search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LSpOLLS"

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் நாங்குநேரி எம்எல்ஏ பதவியிலிருந்து இன்று விலகினார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.

    இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் காங்கிரசும் இடம்பெற்றது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இதையடுத்து எச்.வசந்த குமார் இனி எம்.பி. அடையாளத்துடன் மக்களவைக்கு செல்ல இருக்கிறார். எனவே அவர் ஏற்கனவே வகித்து வரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார்.

    இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்று,  சபாநாயகரிடம் எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்துள்ளார்.

    குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று 16வது மக்களவையினை கலைக்க உத்தரவிட்டார்.
    டெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 349 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் அமைச்சரவை மற்றும் மக்களவை முடிவுக்கு வருவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதன் பின்னர்  தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி.

    பிரதமர் மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், புதிய அரசு அமையும் வரை பிரதமராக நீடிக்குமாறு மோடியை கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில் 16வது மக்களவையை கலைக்குமாறு மத்திய அமைச்சரவை அளித்த தீர்மானத்தை ஏற்று, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று 16வது மக்களவையை கலைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். 
    பாராளுமன்ற தேர்தல் வெளியாகி, மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இது குறித்து மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கவிதை தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
    புது டெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் வரலாறு காணாத அளவு பாஜக தனிப்பெரும்பானமையுடன் அமோக வெற்றி பெற்றது. மேற்கு வங்காளம் திரிணாமுல் காங்கிரஸின் எஃகு கோட்டை ஆகும். இதனை தகர்த்து பாஜக 2வது இடத்தை பெற்றது.

    திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களும், பாஜக 18 இடங்களும், மற்றவை ஓரிடமும் பெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் மேற்கு வங்காளத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். 



    இந்த தேர்தல் முடிவுகள் குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கவிதை தொகுப்பு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறுகையில், ‘மதவாதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆக்கிரமிப்பு மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய இரண்டுமே ஒவ்வொரு மதத்திலும் இருக்கிறது.

    வங்காளத்தில் மறுமலர்ச்சி உதிப்பதற்கான சேவை புரியவே  நான்  இருக்கிறேன். மத ஆக்கிரமிப்புகளை விற்பனை செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை’ என ஒரு கவிதையையே தொகுத்து வழங்கியுள்ளார்.

    இந்த தொகுப்பினை ‘ஐ டோண்ட் அக்ரி’ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளார். பாஜகவின் வெற்றியை ஏற்க மறுப்பதால், மம்தா இப்படி வெளியிட்டுள்ளார் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 






     

     

     
    பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியான நிலையில், இந்தியா முழுவதும் மொத்தம் 76 பெண் எம்.பிக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக செல்ல உள்ளனர்.
    புது டெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 716 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில்  போட்டியிட்ட பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை கட்சிவாரியாக பின்வருமாறு:

    பாஜக - 47
    காங்கிரஸ்-54
    பகுஜன் சமாஜ் கட்சி - 24



    இந்த பெண் வேட்பாளர்களில் பாஜகவில் பிரக்யா சாத்வி, ஸ்மிரிதி இரானி உட்பட 34 பேரும், காங்கிரஸ் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோதிமணி, மற்றும் சோனியா காந்தி ஆகியோரும், பகுஜன் சமாஜ் சார்பில் ஒரு வேட்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் சுயேட்சையாக  நின்ற 222 பெண் வேட்பாளர்களில் ஒருவர் மட்டும் வெற்றி பெற்றார்.



    இந்நிலையில் ஏற்கனவே எம்.பியாக இருந்த 41 பேர்களில் சோனியா காந்தி, ஹேம மாலினி உட்பட 28 பேர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் மாபெரும் வெற்றிப்பெற்ற கனிமொழி, தென்சென்னை தொகுதியில் அபார வெற்றி பெற்ற தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரும் பாராளுமன்றத்துக்கு செல்ல உள்ளனர். 
    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளுக்கு பின்னர், திமுக தேசிய அளவில் என்ன சாதனை படைத்துள்ளது என்பதை பார்ப்போம்.
    புது டெல்லி:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.  தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வாக்கு எண்ணிக்கையில் தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுக, பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் இருந்து வந்தது.

    தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில், 38 தொகுதிகளில் திமுக கூட்டணியும், ஒரு இடத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.



    தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அவரவர் தனி சின்னத்திலும், மதிமுக, ஐ.ஜே.கே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள், திமுகவின் நிரந்தர சின்னமான 'உதயசூரியன்' சின்னத்திலும் போட்டியிட்டனர்.

