search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamilnadu govt"

    சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு 1,000 ரூபாய் வழங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. #PongalCashGift #HighCourt
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌சன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000த்துடன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசு தொகுப்பை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து கோவையை சேர்ந்த ஜேசுதாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்க தடை விதித்தது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரொக்கப்பரிசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை மாற்றி அமைக்க கோரி தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஐகோர்ட்டு விதித்த தடை உத்தரவினால், சர்க்கரை மட்டும் வாங்கும் ரே‌சன் அட்டைதாரர்களுக்கும், எந்த பொருளும் வாங்காத ரே‌சன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் பரிசு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சர்க்கரை மட்டும் வாங்கும் ரே‌சன் அட்டைதாரர்கள் மொத்தம் 10 லட்சத்து 11 ஆயிரத்து 330 உள்ளனர்.

    இவர்களில் கடந்த 9-ந்தேதி வரை 4 லட்சத்து 12 ஆயிரத்து 558 ரே‌சன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசான ரூ.1,000த்தை வாங்கி சென்று விட்டனர். இதனால், பொங்கல் ரொக்கப்பரிசு வாங்காத மீதமுள்ளவர்கள், மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர். அவர்களும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதால், பொங்கல் பரிசான ரூ.1,000அவர்களுக்கும் வழங்க அனுமதிக்க வேண்டும்.

    இதற்கு ஏற்ப, கடந்த 9-ந்தேதி இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த தடை உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசாரணை பட்டியலில் இந்த வழக்கு இடம் பெறவில்லை.

    இதையடுத்து நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘சர்க்கரை வாங்கும் ரே‌சன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கப்பரிசு வழங்க அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக இன்று விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சுமார் 1 மணியளவில் வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக உத்தரவிட்டனர்.


    அதன்படி இவ்வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையை வழங்க அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இலவசத் திட்டங்கள் தொடர்பாக தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.

    “இலவச திட்டங்கள் தொடர்பாக தெளிவான வரையறையுடன் முடிவெடுக்க வேண்டும். இலவச திட்டங்களை வழங்கும்போது, பயனாளிகளை வரையறை செய்ய வேண்டும். அனைவருக்கும் வங்கி கணக்கு உள்ள நிலையில், அதில் ரொக்கப் பணத்தை செலுத்தலாம். அதனை விடுத்து மக்களை காக்க வைப்பது ஏன்? 1,000 ரூபாய் கொடுக்காவிட்டால் வாக்களிக்க மாட்டோம் என மக்கள் கூறும் அளவுக்கு நிலைமையை உருவாக்கியது ஏன்?” என்றும் நீதிபதிகள் கடிந்துகொண்டனர்.

    பொங்கல் பரிசு தொடர்பாக உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியதால், மேலும் 10 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு கிடைக்கும். #PongalCashGift #HighCourt
    தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி புதிதாக தொடங்கப்படுகிறது. இதன் ஒளிபரப்பு வருகிற 21-ந்தேதி முதல் தொடங்குகிறது. #EducationTVChannel
    சென்னை:

    தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி புதிதாக தொடங்கப்படுகிறது.

    இதன் ஒளிபரப்பு வருகிற 21-ந்தேதி முதல் தொடங்குகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின் பேரில் முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் மேற்பார்வையில் இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையிலான குழுவினர் தொலைக்காட்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    கல்வி தொலைக்காட்சிக்கான ஸ்டூடியோ சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நவீன வகை கேமராக்கள், படப்பிடிப்பு கருவிகள், ஆளில்லா விமானம் ஆகியவற்றுடன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. 15-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    கல்வித்துறையின் செயல்பாடுகள், மானியங்கள், நலத்திட்ட உதவிகள், பாடத்திட்டங்கள் குறித்து விளக்கும் புதிய முறைகள், கல்வித்துறையில் சிறப்பாக திறன்களை வெளிப்படுத்தி வரும் ஆசிரியர்களை பற்றிய நிகழ்ச்சிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

    அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு கிடைக்கும் உதவிகள், இதன்மூலம் அவர்கள் கல்வி கற்கும் திறன் போன்றவற்றை கல்வி தொலைக்காட்சி தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தும். ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்து சாதனையாளர்களாக வருவது குறித்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது.

