search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vote"

    வேறு ஒருவரின் ஓட்டை நான் போடவில்லை, எனது வாக்கைத்தான் பதிவு செய்தேன். எனவே இதை கள்ள ஓட்டு என்று சொல்வது தவறு என்று நேற்று சிவகார்த்திகேயன் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
    நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்டு பள்ளிக்கு வந்தார். ஆனால் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லாததால் திரும்பிச் சென்றார். சில மணிநேரம் கழித்து மீண்டும் ஓட்டுபோட வந்த சிவகார்த்திகேயனை வாக்களிக்க ஓட்டுச்சாவடி ஊழியர்கள் அனுமதித்தனர்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் சிவகார்த்திகேயன் ஓட்டு போட்டது சர்ச்சையை கிளப்பியது. அவர் பதிவு செய்தது கள்ள ஓட்டு என்றும் விமர்சனங்கள் கிளம்பின. இதற்கு பதில் அளித்து சென்னையில் நேற்று சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி வருமாறு:-

    நாடாளுமன்ற தேர்தலில் நான் வாக்களித்ததை சர்ச்சையாக்கி உள்ளனர். எனது ஓட்டைத்தான் நான் பதிவு செய்தேன். அதற்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. நான் இந்த நாட்டின் குடிமகன். எனவே எனக்கு வாக்களிக்க உரிமை உள்ளது. தேர்தல் கமிஷனே அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.



    ஒரு மாதத்திற்கு முன்பு எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தது. இப்போது பட்டியலில் இல்லை என்றால் அது என்னுடைய தவறு இல்லை. நான் வேறு ஒருவர் பெயரில் ஓட்டு போடவில்லை. எனது வாக்கைத்தான் பதிவு செய்தேன். இதை கள்ள ஓட்டு என்று சொல்வது தவறு.

    எல்லோரும் ஓட்டு போட்ட மாதிரி தான் எனது வாக்கை பதிவு செய்தேன். பட்டியலில் பெயர் இல்லாதது எனது தவறு அல்ல. வாக்களிக்க அனுமதித்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று தான் தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார். என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றோ, விசாரணைக்கு அழைக்கப்படுவேன் என்றோ அவர் சொல்லவில்லை.

    இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.

    1 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்னும் ஓட்டு போடவில்லை. வாக்குச் சீட்டுகளை வாங்கி வைத்திருந்தாலும் அரசு ஊழியர்கள் இன்னும் தபாலில் அனுப்பாமல் உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 3 லட்சத்து 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் தேர்தலில் ஓட்டு போடுவதற்காக தபால் ஓட்டு போடும் வசதி உள்ளது. துறை அதிகாரியிடம் கையெழுத்து பெற்று தபாலில் வாக்களிக்க வேண்டும்.

    கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியிலும் தபால் ஓட்டை போடலாம் அல்லது எந்த வாக்குச்சாவடியில் பணியில் உள்ளாரோ அந்த பூத்திலும் கடைசியாக வாக்களிக்கலாம். இப்படி ஓட்டு போட 3 விதமான வசதிகள் உள்ளன.

    இந்த தேர்தலில் 1 லட்சம் போலீசார் தபால் ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர். ஆனால் 2 லட்சத்து 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தபால் ஓட்டுகளில் 1 லட்சத்து 75 ஆயிரம் ஓட்டுகள் தான் பதிவாகி உள்ளது.

    இன்னும் 1 லட்சம் தபால் ஓட்டுகள் வர வேண்டும். ஆனால் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் இன்னும் ஓட்டு போடாமல் உள்ளனர். வாக்குச் சீட்டுகளை வாங்கி வைத்திருந்தாலும் அரசு ஊழியர்கள் இன்னும் தபாலில் அனுப்பாமல் உள்ளனர்.

    இவர்களுக்கு 23-ந்தேதி காலை 8 மணி வரை ஓட்டு போட கால அவகாசம் உள்ளது. ஆனால் இன்னும் ஓட்டு போடாதது ஆர்வம் இல்லாததையே காட்டுகிறது.

    இதுகுறித்து உதவி தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி கொடுக்கும் போதே தபால் ஓட்டு போடுவதற்கான பயிற்சியும் கொடுக்கப்படுகிறது. எந்த வாக்குச் சாவடியில் பணியாற்ற செல்கிறாரோ அங்கேயே தனது வாக்கை பதிவு செய்யலாம் என்ற விவரத்தையும் சொல்லி கொடுத்துள்ளோம்.

    சிலர் வாக்குச்சீட்டை வாங்கி வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கையெழுத்து பெற்று தபாலிலும் வாக்களிக்கும் முறையை எடுத்து கூறி உள்ளோம்.