    திமுகவுடனான இந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. தேசிய அளவில் பாஜக, 'தாமரை' சின்னத்தில் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கிறது.

    இதையடுத்து காங்கிரஸ் 'கை' சின்னத்தில் 52 இடங்கள் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக இடம் பிடித்துள்ளது.

    மற்ற மாநில கட்சிகளை பின்னுக்கு தள்ளி, தமிழகத்தில் 23 இடங்களில் வெற்றிப்பெற்று  தேசிய அளவில் அதிக மக்களவை தொகுதி உறுப்பினர்களை கொண்ட கட்சிகளின் பட்டியலில் திமுக மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

    திமுகவையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றிப்பெற்று நான்காவது இடத்திலும், ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ் போன்ற பிற கட்சிகள் அடுத்தடுத்தும் இடம் பெற்றுள்ளன.  

     



     
    பாராளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமரான மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ வாழ்த்துச் செய்தி கூறியுள்ளார்.
    ஒட்டாவா:

    பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில்,  பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 343 இடங்களில் முன்னிலை வகித்தது.

    மேலும் பாஜக மட்டும் தனித்து 303 இடங்களில் வெற்றியை உறுதி செய்தது.  இதனால், மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.



    இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ரஜினி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், உலக தலைவர்கள் பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ, பிரதமர் மோடிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.  

    கனடா பிரதமர் ஜஸ்டீன் கூறுகையில், 'மீண்டும் வெற்றி பெற்று இந்தியாவில் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா அரசின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கனடா வாழ் இந்தியர்களின் வாழ்க்கை மேம்பாடு, கல்வி, வர்த்தகம், முதலீடு, வாழ்க்கை சூழலியல் மாற்றம் போன்ற துறைகளில் மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்' என கூறினார். 
    பாராளுமன்ற தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெற்றுள்ள நிலையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
    புதுடெல்லி:

    ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 343 இடங்களில் ஏறத்தாழ வெற்றியை உறுதி செய்துள்ளது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களில் வெற்றியை உறுதி செய்கிறது. இதனால், மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.



    பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. தற்போதைய மக்களவையின் பதவிகாலம் முடிந்து, புதிய மக்களவை தொடங்குவதோடு, பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளதால் அதையொட்டி, இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று மாலை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைக்க பரிந்துரை விடுக்கப்படும். கேபினட் பரிந்துரையை தொடர்ந்து, தீர்மானமாக ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். இதையடுத்து, ஜனாதிபதி 16-வது மக்களவையை கலைத்து உத்தரவு பிறப்பிப்பார்.

    17-வது மக்களவை அதாவது புதிய அரசு அடுத்த மாதம் 3 ஆம் தேதிக்குள் பதவியேற்க வேண்டும். தேர்தல் ஆணையர்கள் ஜனாதிபதியை சந்தித்து, புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை அளித்த பிறகு புதிய அரசை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் துவங்கும். 
    பாராளுமன்ற தேர்தலின் நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆ.ராசா சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
    நீலகிரி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நீலகிரி தொகுதியின் திமுக வேட்பாளராக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஆ.ராசா, 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். 

    இதையடுத்து அப்பகுதியின் திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
    காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திர விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அமைதியாக இருப்பது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.
    ஸ்ரீநகர்:

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில் உள்ள பதிவை மாற்ற முடியும் என்ற புதிய குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் சில குறிப்பிட்ட தொகுதிகளில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    வட மாநிலங்களில் பல தொகுதிகளில் மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக தகவல்கள் பரவியபடி உள்ளன. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் இந்த பரபரப்பு அதிகளவில் பரவி உள்ளது.



    இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடக்கிறது என ஆதாரங்கள் இருந்தபோதும் தேர்தல் ஆணையம் அமைதி காப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.

    மேலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவுகள் குறித்து கூறுகையில், ‘பாஜக வெற்றி பெற்றால் அது மக்களின் முடிவு. இதனை யாரும் தடுக்க முடியாது’ என கூறினார்.  

    பாஜக வெற்றி பெறுவதோ, தோல்வி அடைவதோ உலகின் இறுதி நாள் இல்லை எனவும் மெகபூபா குறிப்பிட்டுள்ளார்.

    காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா,தேர்தலுக்கான அனைத்து கருத்துக்கணிப்புகளும் தவறாக இருப்பதில்லை என கூறியுள்ளார்.
    ஸ்ரீநகர்:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி  நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று நேற்றுடன் நிறைவடைந்தது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இந்த தேர்தலின் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    இதில் பாஜக அதிக இடங்கள் பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என வெளியிடப்பட்டுள்ளது.  இந்த கருத்துக்கணிப்புகள் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இது குறித்து கூறுகையில்,  'தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இத்தகைய கருத்துக் கணிப்புகளில் எனக்கு ஒரு போதும் நம்பிக்கை கிடையாது.


