search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய பட்ஜெட்"

    • பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
    • ஆர்ப்பாட்டத்தில் சென்னைக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் இணைந்து பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இதற்காக ஒவ்வொரு மாவட்ட தி.மு.க.விலும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்த இப்போதே ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டு உள்ளன.

    இந்த ஆர்ப்பாட்டங்களில் மாவட்டக் கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், மகளிரணியினர் திரளாக பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னையில் கலெக்டர் அலுவலகம், சைதாப்பேட்டை சின்னமலை, தாம்பரம், ஆவடி ஆகிய 4 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

    சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சென்னை கிழக்கு மாவட்டம், சென்னை வடக்கு மாவட்டம், சென்னை வடகிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர்.

    இதுகுறித்து மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி முன்னிலையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னைக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் இணைந்து பங்கேற்கிறார்கள்.

    எம்.எல்.ஏ.க்கள் ஜோசப் சாமுவேல், தாயகம் கவி, வெற்றியழகன், பரந்தாமன், எபினேசர், ஐட்ரீமூஸ் மூர்த்தி, கே.பி.சங்கர் மற்றும் மாநில நிர்வாகிகள், கலந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்து உள்ளார்.

    இதே போல் காஞ்சி வடக்கு மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம் சண்முகம் சாலையில் கழக பொருளாளர் கழக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கூறி உள்ளார்.

    இதில் தாம்பரம் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., மாவட்ட கழக துணை செயலாளர்கள் பல்லாவரம், இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் மாநில நிர்வாகிகள், திரளாக பங்கேற்க உள்ளதாக கூறியுள்ளார்.

    சைதாப்பேட்டையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சென்னை தெற்கு மாவட்டம், சென்னை மேற்கு மாவட்டம், சென்னை தென் மேற்கு மாவட்டம் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். மாவட்டக் கழக செயலாளர்கள் நே.சிற்றரசு, மயிலை த.வேலு, தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் ரமேஷ், தி.நகர் ஜெ.கருணாநிதி, கணபதி, எழிலன், பிரபாகரராஜா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

    திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் ஆவடி மாநகராட்சி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இதேபோல் திருவள்ளூரில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று முழக்கமிட உள்ளனர்.

    • பிரதமர் மோடி அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும்.
    • கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு வழங்கிய மொத்த ஜி.எஸ்.டி. தொகை ரூபாய் 12,210 கோடி.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியமைந்து நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த முதல் நிதிநிலை அறிக்கையில் பீகார் மாநிலத்திற்கு ரூபாய் 59,000 கோடியும், ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக ரூபாய் 15,000 கோடியும் வழங்கப்பட்டு தமிழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டுள்ளன.

    கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு வழங்கிய மொத்த ஜி.எஸ்.டி. தொகை ரூபாய் 12,210 கோடி. ஆனால், தமிழகத்திற்கு சல்லிக்காசு கூட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை.

    பா.ஜ.க. கட்சியின் சார்பாக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் பதவியேற்ற பிறகு அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக அவர் இருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் ஒன்றிய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி, தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் அருகில், தாராபூர் டவர் முன்பாக சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அதேபோல, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் ஒன்றிய அரசின் தமிழகத்தை வஞ்சிக்கிற போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் தொக்கன் சாஹூ பதிலளித்தார்.
    • ஜூலை 23ஆம் தேதி 2024-25 நிதி அண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. ஜூலை 23ஆம் தேதி 2024-25 நிதி அண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று மக்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி, கோவை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்த மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் தொக்கன் சாஹூ பதிலளித்தார்.

    அதில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, ஒருங்கிணைந்த இயக்கத் திட்டம், மாற்று ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் எனத் தெரிவித்தார். ஆனால் தமிழக அரசு, ஒருங்கிணைந்த இயக்கத் திட்டம், மாற்று ஆய்வு திட்டம் இன்றி திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது என்று விளக்கமளித்தார்.

