search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister VijayaBaskar"

    கரூர் அருகே விபத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிக்கிய சம்பவம் அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ADMK #MinisterVijayabaskar
    கரூர்:

    கரூர் மாவட்டம் ரெங்கநாதன்பேட்டையில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் கரூர் சென்றார். க.பரமத்தி அருகே சென்றபோது, தென்னிலை பகுதியில் உள்ள குவாரியில் இருந்து ஜல்லிக்கற்கள் லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது.

    இந்த நிலையில் எதிர்பாராத விதமாக லாரி, அமைச்சர் காரின் பக்கவாட்டில் மோதியது. இதில் காரின் முன்பக்க விளக்குகள் உடைந்து சேதமானது. இந்த விபத்தில் காரில் இருந்த அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

    இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் கரூர் வரை அதே காரில் சென்று அங்கிருந்து வேறொரு காரில் பொதுக்கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லாரியை ஓட்டி வந்தது தஞ்சையை சேர்ந்த சிவக்குமார் என்பது தெரிய வந்தது. மதுபோதையில் அவர் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 23-ந்தேதி நடந்த கார் விபத்தில் விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி., ராஜேந்திரன் இறந்தார். மறுநாள் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.பி. காமராஜ் கார் விபத்தில் சிக்கி காயத்துடன் தப்பினார். இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் விபத்தில் சிக்கியது அ.தி.மு.க. கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ADMK #MinisterVijayabaskar
    அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை விருப்ப மனு அளித்துள்ளதால் கரூர் தொகுதியில் தான் மீண்டும் போட்டியிட உத்தரவாதம் இல்லை என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ThambiDurai #ADMK
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக அ.தி.மு.க.வை சேர்ந்த தம்பிதுரை இருந்து வருகிறார். இவர் பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவியையும் வகித்து வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தம்பிதுரை கடந்த சில மாதங்களாக கரூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு, மனுக்களை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு செய்துள்ளார். இதனிடையே விருப்ப மனு தாக்கலின் கடைசி நாளான நேற்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியும் கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

    தம்பிதுரை கரூர் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வரும் நிலையில் அமைச்சரின் தந்தையும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இது தொடர்பாக நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த தம்பிதுரை, ஜனநாயக நாட்டில் அரசியலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றார். இந்த நிலையில் இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சீத்தப்பட்டி காலனி பகுதியில் தம்பிதுரை எம்.பி. பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு, மனுக்களை பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். கரூர் பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளேன். எனக்கு சீட் கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியும் கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

    அவருக்கு கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் அவரது வெற்றிக்காக பாடுபடுவேன். அ.தி.மு.க. சார்பில் யார் போட்டியிட்டாலும் வெற்றிக்கு அயராது உழைப்பேன்.

    தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க அ.தி.மு.க. சார்பில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நான் இடம்பெறவில்லை. அதனால் நான் கூட்டணி குறித்து எதுவும் சொல்ல முடியாது. பாராளுமன்றத்தில் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தோம். அதற்கும் கூட்டணிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் அவரிடம் திருப்பூர் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகள் எல்லாம் கலப்பட கூட்டணி அமைத்துள்ளது என்று விமர்சனம் செய்துள்ளாரே? என்று கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த தம்பிதுரை, தேர்தல் கூட்டணி என்றாலே கலப்பட கூட்டணிதான் என்றார். #ThambiDurai #ADMK
    ஈமச்சடங்கு நடத்த மாரடைப்பால் இறந்தவர்களுக்கு விரைவாக இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ministervijayabaskar #deathcertificate

    சென்னை:

    சட்டசபையில் இன்று தோப்பு வெங்கடாசலம் (அ.தி.மு.க.), நேரு (தி.மு.க.) பேசும்போது, வீட்டில் மாரடைப்பால் உயிரிழப் போருக்கு இறப்பு சான்றிதழ் உடனடியாக கிடைக் காததால் பல்வேறு பிரச்சினை ஏற்படுகிறது. உடலை எரிப்பதற்கு கூட இடுகாட்டில் சான்றிதழ் கேட்பதால் சிக்கல் ஏற்படுகிறது. எனவே விரைவாக இறப்பு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அமைச்சர் விஜயபாஸ்கர்:- தற்போது பிறப்பு சான்றிதழ் ஆன்லைன் மூலமாக வழங்கப்படுகிறது. இதற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அதுபோல் வீட்டில் இறப்பவர்கள் மாரடைப்பால் இறந்தால் சட்ட பிரச்சினைகள் வரும் என்பதால் தான் தாமதமாகிறது. அதற்கு நல்ல தீர்வு காணும் வகையில் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். #ministervijayabaskar #deathcertificate 

