search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thambi Durai"

    குடும்ப அரசியல் கட்சி நடத்துபவர்கள் வெற்றி பெறுவது நாட்டிற்கு நல்லதல்ல என்பதற்காகத்தான் அ.தி.மு.க. உருவாக்கப்பட்டது என தம்பிதுரை கூறினார். #ADMK #Thambidurai #DMK #Congress
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியப் பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பி துரை, ரத்தினவேல் எம்.பி., மற்றும் அதிகாரிகள் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். பின்னர் கன்னிவடுகப்பட்டியில் மு.தம்பிதுரை எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒவ்வொரு கட்சிகளுக்கும் என தனிக்கொள்கை இருக்கின்றது. தேர்தல் கூட்டணிக்காகத்தான் சில கட்சிகள் ஒன்று சேர்வார்கள். தேர்தல் வரும் போது கூட்டணி அமைப்பது வழக்கம். அண்ணா, ராஜாஜியுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தார் என்பது நாம் அறிந்ததே.



    நாங்கள் இந்த கூட்டணி அமைத்ததற்கு காரணம் தி.மு.க.-காங்கிரஸ் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகத்தான். குடும்ப அரசியல் கட்சி நடத்துபவர்கள் வெற்றி பெறுவது நாட்டிற்கு நல்லதல்ல என்பதற்காகத்தான் அ.தி.மு.க. உருவாக்கப்பட்டது.

    2004-ல் பா.ஜ.க., 2009ல்பா.ம.க.வுடன் கூட்டணி வைத்தோம். அதுபோலத்தான் காலத்திற்கேற்ப கூட்டணி மாறும். நம் இனத்தையே அழித்த காங்கிரஸ்- தி.மு.க. வரக்கூடாது என்பது தான் எங்கள் நோக்கம்.

    தமிழக அரசை மத்திய அரசு வஞ்சித்தது உண்மை தான். இவ்வளவு காலம் எதிர்க்கட்சியாக இருந்ததால் தான் தமிழகத்திற்கான திட்டங்கள் பெற முடியாமல் இருந்ததாக தலைமை கருதுகிறது.  மீண்டும் மோடி ஆட்சி தான் வர இருக்கின்றது.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #Thambidurai #DMK #Congress
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் மத்திய மந்திரி பியூஷ் கோயல், துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். #Tirupati #PiyushGoyal #ThambiDurai
    திருமலை:

    தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் மத்திய மந்திரி பியூஷ் கோயல், துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் இன்று காலை திருப்பதி வந்தனர்.

    அவர்கள் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு பட்டு வஸ்திரம், பிரசாதம் வழங்கப்பட்டது.

    பின்னர் கோவில் வளாகத்தை பியூஷ் கோயல் சுற்றி பார்வையிட்டார். தம்பிதுரை அவருக்கு இடங்களை சுட்டிகாட்டி விளக்கமளித்தார்.

    இதையடுத்து தம்பிதுரை அளித்த பேட்டியில்:- பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. , பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறுவதற்காக ஏழுமலையானை தரிசனம் செய்தோம் என்றார். #Tirupati #PiyushGoyal #ThambiDurai
    அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியால் தமிழக மக்களுக்கு லாபம் தான் என்று கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #ThambiDurai #BJP #Congress #Thirunavukkarasar
    கரூர்:

    கரூர் பசுபதிபாளையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக ஒருமையில் பேசுவதை கவனித்து இருப்பீர்கள். தங்களால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது, வெற்றி பெற முடியாது என்ற மன அழுத்தத்தால் அநாகரீகமான முறையில் பேசிக்கொண்டு இருக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தல் உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல் என எந்த தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறப்போவது இல்லை. இந்த விரக்தியின் விளிம்பில் சவால்கள் விட்டுக்கொண்டு இருக்கிறார். பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. தலைவர்கள் உரிய முடிவு எடுப்பார்கள் என்று நான் தெரிவித்து இருந்தேன். அந்த அடிப்படையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில்தான் ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களுக்கு துரோகம் செய்த கட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    மத்தியில் வரப்போகும் ஆட்சி கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த காரணத்தால் மத்திய அரசிடம் இருந்து கேட்ட நிதியை பெறமுடியவில்லை. வரப்போகும் ஆட்சி கூட்டணி ஆட்சி என்பதால் ரூ.20 கோடி என்ன, ரூ.50 ஆயிரம் கோடி கூட கேட்டுப்பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியால் தமிழக மக்களுக்கு லாபம்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    பின்னர் அவரிடம் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை கட்டாய திருமணம் என்று விமர்சித்து உள்ளாரே? என்று கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த தம்பிதுரை, புரோகிதர்தான் கட்டாய திருமணமா? இல்லையா? என்பதை சொல்லவேண்டும், திருநாவுக்கரசர் தற்போது பதவி இல்லாமல் அம்போ என நிற்கிறார். அவர் சொல்வதை யாரும் கேட்க வேண்டாம் என்றார். #ADMK #ThambiDurai #BJP #Congress #Thirunavukkarasar
    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்பதால் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்துவதாக தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார். #ADMK #ThambiDurai #DMK MKStalin
    கரூர்:

    கரூர் மாவட்டம் பவித்திரம் பகுதியில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியாவிற்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உலகிலேயே சிறந்தது இந்திய உளவுத்துறையும், தமிழக உளவுத்துறையும் தான். காஷ்மீர் சம்பவத்தில் உளவுத்துறைக்கு களங்கம் கற்பிப்பது சரியாக இருக்காது.

    தவறு நடந்திருந்தாலும் பயங்கரவாதிகள் 350 கிலோ வெடிமருந்துகள் கொண்டு வந்ததை கண்டுபிடித்து கூறியது உளவுத்துறைதான். 2012-ம் ஆண்டு நீட் தேர்வை ஒரு மாநிலத்தில் நடத்தி காட்டியது காங்கிரஸ்தான். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததும் காங்கிரஸ் தான்.

    இலங்கை 1½ லட்சம் தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த ராஜபக்சேவுக்கு உறுதுணையாக இருந்தது தி.மு.க.-காங்கிரஸ்தான். மேலும் காவிரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் தி.மு.க.தான் காரணம்.

    காங்கிரஸ் ஆட்சியின் போது மு.க.அழகிரி மத்திய மந்திரியாக இருந்தது மு.க.ஸ்டாலினுக்கு பிடிக்காததால் இலங்கை பிரச்சனையை காரணம் காட்டி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியது. அதன் பிறகு 2014-ல் தனித்து போட்டியிட்ட தி.மு.க. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.

    கோப்புப்படம்

    தி.மு.க.வுக்கு எந்த கொள்கையும் கிடையாது. மக்களால் புறக்கணிக்கப்பட்ட இயக்கம். அண்ணாவுக்கு பின்னர் தி.மு.க.வை மக்கள் இயக்கமாக மாற்ற மு.க.ஸ்டாலினால் முடியவில்லை. இப்போது போர்வையை விரித்துக் கொண்டு கிராம சபை கூட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கிறார்.

    அ.தி.மு.க. வலிமையான இயக்கம். பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று விடும் என்பதால் இப்போது மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்திக்கொண்டு இருக்கிறார். பேசுவதற்கு எதுவும் இல்லாததால் அ.தி.மு.க. குறித்து அவர் விமர்சனம் செய்கிறார். வருகிற தேர்தலில் அவரால் வெற்றி பெற முடியாது. எப்போதும் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆக முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரிடம் நிருபர்கள் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி ஏற்பட்டால் பலன் கிடைக்குமா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தம்பிதுரை எம்.பி., கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க.வில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. இதனால் அதுபற்றி நான் கருத்து கூற முடியாது என்றார். #ADMK #ThambiDurai #DMK MKStalin
    ஜெயலலிதா இறப்புக்கு காரணமான தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். #Jayalalithaa #ThambiDurai #DMK
    கரூர்:

    கரூர் அருகே உள்ள சணப்பிரட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு கீதா மணிவண்ணன். எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களின் தேவைகளை அறிந்து அதனை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு இருக்கிறது. கரூர் தொகுதியில் தான் எம்.பி.யாக இருக்கிறேன். எனவே மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிடவே விருப்ப மனு கொடுத்துள்ளேன். அதிக எம்.பி.க்களை கொண்ட கட்சி தான் நாட்டின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும். அந்த சூழல் தி.மு.க.வுக்கு இல்லை.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தமிழகத்தில் ஒரு இடத்திலும் வெல்ல முடியாது. மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்துக்கொண்டுதான் சுற்றுப்பயணம் செய்கிறாரே தவிர, பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அல்ல. யார் இந்த நாட்டின் பிரதமர் என சொல்லும் அளவுக்கு தி.மு.க. இருப்பதாக தெரியவில்லை.



