, இலங்கையை ஆண்ட ராவணன் சீதா தேவியை சிறைபிடித்து சென்றபோது, அவரை மீட்க ராமர் முதலில் தனுஷ்கோடி வந்தார். முன்னதாக திருப்புல்லாணி ஆதிஜெகநாதரிடம் வில், அம்பு பெற்றார் என்றும் பின்னர் அரிச்சல்முனையில் இருந்து பாலம் அமைத்து இலங்கை சென்றார் என்றும் ராமாயண காவியம் கூறுகிறது.

    மேலும், அந்த பகுதியில் ராமர் மணலால் சிவனை உருவாக்கி வழிபட்டார். அதேபோல் ராவணனை கொன்று சீதையை மீட்டு வந்த பின்னர் இதே அரிச்சல்முனையில் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவலிங்க பூஜை நடத்தியுள்ளார்.

    எனவே இங்கு வரும் பக்தர்கள் கடலில் இறங்கி புனித நீரை தெளித்து செல்வது வழக்கம். அந்த வகையில் ராமேஸ்வரம் வருகை தரும் பிரதமர் மோடி நாளை காலை தான் தங்கியிருக்கும் ஸ்ரீராம கிருஷ்ண மடத்தில் இருந்து சாலை மார்க்கமாக அரிச்சல் முனை செல்கிறார்.

    அங்கு கடலின் அழகை ரசிப்பதோடு, கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிவ லிங்க பூஜையில் கலந்து கொள்கிறார். 

    பின்னர், அங்கிருந்து தனுஷ்கோடி வரும் வழியில் அமைந்துள்ள கோதண்ட ராமர் கோவிலுக்கு செல்கிறார். இலங்கையை ஆண்ட ராவணின் தம்பியான விபீஷணன் ராமபிரான் மீது கொண்ட பற்று காரணமாக அண்ணனுக்கு எதிராக போரிட்டார்.

    இறுதியில் ராவணன் இறக்கவே அவரது தம்பியான விபீஷணனை ராமர் இலங்கை அரசனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அது நடந்த இடம் இந்த கோதண்டராமர் கோவில் என்பதால் ராமாயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.

    இந்த கோவிலில் பிரதமர் மோடி சங்கல்பம் செய்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார்.

    பிரதமர் கடற்கரை பகுதிக்கு வருவதையொட்டி இந்திய கடலோர காவல் படை, கடற்படையினர் உள்பட 7 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • 2019ம் ஆண்டில் அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு.
    • கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு.

    உத்தரபிரதேசம் அயோத்தியில் ராமர் கோவிலை வரும் 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

    கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முக்கிய பிரமுகர்களுக்கு, திரைப் பிரபலங்கள், முக்கிய கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 2019ம் ஆண்டில் அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், போப்டே, தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • ஆளில்லா விமானங்கள், 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்த முடிவு.
    • உத்தரவை கலால் ஆணையர் ஹரி சந்திர செம்வால் பிறப்பித்தார்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் உள்பட ஏராளமானோருக்கு அழைப்பிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

    விழாவை முன்னிட்டு, உத்தரப் பிரதேச அரசால் ஆளில்லா விமானங்கள், 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்த பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஒரு சில மாநிலங்களில் 22ம் தேதி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    இதற்கான உத்தரவை கலால் ஆணையர் ஹரி சந்திர செம்வால் நேற்று பிறப்பித்தார்.

    மேலும், இந்த அறிவிப்பால் மாநிலத்தில் மதுபான உரிமம் வைத்திருப்பவர்களுக்கு இழப்பீடு அல்லது உரிமைகோரல்கள் எதுவும் கிடைக்காது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • காவல்துறைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள்.
    • ரெயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    உ.பி மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உத்தரப் பிரதேச காவல்துறை ஆளில்லா விமானங்கள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

    அங்கீகரிக்கப்படாத ட்ரோனைக் கட்டுப்படுத்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக எஸ்பி செக்யூரிட்டி கவுரவ் வான்ஸ்வால் தெரிவித்தார். 