    சில ஊழியர்கள் வாக்குச் சாவடியில் பணியாற்றாமல் பறக்கும் படையில் இடம் பெற்றிருப்பார்கள். இவர்கள் ‘பூத்’துக்கு செல்ல முடியாததால் தபால் மூலம் தான் வாக்களிக்க இயலும். அவர்களுக்கும் விதிமுறைகளை எடுத்து சொல்லி உள்ளோம்.

    ஆனாலும் சிலர் வாக்களிக்க முன் வராமல் இருப்பது அவர்களது மனநிலையை பொருத்த முடிவாகும்.

    தபால் ஓட்டுகளை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாக துணை ஆட்சியர் மேற்பார்வையில் தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தபால் ஓட்டுகளை தவறாமல் பதிவு செய்யுங்கள் என்று தேர்தல் கமி‌ஷன் வலியுறுத்தி வந்தாலும் ஒவ்வொரு அரசு ஊழியர்களும் வாக்களித்தார்களா? என்பதை கண்டறிய தேவையான முயற்சி எடுக்காதது உண்மைதான்.

    சில அரசு ஊழியர்களுக்கு சொந்த ஊரில் ஓட்டு இருக்கும். பணிபுரியும் இடம் வேறொரு இடமாக இருக்கும். இவர்கள் ஓட்டு போட சொந்த மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று வர வேண்டும் அல்லது அதிகாரியிடம் கையெழுத்து பெற்று வாக்களிக்க வேண்டும்.

    இதற்காக லீவு போட்டு சென்று வர வேண்டுமா, என நினைத்து சிலர் வாக்களிக்காமல் இருக்கலாம்.

    ஆனாலும் தினமும் ஒவ்வொரு கலெக்டர் அலுவலகத்துக்கும் தினமும் தபால் ஓட்டு வந்து கொண்டிருக்கிறது. 23-ந்தேதி தான் எவ்வளவு தபால் ஓட்டுகள் வந்துள்ளது. எத்தனை பேர் ஓட்டு போடவில்லை என்பது முழுமையாக தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற வாக்குப்பதிவின்போது இருதய நோய் மருத்துவர் 80 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து வந்து தனது வாக்கை பதிவு செய்துள்ளார். #Jaipurcardiologist #parliamentelection
    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜிஎல் சர்மா என்ற இருதய நோய் மருத்துவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது சொந்த ஊர் டோங்க் மாவட்டத்தில் உள்ள சோடா கிராமம் ஆகும். இங்குதான் இவரது வீடு உள்ளது. அவரது வீட்டில் இருந்து மருத்துவமனை 80 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

    சோடா கிராமம் சவாய்மாதோபுர் மக்களவை தொகுதிக்குள் வருகிறது. இந்த தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடிவு செய்தார். மேலும், மக்களுக்கு ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் எண்ணினார்.

    இதனால் ஜெய்ப்பூரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு சைக்கிளிலேயே பயணம் செய்து வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

    இதுகுறித்து சர்மா கூறுகையில் ‘‘வாக்குப்பதிவு மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றின் விழிப்புணர்வுக்காகத்தான் இதை செய்தேன். என்னுடைய கிராமத்தை அடைய நான்கு மணி நேரம் ஆனது. நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சைக்கிள் ஓட்டுகிறேன். சைக்கிள் ஓட்டுவது இருதயத்திற்கு நல்லது’’ என்றார்.

    ராஜஸ்தானில் இன்று 13 மக்களை தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. #Jaipurcardiologist #parliamentelection
    40 சதவீத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தபால் ஓட்டை இன்னும் பதிவு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. #LokSabhaElections2019
    சென்னை:

    தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ந்தேதி நடந்து முடிந்தது. தேர்தல் பணியில் 3½ லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

    இவர்கள் ஓட்டு போடுவதற்கு தபால் ஓட்டு வழங்கப்படுவது வழக்கம். உயர் அதிகாரியிடம் கையெழுத்து பெற்று தபால் ஓட்டுக்கள் போடுவார்கள். அல்லது தபாலில் அதை அனுப்பி வைப்பார்கள். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தேர்தலுக்கு முன்பே தபால் ஓட்டு படிவம் வழங்கப்பட்டது.