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி விளக்கம் அளித்தார். #MinisterVijayabaskar #JayaDeathProbe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது நடந்தது என்ன? ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு முன்னர் அவர் வகித்து வந்த போயஸ் கார்டனில் நடைபெற்றது என்ன? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    ஜெயலலிதாவின் மரணத்தில் நிலவும் இந்த கேள்விகளுக்கு விடை காணும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். இதற்காக சென்னை எழிலகத்தில் உள்ள ஆணைய அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனை ஏற்று அவர் இன்று காலை 10.25 மணி அளவில் ஆணையத்தில் ஆஜரானார்.


    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 75 நாட்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் நீங்கள் அளித்த ஆலோசனைகள் என்ன? வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதா? என்பது போன்ற கேள்விகள் விஜயபாஸ்கரிடம் முன் வைக்கப்பட்டன. இதற்கு அவர் உரிய பதிலை அளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக வலியுறுத்தி ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் 4 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 3 முறையும் சம்மன் அனுப்பப்பட்டபோது அவர் ஆஜராகவில்லை. 4-வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனை ஏற்றுத்தான் அவர் ஆஜராகி இருக்கிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது. அதில் விஜயபாஸ்கர் தொடர்ச்சியாக ஆஜராகி வந்தார். இதன் காரணமாகவே அவர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகவில்லை என்று கூறப்பட்டது. #MinisterVijayabaskar #JayaDeathProbe
    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான ஹெல்மெட் வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது. #MinisterVijayabaskar #HelmetCase
    மதுரை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சுகாதாரத்துறை சார்பில் கடந்த ஆண்டு நல வாழ்வு முகாம் நடந்தது. அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இருசக்கர வாகனங்களில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் பங்கேற்று இருசக்கர வாகனம் ஓட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 100 பேர் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளனர்.



    கோர்ட்டு உத்தரவை மீறி ஹெல்மெட் அணியாமல் சென்ற அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு செல்லும்போது அவசரத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாகவும், இனிமேல் இதுபோல் நடக்காது என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

    இந்த பிரமாணப் பத்திரத்தில் அமைச்சர் அளித்த விளக்கம் மற்றும் உறுதிமொழியை ஏற்ற நீதிபதிகள், அமைச்சருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்தனர். #MinisterVijayabaskar #HelmetCase

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. #RKNagarByelection #MadrasHC
    சென்னை:

    ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது அ.தி.மு.க. இரண்டாக உடைந்திருந்தது.

    டி.டி.வி.தினகரன் தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும் தேர்தலில் போட்டியிட்டது. அப்போது, ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வாரி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அப்போது ரொக்கப்பணம், சில ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அப்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அமைச்சர்களின் பெயர்கள் குறிப்பிட்ட ஆவணங்களும் சிக்கியது. இதன் அடிப்படையில், ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

    வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்யும்படி அபிராமபுரம் போலீசாருக்கு, இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டது. அந்த மனுவில், முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பல அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்தது.

    ஆனால், குற்றம் சாட்டப்படுபவர்களின் பெயர்களை குறிப்பிடாமல், அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மருது கணேஷ், இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரித்தால் சரியாக இருக்காது. அதனால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறையை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.


    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறையின் முதன்மை தலைமை ஆணையர் பி.முரளிகுமார் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும், பிறருடைய வீடுகளிலும் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுத்ததற்காக ஆதார ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.4.71 கோடி ரொக்கப்பணமும் கீழ் நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

    அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் ரூ.3 லட்சமும், ஜெ.சீனிவாசனிடம் ரூ.3 லட்சமும், கல்பேஷ் எஸ்.ஷாவிடம் இருந்து ரூ.1 கோடி 10 லட்சமும், சாதிக் பாட்ஷாவிடம் இருந்து 6 லட்சமும், கார்த்திகேயனிடம் இருந்து ரூ.8 லட்சமும், ஆர்.சரத்குமாரிடம் இருந்து ரூ.11 லட்சமும், ஆர்.சின்னத் தம்பியிடம் இருந்து ரூ.20 லட்சமும், டாக்டர் செந்தில்குமாரிடம் இருந்து ரூ.15 லட்சமும், நயினார் முகமதுவிடம் இருந்து ரூ.2 கோடியே 95 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டன.

