search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speaker Appavu"

    • உரிமைத்தொகை திட்டத்தின் தொடக்க விழா வர்த்தக மையம் கூட்டரங்கில் நடைபெற்றது.
    • நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 5,01,877 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.

    நெல்லை:

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சீபுரத்தில் தொடங்கி வைத்தார்.

    நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள வர்த்தக மையம் கூட்டரங்கில் இன்று உரிமைத்தொகை திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் ஞான திரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, திட்ட இயக்குனர் சுரேஷ், சப்- கலெக்டர் முகமது சபீர் ஆலம், பயிற்சி கலெக்டர் கிஷன் குமார், துணை மேயர் ராஜு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பாளை யூனியன் சேர்மன் தங்கபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் 840 ரேஷன் கடைகள் உள்ளன. மொத்தம் 5,01,877 அட்டைதாரர்கள் உள்ளனர்.இதில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க 4 லட்சத்து 30 ஆயிரத்து 930 விண்ணப்பங்கள் விநி யோகம் செய்யப்பட்டது. அதில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 345 பேர் நிரப்பி ஒப்படைத்தனர்.

    இதில் சுமார் 2 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் வங்கி கணக்குகளில் பணம் செலு த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாதந்தோறும் நெல்லை மாவட்டத்திற்கு மட்டும் 25 கோடி ரூபாய் செலவாகிறது. மாற்றுத்திறனாளிகள், முதியோர், விதவைகள் உதவித்தொகை என மாதந்தோறும் 40 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். இலவச பஸ் பயணம் மூலமாக மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். மகளிர் குழு மூலமாக ஒரு மாதத்தில் 60 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இவ்வாறாக நெல்லை மாவட்டத்தில் மகளிருக்கு மட்டும் குடும்ப செலவாக ரூ.120 கோடியை தமிழக அரசு வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சபாநாயகர் அப்பாவு

    விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்துள்ள இந்த திட்டமானது மக்கள் மனதில் ஒரு வருடம், 2 வருடம் அல்ல, வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை தரும் ஒரு திட்டமாகும். 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வு முடிவுகளுக்கு காத்திருக்கும் மாணவ-மாணவிகள் போல இந்த உரிமை தொகை திட்டத்திற்காக பெண்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு குறுந்தகவல் வந்ததும் அவர்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

    முதல்-அமைச்சர் இலவச பஸ் பயணம், ஏழை விவசாயிகளுக்கு இலவச பம்பு செட், புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது மத்திய நிதித்துறை இணை அமைச்சர் இந்தியாவில் வங்கி பயனாளர்கள் குறைந்தபட்ச இருப்பு தொகையை கணக்கில் வைத்திருக்காத காரணத்தினால் ரூ.23 ஆயிரம் கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இது தவிர அதிக அளவு ஏ.டி.எம் பயன்படுத்தியதற்காகவும், குறுந்தகவல் அனுப்பும் வசதிக்காகவும் என சுமார் 35 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வங்கி கணக்குகளில் இருந்து அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இனி ஏழை பெண்களின் வங்கி கணக்குகளில் இருந்து இதுபோன்ற அபராத தொகைகள் எடுக்கப்படாது என்ற நிலையை தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினால் ஏற்பட்டு ள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட 2,000 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகைக்கான பண பரிவர்த்தன அட்டை களை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

    இதில் மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் மாலை ராஜா, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர்கள் பல்லிக்கோட்டை செல்ல துரை, வீரபாண்டியன், மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, ராஜன், கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளரும், கீழநத்தம் பஞ்சாயத்து தலைவருமான அனுராதா, பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், கவுன்சிலர் கருப்பசாமி கோட்டையப்பன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக விழா மேடையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பெண்ணை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் 5 ஆயிரம் பவர் டில்லர்கள் வழங்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு 77 பவர் டில்லர்களை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இருந்து வந்த ஒரு பெண் திடீரென தனது கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்து தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    உடனே அருகில் இருந்த விவசாயி ஒருவர் அந்த கேனை பிடுங்கினார். அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதன்பின்னர் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் பாளை மனக்கவாவலம்பிள்ளை நகர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி என்பவரது மனைவி வேளாங்கண்ணி (வயது 40) என்பது தெரியவந்தது.

