search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Superintendent of police"

    • நள்ளிரவில் சைக்கிளில் சென்று போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
    • பொங்கல் விழா பாதுகாப்புப் பணிக்காக சென்றிருப்பதாக காவலர் தெரிவித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் நேற்று நள்ளிரவில் சாதாரண உடையில் சைக்கிளில் ரோந்து சென்றார். அப்போது திடீரென அவர் மேற்கு காவல் நிலையத்தில் உள்ளே சென்றார் அங்கு ஒரே ஒரு காவலர் பணியில் இருந்தார் அவரிடம் தான் யார் என கூறாமல் மனு கொடுக்க வந்திருப்பதாக சூப்பிரண்டு கூறினார்.

    அவரை அடையாளம் கண்டு கொள்ளாத காவலர், இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வெளியே சென்றிருப்பதாகவும், வந்தவுடன் அவர்களிடம் மனு கொடுக்குமாறும் கூறியுள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டரின் இருக்கையில் அமர்ந்த சூப்பிரண்டு அங்கிருந்த கோப்புகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் பணியில் இருந்த காவலருக்கு யாரோ உயர் அதிகாரி வந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் எங்கு சென்றிருக்கிறார்கள் என காவலரிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரித்தார்.

    அவர்கள் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா பாதுகாப்புப் பணிக்காக சென்றிருப்பதாக காவலர் தெரிவித்தார். மேலும் காவலரிடம் தன்னை இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா என்று போலீஸ் சூப்பிரண்டு கேட்டுள்ளார். அப்போது அவரைப் பார்த்ததில்லை என்று காவலர் கூறியுள்ளார். அவரிடம் தான் தான் போலீஸ் சூப்பிரண்டு என்பதை தெரிவித்துவிட்டு மீண்டும் தான் வந்த சைக்கிளில் ஏறி அவர் அங்கிருந்து சென்றார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாதாரண உடையில் சைக்கிளில் வந்து போலீஸ் ஸ்டேசனில் ஆய்வு செய்தது விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இளம்பெண் ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வந்தார். திடீரென அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி உங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் மனுவாக கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர்.

    அப்போது அந்த பெண் போலீசாரிடம் கூறியதாவது:

    எனது சொந்த ஊர் பெங்களூரு ஆகும். ஈரோடு முனிசிபால் காலனியில் கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.

    அப்போது எனது தோழி மூலம் வைராபாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் அறிமுகமானார். அவர் சேல்ஸ்மேன் வேலை பார்த்து வந்தார். அவர் திடீரென ஒரு நாள் உன்னை பிடித்துள்ளது. உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார்.

    அதற்கு நான் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 9 வயதில் மகன் உள்ளான் என்று என் வாழ்க்கையில் நடந்ததை கூறிவிட்டேன். அதன் பிறகு அவர் பெற்றோருடன் வந்து திருமணம் பற்றி பேசினார்.

    இதனையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர்கோவிலில் எங்களுக்கு திருமணம் ஆனது. திருமணமானதும் அவரது குடும்பத்துடன் வைராபாளையத்தில் வசித்து வந்தேன்.

    அதன் பின்னர் நானும் எனது கணவரும் லட்சுமி தியேட்டர் அருகே தனியாக வசித்து வருகிறோம். நான் கேட்டரிங் தொடங்க அது சம்பந்தமான பணியில் ஈடுபட்டு வந்தேன்.

    இந்நிலையில் எனது தோழியும், கேட்டரிங் உரிமையாளர் ஒருவர் என 2 பேரும் என் கணவரிடம் என்னை பற்றி தவறாக சொல்லி உள்ளனர். இதனை நம்பி எனது கணவர் என் நடத்தையில் சந்தேகப்பட்டு என்னை தினமும் அடித்து உதைத்து துன்புறுத்துகிறார்.

    மேலும் பல நேரங்களில் மது அருந்தி வந்தும் என்னை தாக்குகிறார். இதில் எனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனக்கு நியாயம் வேண்டும்.

    எனவே எனது கணவர், தோழி, கேட்டரிங் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • படுகொலை செய்யப்பட்டதாக பீகாரில் உள்ள நாளிதழ்களில் செய்தி வெளியானது.
    • வீட்டின் குளியலறை அருகே கையின் நரம்பை அறுத்துக் கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    திருப்பூர் :

    பீகார் மாநிலம் மதுபானியை சேர்ந்த இளைஞர் திருப்பூரில் படுகொலை செய்யப்பட்டதாக பீகாரில் உள்ள நாளிதழ்களில் செய்தி வெளியானது. இந்த செய்தியை ஆய்வு செய்தபோது மதுபானியைச் சேர்ந்த ஷம்பு முகையா என்ற இளைஞர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார்.

    ஷம்பு முகையா தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து இருந்தார். தனது தங்கையின் திருமணம் நின்று விட்டதால் அவர் வருத்தத்தில் இருந்து உள்ளார். இதனால் கடந்த 5-ந் தேதி தனது வீட்டின் குளியலறை அருகே கையின் நரம்பை அறுத்துக் கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்த மனைவி சரண்யா போலீசில் புகார் அளித்துள்ளார்.

