search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central Budget"

    • இந்தாண்டில் அதே இலக்கை எட்டிப்பிடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
    • வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் ரிசர்வ் வங்கி, அதற்கான ரெப்போ ரேட் விகிதத்தை உயர்த்தி வருகிறது.

    திருப்பூர்:

    கடந்த ஆண்டில் ஏற்பட்ட பஞ்சு - நூல் விலை உயர்வு, ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலையும் உலுக்கிவிட்டது. அதில் இருந்து மீண்டவர்கள் அடுத்த வளர்ச்சிக்காக முயற்சிக்கின்றனர். திருப்பூரின் ஏற்றுமதி 36 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இந்தாண்டில் அதே இலக்கை எட்டிப்பிடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    நூல் விலை உயர்வால் வர்த்தக வாய்ப்பு சரிந்த பின்னரும் 9 மாதங்களில் 26 ஆயிரத்து 260 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதேகாலகட்டத்தை காட்டிலும் 5,700 கோடி ரூபாய் அதிகம்.

    வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வந்த பின்னர் சர்வதேச சந்தைகளை கைப்பற்றும் அளவுக்கு இந்தியாவுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும். கடந்த ஆண்டில் பொருளாதார ரீதியாக ஜவுளித்தொழில் பாதிக்கப்பட்டது.கடும் சவால்களை சந்திக்க நேர்ந்தது. இதிலிருந்து விடுபட்டு பழையபடி வளர்ச்சிப்பாதைக்கு திரும்ப வேண்டுமெனில் மத்திய பட்ஜெட்டில், ஜவுளித்துறைக்கான சலுகை அறிவிப்பு இடம்பெற வேண்டும் என்பது ஒட்டுமொத்த திருப்பூரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ஏற்றுமதி வர்த்தக ஆர்டர் கிடைத்ததும் வங்கிகளில் பேக்கிங் கிரெடிட் என்ற பெயரில் கடன் பெற்று உற்பத்தியை துவங்குகின்றனர். மொத்தம் 9 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது. அதில் சிறு, குறு மற்றும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்களுக்கு 3 சதவீதமும், இதர நிறுவனங்களுக்கு 2 சதவீதமும் வரி சலுகை வழங்கப்படுகிறது.

    நூல் விலை உயர்வு, உக்ரைன் போர் சூழல் காரணமாக சிறு, குறு நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் வகையில் பேக்கிங் கிரெடிட் மீதான வட்டி சலுகையை 5 சதவீதம் வரை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கை.

    வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் ரிசர்வ் வங்கி, அதற்கான ரெப்போ ரேட் விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் வங்கிகளும், பழைய கடனுக்கும் வட்டியை உயர்த்துகின்றன. இதுபோன்ற எதிர்பாராத செலவுகள், பெரும் சுமையாக இறங்குகிறது. எனவே ரெப்போ ரேட் விகிதம் மாறுபடும் போது ஏற்படும் கூடுதல் செலவுகளை ரிசர்வ் வங்கி வழங்கி தொழிலை பாதுகாக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

    கொரோனா ஊரடங்கின் போது பனியன் தொழில் உடனடியாக பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென வங்கிக்கடன் நிலுவையில் 10 சதவீதம் கூடுதல் கடனாக வழங்கப்பட்டதால் அது ஆறுதலாகவும் இருந்தது. தற்போதும் பொருளாதார மந்தநிலை இருப்பதால் வங்கி கடன் நிலுவையில் 20 சதவீதம் வரை மறுநிதியளிப்பு கடனாக வழங்க வேண்டும்.

    திருப்பூரில் இயங்கும் சிறு, குறு நடுத்தர பின்னலாடை தொழில் நிறுவனங்கள் பல்வேறு காரணத்தால் முழுமையாக இயங்கவில்லை. தற்போதைய நிலவரப்படி, தொழில்துறையினர் இறக்குமதி செய்யும் மதிப்பை காட்டிலும் 6 மடங்கு அதிகமாக ஏற்றுமதி செய்தால் சுங்கவரி சலுகை கிடைக்கிறது.

    அதிகபட்ச ஏற்றுமதி நடக்காதபட்சத்தில் இறக்குமதிக்கான சுங்கவரியை வட்டியுடன் செலுத்தியாக வேண்டும். மத்திய அரசு சர்வதேச பொருளாதார நிலையை கருத்தில்கொண்டு சுங்கவரியில் சலுகை வழங்க வேண்டும்.எனவே ஒட்டுமொத்த திருப்பூரும் மத்திய அரசு 1-ந்தேதி நிறைவேற்ற இருக்கும் பட்ஜெட் அறிவிப்பை எதிர்நோக்கியிருக்கிறது. குறிப்பாக முடங்கியுள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் அறிவிப்பு இடம்பெறும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

    ×