    இவர் அதே பகுதியை சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு வாங்கியிருந்ததாகவும், அவர்கள் கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், எனவே தான் தீக்குளிக்க முயன்றதாகவும் அவர் கூறினார்.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாவட்ட தொழில் மையம் அருகே வேன் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்தது.
    • படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனை குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் 28 பேர், ஆசிரியர்கள் 5 பேர் மற்றும் ஒரு உதவியாளர், ஒரு ஓட்டுனர் என 35 பேர் ஒரு வேனில் பாளையில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் ஜிம்னாஸ்டிக் போட்டி பயிற்சிக்காக நேற்று வந்தனர்.

    பாளையில் மாவட்ட தொழில் மையம் அருகே வேன் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் படுகாயம் அடைந்தனர்.

    நெல்லை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் லேசான காயமடைந்தவர்கள் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனை குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை இன்று காலை சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனம் பழுது ஏற்பட்டு இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வாகனம் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என தெரிவித்தார்.

    அப்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன், தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், சித்திக், ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ். தங்கபாண்டியன், பி.சி. ராஜன், ஜோசப் பெல்சி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • காலை உணவு குழந்தைகளின் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது.
    • இதுவரை 40 தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 2,775 பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

    திட்டம் தொடக்கம்

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அன்று அண்ணா பிறந்த நாளில் மதுரையில் இத்திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

    இத்திட்டம் தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டது.

    முதல்-அமைச்சர்

    அதனைத் தொடர்ந்து ரூ.404 கோடியில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப் பகுதி மற்றும் பேரூராட்சி, நகர்புற பகுதிகளில் உள்ள 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 31,008 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தினை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்துள்ளார்.

    சபாநாயகர் தொடங்கி வைத்தார்

    இதனை ஒட்டி நெல்லை மாவட்டத்தில் ராதாபுரத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் சபாநாய கர் அப்பாவு பேசியதாவது:-

    காலை உணவு குழந்தை களின் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு, இரவு உணவுக்குப் பின் ஏற்படும் நீண்ட இடைவெளியுடன் கூடிய பசியை தணிப்பதாக அமைகிறது. மேலும், காலை உணவினை தவிர்க்கும் நிலையில் உள்ள குழந்தைகள் மிகுந்த சோர்வுடனும், கவனிப்புத் திறன் குறைந்தும் காணப்படுவர் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

    காலை உணவு சாப்பிடா மல் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த இயலாமல் சோர்வடைந்து விடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    40 தொடக்கப் பள்ளிகள்

    நெல்லை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந்தேதி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக 22 தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 2,246 மாணவ - மாணவிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டது. மேலும் மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் என 18 தொடக்கப்பள்ளிகள் இத்திட்டத்தில் சேர்க்க ப்பட்டு, இதுவரை 40 தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 2,775 பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். தொடர்ந்து இன்று மாவட்டத்தி ற்குட்பட்ட ஊரகப் பகுதிகளில் செயல்ப டும் 286 தொடக்க ப்பள்ளிகளில் பயிலும் 13,388 மாணவர்களும், பேரூராட்சி பகுதிகளில் செயல்படும் 43 அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 2,894 மாண வர்களும், நகர்புற பகுதி களில் செயல்படும் 19 பள்ளி களில் பயிலும் 1,162 மாண வர்கள் என மொத்தம் 348 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 17,444 மாணவ, மாணவிகள் பயனடை வார்கள்.