    மக்களின் விருப்பம் என்ன என்பது 23ம் தேதி தெரிந்து விடும். அந்த முடிவுக்கு ஏற்ப எங்களது நடவடிக்கைகள் அமையும்' என கூறினார்.

    இதையடுத்து காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா கருத்துக்கணிப்புகள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

    ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்த பின்னர் வரும் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தவறாக இருக்க முடியாது. சமூக வலைத்தளங்களில் இருந்தும், தொலைக்காட்சிகளில் இருந்தும் நாம் வெளிவர வேண்டும். தேர்தல் முடிவுகளுக்காக 23ம் தேதி வரை அனைவரும் காத்திருக்க தான் வேண்டும்.

    ஒரு அரசியல் கட்சி கருத்துக்கணிப்புகளில் வெற்றி பெறும் சூழலை உருவாக்கவில்லை என்றால், அக்கட்சி ஏற்கனவே தேர்தல் ஆட்டத்தில் தோற்றுவிட்டது என்று தான் அர்த்தமாகும்.     

    இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.



     
    பஞ்சாப் மாநில மந்திரியும், காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளருமான நவ்ஜோத் சிங் சித்து இன்று பிரசாரப்பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது ராகுல் காந்தி பீரங்கி, நான் ஏகே 47 என கூறினார்.
    பிலாஸ்பூர்:

    இமாச்சலப்பிரதேசத்தில் வரும் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் தேர்தல் பிரசாரம், செய்தியாளர் சந்திப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பஞ்சாப் மாநில மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான நவ்ஜோத் சிங் சித்து, இமாச்சலப்பிரதேசத்தின் பிலாஸ்பூர் பகுதியில் இன்று காலை  தேர்தல் பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:



    நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். மோடி, ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் செய்தாரா இல்லையா என்பது குறித்து நாட்டின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று அவருடன் வாக்குவாதம் செய்ய நான் தயார். இதில் ஒரு வேளை நான் தோற்றால் அரசியலை விட்டு விலகவும் தயார்.

    கடந்த 2014ம் ஆண்டு கங்கையின் புதல்வனாக மோடி வந்தார். இப்போது ரபேல் ஏஜென்டாக வெளியேற போகிறார். ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறந்தவர் மற்றும் உயர்வானவர். அவர் பீரங்கி,  நான் ஏகே 47.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து மம்தா பானர்ஜி - பாஜக இடையேயான வார்த்தை மோதல் வலுப்பெற்றுள்ளது.
    கொல்கத்தா:

    மேற்குவங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் நேற்று பாஜக தலைவர் அமித்ஷா, தேர்தல் பிரசார பேரணி நடத்தினார். அங்குள்ள கல்லூரி சாலையில் கொல்கத்தா பல்கலைக்கழக வளாகம் அருகே பேரணி சென்று கொண்டிருந்தது.

    அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டியும், ‘அமித்ஷா திரும்பிப்போ’ என்ற பதாகைகளை காட்டியும் கோ‌ஷமிட்டனர்.

    பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி அருகே பேரணி மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணவர்கள் கற்களை வீசினார்கள். உடனே பாஜக தொண்டர்கள் விடுதி கதவுகளை பூட்டிவிட்டு, வெளியில் இருந்த மோட்டார்சைக்கிள் மற்றும் சைக்கிள்களுக்கு தீ வைத்தனர்.



    விடுதிக்கு வெளியே இருந்த தத்துவ மேதை வித்யாசாகரின் மார்பளவு சிலையையும் உடைத்தனர். பின்னர் ஏராளமான போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் அங்கு அமைதி திரும்பியது.

    இதுபற்றி அமித்ஷா கூறும்போது, ‘‘திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் என்னை தாக்க முயன்றனர். மம்தா பானர்ஜி வன்முறையை தூண்டிவிடுகிறார். ஆனாலும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். விவேகானந்தர் இல்லத்துக்கு செல்ல நினைத்தேன். ஆனால் போலீசார் என்னை அனுமதிக்கவில்லை’’ என்றார்.

    இந்த வன்முறை குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்காளம் முதல்வர்  மம்தா பானர்ஜி,  ‘பாஜக வெளியில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது’ என கடுமையாக சாடினார். இதையடுத்து பாஜக- மம்தா பானர்ஜிக்கு இடையேயான வார்த்தை மோதல் மேலும் வலுப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
     
    ×