    மேலும், அயோத்தி மாவட்டத்தில் 10,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக டிஜி (சட்டம் ஒழுங்கு) பிரசாந்த் குமார் தெரிவித்தார். இது தவிர, காவல்துறைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

    மேலும், கோவில் நகரத்திற்கு செல்லும் சாலைகள் சுத்தப்படுத்தப்பட்டு வருவதாக டிஜி தெரிவித்தார். ஜனவரி 17 அல்லது 18 முதல் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது. அதற்காக அவ்வப்போது போக்குவரத்து அறிவுரைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரெயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.

    • டப்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் மேளம் உருவாக்கப்பட்டது.
    • ராமர் கோவில் வளாகத்தில் மேளம் நிறுவப்படும் என அறிவிப்பு.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு குஜராத்தில் இருந்து 500 கிலோ எடையுள்ள மேளம் சிறப்பு ரதத்தில் இன்று வந்தடைந்தது.

    குஜராத்தின் கர்னாவதியின் தர்யாபூர் விரிவாக்கத்தில் உள்ள டப்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் மேளம் உருவாக்கப்பட்டது என்று ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. 

    ராமர் கோவில் வளாகத்தில் மேளம் நிறுவப்படும் என அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்.

    மேளத்தை இங்கு கொண்டு வந்த குழுவின் உறுப்பினர் சிராக் படேல் கூறுகையில், "இது தங்கம் மற்றும் வெள்ளி அடுக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    மேளம் அமைப்பு இரும்பு மற்றும் செப்பு தகடுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.

    இந்த இசைக்கருவியை ஏற்றுக்கொள்ளுமாறு கோரி கோயில் அறக்கட்டளைக்கு கடிதம் அனுப்பியதாக குஜராத் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் ராவல் தெரிவித்தார்.

    • தீண்டாமை, சாதிவெறி, மூடநம்பிக்கை ஆகியவற்றை எதிர்க்கிறோம்.
    • அனைத்து மதத்தினரையும் மதிக்க வேண்டும் என்ற அரசியல் சாசனக் கொள்கையில் நான் உறுதியாக உள்ளேன்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில், காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜூனா கார்கே ஆகியோர் அழைப்பை நிராகரித்ததாக அறிவித்தனர்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, "ராமர் கோவில் திறப்பு விழா, பிரதமர் மோடியின் கட்சி நிகழ்வாக மாறியுள்ளது" என தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    ராமர் கோவில் திறப்பு விழாவில் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் சௌத்ரி ஆகியோர் பங்கேற்காததை ஆதரிக்கிறேன்.

    சாதி, மதம், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நடத்தப்பட வேண்டிய ஒரு நிகழ்வு, பிரதமர் மோடியின் கட்சி நிகழ்வாக மாறியுள்ளது. இது ராமர் மற்றும் 140 கோடி மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவமரியாதை.

    பக்தியுடன் நடத்த வேண்டிய மதச் சடங்கை அரசியல் பிரசாரமாக மாற்றி, இந்துக்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர். நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் தீண்டாமை, சாதிவெறி, மூடநம்பிக்கை ஆகியவற்றை எதிர்க்கிறோம்.

    பாஜக மற்றும் சங்பரிவார் தங்களின் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தும் தவறான இந்துத்துவத்தை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். அனைத்து மதத்தினரையும் மதிக்க வேண்டும் என்ற அரசியல் சாசனக் கொள்கையில் நான் உறுதியாக உள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விழாவில், முன்னாள் அரசியல்வதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் என 8000 பேர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் அயோத்தி கோவில் விழாவை அரசியலாக்க முயற்சிக்கின்றனர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் வரும் 22ம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த விழாவில், முன்னாள் அரசியல்வதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் என 8000 பேர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளப் போவதில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், " மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் அயோத்தி கோவில் விழாவை அரசியலாக்க முயற்சிக்கின்றனர். அந்த அற்புதமான கோவிலின் திறப்பு விழா பாஜக- ஆர்எஸ்எஸ் நிகழ்வு.

    மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்களால் அயோத்தியில் கோவில் திறப்பு விழா தேர்தல் நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது என்று அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஜனவரி 23 முதல் கோயிலுக்கு மக்கள் வரலாம்.
    • அனைத்து பக்தர்களும் சிறந்த அனுபவத்தைப் பெற விரும்புகிறோம்.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா, "ஜனவரி 23 முதல் நாடு முழுவதும் உள்ள பக்தர்களை வரவேற்க தயாராக இருப்பதாக" தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    ஜனவரி 22 ஆம் தேதி பிரமாண்ட கோவின் கும்பாபிஷேகத்திற்காக பரபரப்பான ஏற்பாடுகள் செய்து வருகிறோம். கோயிலில் ராமரின் பழைய மற்றும் புதிய சிலைகள் வைக்கப்படும்.

    குறிப்பாக, தேவையான அனைத்து சடங்குகளையும் பின்பற்றி, கோவிலில் பழைய மற்றும் புதிய இரண்டு சிலைகளையும் வைத்திருக்கிறோம். மற்ற அனைத்து சிலைகளும் ஜனவரி 21 ஆம் தேதிக்குள் இங்கு கொண்டு வரப்படும். 

    ஜனவரி 23 முதல் கோயிலுக்கு மக்கள் வரலாம். எந்த இடையூறும் இருக்காது. இங்கு நீங்கள் காணும் அனைத்து கட்டுப்பாடுகளும் அகற்றப்படும்.

    அனைத்து பக்தர்களும் சிறந்த அனுபவத்தைப் பெற விரும்புகிறோம் மற்றும் எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளக்கூடாது. இதற்காக, நாங்கள் பல மணிநேரம் ஆலோசித்து பணியாற்றுகிறோம்.

    மகா கும்பாபிஷேக விழாவை நாடு முழுவதும் நேரடியாக ஒளிபரப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பஜ்ரங் தளம் உள்பட 30-க்கும் மேற்பட்ட அமைப்பினர் ஈடுபட்டுள்ளார்கள்.
    • பணிகள் வருகிற 15-ந் தேதிக்குள் நிறைவடையும் என்றனர்.

    சென்னை:

    அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான ராமர் கோவிலில் வருகிற 22-ந் தேதி (திங்கள்) சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    மிகவும் கோலாகலமாக நடைபெற இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க புனித நிகழ்ச்சியில் நாடு முழுவதும் மக்கள் மனப்பூர்வமாக பங்கெடுப்பார்கள்.

    முதல் நாளில்தான் பங்கெடுக்க வேண்டும் என்பதல்ல. ராமர் கோவில் காலங்களை கடந்தும் நிலைத்து நிற்கும். மக்கள் சவுகரியப்பட்ட நாட்களில் சென்று ராமரை தரிசியுங்கள். 22-ந் தேதி வீடுகளில் விளக்கேற்றி வழிபடுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி நாடு முழுவதும் வீடு வீடாக சென்று மக்களை நேரில் அழைக்கும் திட்டத்தை இந்து அமைப்புகள் தொடங்கியுள்ளன.

    தமிழ்நாட்டில் சுமார் 2 கோடி குடும்பங்களை நேரில் அழைக்கிறார்கள். இதற்காக அயோத்தியில் இருந்து பூஜித்து எடுத்து வரப்பட்ட அட்சதை ராமர் படம், நிகழ்ச்சி பற்றிய துண்டு பிரசுரம் வந்துள்ளது.

    இவற்றை வீடு வீடாக கொடுத்து மக்களை அழைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், பா.ஜனதா, இந்து முன்னணி, அகில பாரத வித்யார்த்தி பரிசத், பஜ்ரங் தளம் உள்பட 30-க்கும் மேற்பட்ட அமைப்பினர் ஈடுபட்டுள்ளார்கள்.

    வீடுகளுக்கு செல்லும் போது ராமர் கோவில் திறக்கப்படுவது பற்றி கூறி அட்சதை, ராமர் படம், நிகழ்ச்சி விபர பிரசுரங்களையும் வழங்கி வருகிறார்கள்.