    மாணவர்களுக்கு அறநெறி குறித்த வகுப்பு, சாலை போக்குவரத்து விதிகள், விளையாட்டு பயிற்சி, தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து திறமைகளை வளர்க்கும் வகையில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அமையும்.

    பள்ளிகளின் பராமரிப்பு, சிறந்த உள்கட்டமைப்பு உள்ள பள்ளிகள், அரசு பள்ளிகளில் ஜொலிக்கும் ஆசிரியர்கள், மாணவர்களை கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி தமிழக அரசின் கேபிள் டி.வி.யில் 200-ம் இடத்தில் இடம் பிடித்துள்ளது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை திறந்து வைக்கிறார். #EducationTVChannel
    பொங்கல் பரிசான ஆயிரம் ரூபாயை வழங்க கட்டுப்பாடு விதித்ததற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இன்று முறையீடு செய்யப்பட்டது. #Pongalgift #MadrasHC #TNGovt
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி கோவையை சேர்ந்த டேனியல் என்பவர்  சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.


    இந்த மனுவை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட்,  வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க தடை விதித்து உத்தரவிட்டது.

    மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பணம் வழங்கப்படுவது ஏன்? என கேள்வியெழுப்பியதுடன் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

    இதனால் வெள்ளை ரேசன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது என தெரியவந்தது. ஏற்கனவே வெள்ளை அட்டை வைத்துள்ள பலர் பணம் பெற்றுள்ள நிலையில் கிடைக்காத சிலர் வேதனை பட்டு வந்தனர்.

    இந்நிலையில் சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #Pongalgift #MadrasHC #TNGovt
    வசதியானவர்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் தரக்கூடாது என பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட் நிராகரித்தது. #Pongalgift #MadrasHC
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி கோவையை சேர்ந்த டேனியல் என்பவர்  சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட்,  வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க தடை விதித்து உத்தரவிட்டது.



    மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படுவது ஏன்? என கேள்வியெழுப்பியதுடன் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

    இதனால் வெள்ளை ரேசன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது என தெரியவந்தது. ஏற்கனவே வெள்ளை அட்டை வைத்துள்ள பலர் பணம் பெற்றுள்ள நிலையில் கிடைக்காத சிலர் வேதனை பட்டு வந்தனர்.

    இந்நிலையில், ஐகோர்ட் விதித்த தடையை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்க ஐகோர்ட் மறுத்துவிட்டது. தேவைபட்டால் சுப்ரீம் கோர்ட்டை அணுகி அ.தி.மு.க. நிவாரணம் தேடலாம் என மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். #Pongalgift #MadrasHC
    தமிழக அரசு மேல்முறையீடு மூலமாக சாதகமான தீர்ப்பை பெற்று, நிச்சயமாக அனைவருக்கும் பொங்கல் பரிசு தொடர்ந்து வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #PongalGift
    கோவில்பட்டி:

    கழுகுமலை, வானரமுட்டி அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். இதில் கழுகுமலை பள்ளியில் 255 பேருக்கும், வானரமுட்டி பள்ளியில் 115 பேருக்கும் சைக்கிள் வழங்கப்பட்டன.

    பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் முதன் முதலாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் ரூ.100 வழங்கினார். அதுபோல் தற்போது முதல்வர் அந்த திட்டத்தை விரிவாக்கம் செய்து, காலத்துக்கு தகுந்தாற்போல் பொங்கல் பரிசுடன் ரூ. 1000 வழங்கி நடைமுறைப்படுத்தி உள்ளார். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.