    பின்னர் இந்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கு, இந்த பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை வருமான வரித்துறை வெளியிடவில்லை. அது போன்று வெளியிடும் நடைமுறை இல்லை அனைத்து விவரங்களும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், ரொக்கப்பரிசு குறித்த விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #RKNagarByelection #MadrasHC
    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் 10-ந்தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #MinisterVijayabaskar
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

    இதுவரையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உறவினர்கள், பணியாளர்கள் என பலரிடம் விசாரணை நடந்துள்ளது.

    விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராக வேண்டும் என ஏற்கனவே ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது.

    சசிகலா தரப்பில் ஆஜரான வக்கீல் ராஜா செந்தூர் பாண்டி ஆணையத்தில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். குட்கா வழக்கில் ஆஜராக வேண்டியிருப்பதால் 7, 8-ந் தேதிகளில் ஆஜராக வேண்டும் என்பதை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    அதன் அடிப்படையில் விசாரணையின் தேதியினை தள்ளி வைத்து சம்மன் அனுப்பியது. அமைச்சர் விஜயபாஸ்கர் 10-ந்தேதி காலை 9.30 மணிக்கும், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை 11-ந் தேதி ஆஜராக வேண்டும் எனவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #MinisterVijayabaskar


    தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் சென்னையில் 8.6 சதவீதமாக இருந்த விபத்துக்கள் தற்போது 2.8 சதவீதமாக குறைந்துள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கே.பி.பி.சாமி (தி.மு.க.) கேட்ட கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதில் வருமாறு:-

    திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரித்து சிகிச்சை பிரிவை மேம்படுத்த வேண்டும் என்று உறுப்பினர் கோரிக்கை விடுத்தார். உறுப்பினர் கோரிக்கை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் சாலையோரம் பகுதியில் உள்ள 75 இடங்களில் விபத்து சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. இதற்காக அரசு ரூ.190 கோடி ஒதுக்கி உள்ளது.

    மகாபலிபுரம், கிழக்கு கடற்கரை சாலை, கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் விபத்து நிலைப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் சென்னையில் 8.6 சதவீதமாக இருந்த விபத்துக்கள் தற்போது 2.8 சதவீதமாக குறைந்துள்ளது என்றார்.

    சுகாதாரத்துறை குறித்து விமர்சிக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எந்தவிதமான அருகதையும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ministervijayabaskar #mkstalin #hivblood

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் நேற்று மாலை தனியார் பேருந்து கவிழ்ந்து 30 பேர் காயமடைந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் விபத்துகளை குறைப்பதற்காக அவசர கால சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 75 இடங்களில் 190 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் சென்னையில் மட்டும் கடந்த 11 மாதங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக விபத்து கால சிகிச்சை இறப்பு சதவீதம் என்பது 8.5 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    மேலும் மொபைல் சி.டி. ஸ்கேன் தமிழகத்தில் 15 கோடி மதிப்பில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழக சுகாதாரத்துறை உலக நாடுகள் சுகாதாரத்துறைக்கு இணையாக வளர்ந்து வருகிறது.


    தி.மு.க. ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறைக்கு என எதுவுமே செய்யவில்லை. ஒரு சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. தற்போது சுகாதாரத்துறை குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்து வருவது கண்டனத்துக்குரியது. அவருக்கு சுகாதாரத்துறை குறித்து விமர்சனம் செய்வதற்கு எந்த வித அருகதையும் கிடையாது

    சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் மனதிற்கு மிகவும் வேதனை தரக்கூடிய சம்பவமாக இருந்தாலும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள். இதை வைத்து அரசியல் செய்வது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministervijayabaskar #mkstalin #hivblood

    காசநோய் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். #Vijayabaskar

    சென்னை:

    மாமல்லபுரத்தில் தமிழக தேசிய நலவாழ்வு குழுமம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் இணைந்து காசநோய் இல்லாத தமிழ்நாடு-2025 உருவாக்கும் கருத்தரங்கு நடைபெற்றது.