    அதைத் தொடர்ந்து நாட்டில் கவாச் அமைப்பை நிறுவுவதற்கு ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி குறித்த விவரங்களை கனிமொழி எம்பி கோரி இருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கவாச் பணிகளுக்கு இதுவரை ஆயிரத்து 216 கோடியே 77 லட்ச ரூபாய் நிதி பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், நடப்பு 2024-25 நிதி ஆண்டில் ஆயிரத்து 112 கோடியே 57 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறினார்.

    • தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.
    • சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கை பிரகடனமாகவே இருக்க வேண்டும்.

    ஆனால் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாக தெரியவில்லை. மாறாக, தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

    மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதி, தமிழ்நாடு சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது.

    மத்திய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா.ஜ.க. மத்திய அரசைக் கண்டித்து வருகிற ஜூலை 27, சனிக்கிழமை, காலை 10.00 மணியளவில், மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.

    மாவட்டக் கழக நிர்வாகிகள் - கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், கழக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்து, தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் மத்திய பாசிச பா.ஜ.க. அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    தத்தமது மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்த விவரத்தை தலைமைக் கழகத்திற்கு உடனே தெரிவித்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கம் மீதான சுங்க வரி குறைக்கப்பட்ட பிறகு தங்கம் விலை குறைந்து வருகிறது.
    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

    சென்னை:

    மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை கடந்த 2 தினங்களாக குறைந்த நிலையில் இன்றும் விலை குறைந்தது.

    தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440-க்கும் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ6,430-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 89 ரூபாய்க்கும் கிலோவுக்கு ரூ.3000 குறைந்து பார் வெள்ளி ரூ.89ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் மீதான சுங்க வரி குறைக்கப்பட்ட பிறகு தங்கம் விலை கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3160 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விமான நிலையங்களுக்கு இணையாக 77 ரெயில் நிலையங்கள் அதி நவீனமயமாக்கப்படுகிறது.
    • காங்கிரஸ் அரசை விட 7 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மத்திய அரசு தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் தமிழகத்தின் ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசை விட 7 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ரூ.33,467 கோடி செலவில் 2,587 தொலைவுக்கு புதிய ரயில்வே திட்டங்கள் நடக்கின்றன. சுமார் 1,302 கி.மீட்டர் தொலைவிற்கு புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    விமான நிலையங்களுக்கு இணையாக சென்னை கடற்கரை, எழும்பூர், செங்கல்பட்டு, கிண்டி உள்ளிட்ட 77 ரெயில் நிலையங்கள் அதி நவீனமயமாக்கப்பட உள்ளது.

    சென்னை கடற்கரை - எழும்பூர் 4வது வழித்தட திட்டத்திற்கு நிலம் கையகபடுத்துவதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது.

    தமிழகத்தில் பல்வேறு ரெயில் திட்டங்களை நிறைவேற்ற 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் தேவைப்படுகிறது.

    ரெயில்வே திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது. தற்போது 879 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

    • பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    ஜெய்ப்பூர்:

    பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    மத்திய பட்ஜெட்டுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் உள்ள நீட் தேர்வாளர்கள் பயிற்சிக் கட்டணத்தில் 18 சதவீத ஜி.எஸ்.டி.யில் எந்த நிவாரணமும் அறிவிக்கப்படாததால் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது என தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, உத்தர பிரதேசத்தின் ஜான்பூரை சேர்ந்த வைஷ்ணவி கூறுகையில், கல்வி ஒரு உரிமை, அதற்கு வரி விதிக்கக் கூடாது. பயிற்சிக் கட்டணத்தில் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டிருந்தால் அது எங்கள் பெற்றோருக்கு நிதி நெருக்கடியைக் குறைத்திருக்கலாம். ஆனால் அத்தகைய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

    ஆனாலும், கல்விக் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்துள்ள வைஷ்ணவி, இது ஏழை குடும்ப மாணவர்களுக்கு உதவும். கல்விக்கான 3 சதவீத வட்டி குறைப்பு அதிக கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என கூறினார்.

    • தினசரி குறைந்த பட்ச ஊதியம் 400 ரூபாய் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
    • மார்ச் மாதம் வரையில் கட்டப்படாத கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும்.