    தமிழக அரசு மேல்முறையீடு மூலமாக சாதகமான தீர்ப்பை பெற்று, நிச்சயமாக அனைவருக்கும் பொங்கல் பரிசு தொடர்ந்து வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்.


    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடங்க 16.10.1996-ல் தி.மு.க. ஆட்சியில் தான் முதன் முதலில் உத்தரவு வழங்கப்பட்டது. 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த ஆலையை விரிவாக்கம் செய்ய சிப்காட் வளாகத்தில் 245 ஏக்கர் ஒதுக்க கையெழுத்திட்டது அன்றைக்கு தொழில் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தான். அப்போதே ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஜெயலலிதா. தற்போது உச்சநீதிமன்றத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவு செயல்படுத்த தடையில்லை என தீர்ப்பளித்துள்ளது.

    இந்த தீர்ப்பின் சாராம்சம் வந்த உடன், சட்ட வல்லுநர்களுடன் ஆராய்ந்து மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்து அதன் மூலமாக ஆலையை நிறுத்துவதற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என சட்டமன்றத்தில் முதல்வர் கூறியுள்ளார். அந்த நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கூறினார். #PongalGift #MinisterKadamburRaju
    திருமங்கலம் தொகுதியில் உள்ள கிராம மக்களுக்கு நேரில் சென்று பொங்கல் பரிசு கொடுத்தது ஏன்? என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார். #PongalGift #MinisterUdhayakumar
    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் இன்று காலை 8 மணியில் இருந்து குன்னத்தூர், புதூர், பெரியபூலாம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊர்களில் சுமார் 12 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினார்.

    இதுதொடர்பாக அச்சம்பட்டி கிராமத்தில் நடந்த பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    காலை 10 மணிக்கு மேல்தான் அரசு அதிகாரிகள் பணி செய்வார்கள் என்ற நிலையை மாற்றி 24 மணி நேரமும் செயல்படும் அரசு தான் அம்மாவின் அரசு என்பதை நிரூபித்து காட்டும் வகையில் இந்த இரவு நேரத்திலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.

    யாரோ ஒரு புண்ணியவான் வழக்கு போடுகிறார்? ஏழைகளுக்கு கொடுப்பதில் அவருக்கு என்ன வயிற்றெரிச்சல் என்று தெரியவில்லை. கஜா புயலினால் டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளன. வீடுகளை இழந்துள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 12 மாவட்டங்கள் கஜா புயலால் உருக்குலைந்து விட்டன. அந்த மக்கள் எப்படி பொங்கல் கொண்டாடுவார்கள்? பொங்கல் கொண்டாடுவதற்கு யாரிடம் போய் உதவி கேட்பார்கள்?

    இன்றைக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகியவை வழங்கப்படுகின்றன. அவற்றுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. பானையில் பொங்கல் பொங்கும்போது மக்களின் உள்ளமும் மகிழ்ச்சியில் பொங்க வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.

    மறைந்த முதல்- அமைச்சர் அம்மா அவர்களும் பொங்கல் பரிசாக ரூ.100 தந்தார்கள். அன்றைக்கு விலைவாசி அப்படி. இன்றைக்கு ரூ.100 கொடுத்தால் சிறு பிள்ளைக்கூட கேள்வி கேட்கிறது?.

    மக்கள் நலன்பேணும் அம்மாவின் அரசுதான் ரூ.1000 பொங்கல் பரிசை உங்களுக்கு தந்துள்ளது. இதை நீங்கள் மறந்து விடக்கூடாது. பொங்கல் பண்டிகை என்பது தமிழர் திருநாள். இங்கே பொங்கல் பரிசு பெறுபவர்கள் ரூ.1000 ரொக்கத்தை பிரதமர் மோடி தருவதாக நினைக்கிறார்களாம். அப்படி அல்ல. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் தருகிறார்.