    ஆர்வம் மிக்க ஊழியர்கள் உடனே அதை பூர்த்தி செய்து உயர் அதிகாரியிடம் கையெழுத்து வாங்கி தபால் ஓட்டுகளை அனுப்பி விட்டனர். ஆனால் இன்னும் சில ஊழியர்கள் தபால் ஓட்டை போடாமல் கையில் வைத்துள்ளனர். 40 சதவீத அரசு ஊழியர்கள் தபால் ஓட்டை இன்னும் பதிவு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இது குறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அன்பரசிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான கால அவகாசம் ஓட்டு எண்ணும் நாள்வரை அதாவது மே 23-ந்தேதி வரை உள்ளது. இந்த இடைப்பட்ட நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் தபால் வாக்கை பதிவு செய்யலாம்.

    இதற்காக 3 கடிதம் அரசு ஊழியர்களிடம் இருக்கும். வாக்குசீட்டு, தேர்தல் பணிக்கான கடிதம், அதிகாரியின் கையெழுத்திட்ட படிவம் இவற்றை இணைத்து வாக்களிக்க வேண்டும்.

    தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் அரசு ஊழியர்கள் சிலர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனால் வாக்களிக்காமல் இருந்திருக்கலாம். ஆனாலும் இன்னும் கால அவகாசம் இருப்பதால் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
     
    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019

    குஜராத் மாநிலத்தின் கிர் வனப்பகுதியில் ஒரேயொரு வாக்காளருக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி இன்று 100 சதவீதம் வாக்குப்பதிவை கண்டது. #LSpolls #GirForest #GirForestpollingbooth #100pcvote #BharatdasBapu
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் ஜுனகத் மாவட்டத்துக்குட்பட்ட கிர் வனப்பகுதியில் சிங்கங்களை பாதுகாக்கும் மிகப்பெரிய தேசிய பூங்கா அமைந்துள்ளது.

    இந்த வனப்பகுதிக்கு அருகாமையில் பாரத்தாஸ் பாப்பு என்பவர் வசித்து வருகிறார். அந்த மாவட்டத்துக்குட்பட்ட தொகுதிகளில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் பாரத்தாஸ் பாப்பு என்ற ஒரேயொரு வாக்காளருக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

    பாரத்தாஸ் பாப்பு இன்று இங்கு வந்து வாக்களித்தார். இதனால், 2019- பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை கண்ட தனிப்பெருமை இந்த  வாக்குச்சாவடி கிடைத்துள்ளது.



    தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரத்தாஸ் பாப்பு, ’ஒரு ஓட்டாக இருந்தாலும் வாக்குச்சாவடி அமைப்பதற்காக அரசு பணத்தை செலவிடுகிறது. என் இடத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதேபோல் நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து அனைத்து பகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தினார். #LSpolls #GirForest  #GirForestpollingbooth  #100pcvote #BharatdasBapu
    பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத் சென்று, தாயாரிடம் ஆசி பெற்றபின் தனது வாக்கை பதிவு செய்தார். #LokSabhaElections2019 #Modi
    அகமதாபாத்:

    பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

    பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.  அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, வாக்களிப்பதற்காக இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றார். காந்தி நகரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்ற அவர், தன் தாயாரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். மேலும் தன்னை பார்ப்பதற்காக வீட்டின் வெளியே திரண்டிருந்த மக்களையும் மோடி சந்தித்து பேசினார்.



    பின்னர் அங்கிருந்து ஜீப்பில் புறப்பட்ட பிரதமர் மோடி, அகமதாபாத்தின் ரானிப் பகுதியில் உள்ள நிஷான் உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று தனது வாக்கை பதிவு செய்தார். முன்னதாக வாக்குச்சாவடிக்கு வந்த மோடியை, காந்தி நகர் வேட்பாளர் அமித் ஷா வரவேற்று அழைத்துச் சென்றார். #LokSabhaElections2019 #Modi
    கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். #LokSabhaElections2019 #PinarayiVijayan
    கண்ணூர்:

    பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

    பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.  அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டம்  பினராயி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.



    கர்நாடக மாநிலம் ஷிமோகா தொகுதி பாஜக வேட்பாளர் ராகவேந்திரா ஷிகாரிபுரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, வாக்களிப்பதற்காக இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றார். காந்தி நகரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்ற அவர், தன் தாயாரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். மேலும் தன்னை பார்ப்பதற்காக வீட்டின் வெளியே திரண்டிருந்த மக்களையும் மோடி சந்தித்து பேசினார்.  #LokSabhaElections2019 #PinarayiVijayan
    கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு பணம் கொடுக்க நின்ற தி.மு.க. பிரமுகர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார், பறக்கும் படை அதிகாரி நாகராஜ் தலைமையில் நேற்று கிருஷ்ணகிரி அருகே மாதேப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். 