    வரலாற்று சிறப்பு மிக்க திட்டம்

    வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தால் மாணவர்கள் தடையின்றி கல்வி பயிலுவதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அரசாக இந்த அரசு திகழ்ந்து வருகிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் எதிர்காலங்களில் பெரிய உயர் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காகவே இது போன்று அற்புதமான திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஆலங்குளம் வந்த சபாநாயகர் அப்பாவுவிற்கு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பின்னர் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு சபாநாயகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ஆலங்குளம்:

    தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொருட்டு குற்றாலம் செல்லும் வழியில் ஆலங்குளம் வந்தார். அவர் அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

    ஆலங்குளத்தில் தற்போது நிறுவப்பட்டுள்ள காமராஜர் சிலைக்கு இடம் தேர்வு செய்வது குறித்து பிரச்சினை எழுந்த போது, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த இடத்தில் சிலை அமைக்க உத்தரவிட்டார். மேலும் இப்பகுதி மக்கள் ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் 5 நாட்கள் தங்கி வழிபாடு செய்வது வழக்கம். இந்தாண்டு 3 நாட்கள் தங்க வனத்துறையினர் அனுமதி அளித்திருந்த நிலையில் நம் பகுதி மக்கள் 5 நாட்கள் தங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த அரசு அனைத்து சமய வழிபாடுகளுக்கும் துணை நிற்கும் அரசு. எந்த ஜாதி. மத இனம் அனைத்திற்கும் அப்பாற்பட்டு வழிபாட்டுத் தலங்களில் அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை.

    இவ்வாறு அவர் பேசினார்

    அப்போது தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெய பாலன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, ஒன்றியக் குழுத்தலைவர் திவ்யா மணிகண்டன், பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன். சமுத்திர பாண்டியன் கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை அமைப்பாளர் எழில்வா ணன், நகர தி.மு.க. செயலாளர் நெல்சன், ஒன்றிய செயலாளர்கள் செல்லதுரை, அன்பழகன், மாரி வண்ணமுத்து, மகேஷ் மாயவன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் தங்க செல்வம் மற்றும் கவுன்சிலர் பொன் செல்வம், காங்கிரஸ் மாநில செயலர் ஆலடி சங்கரய்யா, ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஞானபிரகாஷ், நகரச் செயலாளர் வில்லியம் தாமஸ், பொறியாளர் அணி அமைப்பாளர் மணி கண்டன், மாவட்ட பிரதிநிதி சாமுவேல் ராஜா, முன்னாள் கவுன்சிலர் மோகன்லால், அருணாசலம் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • சி.பா.ஆதித்தனார், அவரது புதல்வர்கள் எல்லோருமே எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.
    • வி.ஜி. சந்தோசம் உலகத் தமிழ்ச் சங்கம் அமைத்து உலகம் முழுவதும் 155 இடங்களில் திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளார்.

    சென்னை:

    வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30-வது ஆண்டு விழா சென்னையில் நடந் தது. விழாவுக்கு வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் தலைமை தாங்கி தலைமை உரை நிகழ்த்தினார். வி.ஜி.பி. ரவிதாஸ் வரவேற்றார்.

    வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30-வது ஆண்டு விழா மலர் மற்றும் வி.ஜி.பி. ராஜாதாஸ் எழுதிய 'என் தந்தையாரின் அறிவுச் சிந்தனைகள்' என்ற நூலை சபா நாயகர் அப்பாவு வெளியிட்டார். மார்கிரெட் பாஸ்டின் எழுதிய சிலம்பு என்னும் இசை நாட்டியக் களஞ்சியம் நூலை, அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார். முத்துக்குமாரசாமி எழுதிய வ.உ.சிதம்பரனார் நூலை வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் வெளியிட்டார்.

    விழாவில் சிறந்த 3 தமிழ்ச் சங்கத்துக்கு விருது, அன்புபாலம் கல்யாண சுந்தரம், பாடகர் வேல் முருகன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், ஆண்டாள் பிரியதர்ஷினி, உள்பட 30 தமிழறிஞர்களுக்கு விஜிபி இலக்கிய விருதை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

    வி.ஜி.சந்தோசம் சென்னையை சேர்ந்தவர் என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர் சென்னையை சேர்ந்தவர் அல்ல. நான், வி.ஜி.பன்னீர்தாஸ், வி.ஜி.சந்தோசம் எல்லோருமே நெல்லையில் பிறந்து வளர்ந்து தாமிரபரணி தண்ணீரை பருகி, அதன்பிறகு சென்னையில் அடையாளத்தை கண்டவர்கள். தினத்தந்தியை எடுத்துக்கொண்டால் சி.பா.ஆதித்தனார், அவரது புதல்வர்கள் எல்லோருமே அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள். பாரதியார், வ.உ.சிதம்பரனார் எல்லோருமே நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான்.

