search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயத்தை போக்க வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய போலீஸ் சூப்பிரண்டு
    X

    பயத்தை போக்க வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய போலீஸ் சூப்பிரண்டு

    • கோவை மாவட்ட போலீசார் அவர்களை நேரில் சந்தித்து அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • வீடியோக்களையும், வதந்திகளையும் நம்ப வேண்டாம்.

    கோவை,

    தமிழகம் முழுவதும் வடமாநில தொழிலாளர் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இது போலியான வீடியோ என அரசு மறுத்துள்ளது. இருப்பினும் வடமாநில தொழிலாளர்கள் அச்சம் அடைந்து சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.

    வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்க கோவை மாவட்ட போலீசார் அவர்களை நேரில் சந்தித்து அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    கோவை துடியலூர் அடுத்த ராக்கிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இன்று இந்த நிறுவனத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம், துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் வந்தனர்.

    அப்போது அங்கு பணியாற்றிய வடமாநில தொழிலாளர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் இந்தியில் பேசி கலந்துரையாடினார். அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். இதுபோன்ற வீடியோக்களையும், வதந்திகளையும் நம்ப வேண்டாம். தொடர்ந்து நீங்கள் வேலை பாருங்கள் என அறிவுரை கூறினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் வடமாநிலத்தவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று இங்கு வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இவர்களிடம் பேசிய பிறகு, தொழிலாளர்கள் அனைவரும் பயமின்றி பணியாற்றி வருவது தெரியவந்தது.

    ஊரில் உள்ள அவர்களின் உறவினர்கள் தான் வீடியோக்களை அனுப்பி இவர்களிடம் கேட்டு வருகின்றனர். இவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக தங்கள் பெற்றோரிடம் தெரிவித்து விட்டனர்.

    தொடர்ந்து அவர்களுக்கு ஏதாவது குறைகள், புகார்கள் இருந்தால் தெரிவிப்பதற்கு செல்போன்கள் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்நேரம் வேண்டும் ஆனாலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×