    அப்போது அந்த பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை போலீஸார், சுற்றி வளைத்து, பிடித்து விசாரணை நடத்தினர். அதில், தி.மு.க. கட்சியை சேர்ந்த மரிக்கம்பட்டி முருகன் (வயது 50), கோவிந்தசாமி (67) என்பது தெரிய வந்தது. 

    இவர்கள் 2 பேரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 13 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
    ஓமலூர் அருகே ஒட்டு போட்ட முதியவர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேட்டுப்பட்டியை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 74). இவர் இன்று காலை அங்குள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

    பின்னர் வெளியில் வந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டனர்.

    ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அங்கு விரைந்து சென்று அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பாராளுமன்றத் தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். #LokSabhaElections2019 #MKStalin
    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவர் தன் மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஆட்சி மாற்றத்தை உருவாக்க உங்கள் வாக்குகள் அமைந்திட வேண்டும். எல்லோரும் தவறாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். இது முக்கியமான தேர்தலாக அமையப்போகிறது.



    500 ரூபாய், 1000 ரூபாய், 2000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாய்.. சில இடங்களில் அதையும் தாண்டி பணம் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக செய்தி வந்துகொண்டிருக்கிறது. அதையெல்லாம் மீறி நோட்டுக்கு அடிபணியாமல் வாக்காளர்கள் ஜனநாயகத்தை பாதுகாப்பார்கள் என்று நம்புகிறேன்.

    தேர்தல் ஆணையம் மத்திய அரசுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். தேர்தல் ஆணையம் பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிசெய்யும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது அதிமுகதான் என்றார்.

    நாகர்கோவிலில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் வாக்களித்தார். உடுமலையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன்,  பண்ருட்டி மேல்குமாரமங்கலத்தில் அமைச்சர் சம்பத், மதுரை அண்ணா நகரில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், புதுக்கோட்டை இலுப்பூரில் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்களித்தனர். #LokSabhaElections2019 #MKStalin
    பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பள்ளி மாணவர் தர்ஷன் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். #Election2019 #Vote
    கோவை:

    கோவை கணபதியை சேர்ந்த சக்திவேல், அனிதா தம்பதியின் மகன் தர்ஷன் (வயது 8). இவர் ஸ்டேன்ஸ் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுவனுக்கு ஓவியத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளது. இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி ஓவியம் வரைய திட்டமிட்டார். இதையடுத்து தனது தந்தையின் உதவியுடன் கடந்த 7-ந் தேதி தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஓவியம் வரைய தொடங்கி 14-ந் தேதி முடித்தார். இதில் அவர் மொத்தம் 1,050 ஓவியங்கள் வரைந்தார்.

    இந்த ஓவியத்தில் விரலில் அழியாத மை வைப்பது போன்றும், அதை சுற்றிலும் தேசிய கொடியில் உள்ள நிறங்களும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர ஓவியங்களில் வாக்களிக்க தயார், உனது ஓட்டு, உனது உரிமை, வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன், நல்ல இந்தியா அமைய வாக்களியுங்கள், உங்கள் விரலின் வலிமை உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து சிறுவன் தர்ஷன் தனது ஓவியங்களுடன் கலெக்டர் ராஜாமணியை பார்த்தார். அப்போது கலெக்டர் சிறுவனின் திறமையை பாராட்டினார். இதுகுறித்து சிறுவன் தர்ஷன் கூறியதாவது:- எனக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. தற்போது நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஓவியங்கள் 1,050 வரைந்து உள்ளேன். இதற்கு 8 நாட்கள் ஆனது. வலிமையான நாடு அமைய அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
    தர்மபுரி மாவட்ட ஓட்டல்களில் நாளை வாக்களித்து விட்டு ஓட்டல்களுக்கு செல்பவர்கள் வாக்களித்த கைவிரல் மையை காண்பித்தால் 10 சதவீத தள்ளுபடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
    தர்மபுரி:

    தர்மபுரி பாராளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.

    இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்ய தர்மபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆலோசனைப்படி தர்மபுரி மாவட்ட ஓட்டல்களில் நாளை வாக்களித்து விட்டு ஓட்டல்களுக்கு செல்பவர்கள் வாக்களித்த கைவிரல் மையை காண்பித்தால் சாப்பிட்ட உணவுக்கான கட்டணதொகை மற்றும் பார்சல் கட்டணதொகையில் 10 சதவீத தள்ளுபடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் மத்தியில் வாக்குப்பதிவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியை மேற்கொள்வதாக தர்மபுரி மாவட்ட ஓட்டல் சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
    ×