search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamilnadu govt"

    மின்சாரம் தாக்கி பலியான வாலிபர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNCM #Edappadipalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று பேசியதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம், வடக்குப்பொய்கை நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த காத்தலிங்கம் மின் கம்பம் நடும் பணிக்கு, அவ்வழியே சென்று கொண்டிருந்த, மாரிமுத்து மகன் சரவணன் என்பவரை அழைத்து, அப்பணியினை மேற்கொண்டிருந்த போது, எதிர் பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

    மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சரவணனின் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNCM #Edappadipalaniswami
    2017-18-ம் ஆண்டு நிதி ஆண்டில் மொத்தம் 31 ஆயிரத்து 757 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் தமிழ்நாட்டில் விற்பனையாகி உள்ளன. இதன் மூலம் தமிழக அரசுக்கு நிகர லாபமாக ரூ. 26 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் மது விற்பனையை அரசே பொறுப்பேற்று நடத்தி வருகிறது.

    இதற்காக மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 1983-ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.

    மக்களை பாதிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப் போவதாக கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க. அறிவித்தது. அதன்படி சுமார் ஆயிரம் டாஸ்மாக் மதுக்கடைகள் தமிழகம் முழுவதும் மூடப்பட்டன.

    என்றாலும் டாஸ்மாக் மூலம் வரும் மது விற்பனை வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தப்படிதான் உள்ளது. கடந்த 2017-18-ம் ஆண்டுக்கான மது விற்பனை மூலம் கூடுதல் வருமானம் கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    2017-18-ம் ஆண்டு நிதி ஆண்டில் மொத்தம் 31 ஆயிரத்து 757 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் தமிழ்நாட்டில் விற்பனையாகி உள்ளன. இதன் மூலம் தமிழக அரசுக்கு நிகர லாபமாக ரூ. 26 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

    டாஸ்மாக் நிறுவனம் 11 மதுபான தொழிற்சாலைகளில் இருந்து மதுபானங்களை பெற்று விற்பனை செய்கிறது. #Tasmac
    வருவாய்க்காக டாஸ்மாக் கடைகளை மட்டும் நம்பாமல் மாற்று வழியில் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. #MadrasHCBench #Tasmac #TNGovt
    மதுரை:

    திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஆண்டில் 31,244 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது. பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் மது அருந்தும் பழக்கம் 36 சதவீதமாகவும், தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் 46.7 சதவீதமாகவும் உள்ளது. மது அருந்தும் பழக்கத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

    மதுப்பழக்கத்தால் மனமுறிவு, நிம்மதியின்மை, உடல் நலக்குறைவு உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 வரை செயல்படுகின்றன. இரவில் போதையில் வாகனத்தில் செல்வோர்களால் விபத்துகளும், உயிரிழப்புகளும் நடைபெறுகின்றன.

    மது விற்பனைக்கு எதிராகவும், மதுகடைகளை மூடவும் வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இருப்பினும் மது விற்பனை அதிகரித்து வருகிறது.

    எனவே தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்க வேண்டும். மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும்.

    மேலும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலைப்பட்டியல் வைக்கவும், மது விற்பனைக்கு ரசீது வழங்கவும், கூடுதல் விற்பனைக்கு மது விற்றால் புகார் அளிக்க உயர் அதிகாரிகளின் தொடர்பு எண் மற்றும் விபரங்களை டாஸ்மாக் கடைகளில் எழுதி வைக்கவும், மதுபான பாட்டில்களில் அதில் கலந்துள்ள பொருட்கள் மற்றும் தயாரிப்பாளர் விபரங்களை தமிழில் குறிப்பிடவும், டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.



    இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மது அருந்துவது தொடர்பான புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டதோடு, மதுக்கடையின் நேரத்தை மாற்ற உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடப்பட்டது.

    அதற்கு நீதிபதிகள் 24 மணி நேரமும் மது கிடைக்கும் போது, மதுக்கடைகளின் நேரத்தை மாற்றி அமைப்பதால் என்ன பயன் என கேள்வி எழுப்பினர்.

    அரசுத்தரப்பில் மது விற்பனையை முறைப்படுத்த பல விதிகளும், அரசாணைகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு நீதிபதிகள், விதிகள் உள்ளன. ஆனால் அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? பல்வேறு பிரச்சனைகளுக்கும் காரணம் மதுவே. சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தினால் பெரும்பாலான குற்றங்கள் குறையும்.

    வருவாய்க்காக டாஸ்மாக் கடைகளை மட்டும் நம்பாமல் அரசு வருவாயை உயர்த்த பல வழிகள் உள்ளன. அவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும். கிராமசபை கூட்டங்களை நடத்தி மதுக்கடைகள் வேண்டாமென தீர்மானம் நிறைவேற்றலாம்.