    இதை துவக்கி வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சரால் 2017 அக்டோபர் மாதம் காசநோய் இல்லாத சென்னை என்ற திட்டம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் நோயாளிகளை இல்லம் தேடி சென்று காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் உலக சுகாதார நிறுவன துணைத் தலைமை இயக்குனர் சவும்யா சாமிநாதன், அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிக்கோல் சுகி, வீகாஷ் ஷீல் பங்கேற்று பேசினார்கள்.  #Vijayabaskar

    குட்கா ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ஆகியோரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #GutkhaScam #VijayaBaskar
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குட்கா ஊழல் தொடர்பாக டைரியில் இடம் பெற்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை டி.ஜி.பி.யாக இருக்கும் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் அதே பதவியில் தொடர்ந்து நீடிப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் நிர்வாகத்திற்கு அவமானகரமாகவும் இருக்கிறது.

    இப்போது அமைச்சருக்கு சம்மன் அனுப்பி இரு நாட்கள் சி.பி.ஐ முன்பு பலமணிநேர விசாரணைக்கு ஆஜரான பிறகும் எந்தவித நாணமுமின்றிப் பதவியில் தொடருகிறார் என்பது பொதுவாழ்வில் தூய்மை, அலுவலகப் பணிகளில் நேர்மை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை சுக்கு நூறாக உடைத்துப் போட்டிருக்கிறது.

    அது மட்டுமின்றி இன்னொரு பக்கம் ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடு தொடர்பாக கைப்பற்றப்பட்ட 89 கோடி ரூபாய் லஞ்ச பட்டியல் வழக்கிலும் விஜயபாஸ்கர் பெயரை சேர்க்காமல் அவரை சென்னை மாநகர காவல்துறை ஆணையரும், சென்னை மாநகராட்சி ஆணையரும் தப்ப விட்டுள்ளார்கள்.

    அதையும் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது. இப்படி அடுத்தடுத்து ஆர்.கே.நகர் வழக்கு, குட்கா வழக்கு போன்றவற்றில் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்றும் உள்நோக்கத்துடன் அ.தி.மு.க அரசு செயல்பட்டு வருவது ஒரு புறமிருக்க, உச்சநீதிமன்ற உத்தரவின்படி விசாரணையை எடுத்துக் கொண்ட சி.பி.ஐ அமைப்பும் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரை எப்படியாவது காப்பாற்ற நினைக்கிறதோ என்ற வலுவான சந்தேகம் எழுந்திருக்கிறது.

    இந்த வழக்கினை விசாரித்து வந்த சி.பி.ஐ அதிகாரிகள் திடீரென்று மாற்றப்பட்ட போது அவர்களை மீண்டும் அதே பதவிகளில் நியமிக்க வேண்டும் என்று தி.மு.க.வின் சார்பில் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் இருப்பதால் சி.பி.ஐ விசாரணை எந்த திசை நோக்கி நகருகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

    டி.ஜி.பி வீடு சி.பி.ஐ அதிகாரிகளால் சோதனையிடப்பட்டும் இன்று வரை அவர் விசாரணைக்காக அழைக்கப்படாததும், குட்கா டைரியில் இடம்பெற்றுள்ள அவர் தமிழக காவல் துறைக்கு இன்னும் தலைமை தாங்குவதும், பயிரை மேய்ந்த வேலியைப் பார்த்துக் கொண்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

    புகழ் பெற்ற தமிழ்நாடு காவல்துறையின் பெருமைக்கு சிறுமை சேர்த்திடும் பேரிழுக்கு என்பது மட்டுமின்றி, ஒட்டு மொத்த காவல்துறை அமைப்பில் ஒழுக்கமும், கட்டுப்பாடும் உருக்குலைவதற்கும் காரணமாக அமைந்து வருகிறது. லஞ்ச ஊழல் தடுப்புத்துறை முறையாக இந்த வழக்கை விசாரிக்காது என்றுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சி.பி.ஐ விசாரணை கோரப்பட்டது.