    வி.ஜி. சந்தோசம் உலகத் தமிழ்ச் சங்கம் அமைத்து உலகம் முழுவதும் 155 இடங்களில் திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளார். அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் திருவள்ளுவர் சிலையை அமைத்து ஒரு சாமானியனால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளார்.

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். அதற்காக ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படுகிறது. ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 295 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதன் மூலம் சாமானிய வீட்டு பிள்ளையும் சர்வதேச தரத்துக்கு இணையான தரமான கல்வி கற்க முடியும். அதேபோல் தகுதியான அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத் தொகையை கொடுக்க இருக்கிறார்.

    இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடியை வெளிநாடுகளில் கடனாக வாங்கி இருந்தது. ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடியை கடனாக பெற்றுள்ளது. விவசாயிகள் உணவு பொருட்களை விளைவித்து நமக்கு உயிர் கொடுக்கிறார்கள். அவர்கள் உணவு கொடுக்காவிட்டால் நம்மால் வாழ முடியாது. ஆனால் மத்திய அரசு கார்ப்பரேட் கடன்களை தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வி.ஜி.சந்தோசம் பேசுகையில், 'விஜிபி தமிழ்ச்சங்கம் தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் தமிழனாக பிறந்தேன். எனவே தான் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறேன். அதற்காக திருவள்ளுவரை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். அதன் மூலம் தமிழை வளர்த்து வருகிறேன்' என்றார்.

    விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், அவ்வை அருள், நாஞ்சில் பீற்றர், மல்லை சத்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் வி.ஜி.சந்தோசத்துக்கு கிரீடம் அணிவித்து செங்கோல் வழங்கப்பட்டது. முடிவில் வி.ஜி.பி. ராஜாதாஸ் நன்றி கூறினார். உலகநாயகி பழனி தொகுத்து வழங்கினார்.

    • வள்ளியூர் யூனியனில் உள்ள ஊராட்சி பகுதிகளில் உள்ளூர் நீராதாரத்தை வைத்து குடிநீர் பிரச்சி னையை உடனடியாக தீர்ப்பது தொடர்பான ஆலோ சனை கூட்டம் வள்ளியூரில் நடைபெற்றது.
    • ராதாபுரம் தொகுதியில் குடிநீர் திட்டத்திற்கு மட்டும் ரூ.1,028 கோடியே 13 லட்சம் நிதியை முதல்-அமைச்சர் அளித்துள்ளார் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் யூனியனில் உள்ள ஊராட்சி பகுதிகளில் உள்ளூர் நீராதாரத்தை வைத்து குடிநீர் பிரச்சி னையை உடனடியாக தீர்ப்பது தொடர்பான ஆலோ சனை கூட்டம் வள்ளியூரில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி பேசியதாவது:-

    வள்ளியூர் யூனியனில் 18 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி மன்றங்களில் உள்ள சிறிய கிராமங்கள், வார்டு பகுதிகள், ஒன்றிய வார்டு பகுதிகள், மாவட்ட ஊராட்சி வார்டு பகுதிகள் அனைத்திலும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாகத்தான் இந்த ஆலோசனைகூட்டம் நடத்தப்படுகிறது.

    குடிநீர் பிரச்சினை, ஆழ்துளை கிணறுகளின் தேவை, பைப்லைன் தேவை களை விரிவாக தெரிவி த்தனர். உங்கள் பகுதிகளில் தற்போதுள்ள நீர் ஆதாரங்கள், ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகள் ஆகியவற்றை ஊராட்சி ஒன்றிய அதி காரிகள், பொறி யாளர்கள் ஆய்வு செய்து ஆழ்துளை கிணறுகளின் நீராதாரத்தை கணக்கிட்டு உடனடியாக குடிதண்ணீர் விநியோகம் செய்யும் நடவடி க்கையை தொடங்குவார்கள்.