    தொடர்ந்து மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்து விட்டது. இனிவரும் தலை முறைகளையாவது காக்க வேண்டும் என தெரிவித்து இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். #MadrasHCBench #Tasmac #TNGovt

    கோவை வையம்பாளையத்தில் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். #Edappadipalaniswami
    கோவை:

    கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலின் போது கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவுக்கு கோவை வையம்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார்.

    இந்த அறிவிப்பின் அடிப்படையில் உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடு நினைவை போற்றி சிறப்பிக்கும் வகையில் அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டபேரவை விதி 110-ன் கீழ் 20.2.2016 அன்று அறிவித்தார்.

    அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜனவரியில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு விறுப்பாக முடிந்தது.

    சுமார் 2100 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தில் நாராயணசாமி நாயுடுவின் மார்பளவு சிலை நிறுவப்பட்டு உள்ளது. மணிமண்டபத்தில் பின்புறம் சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மணிமண்டபம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.பின்னர் மணிமண்டபத்தில் அமைந்துள்ள நாராயணசாமி நாயுடு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்தை திறந்து வைத்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் உள்ளனர்.

    விழாவுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார். அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்தார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சிறப்புரையாற்றினார்.

    முன்னதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அரசு செயலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். விழாவில் கலெக்டர் (பொறுப்பு) துரை ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் சங்கர், எம்.பி.க்கள் ஏ.கே. செல்வராஜ், மகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண் குமார், அம்மன் அர்ச்சுணன், எட்டி மடை சண்முகம், வி.சி. ஆறுக்குட்டி, ஓ.கே. சின்னராஜ், கஸ்தூரி வாசு, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் நாராயணசாமி நாயுடு குடும்பத்தினர். விவசாய சங்க தலைவர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பில் நாட்டு இன காளை கன்று பரிசாக வழங்கப்பட்டது. அருகில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளார்.

    நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நாட்டு மாடு இன காளை கன்று ஒன்றை விவசாயிகள் பரிசாக வழங்கினார்கள்.

    மணி மண்டபம் திறப்பு விழாவிற்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் இருந்து காரில் விளாங்குறிச்சியில் உள்ள ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. வீட்டிற்கு சென்றார். அங்கு காலை உணவு அருந்தினார்.

    அதன் பின்னர் மணிமண்டபம் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். வழி நெடுக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்து வரவேற்பு அளித்தனர்.

    செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. #TNCM #Edappadipalaniswami

    மத்திய அரசின் நெருக்கடியால் வழக்கு போடப்பட்டதா? அல்லது தமிழக அரசே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிக்கிறதா? என்பதை முதல்-அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். #PRPandian
    மன்னார்குடி:

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக்கட்ட தாக்கல் செய்துள்ள வரைவு திட்ட அறிக்கைக்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளதை வரவேற்கிறோம். அதேநேரம் பிரதமர் மோடியை மதுரையில் சந்திக்க உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழகம் சார்பில் கண்டனத்தை நேரிலும், கடிதம் மூலமும் தெரிவிக்க வேண்டும்.

    கோதாவரி-காவிரி இணைப்பு என்று கூறி, காவிரி பாசனத்தை அழிக்க மத்திய மந்திரி நிதின்கட்கரி சதி செயலில் ஈடுபடுகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். 2017-18-ம் ஆண்டு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

    நாகை மாவட்டத்தில் போலீசார் அனுமதித்த இடங்களில் தான் அவர்களின் முழு பாதுகாப்போடு போக்குவரத்து பாதிப்பின்றி ஹைட்ரோ கார்பன் எரிவாயு எதிர்ப்பு பிரசாரம் செய்தோம். இந்த நிலையில் வேதாரண்யம் பகுதிகளில் 4 போலீஸ் நிலையங்களில் என் மீது வழக்கு தொடர்ந்திருப்பது கேலிக்கூத்தானது. மத்திய அரசின் நெருக்கடியால் வழக்கு போடப்பட்டதா? அல்லது தமிழக அரசே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிக்கிறதா? என்பதை முதல்-அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும்.

    நாளை குடியரசு தினத்தன்று திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #PRPandian #TNGovt
    முதல் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. #GIM #MadrasHC
    சென்னை:

    இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் புதன்கிழமை தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

    இதில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை 2019 என்ற விளக்க கையேட்டை வெளியிட்டு பேசினார். முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் என சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விதிமுறைகள் வகுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.