    இதனை பொதுமக்களிடம் விளக்கி சொல்ல வேண்டியது இருக்கிறது. எனவே தான் பொங்கல் பரிசு கிராம மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நேரில் வந்து கொடுத்து வருகிறோம். கிராம மக்கள் வேலைக்கு சென்று விட்டு மாலையில்தான் வீடு திரும்புகிறார்கள். இதனால் இரவானாலும் மக்களுக்கு பொங்கல் பரிசை அதிகாரிகள் ஆர்வத்துடன் வழங்குகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #PongalGift #MinisterUdhayakumar
    தமிழக அரசை மத்திய அரசு இயக்குவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #TNGovt #ThambiDurai #BJP #Centalgovt
    பீளமேடு:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது-

    மத்திய அரசு வாக்கு வங்கி அரசியலுக்காக பொருளாதார இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்துள்ளது. ரூ. 8 லட்சம் வருமானம் என்பது மாத வருமானம் ரூ. 70 ஆயிரம் என நிர்ணயம் செய்து பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகும்.

    இதனை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது. 37 எம்.பி.க்களை சஸ்பெண்டு செய்து விட்டு இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டு வந்தால் நாட்டில் லஞ்சம், ஊழல் அதிகரிக்கும். தமிழகத்தில் ஜாதி ஒழிய வேண்டும் என பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற பல தலைவர்கள் போராடினார்கள்.

    ஜாதி வேற்றுமை நீங்க வேண்டும். மனிதன், மனிதனாக வாழ வேண்டும் என திராவிட கட்சிகள் தொடர்ந்து போராடி வருகிறது. நாம் அனைவரும் சூத்திரர்கள் தான்.

    சமத்துவத்தை கொண்டு வர பல போராட்டங்கள் நடத்தி இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளனர். பொருளாதாரம் என்பது தொடர்ந்து மாறுபடும். அதை நிர்ணயித்து இட ஒதுக்கீடு செய்தது தவறு.

    இந்த மசோதாவை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது. இது தொடர்பாக எனது கண்டன உரையை பாராளுமன்றத்தில் பதிவு செய்து உள்ளேன்.

    காவிரி, மேகதாது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறது. சில திட்டங்களுக்கு மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    மத்திய அரசும், மாநில அரசும் தொடர்ந்து சுமூகமாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் சில திட்டங்களை ஆதரித்துள்ளோம்.

    தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்களை அமல்படுத்தினால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

    மத்திய அரசிடம் நட்புவேறு. மண்டியிடுவது வேறு. தமிழக அரசை மத்திய அரசு இயக்கவில்லை. இது தவறான குற்றச்சாட்டு. தமிழக மக்கள் வாக்களித்து எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் நடத்தி வருகிறோம்.


    பாதுகாப்பு துறை ஊழல் பற்றி பேசினால் நாட்டின் பாதுகாப்பு பற்றி பேசக்கூடாது என்கிறார்கள். அகஸ்தா விமானம் வாங்க முடிவு செய்தது பாரதிய ஜனதா. அதனை வாங்கியது காங்கிரஸ்.

    ரபேல் விமானத்தை வாங்க முடிவு செய்தது காங்கிரஸ். அதனை வாங்கியது பாரதிய ஜனதா. ஊழலில் இரு கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNGovt #ThambiDurai #BJP #Centalgovt
    எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை ஐந்து நிமிட விழாவாக நடத்தி திறக்கலாம் என்று சென்னை ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது. #MGRCentenaryArch #MadrasHC
    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் அரசு சார்பில் ரூ.2.52 கோடி செலவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டப்பட்டு வருகிறது. பாதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இதனை எதிர்த்து வழக்கறிஞர் தினேஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தனது மனுவில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மெரினா சாலையில் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்ட உத்தரவை மேற்கோள் காட்டி, எம்ஜிஆர் வளைவை திறக்கக்கூடாது என கூறியிருந்தார். அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவுவதால் அரசியல் லாபத்துக்காக எம்ஜிஆர் வளைவு அமைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சேஷசாயி, சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு கடந்த நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில் இன்று சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    எம்.ஜி.ஆரை பெருமைப்படுத்த அமைக்கப்பட்டுள்ள நினைவு வளைவை திறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.