    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட காரணமே தி.மு.க. தான். அவர்கள் தொடர்ந்த வழக்கினால்தான் மனஉளைச்சலுக்கு ஆளாகி உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஜெயலலிதா இறப்புக்கு காரணமான தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #ThambiDurai #DMK
    அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை விருப்ப மனு அளித்துள்ளதால் கரூர் தொகுதியில் தான் மீண்டும் போட்டியிட உத்தரவாதம் இல்லை என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ThambiDurai #ADMK
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக அ.தி.மு.க.வை சேர்ந்த தம்பிதுரை இருந்து வருகிறார். இவர் பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவியையும் வகித்து வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தம்பிதுரை கடந்த சில மாதங்களாக கரூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு, மனுக்களை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு செய்துள்ளார். இதனிடையே விருப்ப மனு தாக்கலின் கடைசி நாளான நேற்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியும் கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

    தம்பிதுரை கரூர் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வரும் நிலையில் அமைச்சரின் தந்தையும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இது தொடர்பாக நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த தம்பிதுரை, ஜனநாயக நாட்டில் அரசியலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றார். இந்த நிலையில் இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சீத்தப்பட்டி காலனி பகுதியில் தம்பிதுரை எம்.பி. பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு, மனுக்களை பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். கரூர் பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளேன். எனக்கு சீட் கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியும் கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

    அவருக்கு கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் அவரது வெற்றிக்காக பாடுபடுவேன். அ.தி.மு.க. சார்பில் யார் போட்டியிட்டாலும் வெற்றிக்கு அயராது உழைப்பேன்.

    தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க அ.தி.மு.க. சார்பில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நான் இடம்பெறவில்லை. அதனால் நான் கூட்டணி குறித்து எதுவும் சொல்ல முடியாது. பாராளுமன்றத்தில் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தோம். அதற்கும் கூட்டணிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் அவரிடம் திருப்பூர் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகள் எல்லாம் கலப்பட கூட்டணி அமைத்துள்ளது என்று விமர்சனம் செய்துள்ளாரே? என்று கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த தம்பிதுரை, தேர்தல் கூட்டணி என்றாலே கலப்பட கூட்டணிதான் என்றார். #ThambiDurai #ADMK
    தம்பிதுரை என் சகோதரர், கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கோவையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #ThambiDurai
    பீளமேடு:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது-

    சில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். இந்த பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடைபெற்று வருகிறது.

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருவது தேர்தல் வந்துவிட்டது என்பதை காட்டுகிறது. தேர்தல் வரும்போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கை.

    ஆஸ்திரேலிய பறவை சீசன் சமயத்தில் வனத்தை தேடி வரும் சீசன் முடிந்ததும் போய் விடும். அதுபோல் தான் நாராயணசாமி போராட்டத்துக்கு தி.மு.க. ஆதரவு அளிப்பது ஆகும். இதுவும் தேர்தலுக்கான அறிகுறியே.

    மத்திய அரசு தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்களை வழங்கி வருகிறது. அமித்ஷா வருகை தமிழக மக்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    அவரிடம் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பா.ஜனதாவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அவரது கருத்துக்கள் கூட்டணிக்கு இடையூறாக இருக்கிறதா? என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளிக்கும்போது, தம்பிதுரை என் சகோதரர் போன்றவர். அவரிடம் தினமும் பேசி வருகிறேன். எங்களுக்குள் எந்தவித சர்ச்சையும் இல்லை. பா.ஜனதா கட்சிக்கு கூட்டணியில் எந்த பிரச்சினையும் யாரோடும் கிடையாது. ஓரிரு நாளில் கூட்டணி அறிவிக்கப்படும் என அகில இந்திய பொது செயலாளர் முரளிதரராவ் கூறி இருப்பது சரியாக இருக்கும். கூட்டணி தொடர்பாக இன்று அறிவிக்க வாய்ப்பு இல்லை என்றார்.

    தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்கள் காலில் விழுகிறது என கூறி உள்ளாரே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளிக்கும்போது, விழுந்தவர்கள் பலம் உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். ஒரு தூணோடு இன்னொரு தூண் நின்றால் தான் பலம் பொருந்தியதாக இருக்கும். ஒரு தூணில் இன்னொரு தூண் விழுந்தால் அது பலமில்லை என்றார்.

    பின்னர் அவர் ஈரோடு மாவட்டம் சித்தோடு புறப்பட்டு சென்றார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். #PonRadhakrishnan #ThambiDurai


    பாராளுமன்றத்தில் நேற்று தம்பிதுரை பேசியதில் தவறு இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் தெரிவித்துள்ளார். #TNAssembly #Jayakumar #Ponmudi
    சென்னை:

    சட்டசபையில் இன்று பொன்முடி (தி.மு.க.) பேசுகையில், ஜி.எஸ்.டி.யால் தமிழகத்துக்கு நன்மையா? கெடுதலா? என்று உங்களால் சொல்ல முடியுமா? பாராளுமன்றத்தில் நேற்று உங்கள் கட்சியில் பொறுப்பில் உள்ளவரும், துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசும் போது, ஜி.எஸ்.டி.யால் தான் எல்லாமே முடங்கி விட்டது, பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் சிறு-குறு தொழில் நிறைய மூடப்பட்டு விட்டதாக பேசி இருக்கிறார் என்றார்.

    பொன்முடி மேலும் பேசும்போது, மத்திய பட்ஜெட்டை பாராட்டி முதல்-அமைச்சர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அதற்கு நேர்மாறாக தம்பிதுரை பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறாரே இது அவரது தனிப்பட்ட கருத்தா? கட்சி கருத்தா? என்று கேட்டார்.

    அமைச்சர் ஜெயக்குமார்:- மாநில அரசுக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதியை தாமதமின்றி விடுவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் பேசியிருக்றார். இதில் என்ன தவறு உள்ளது.



    பொன்முடி:- நேற்று செம்மலை இங்கு பேசும்போது, முதல்-அமைச்சர் சிக்சராக அடிக்கிறார். முதல் சிக்சர், 2-வது சிக்சர் என்று பேசினார். நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் எத்தனை சிக்சர் அடித்தாலும் மு.க.ஸ்டாலின் போடும் பந்தில் ஆளும் கட்சி கண்டிப்பாக கிளீன்போல்டு ஆகி விடும்.

    அமைச்சர் ஜெயக்குமார்:- உறுதியாக சொல்கிறேன். அது “நோ-பால்” ஆகி விடும்.

    (சட்டசபையில் பலத்த சிரிப்பு எழுந்தது)

    அமைச்சர் தங்கமணி:- கிரவுண்டுக்குள் வந்து பந்து போட்டால்தான் போல்டு ஆகும். கிரவுண்டுக்குள்ளேயே வேலை இல்லாதபோது பந்துக்கு என்ன வேலை.

    இவ்வாறு அடுத்தடுத்து சிரிப்பலையுடன் விவாதம் நடந்தது. #TNAssembly #Jayakumar #Ponmudi
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். #JayaDeathProbe #ThambiDurai
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிசிச்சைகள் தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
     
    இதுவரையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உறவினர்கள், பணியாளர்கள் என பலரிடம் விசாரணை நடந்துள்ளது. இதில் சிலர் மீண்டும் வரவழைக்கப்பட்டு குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

    அதன்பின்னர் முக்கிய பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆணையத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். அப்போது, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.



    இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் விசாரணைக்கு ஆஜராவாரா? என்பது பற்றி இன்று மாலை தெரியவரும். #JayaDeathProbe #ThambiDurai
    தம்பிதுரைக்கு முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருந்தது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். #ThambiDurai #TTVDhinakaran

    திருச்சி:

    திருச்சி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகம் திறப்பு விழா திருவானைக்காவலில் நடைபெற்றது. புதிய அலுவலகத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அவை எந்தெந்த கட்சிகள் என்பதை இப்போது கூற மாட்டேன். பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் காங்கிரசுடன் நாங்கள் சேருவோம் என்று கூற முடியாது. நான் ஏற்கனவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கமாட்டேன் என்று கூறி இருக்கிறேன். அதில் உறுதியாக இருக்கிறேன்.

    தி.மு.க., மெகா கூட்டணி என எதை அமைத்தாலும் மக்களிடம் எடுபடாது. தி.மு.க. இப்போது உள்ள கூட்டணியை கூட மாற்றலாம். இதை அவர்கள் ஏற்கனவே செய்திருக்கிறார்கள். தி.மு.க. பயப்படுகிறது.

    திருவாரூர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் நாங்கள் களத்தில் உடனே குதித்து விட்டோம். ஆனால் மு.க. ஸ்டாலின் தேர்தலை ரத்து செய்தவுடன் போட்டி போட்டு வரவேற்று அறிக்கை விட்டார். பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள்தான் வெற்றி பெறுவோம்.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது நான் உறுதியாக வெற்றி பெறுவேன் என்று கூறினேன். அதே போன்று மிகப்பெரிய வெற்றி பெற்றேன். இப்போதும் பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும்.

    கொடநாடு விவகாரத்தில் உண்மையை சி.பி.ஐ. கண்டுபிடிக்க வேண்டும். இதில் மர்மம் உள்ளது. இந்த வி‌ஷயத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் டெபா சிட் கூட கிடைக்காது.தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்கு பிறகு அனைத்து கட்சிகளுமே புதிய கட்சிகள் போல் தான் உள்ளது.

     


    பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்க மு.க.ஸ்டாலின் வெளி மாநிலம் சென்று உள்ளார். உள்ளூரில் விலை போகாததால் வெளி மாநிலத்தில் மார்க்கெட்டிங் செய்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எப்படியாவது நாற்காலியை காப்பாற்றினால் போதும் என்ற நிலையில் உள்ளார்.

    கொடநாடு விவகாரத்தில் அவர் பயப்படுவதற்கான காரணம் என்ன? இந்த ஆட்சி ஏஜெண்ட் ஆட்சி. பாரதிய ஜனதா கட்சியின் ஏஜெண்டாக செயல்படுகிறது. இதை மக்கள் தூக்கி எறிவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பா.ஜ.க.வை பற்றி விமர்சனம் செய்வது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு தினகரன் பதில் அளித்து கூறியதா வது:-

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தம்பிதுரைக்கு அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக வேண்டும், முதல்- அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதலில் பன்னீர்செல்வத்தை முதல்- அமைச்சர் ஆக்கியதும் ஏமாற்றம் அடைந்தார். பிறகு சசிகலாவை பொதுச் செயலாளராக்கி எடப்பாடி பழனிச்சாமியை முதல்- அமைச்சர் ஆக்கியதும் மீண்டும் ஏமாற்றம் அடைந்தார்.

    எனவே இனியும் முதல்வர் ஆக முடியாத விரக்தியில் தம்பிதுரை உளறி வருகிறார். இதனால் பா.ஜ.க. மீது குற்றச்சாட்டுக்களை கூறி விமர்சித்து வருகிறார்.தமிழகத்தில் அவர் ஒரு பேச்சு பேசுகிறார். பா.ஜனதாவை விமர்சிக்கிறார். ஆனால் டெல்லி சென்றால் அங்கே பா.ஜனதா மந்திரிகளுடன், எம்.பி.க்களுடன் இணக்கமாக இருக்கிறார். இதன் மூலம் அவர் நாடகம் ஆடுகிறார் என்றார். #ThambiDurai #TTVDhinakaran

    தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் பிணக்கு ஏற்பட்டுள்ளதால் மு.க.ஸ்டாலின் 3-வது அணிக்கு விரைவில் சென்று விடுவார் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #ThambiDurai #MKStalin
    திண்டுக்கல்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை திண்டுக்கல் அருகே மாரம்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அவர் அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது.