    இவ்வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:-

    முதல் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது?  2015ல் நடந்த முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டன?  2015ல் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன?  2015 மற்றும் 2019 ல் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் எத்தனை? இவ்வாறு நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

    மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விதிமுறைகள் வகுக்க கோரிய மனுவையும் தள்ளுபடி செய்ததுடன், முதல் உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #GIM #MadrasHC
    கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களுக்கு இழப்பீட்டை உயர்த்தி வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #MaduraiHCBench
    மதுரை:

    தஞ்சாவூரை சேர்ந்த கோவிந்தராஜன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், திண்டுக்கல் மாவட்டங்கள் கடும் சேதம் அடைந்தது.

    இதில் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். மேலும் விவசாய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் துண்டு துண்டானது. தென்னை விவசாயத்தில் வருடத்திற்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 3 லட்சம் வரை வருமானம் வரும்.



    ஆனால் சேதமடைந்த தென்னை ஒன்றுக்கு தமிழக அரசு நிவாரண தொகையாக ரூ. 1,500 வழங்க உத்தரவிட்டுள்ளது.

    இது போதுமானதாக இல்லை. எனவே தென்னை ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும். மாவட்ட முழுவதும் மரங்கள் விழுந்துள்ளதை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் அகற்றவும், தென்னை விவசாயிகளுக்கு உயர் ரக தென்னங்கன்றுகளை மானிய விலையில் வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த்துறை செயலாளர், விவசாயத் துறை செயலாளர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். #GajaCyclone #MaduraiHCBench
    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. #MaduraiHCBench
    மதுரை:

    தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தொடக்க கல்வித்துறை சார்பில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றனர்.

    இந்நிலையில், அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை, அரசு புதிதாக தொடங்கியுள்ள மழலையர் எல்.கே.ஜி, யு.கே.ஜி.வகுப்புகளில் பணி அமர்த்த 11.12.2018 அன்று சமூக நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 89-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை எடுக்க ஆசிரியர்கள் கிண்டர் கார்டன் பயிற்சி அல்லது மாண்டிசோரி கல்வி முடித்திருக்க வேண்டும். இந்த பயிற்சி முடிக்காத, இடைநிலை ஆசிரியர்கள் எவ்வாறு, எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை எடுக்க முடியும்.

    இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக இருந்தால், அதே துறையில்தான் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் விதிகளுக்கு மாறாக தொடக்க கல்வியில் இருந்து, சமூக நலத்துறைக்கு மாற்றி அரசாணை வெளியிட்டிருப்பது ஏற்புடையது அல்ல.

    எனவே, தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள இடைநிலை ஆசிரியர்களை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக சமூக நலத்துறை 11.12.18 அன்று வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த மனு இன்று நீதிபதி சுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்திலுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உபரியாக உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வருகிற 25-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். #MaduraiHCBench
    மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக அரசு, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #SC #MekedatuDam
    புதுடெல்லி:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.

    இதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்து இருந்தது.

    இந்த அனுமதிக்கு தடை கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

    மேலும் மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடுத்தது.

    இந்த மனுக்கள் கடந்த டிசம்பர் 12-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மேகதாது விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனுமதிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

    மேலும் இது தொடர்பாக தமிழக அரசின் மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் உத்தரவிட்டு இருந்தது.


    இதைத்தொடர்ந்து கர்நாடக அரசு கடந்த 4-ந் தேதி தாக்கல் செய்த பதில் மனுவில் “தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கோரி இருந்தது.

    மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் “கர்நாடக அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்) தயாரிக்க நிபந்தனையின் பேரில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக அரசு, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    மத்திய அரசும் 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது. #SC #MekedatuDam
    பொங்கல் பொருட்கள் மற்றும் ரூ.1,000 பணம் வாங்காமல் விடுபட்டவர்களுக்கு இன்றும், நாளையும் ரே‌சன் கடைகளில் வழங்கப்படுகிறது. #PongalCashGift
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌சன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்க பணமும், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் போன்ற பொருட்கள் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

    கடந்த 7-ந்தேதி முதல் அனைத்து ரே‌சன் அட்டைதாரர்களும், ரே‌ஷன் கடைக்கு சென்று ரூ.1000 பணம் மற்றும் பொங்கல் பரிசு பொருட்களை பெற்று வந்தனர்.

    இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சர்க்கரை அட்டை மற்றும் கவுரவ அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.1000 பணம் வழங்க சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது.

    அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணத்துடன் பொங்கல் பரிசு வழங்கலாம் என்றும், மற்ற அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்கள் மட்டும் வழங்கலாம் என்றும் உத்தரவில் கூறி இருந்தனர்.