    அப்போது நீதிபதிகள் அரசுக்கு சரமாரி கேள்வியெழுப்பினர்.

    "எம்.ஜி.ஆரை பெருமைப்படுத்த நினைவு வளைவு கட்டியதை தவிர வேறென்ன செய்தீர்கள்?  ஆண்டு முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பேனர் வைத்தீர்கள். அவரின் கொள்கை, கருத்துகளை பரப்ப என்ன செய்தீர்கள்? பார்வையற்றோர், காதுகேளாதோர் நலனுக்கு என்ன செய்தீர்கள்? அவர்களுக்கு பள்ளிகள் திறந்தீர்களா? அல்லது ஏற்கெனவே உள்ள பள்ளிகளுக்கு வசதிகள் செய்து கொடுத்தீர்களா?

    இது போன்ற எந்த திட்டத்துக்காவது செயல்திட்டத்தை உருவாக்கி விட்டு வாருங்கள். அதுவரை திறக்க அனுமதிக்க மாட்டோம்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மேலும் அந்த நினைவு வளைவை பார்த்தால் எம்.ஜி.ஆர். பற்றிய நல்ல நினைவுகள் வருமென அரசு நினைப்பதில் என்ன தவறிருக்கிறது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

    இதற்கு பதிலளித்த மனுதாரர், அண்ணா நினைவாக நூலகம் கட்டியுள்ளார்கள். அதுபோல கட்டலாம். கல்வி, அறிவுத்திறன் வளர்ச்சிக்கு செலவிடலாம் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிவாஜி நினைவாக மணிமண்டபம் கட்டினார்கள். அதில் யார்? என்ன? பலனடைகிறார்கள்? அதுகூட நீர்நிலை இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

    பின்னர் ஆடம்பர விழாவாக நடத்தாமல் ஐந்து நிமிட நிகழ்ச்சியாக மெரினாவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவை திறக்கலாம் என அனுமதி அளித்தனர்.

    இதுதொடர்பாக சிஎம்டிஏ பதிலளிக்க உத்தரவிட்டு பிப்ரவரி 5-ம் தேதிக்கு இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. #MGRCentenaryArch #MadrasHC
    பொங்கல் பரிசை 14-ந்தேதிக்குள் வாங்கவேண்டும். இல்லாவிட்டால் கிடைக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளது. #PongalGift #Pongal #TNGovt
    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு முன்கூட்டியே ஊருக்கு செல்வதால் 6 நாள் விடுமுறை முடிந்து வந்து பொங்கல் பொருட்களை வாங்கி கொள்ளலாமா? என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுந்தது. இது பற்றி அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தொடங்கி இன்றோடு 3 நாட்களாகி விட்டது. 7-ந்தேதியில் இருந்து 14-ந்தேதிக்குள் மட்டுமே பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



    எனவே எக்காரணம் கொண்டும் 14-ந்தேதிக்கு பிறகு பொங்கல் பரிசு பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை. எனவே பொதுமக்கள் குறிப்பிட்ட தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக் கொள்ள வேண்டும். 14-ந்தேதிக்கு பிறகு பொங்கல் பரிசு கண்டிப்பாக கிடைக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எனவே பொங்கல் பரிசு பொருட்களை இன்று முதல் விரைந்து கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #PongalGift #Pongal #TNGovt
    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக திடமான கொள்கை முடிவு எடுக்கத் தவறிய தமிழக அரசை கண்டித்து சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். #DMK #MKStalin
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    நேற்று நான் பேசும் போது, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை பற்றி குறிப்பிட்டேன். ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு மத்திய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதி செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

    தமிழக அரசு அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பதை அறிய விரும்புகிறேன். உடனடியாக அமைச்சரவையை கூட்டி அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பாக அவசர ஆலோசனை நடத்த வேண்டும். இது தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆனால், இதற்கு சபாநாயகர் அனுமதி வழங்காததை கண்டித்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


    வெளிநடப்புக்கு பின்னர் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், " ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திடமான கொள்கை முடிவு எடுப்பதற்காக அமைச்சரவை கூட்டத்தை நடத்தி ஆலோசிக்க வேண்டும் என்று முதலமைச்சரை நான் வலியுறுத்தினேன். ஆனால் எதுவுமே நடக்காததால் தமிழக அரசின் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம்" என்று குறிப்பிட்டார்.