    மோட்டார் இல்லாத ஆழ்துளை கிணறுகளில் மோட்டார் பொருத்துவது, பழுதான மோட்டார்களை சரிசெய்து மாற்றுவது, பைப் லைன்களை சரி செய்வது, பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் தரைமட்ட தொட்டிகளை பழுபார்ப்பது இது போன்ற அனைத்து பணிகளுக்கும் அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவைகள் தவிர முன்னீர்பள்ளம் அருகே தாமிரபணி ஆற்றில் இருந்து ராதாபுரம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்க ளுக்கும் குடிதண்ணீர் வழங்கும் திட்டத்திற்கு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.605 கோடி நிதியை அளித்துள்ளார்.

    இது தவிர திசையன்விளை, மூலக்கரைப்பட்டி, பணகுடி, வள்ளியூர், ஏர்வாடி, நாங்குநேரி, திருக்குறுங்குடி பேரூராட்சிகளுக்கும் மற்றும் களக்காடு நகராட்சிக்கும் சேர்ந்து தனியாக குடிநீர் திட்டம் ரூ.423.13 கோடியில் தனியாக ஒரு திட்டத்திற்கு நிதியை தந்துள்ளார்கள்.

    ஆக மொத்தம் ராதாபுரம் தொகுதியில் குடிநீர் திட்டத்திற்கு மட்டும் ரூ.1,028 கோடியே 13 லட்சம் நிதியை நமது முதல்-அமைச்சர் அளித்துள்ளார். இந்த திட்டங்கள் இன்னும் 18 மாதங்களில் நிறைவே ற்றப்பட்டு உங்கள் வீடு களுக்கு குடிநீர் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக வடக்கன் குளம், தனக்கர்குளம், காவல்கிணறு, செட்டிகுளம், லெவஞ்சிபுரம், கருங்குளம், ஆவரைகுளம் உள்ளிட்ட ஊராட்சி பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கவேண்டும், மின்விநியோகம் சீரமைக்க ப்படவேண்டும், மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளிட்ட தேவைகள் குறித்து பேசினர்.

    கூட்டத்திற்கு வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சேவியர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், பேரூராட்சி உதவி இயக்குனர் அனிதா, பொதுப் பணித்துறை செயற்பொ றியாளர் கனகராஜ், மின்சார வாரிய செயற்பொறியாளர் வளன்அரசு, பொதுப் பணித்துறை உதவி செயற் பொறியாளர் கென்னடி, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யும் அதிகாரம் சட்டமன்ற பேரவை தலைவருக்கு மட்டும் தான் உண்டு.
    • ராகுல் காந்தி 2 ஆண்டுகள் தண்டனை பெற்ற நிலையில் அவரது எம்.பி பதவியை பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தான் பதவி நீக்கம் செய்தார்.

    நெல்லை:

    பாளை சேவியர் கல்லூரியில் நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி தொடக்க விழாவிற்கு வந்த சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராமர் கோவில் இடிப்பு சம்பவம் தேச துரோக வழக்காக பார்க்கப்பட்ட நிலையில் அந்த வழக்கில் தொடர்புடைய முரளி மனோகர் ஜோஷி, அத்வானி போன்றோர் அமைச்சர் பதவியுடன் தான் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்கினார்கள்.

    இந்த வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலிலும் வைக்கப்பட்டார்கள். அவர்கள் இருவரும் பதவியில் இருந்துகொண்டு தான் இந்த வழக்கை சந்தித்தனர். அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் உரிமை ஆளுநருக்கு இல்லை.

    அரசியலமைப்பு சட்டத்தில் அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்பதை அவர் நான்கரை மணி நேரத்தில் தெரிந்து கொண்டுள்ளார்.

    ஆளுநருக்கு இருக்கும் உரிமைகள் என்ன என்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தெளிவுபடுத்தி உள்ளது. சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவரை பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளுங்கள் என சொல்லும் உரிமை மட்டும் தான் அவருக்கு உள்ளது.