    ஆனால் ஷம்பு முகையா மீன் வாங்கும்போது கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. இது முற்றிலும் தவறானது. இதுபோன்று பொய்யான செய்தியை பரப்பிய நபர் மீது திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தெரிவித்துள்ளார்.

    • கோவை மாவட்ட போலீசார் அவர்களை நேரில் சந்தித்து அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • வீடியோக்களையும், வதந்திகளையும் நம்ப வேண்டாம்.

    கோவை,

    தமிழகம் முழுவதும் வடமாநில தொழிலாளர் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இது போலியான வீடியோ என அரசு மறுத்துள்ளது. இருப்பினும் வடமாநில தொழிலாளர்கள் அச்சம் அடைந்து சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.

    வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்க கோவை மாவட்ட போலீசார் அவர்களை நேரில் சந்தித்து அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    கோவை துடியலூர் அடுத்த ராக்கிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இன்று இந்த நிறுவனத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம், துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் வந்தனர்.

    அப்போது அங்கு பணியாற்றிய வடமாநில தொழிலாளர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் இந்தியில் பேசி கலந்துரையாடினார். அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். இதுபோன்ற வீடியோக்களையும், வதந்திகளையும் நம்ப வேண்டாம். தொடர்ந்து நீங்கள் வேலை பாருங்கள் என அறிவுரை கூறினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் வடமாநிலத்தவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று இங்கு வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இவர்களிடம் பேசிய பிறகு, தொழிலாளர்கள் அனைவரும் பயமின்றி பணியாற்றி வருவது தெரியவந்தது.

    ஊரில் உள்ள அவர்களின் உறவினர்கள் தான் வீடியோக்களை அனுப்பி இவர்களிடம் கேட்டு வருகின்றனர். இவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக தங்கள் பெற்றோரிடம் தெரிவித்து விட்டனர்.

    தொடர்ந்து அவர்களுக்கு ஏதாவது குறைகள், புகார்கள் இருந்தால் தெரிவிப்பதற்கு செல்போன்கள் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்நேரம் வேண்டும் ஆனாலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற 30-ந் தேதி மற்றும் 31 -ந் தேதி ஆகிய 2 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சங்கரன்கோவில் பழைய தாலுகா போலீஸ் நிலைய வளாகத்தில் வைத்து ஏலம் விடப்படுகிறது.
    • வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளான 30-ந்தேதி அல்லது 31-ந்தேதி ஏலத்தெகையுடன் ஜி.எஸ்.டி. தொகையினையும் உடனடியாக செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்ல வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி காவல் உட்கோட்ட எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 293 இரு சக்கர மோட்டார் வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 4 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 298 வாகனங்களுக்கு பொது ஏலம் விடப்பட உள்ளது.

    வருகிற 30-ந் தேதி மற்றும் 31 -ந் தேதி ஆகிய 2 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சங்கரன்கோவில் பழைய தாலுகா போலீஸ் நிலைய வளாகத்தில் வைத்து ஏலம் விடப்படுகிறது.

    இதில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் அந்த வாகனங்களை சங்கரன்கோவில் பழைய தாலுகா போலீஸ் நிலைய வளாகத்தில் 23 -ந் தேதி முதல் 27 -ந் தேதி வரையிலான நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நேரில் பார்வையிடலாம்.

    மேலும் தங்களின் பெயர், முகவரி அடங்கிய ஆதார் அட்டையுடன் ரூ. 1000 முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளான 30-ந்தேதி அல்லது 31-ந்தேதி ஏலத்தெகையுடன் ஜி.எஸ்.டி. தொகையினையும் உடனடியாக செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்ல வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு பாலாஜி சரவணன் திடீர் சோதனை மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சிறப்பு ரோந்து மேற்கொள்ளுமாறு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரி களுக்கும் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சி.ஜி.இ. காலனி, எம்.ஜி.ஆர் நகர் உட்பட பல இடங்களில் கஞ்சா விற்பனை குறித்து மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு பாலாஜி சரவணன் திடீர் சோதனை மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    அப்போது தூத்துக்குடி நகர டி.எஸ்.பி. சத்தியராஜ் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் உட்பட போலீசார் உடனிருந்தனர்.

    • தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் புத்தாண்டு தினத்தை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.
    • இதனை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய பகுதியில் உள்ள குருஸ் பர்னாந்து சிக்னல் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் புத்தாண்டு தினத்தை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருடன் 'கேக்' வெட்டி கொண்டாடினார்.

    இதனை முன்னிட்டு தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய பகுதியில் உள்ள குருஸ் பர்னாந்து சிக்னல் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருடன் 'கேக்' வெட்டி கொண்டாடினார்.

    அப்போது பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் அவர் கேக்வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்

    நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. சத்தியராஜ், மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம்,போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகப்பெருமாள், வெங்கடேஷ், நாகராஜன் உட்பட போலீசார் பலர் உடனிருந்தனர்.

    • நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு திருடப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள நகை, பணம் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டு அவற்றை இழந்த 254 நபர்களுக்கு அவை திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
    • நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் முக்கியமான இடங்களில் 2,703 சி.சி.டி.வி. காமிராக்கள் இந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் இன்று நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மீட்பு அதிகம்

    நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு திருடப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள நகை, பணம் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டு அவற்றை இழந்த 254 நபர்களுக்கு அவை திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு நடை பெற்ற கொள்ளை சம்பவங்களில் இருந்து 70 சதவீதம் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே அதிகமான மீட்பு சதவீதமாகும்.

    தென் மாவட்டங்களில் நெல்லை மாவட்டத்தில்தான் சாலை விபத்துக்கள் குறைவாக நடந்துள்ளது. 2022 -ம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் 219 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நன்னடத்தை பிணையை மீறியவர்கள் 48 பேர் மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

    சி.சி.டி.வி. காமிராக்கள்

    நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் முக்கியமான இடங்களில் 2,703 சி.சி.டி.வி. காமிராக்கள் இந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.

    கொலை, போக்சோ வழக்குகள், வன்கொடுமை வழக்குகள் மற்றும் சாலை விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்ட 355 நபர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.2.81 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    குட்கா பறிமுதல்

    2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிர ரோந்து பணியின் அடிப்படையில் 182 கிலோ கஞ்சா, 30 ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சாதி ரீதியிலான மோதல்களை தூண்டிய தாக 80 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளை விட கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் இந்த ஆண்டு 32 சதவீதம் குறைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 42 சதவீதம் குறைந்துள்ளது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    மாவட்ட போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் 16 கொலைகள் இந்த ஆண்டு தடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடிகள் புகாரில் ரூ. 13.50 லட்சம் மீட்கப்பட்டு 23 பேருக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

    நில அபகரிப்பு வழக்கில் இந்த ஆண்டு ரூ.10 கோடி மதிப்பிலான 31 ஏக்கர் இடங்கள் மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    கண்காணிப்பு

    இந்த ஆண்டு போக்சோ வழக்கில் 8 பேருக்கும், கொலை வழக்கில் 2 பேருக்கும் நீதிமன்ற தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட் டத்தை ஒட்டி சுமார் 700 போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன், சைபர் கிரைம் டி.எஸ்.பி.ராஜூ மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.
    • காவல் கண்காணிப்பாளர் நல்லு, எழுமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. காவல் கண்காணிப்பாளர் நல்லு, எழுமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    11, 14 மற்றும் 17 வயதினருக்கான போட்டி மற்றும் 17 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டி என 4 பிரிவுகளாக நடந்த போட்டியில் உசிலம்பட்டி, எழுமலை, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30-க்கும் அதிகமான பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகளும், 50-க்கும் மேற்பட்ட 17 வயதிற்கு மேற்பட்டோரும் கலந்து கொண்டனர்.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் நல்லு, டாக்டர் விஸ்வநாதன் ஆகியோர் வழங்கினர்.

    • ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க காவல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    • மேலும் ஏதாவது சந்தேகம் இருப்பின் 9655220100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 3,552 இடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வுக்கான விண்ணப்பங்களை தகுதியுள்ள தேர்வர்கள் இணையதளம் மூலம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப உதவிடும் வகையில் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காவல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மேலும் ஏதாவது சந்தேகம் இருப்பின் 9655220100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைதானார்.
    • மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்து உள்ளாா்.

    மதுரை

    மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த சோலை மகன் முத்து என்ற கொரில்லா முத்து (வயது 45). இவா் மீது 40 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தியதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில் கொரில்லா முத்து மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வந்தது. எனவே அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகா் உத்தரவிட்டாா். இதன் அடிப்படையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார், கொரில்லா முத்துவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, மதுரை மத்தியச் சிறையில் அடைத்து உள்ளனர்.

    மதுரை மண்டலத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படு வதாக வரும் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் அரிசி மூட்டைகளை கிட்டங்களில் பதுக்கி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்து உள்ளாா்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் முறையாக பணி செய்யாத 2 காவல் கண்காணிப்பாளர்களை பணியிடை நீக்கம் செய்து முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். #UttarPradesh #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பால் மற்றும் பிரதாப்கர் பகுதியில் காவல் கண்காணிப்பாளர்களாக பணிபுரியும் பரத்வாஜ், சந்தோஷ் குமார் சிங் ஆகிய இருவரும் ஒழுங்காக பணி செய்வது இல்லை எனவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு  டி.ஜி.பி ஓ.பி.சிங் பரிந்துரை செய்தார்.

    இந்த பரிந்துரை தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், அந்த இரண்டு காவல் கண்காணிப்பாளர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், அவர்களுக்கு பதிலாக சம்பால் பகுதியில் யமுனா பிரசாத்தையும், மற்றும் பிரதாப்கர் பகுதிக்கு தேவ் ரஞ்சன் வெர்மாவையும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 அதிகாரிகளும், அவர்களது பகுதியில் நடைபெற்ற கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. #UttarPradesh #YogiAdityanath
    ×