    இதன் பின்னர், சிறிது நேரம் நடைபெற்ற சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.  #DMK #MKStalin #SterlitePlant #TNAssembly
    தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. #SC #SterlitePlant
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘ஸ்டெர்லைட் ஆலை’யால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாக கூறி ஆலைக்கு எதிராக பொது மக்கள் நீண்ட நாளாக போராட்டம் நடத்தினர்.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மிகப்பெரிய அளவில் நடந்த 100-வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர்.

    அப்போது போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தீ வைப்பு- கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டு கலவரத்தை அடக்கியதால் கலெக்டர் அலுவலகம் தப்பியது.

    வன்முறையைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

    இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடரப்பட்ட வழக்கில் ஆலையை திறக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா குழுமம் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு மாநில பசுமைத் தீர்ப்பாயமும் ஆலைக்கான அனுமதியை ரத்து செய்தது. இதை எதிர்த்தும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதானந்தா குழுமம் மேல்முறையீடு செய்தது.

    தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இதை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நிபுணர் குழுவை நியமித்தது. நிபுணர் குழுவினர் தூத்துக்குடி வந்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்தனர்.

    நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசு பற்றியும் ஆய்வு நடத்தினர். பின்னர் தூத்துக்குடியிலும், சென்னையிலும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்கள். இதில் ஆலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருவேறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. நிபுணர் குழு தனது அறிக்கையை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.

    நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்து விட்டது.


    தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. தனியார் சார்பிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இன்று இந்த மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் நாரிமன், நவின் சின்கா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கிளை பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர். நீதிபதிகள் தீர்ப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த நிபந்தனைகளை 3 வாரத்தில் ஆலை நிர்வாகம் நிறைவேற்ற முன்வர வேண்டும். நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்ட பின்பு ஆலையை திறக்க விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்பு ஆலையை திறக்க மாநில பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளிக்க வேண்டும்.

    இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    இந்த தீர்ப்பின் மூலம் ஸ்டெர்லைட் ஆலை 3 வாரத்தில் திறக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி எதுவும் வழங்கவில்லை, தீர்ப்பாயத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றி அனுமதி பெற வேண்டும் என்று மட்டுமே உத்தரவிட்டு இருப்பதாக இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசின் வக்கீல் ராகேஷ் நிருபர்களிடம் தெரிவித்தார்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், இந்த வழக்கில் தனது மனுவை தமிழக அரசு மனுவுடன் சேர்த்து விசாரிக்க நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர். ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி எதுவும் வழங்கவில்லை என்று தெரிவித்தார். #SC #SterlitePlant
    தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1,000 ஆசிரியர்கள், அவர்கள் செய்யாத தவறுக்காக வேலை இழக்கும் சூழலுக்கு ஆளாகிஉள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். #PMK #AnbumaniRamadoss
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1,000 ஆசிரியர்கள், அவர்கள் செய்யாத தவறுக்காக வேலை இழக்கும் சூழலுக்கு ஆளாகிஉள்ளனர். அது மட்டுமின்றி, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் 30 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி விதிகள் வகுக்கப்பட்டு 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் ஓராண்டு கழித்து 2011-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி தான் தமிழகத்தில் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.

    கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தேசிய அளவில் அச்சட்டம் நடைமுறைக்கு வந்த 23.8.2010 முதல் 23.8.2012 வரை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர்ந்தவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தைப் பொருத்தவரை 2011ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி தான் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது என்பதால் 2016-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதிக்குள் தகுதித் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றால் போதுமானது என அறிவிக்கப்பட்டது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் மூன்று முறை மட்டுமே தகுதித் தேர்வு நடத்தப்பட்டதால் அனைத்து ஆசிரியர்களாலும் தேர்ச்சி பெற முடியவில்லை.