    இந்த பணியில் ஈடுபட்டு உள்ள சேவகர்களிடம் கேட்ட போது, இந்த புனித நிகழ்ச்சியை மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ராமர் எல்லோருக்கும் சொந்தம். இதில் பிரபலங்கள், முக்கிய பிரபலங்கள், சாதி, மதம் என்று எதுவும் பார்ப்பதில்லை. எல்லா வீடுகளுக்கும் நேரில் சென்று அழைக்கிறோம். இந்த பணிகள் வருகிற 15-ந் தேதிக்குள் நிறைவடையும் என்றனர்.

    • விழாவில் கலந்து கொள்ள கிட்டத்தட்ட 8,000 உயரதிகாரிகள் அழைப்பு.
    • புதிய விமான நிலையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ரெயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    அயோத்தியில் ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் ஜனவரி 22 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. அன்று நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள கிட்டத்தட்ட 8,000 உயரதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், தளத்தில் பணிபுரியும் 15% நபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, அயோத்தியில் புதிய விமான நிலையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ரெயில் நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

    கோவிலை காண நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் ஏற்கனவே வருகை தரத் தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக ஜனவரி 22ம் தேதி அன்று அயோத்திக்கு வர வேண்டாம் என பிரதமர் மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில்," பக்தர்களாகிய நாம் ராமருக்கு எந்த பிரச்சனையும் செய்ய விரும்ப மாட்டோம். பொது மக்கள் அனைவரும் ஜனவரி 23ம் தேதி முதல் நித்தியம் வரை வரலாம்... ராமர் கோவில் இன்றும் என்றென்றும் உள்ளது.

    ஜனவரி 22 ஆம் தேதி ஒவ்வொரு இந்தியரும் தங்கள் வீட்டில் இருந்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்" என்றார்.

    • ஜனவரி 22-ம் தேதி மதியம் 12 மணிக்கு விழா நடைபெறுகிறது.
    • ராமர் சிலையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பு.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கிட்டத்தட்ட தயாராக உள்ளது. ராமர் கோயில் வரும் ஜனவரி 22ம் தேதி பிரமாண்டமாக திறக்கப்படுகிறது.

    அடுத்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

    இந்நிலையில், கருவறையில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து, ராம் மந்திர் அறக்கட்டளையின் செயலர் சம்பத் ராய் கூறியதாவது:-

    ஜனவரி 22-ம் தேதி மதியம் 12 மணிக்கு விழா நடைபெறுகிறது. கருவறை தயாராக உள்ளது. சிலை தயாராக உள்ளது. ஆனால் கோயிலில் நிறைய வேலைகள் உள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கட்டுமானப் பணிகள் தொடரலாம்.

    பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அயோத்தி திறப்புக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். நகரத்தில் நெரிசலைத் தவிர்க்க, ஜனவரி 22-ம் தேதி அயோத்திக்கு வர வேண்டாம். அருகில் உள்ள சிறிய, பெரிய கோயிலில் ஒன்று கூடுங்கள். வேறு கடவுள் அல்லது தெய்வத்திற்கு உரியதாக இருந்தாலும் உங்களால் சாத்தியமான கோவிலுக்குச் செல்லுங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • விமான நிலையத்தின் முதல் கட்டம் டிசம்பர் 15ம் தேதிக்குள் தயாராகிவிடும் என்று அறிவிப்பு.
    • விமான நிலையம் மர்யதா புருஷோத்தம் ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும்.

    உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 22-ந்தேதி நடக்கிறது.

    நாடு தழுவிய அளவில் கும்பாபிஷேக விழாவை வெகு விமரிசையாக கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதனையொட்டி, அயோத்தி விமான நிலையமும் தயார் நிலையில் உள்ளது.

    அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டம் டிசம்பர் 15ம் தேதிக்குள் தயாராகிவிடும் என்று அறிவித்துள்ளார்.

    இந்த விமான நிலையம் மர்யதா புருஷோத்தம் ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும் என்றும் விமான நிலையத்தில் போயிங் 737, ஏர்பஸ் 319 மற்றும் ஏர்பஸ் 320 விமானங்கள் பயன்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×