    இந்த தடை உத்தரவை மாற்றியமைக்கக் கோரி உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை ஐகோர்ட்டு சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பணத்துடன் பொங்கல் பொருட்கள் வழங்க உத்தரவிட்டது.

    இதையடுத்து சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களும் ரேசன் கடைக்கு சென்று ரூ.1000 பணத்துடன் பொங்கல் பொருட்களை பெற்று வந்தனர்.

    ரூ.1000 பணம் மற்றும் பொங்கல் பொருட்கள் வாங்காமல் விடுபட்டவர்களுக்கு இன்றும், நாளையும் ரே‌சன் கடைகளில் வழங்கப்படும்.

    எனவே ரூ.1000 பணம் மற்றும் பொங்கல் பரிசு பொருட்கள் வாங்காதவர்கள் இன்றும், நாளையும் ரேசன் கடைக்கு சென்று வாங்கி கொள்ளலாம். #PongalCashGift
    பொங்கல் பரிசு தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் யாராவது மேல்முறையீடு செய்யலாம் என்பதால், தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. #PongalCashGift #CaveatPetition
    புதுடெல்லி:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌சன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 பரிசுடன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசு தொகுப்பை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவையை சேர்ந்த ஜேசுதாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்க தடை விதித்தது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரொக்கப்பரிசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை மாற்றி அமைக்க கோரி தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையை வழங்க அனுமதி அளித்தது. மேலும் இலவசத் திட்டங்கள் தொடர்பாக தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்களையும் நீதிபதிகள் வழங்கினர். பொங்கல் பரிசு தொடர்பாக உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியதால், மேலும் 10 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு கிடைக்கும்.



    இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பொங்கல் பரிசு தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து யாராவது மேல்முறையீடு செய்தால், மாநில அரசு தரப்பு வாதத்தை கேட்காமல்  உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது. #PongalCashGift #CaveatPetition
    சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு 1,000 ரூபாய் வழங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. #PongalCashGift #HighCourt
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌சன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000த்துடன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசு தொகுப்பை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து கோவையை சேர்ந்த ஜேசுதாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்க தடை விதித்தது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரொக்கப்பரிசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை மாற்றி அமைக்க கோரி தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஐகோர்ட்டு விதித்த தடை உத்தரவினால், சர்க்கரை மட்டும் வாங்கும் ரே‌சன் அட்டைதாரர்களுக்கும், எந்த பொருளும் வாங்காத ரே‌சன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் பரிசு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சர்க்கரை மட்டும் வாங்கும் ரே‌சன் அட்டைதாரர்கள் மொத்தம் 10 லட்சத்து 11 ஆயிரத்து 330 உள்ளனர்.

    இவர்களில் கடந்த 9-ந்தேதி வரை 4 லட்சத்து 12 ஆயிரத்து 558 ரே‌சன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசான ரூ.1,000த்தை வாங்கி சென்று விட்டனர். இதனால், பொங்கல் ரொக்கப்பரிசு வாங்காத மீதமுள்ளவர்கள், மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர். அவர்களும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதால், பொங்கல் பரிசான ரூ.1,000அவர்களுக்கும் வழங்க அனுமதிக்க வேண்டும்.

    இதற்கு ஏற்ப, கடந்த 9-ந்தேதி இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த தடை உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசாரணை பட்டியலில் இந்த வழக்கு இடம் பெறவில்லை.

    இதையடுத்து நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘சர்க்கரை வாங்கும் ரே‌சன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கப்பரிசு வழங்க அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக இன்று விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சுமார் 1 மணியளவில் வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக உத்தரவிட்டனர்.


    அதன்படி இவ்வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையை வழங்க அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இலவசத் திட்டங்கள் தொடர்பாக தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.

    “இலவச திட்டங்கள் தொடர்பாக தெளிவான வரையறையுடன் முடிவெடுக்க வேண்டும். இலவச திட்டங்களை வழங்கும்போது, பயனாளிகளை வரையறை செய்ய வேண்டும். அனைவருக்கும் வங்கி கணக்கு உள்ள நிலையில், அதில் ரொக்கப் பணத்தை செலுத்தலாம். அதனை விடுத்து மக்களை காக்க வைப்பது ஏன்? 1,000 ரூபாய் கொடுக்காவிட்டால் வாக்களிக்க மாட்டோம் என மக்கள் கூறும் அளவுக்கு நிலைமையை உருவாக்கியது ஏன்?” என்றும் நீதிபதிகள் கடிந்துகொண்டனர்.

    பொங்கல் பரிசு தொடர்பாக உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியதால், மேலும் 10 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு கிடைக்கும். #PongalCashGift #HighCourt
    ×