    இதையடுத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடு 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசம் இன்னும் இரண்டரை மாதங்களில் நிறைவடையவுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களும் இன்று வரை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. வரும் மார்ச் 31-ந்தேதிக்குள் அவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் வேலை இழப்பது உறுதி.

    தமிழ்நாட்டைப் பொறுத்த வரை தனியார் பள்ளி ஆசிரியர்களின் கல்வித் தகுதி, தகுதித் தேர்வு தேர்ச்சி, ஊதிய விகிதம் ஆகியவற்றை கண்காணிக்கவும், தணிக்கை செய்யவும் முறையான கட்டமைப்புகள் இல்லை. அதனால் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கூட உடனடியாக பணி நீக்க ஆபத்து இல்லை. ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றுவோர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் மார்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு ஒரு நாள் கூட பணியில் நீடிக்க முடியாது. அவ்வாறு பணி நீக்கம் செய்வது அவர்களின் வாழ்க்கையையே இருளாக்கி விடும்.

    தகுதித் தேர்வில் கடந்த 6 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாதது ஆசிரியர்களின் தவறு தானே என்று தோன்றலாம். ஆனால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதது நிச்சயம் ஆசிரியர்களின் தவறு அல்ல. 2011-ம் ஆண்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு இதுவரை 2012-ம் ஆண்டில் இருமுறை, 2013, 2017 ஆகிய ஆண்டுகளில் தலா ஒருமுறை என 4 முறை மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

    ஆனால், கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி ஆண்டுக்கு இருமுறை வீதம் 8 ஆண்டுகளில் 16 முறை தகுதித் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். தேசிய அளவில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அவ்வாறு நடத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் தகுதித் தேர்வு நடத்தப்பட்டிருந்தால் அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.


    ஆனால், நீதிமன்ற வழக்குகள் காரணமாக 2013 முதல் 2017 மார்ச் வரை தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. 2018-ம் ஆண்டில் அக்டோபர் 6 மற்றும் ஏழாம் தேதிகளில் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்த போதிலும், பல்வேறு குழப்பங்கள் காரணமாகத் தேர்வு நடத்தப்படவில்லை. தகுதித் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற முடியாததற்கு இது தான் முக்கியக் காரணம் ஆகும். இதனால் அவர்கள் பல உரிமைகளை இழந்துள்ளனர். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததைக் காரணம் காட்டி, கடந்த 8 ஆண்டுகளாக அவர்களுக்கு வளர் ஊதியம், ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட எந்த உரிமைகளும் வழங்கப்படவில்லை. நியமன ஒப்புதல்கள் ஏற்கப்படாததால் பல ஆசிரியர், ஆசிரியைகள் ஊதியமின்றி பணிபுரிந்து வருகின்றனர்.

    ஆசிரியர் தேர்வு வாரியம் நிலையான தலைவர் இல்லாமல் முடங்கிக் கிடப்பதால் உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. ஒருவேளை நாளையே தகுதித் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டால் கூட விண்ணப்பங்களைப் பெற்று தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட குறைந்தது 4 மாதங்கள் ஆகும். அதற்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஆசிரியர்களின் வேலை பறிக்கப்பட்டு விடும்.

    இதை தடுக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு. அதை உணர்ந்து பணி இழக்கும் அரசு ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு தகுதித் தேர்வு நடத்தி, உடனடியாக முடிவுகளை அறிவிக்க வேண்டும். ஒருவேளை அது சாத்தியமில்லை என்றால், தகுதித் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடுவை மேலும் சில ஆண்டுகள் நீட்டித்து, அதற்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வை எழுதுவதற்கான நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #PMK #AnbumaniRamadoss
    ×