    மோடி தலைமையிலான மத்திய அரசு 3-வது முறையாக அமைந்த நிலையில் நாடாளுமன்றத்தில் முதலாவது மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

    மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இருந்து பெரும்பாலானவற்றை காப்பி அடித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்திருந்தது. மேலும் பட்ஜெட்டில் பல மாநிலங்கள் பெயர் குறிப்பிடப்படவில்லை எனவும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் பதவி நாற்காலியை பாதுகாப்பதற்கான பட்ஜெட் (ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததை சுட்டிக்காட்டி) எனவும் விமர்சித்திருந்தது.

    இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தார்.

    மாநிலங்களவையில் இன்று பேசும்போது ப.சிதம்பரம் கூறியதாவது:-

    தினசரி குறைந்த பட்ச ஊதியம் 400 ரூபாய் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளான எம்.எஸ்.பி.-க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் அல்லது குறைந்த பட்ச ஆதார விலை கொடுக்க வேண்டும்.

    மார்ச் மாதம் வரையில் கட்டப்படாத கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும்.

    ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

    நீட் தேர்வு முறை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை உரிமையை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

    மேலும், தயவு செய்து இன்னும் கொஞ்சம் காப்பி அடிக்கவும் என கிண்டல் செய்தார்.

    அத்துடன் வேலையாப்பின்மை மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம், 2024 ஜூனில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 9.2 சதவீதமாக மதிப்பிட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

    • கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்காக ரூ.36.93 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது
    • கடந்த 3 வருடங்களை விட அதிகமானதாக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    2024 மக்களவைத் தேர்தலில் மோடியின் தலைமையில் மீண்டும் பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆட்சியமைத்த பின் நாட்டின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதன் மீது 83 நிமிடங்கள் உரையாற்றினார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணித்தும் இந்த பட்ஜெட் தாக்களாகியுளளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இதற்கிடையில் பட்ஜெட்டில் செய்தி மற்றும் ஒளிபரப்புதுறைக்கு ரூ.4,342 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்காக ரூ.36.93 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த பட்ஜெட்டில் கலை மற்றும் காலாச்சார மேம்பாட்டுக்கு ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த பட்ஜெட்டில் புனேவில் உள்ள திரைப்பட கல்லூரிக்கு ரூ.87.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்கத்தாவில் உள்ள சத்யஜித் ரே திரைப்பட கல்லூரிக்கு ரூ.81 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துக்கு ரூ.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    பாஜக அரசின் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் முக்கியமானதாக அதிகப்படியான விளம்பரங்கள் உள்ளன. மோடியின் பிம்பத்தை மக்கள் மத்தியில் நிறுவவுவதற்கு ரயில்வே நிலையங்களில் செல்பி பாயிண்ட் உள்டப்பட பல விளம்பர உத்திகள் தொடர்ந்து கையாளப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் பட்ஜெட்டில் பிரசார் பாரதி, ஆல் இந்தியா ரேடியோ உள்ளிட்டவற்றின் மூலம் தகவல்தொர்பு மற்றும் விளம்பரத்துக்கு ரூ.1,089 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.1,078 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அந்த தொகை அதிகரித்துள்ளது. கடந்த 3 வருடங்களை விட அதிகமானதாக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

     

    • சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பியும் மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் மத்திய பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ளார்
    • பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் சந்தித்தார்.

    2024 மக்களவைத் தேர்தலில் மோடியின் தலைமையில் மீண்டும் பாஜகவின் என்டிஏ கூட்டணி  ஆட்சியமைத்த பின் நாட்டின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதன் மீது 83 நிமிடங்கள் உரையாற்றினார். பாஜக மீண்டும் ஆட்சியமைக்க முக்கிய காரணமாக இருந்த தெலுங்கு தேசம் மற்றும் ஜனதா தளம் ஆளும் மாநிலங்களான ஆந்திர பிரதேசம் மற்றும் பீகாருக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கியும், தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணித்தும் இந்த பட்ஜெட் தாக்களாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தை மம்தா பானர்ஜி தவிர்த்து ஸ்டாலின் உட்பட இந்தியா கூட்டணி  மாநிலத் தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். இந்நிலையில் இன்று பாராளுமன்றம் கூடிய நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் பட்ஜெட்டை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