    நிலுவைத் தொகை மற்றும் கஜா புயல் பாதிப்புகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி தமிழகத்தின் சார்பில் கேட்கப்பட்டது. ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. தமிழக உரிமைகளுக்காக குரல் எழுப்பி வருவதால் என் மீது பா.ஜ.க. அமைச்சர் மற்றும் நிர்வாகிகள் குறைகூறலாம். தமிழகத்தின் சமூக நீதியை காக்க 69 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவர மத்திய அரசு முயற்சி எடுக்கவில்லை.

    இதேபோல் தமிழக நலனுக்காக மக்களவையில் குரல் எழுப்பிய அ.தி.மு.க. எம்.பி.க்கள் 34 பேர் மீது நடவடிக்கை எடுத்து சஸ்பெண்டு செய்துள்ளனர். ஆனால் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஒரு எம்.பி. சஸ்பெண்டு செய்யப்பட்டால் அந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய பிற கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்துவது வழக்கம். ஆனால் அ.திமு.க. எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்டு நடவடிக்கையை ரத்து செய்ய எந்தஒரு கட்சியினரும் ஆதரவு தரவில்லை. இதன் மூலம் தமிழகம் எந்த அளவுக்கு புறக்கணிக்கப்படுகிறது என்பது தெரிய வருகிறது.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்பும் பா.ஜ.க. எம்.பி.க்களும் இந்த நடவடிக்கையை ரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தேர்தல் அறிவிக்கப்படாததால் கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை.


    ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால் அதற்கு எதிரான நிலையில் உள்ள மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டத்திற்கு சென்றுள்ளார். இதன் மூலம் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் பிணக்கு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மு.க.ஸ்டாலின் 3-வது அணிக்கு விரைவில் சென்று விடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #MKStalin
    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தி.மு.க.வின் சிலீப்பர் செல்லாக செயல்படுகிறார் என்று பாஜக பிரமுகர் கூறியுள்ளார். #ThambiDurai

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன.

    சமீபத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்து குறிப்பிடுகையில், “தமிழக மக்களுக்கு நன்மை செய்யும் கட்சிதான் மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும். அ.தி.மு.க. அந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கும்.

    தமிழகத்தை வஞ்சிக்கும் கட்சியுடன் ஒரு போதும் கூட்டணி சேர மாட்டோம்” என்றார்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறும் போது, தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என்றார்.

    இவர்கள் இருவரும் மறைமுகமாக கூட்டணி பற்றி கருத்து கூறிவரும் நிலையில் பாராளுமன்ற துணை சபாநாயகராக இருக்கும் தம்பிதுரை மட்டும் வெளிப்படையாக பா.ஜனதாவையும், மத்திய அரசையும் விமர்சித்து வருகிறார். பா.ஜனதாவை காலூன்ற வைக்க அ.தி.மு.க. வினர் தோளில் சுமந்து செல்ல மாட்டோம் என்றார்.

     


    கூட்டணி வி‌ஷயத்தில் ஜெயலலிதா பாதையில் செல்வோம், அவர் அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த நிலை தொடர வேண்டும் என்றும் தம்பிதுரை கூறினார்.

    பா.ஜனதா அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர முயற்சித்து வரும் நிலையில் தம்பிதுரை தனித்து போட்டியிட வேண்டும் என்பது போல் பேசி வருவது பா.ஜனதாவினருக்கு அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    தம்பிதுரை கருத்துக்கு ஏற்கனவே மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். தற்போது தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் எஸ்.ஆர். சேகர் தம்பிதுரைக்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் தம்பிதுரை மட்டுமே பா.ஜனதாவுக்கு எதிராக கருத்துக்களை கூறி விமர்சித்து வருகிறார். தம்பிதுரையை தவிர்த்து அ.தி.மு.க.வில் உள்ள எந்த தலைவரும் அவரைப் போன்று விமர்சிக்கவில்லை.

    இந்த வி‌ஷயத்தில் தம்பிதுரை மட்டும் தனித்து விடப்பட்டு இருக்கிறார். அவர் வேறு ஏதோ காரணங்களுக்காக இதுபோன்று விமர்சிக்கிறார். எனவே அவர் தி.மு.க.வின் சிலீப்பர் செல்லாக இருப்பாரோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ThambiDurai

    ×