    அப்படி உச்சநீதிமன்றமே சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் சி.பி.ஐ அமைப்பின் விசாரணை ஒட்டுமொத்த “குட்கா” டைரி விவகாரத்தை இப்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களுடன் அரைகுறையாக முடித்து விட்டு, அமைச்சர், டி.ஜி.பி. போன்றோரை தப்பவிடும் நோக்கில் அமைந்துள்ளதோ என்ற நியாயமான கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.


    இந்நிலையில் சி.பி.ஐ. ரெய்டு நடத்திய அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டு உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள இந்த விசாரணை சிறிதும் தடம் மாறி விடாமல் சட்டப்படி நேர்மையான பாதையில் செல்வதற்கேற்றபடி எச்சரிக்கையுடன் பாதுகாத்திட வேண்டிய பொறுப்பும், கடமையும் சி.பி.ஐ அமைப்பிற்கு இருக்கிறது என்றும், அமைச்சரையும், டி.ஜி.பி.யையும் விடுவிக்கும் நோக்கில் விசாரணையின் பாதை தலைகீழாக மாறுமேயானால் தி.மு.க. உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவதற்குத் தயங்காது என்றும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    ஊழல் புகாருக்கு உள்ளாகியிருக்கும் முதல்-அமைச்சர், “குட்கா அமைச்சரை” ராஜினாமா செய்யச் சொல்வார் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், இருவரும் ஒரே மாதிரியான சிறகுகள் கொண்ட கரும்பறவைகள். ஆகவே சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை ஆளுநர் மேற்கொள்ள வேண்டும்.

    குட்கா ஊழல் வழக்கின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு பொறுப்பில் இருக்கும் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, தலை சிறந்த தமிழகக் காவல்துறை அப்பழுக்கற்ற, ஊழல் கறைபடியாத தலைமையின் கீழ் முறையாகச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #MKStalin #GutkhaScam #VijayaBaskar
    சம்மன் அனுப்பப்பட்டதால் விஜயபாஸ்கர் குற்றவாளி அல்ல என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #TNMinister #Jayakumar #Vijayabaskar #DMK
    ராயபுரம்:

    ராயபுரத்தில் உள்ள பள்ளியில் மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா கலந்து கொண்டனர்.

    முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் நடைபாதை அமைக்கப்படும். கூட்டணி அமைக்க இது உரிய நேரம் அல்ல. கூட்டணி குறித்து கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். இதுபற்றி ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.

    தமிழகத்தில் தாமரை மலரும் என்று கூறுவது அவர்களது ஆர்வம். இதனை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை இரட்டை இலைதான். மற்றவர்களுக்கு இடம் இல்லை.

    தமிழ் இனத்தை எதிர் காலத்தில் அழிக்க காங்கிரசுடன் தி.மு.க. கைகோர்க்கிறதா? குற்றவாளியை தண்டிக்க வேண்டியது நீதிமன்றம்தான். ஒரு வழக்கில் சம்மன் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். அது பெரிய வி‌ஷயம் அல்ல. சம்மன் அனுப்பியதால் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றவாளி அல்ல.


    ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தி.மு.க.வினர் டீக்கடை, பிரியாணி கடை என்று ஒரு கடை விடாமல் அடாவடியில் ஈடுபடுகிறார்கள்.

    பொழுது விடிந்தால், ஒரு கடை விடாமல் மன்னிப்பு கேட்பதே மு.க.ஸ்டாலினின் வேலையாய் போய்விட்டது. கலைஞர் சிலைத்திறப்பு நிகழ்ச்சிக்கு மின்சாரத்தை சென்னை மாநகராட்சியிடம் இருந்து திருடி எடுத்துள்ளனர். அதற்கு ஆதாரம் உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். (அப்போது அமைச்சர் ஜெயக்குமார் செல்போனில் உள்ள வீடியோ ஆதாரத்தை காண்பித்தார்).

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தி.மு.க. ஆட்சி காலத்தில் என்ன செய்தார்கள்? அவர்கள் பேசுவதை ஏற்கமுடியாது. மூடிய ஆலையை திறக்க வாய்ப்பே இல்லை. உள்ளத்தில் ஒன்று வைத்து உதட்டில் ஒன்று பேசுவது நாங்கள் அல்ல.

    கஜா புயல் நிவாரண தொகையை மத்திய அரசிடம் இருந்து பெற தமிழக அரசு போராடி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Jayakumar #Vijayabaskar #DMK
    ×