     போரட்டத்தில் பங்கேற்ற சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பியும் மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் மத்திய பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பட்ஜெட்டில் திரைத்துறைக்கு என்று எதுவும் இல்லை, நாட்டுக்கும் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக  சினிமா டிக்கெட் தொடர்பான கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என்று திரைத்துறையினர் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.ஆனால் அது பரிசீலிக்கப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

    • பல்வேறு மாநிலங்கள் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
    • நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் என்று எதிர்கட்சி தலைவர் கூறியது கண்டனத்துக்குரியது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    பாராளுமன்றத்தில் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதன் காரணமாக ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்க 'இந்தியா'கூட்டணி முதலமைச்சர்கள் முடிவு செய்தனர்.

    டெல்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இல்லத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இந்தியா கூட்டணி தலைவர்கள் தீர்மானித்தபடி இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஒன்று திரண்டனர். பட்ஜெட்டை கண்டித்து அவர்கள் பாராளுமன்றம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை கண்டித்து எழுதப்பட்ட பதாகைகளை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஏந்தி இருந்தனர். பா.ஜ.க. அரசை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.


    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக எம்.பி.க்கள் முழுமையாக பங்கேற்றனர். பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர்.

    11 மணிக்கு பாராளுமன்றம் கூடியதும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் சபைக்குள் சென்றனர்.

    மேல்சபையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியதும் பட்ஜெட்டை கண்டித்து எதிர்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் இருப்பதாக எதிர்கட்சி எம்.பி.க்கள் குரல் எழுப்பினார்கள். எதிர்கட்சி தலைவரான மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:-

    பல்வேறு மாநிலங்கள் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. பல மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றும் வகையில் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி மத்திய அரசை குற்றம் சாட்டினார்.

    இதற்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து பேச முயன்றார். அப்போது எதிர்கட்சி எம்.பி.க்கள் பட்ஜெட்டை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.


    எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி அவர்கள் கோஷங்களை எழுப்பி வெளியேறினார்கள்.

    அப்போது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    மத்திய பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்க வில்லை. மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடவில்லை என்றால் அது புறக்கணிப்பு என்று ஆகிவிடாது. நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் என்று எதிர்கட்சி தலைவர் கூறியது கண்டனத்துக்குரியது.

    திட்டமிட்டே எதிர்கட்சிகள் மத்திய அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள்.

    இந்த நாட்டில் காங்கிரஸ் கட்சி மிக நீண்ட காலமாக ஆட்சியில் இருந்தது. அவர்கள் பல்வேறு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் மாநிலங்கள் பெயர்களை குறிப்பிடுவது இல்லை. இது அவர்களுக்கு தெளிவாக தெரியும்.

    பட்ஜெட் குறித்து எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுவது துரதிருஷ்டவசமானது. மகாராஷ்டிரா மாநிலத்தில் வடகான் துறைமுகம் அமைக்க மத்திய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பட்ஜெட்டில் மகாராஷ்டிரத்தின் பெயரை குறிப்பிடவில்லை. அதற்காக மகாராஷ்டிரா மாநிலம் புறக்கணிக்கப்பட்டது என்று அர்த்தமா? நமது மாநிலங்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகளின் திட்டமிட்ட முயற்சி இதுவாகும். இந்த குற்றச்சாட்டு மூர்க்கத்தனமானது.

    நான் பேசும் போது ஜனநாயகத்தின் கவுரவத்திற்காக எதிர்கட்சிகள் இங்கே இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

    அப்போது உள்ளே வந்த எதிர்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் போட்டனர். நிர்மலா சீதாராமன் பேசிக் கொண்டே இருக்கும் போதே எதிர்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.

    எதிர்கட்சி உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு அவை தலைவர் ஜெகதீப் தன்கர் வேண்டுகோள் விடுத்தார். அவர் கூறும்போது பட்ஜெட் உரை மீதான விவாதத்திற்கான நேரத்தை அதிகரிக்க தயார் என்றார்.

    பாராளுமன்ற மக்களவை தொடங்கியதும் எதிர்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். இந்தியா கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் இருக்கை முன் எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பினார்கள்.

    எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டதாக கூறி அவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். அவை சுமூகமாக நடைபெற எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜி ஜூ கோரிக்கை வைத்தார்.

    லிங்கை கிளிக் செய்யவும்- மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கு 2.62 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு


    • இறக்குமதி வரி குறைக்கப்பட்ட 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது.
    • தங்கத்தின் மீதான மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கையை நகை வியாபாரிகள் வரவேற்றுள்ளனர்.

    சென்னை:

    கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.44 ஆயிரமாக இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை திடீரென்று அதிகரிக்க தொடங்கியது. கடந்த 19-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.55 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. ஒரே ஆண்டில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.11 ஆயிரம் அதிகரித்திருப்பது சாதாரண மற்றும் நடுத்தர மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    ஆனாலும் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தங்கம் விலை உயர்வு கூடுதல் சுமையாகவே இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிகரித்து வந்ததை கண்டு நகை வியாபாரிகளும், நகை வாங்குவோரும் கவலை அடைந்தனர்.

    இந்த நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தங்கம் விலை நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.2,200 குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.54,600-க்கு விற்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.52,400-க்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் ஒரு கிராம் ரூ.275 குறைந்து ரூ. 6,550-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு மேலும் ரூ.480 குறைந்தது. இதனால் இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.51,920-க்கு விற்கப்படுகிறது. இறக்குமதி வரி குறைக்கப்பட்ட 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.335 குறைந்துள்ளது.


    இதையடுத்து தங்கத்தின் மீதான மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கையை நகை வியாபாரிகள் வரவேற்றுள்ளனர். மேலும் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் சென்னையில் உள்ள நகைக்கடைகளில் இன்று வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் நகைக்கடைகளில் இன்று தங்க நகைகள் விற்பனை அதிகரித்தது.

    இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த நகைக்கடை வியாபாரிகள் கூறியதாவது:-

    மத்திய அரசு வருவாயை பெருக்குவதற்காக இதற்கு முன்பு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 8 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. இதனால் அப்போது தங்கம் விலை அதிகரித்தது. இதையடுத்து தங்க நகைகள் விற்பனையும் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். இறக்குமதி வரி 9 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால் தங்கம் விலையும் 9 சதவீதம் குறைந்துள்ளது.

    இனிவரும் நாட்களில் தங்கத்தின் விலை இந்த அளவிலேயே நீடிக்கும். இப்போதைக்கு விலை அதிகரிக்க வாய்ப்பில்லை. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்தால் மட்டுமே தங்கம் விலை இனி மாற வாய்ப்பு உள்ளது. அதுவரை இந்த விலைதான் நீடிக்கும்.

    தங்கம் விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இன்று காலையில் இருந்தே நகைக்கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. தங்க நகைகள் விற்பனையும் அதிகரித்தது. இன்று மட்டும் தங்க நகைகள் விற்பனை 10 சதவீதம் அதிகரித்தது.

    இனிவரும் நாட்களில் தங்கம் விலை இதே நிலையில் நீடிக்கும் நிலையில் தங்க நகைகள் விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நடுத்தர, ஏழை, எளிய மக்கள் அதிகளவில் தங்க நகையை வாங்குவார்கள்.

    தற்போது ஆடி மாதம் என்பதால் நகைக்கடைகளில் சிறப்பு விற்பனையும் நடந்து வருகிறது. இதன்படி தங்க நகைகள் வாங்குபவர்களுக்கு விலை குறைப்பு உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆடி மாதத்தில் தங்க நகைகள் விற்பனை களை கட்டும்.

    அடுத்த மாதம் ஆவணி மாதம் திருமண சீசன் என்பதால் இன்னும் 2 மாதங்களுக்கு நகைகள் விற்பனை நன்றாக இருக்கும். இதனால் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைத்திருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் வெள்ளி மீதான இறக்குமதி வரியும் 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளி விலையும் 2 நாட்களில் கிராமுக்கு 4 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.4 ஆயிரம் குறைந்துள்ளது. இதனால் வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் விற்பனையும் இன்று அதிகரித்துள்ளது.

    பிளாட்டினம் மீதான இறக்குமதி விலையும் 15.4 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பிளாட்டினம் நகைகளும் அதிகமாக விற்பனையாகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×