    யார்-யார் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்ற பட்டியலை ஆளுநருக்கு கொடுத்தால் அதனை ஏற்று பதவிப்பிரமாணம் ஆளுநர் செய்து வைக்க வேண்டும்.

    அமைச்சர்கள் தானாக பதவி விலகலாம் அல்லது முதலமைச்சர் அவர்களை பதவியை விட்டு நீக்கலாம். ஆளுநர் அவர்களை நீக்க முடியாது. வேறு யாருக்கும் அந்த உரிமையும் கிடையாது.

    நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை 2 ஆண்டுகளுக்கு மேல் உறுதி செய்யப்பட்டால் அமைச்சர்கள் அந்த பதவியில் இருந்து விலக நேரிடும்.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பதவியில் இருந்த போது தண்டனை கிடைத்ததால் தானாகவே இந்த பதவியில் இருந்து விலகினார். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யும் அதிகாரம் சட்டமன்ற பேரவை தலைவருக்கு மட்டும் தான் உண்டு.

    ராகுல் காந்தி 2 ஆண்டுகள் தண்டனை பெற்ற நிலையில் அவரது எம்.பி பதவியை பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தான் பதவி நீக்கம் செய்தார். இது போன்ற பல உதாரணங்கள் உள்ளது.

    ஆளுநரை பலமுறை நேரில் சந்தித்து பேசி உள்ளேன். அவர் மிகவும் நல்ல மனிதர். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர். நேற்று நடந்த நடவடிக்கை கூட உணர்ச்சிவசத்தின் வெளிப்பாடு தான். சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போது உணர்ச்சி வசப்பட்டு தான் தேசிய கீதத்திற்கு கூட நிற்காமல் வெளியேறினார்.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சிதான் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. இந்திய அரசிய மைப்பு சட்டம் 159-ன் படி பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டு மதச்சார்பற்ற நாடான இந்தியாவை மதச்சார்புள்ள நாடு என ஆளுநர் பேசுகிறார்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநரின் இந்த பேச்சு மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றம். ஆளுநர் இது போன்ற பேச்சை தெரிந்து சொல்கிறாரா? தெரியாமல் சொல்கிறாரா? என்பது தெரியவில்லை. இந்த போக்கை ஆளுநர் மாற்றிக்கொள்ள வேண்டும்.

    பாத்திமா பீவி ஆளுநராக இருந்தபோது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவே தகுதி இல்லாத நபரை முதலமைச்சர் ஆக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விவகாரம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதற்காக அப்போதைய பிரதமர், மத்திய அமைச்சரின் ஒப்புதலோடு ஆளுநரை திரும்ப பெற செய்தார். இதனை அறிந்த ஆளுநர், பதவி விலகிக் கொண்டார்.

    இதில் இருந்து அமைச்சரவை பரிந்துரையின்படி பணியாற்ற வேண்டிய கட்டாயமும், கடமையும் ஆளுநருக்கு இருப்பது தெரிகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் சில அதிகாரங்களை ஆளுநருக்கு கொடுத்துள்ளது. அதனை பின்பற்றி செயல்பட்டால் நன்றாக இருக்கும். அதுவே ஆளுநரின் பதவிக்கு மாண்பை தரும்.

    ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுகிறாரா என்பது தெரியவில்லை. டெல்லி சென்று வந்தார் என்பது மட்டுமே தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல நூற்றாண்டுகளை கடந்தும் இயற்கை வண்ண ஓவியங்கள் பல கோவில்களில் இன்றளவும் அழகு மிகுந்து காணப்படுகிறது.
    • தமிழகத்தில் சித்தன்னவாசல் தொடங்கி பல கோவில்களில் இயற்கை ஓவியங்கள் அமைந்துள்ளது.

    நெல்லை:

    பாளை சித்த மருத்துவக்கல்லூரி அருகே அமைந்துள்ள மேடை போலீஸ் நிலையம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு உள்ள மேற்கு கோட்டைவாசல் பூங்காவில் ஓவிய பயிலரங்கு நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

    சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு ஓவியம் வரைந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மேயர் சரவணன், துணைமேயர் ராஜு, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், கலை பண்பாட்டுதுறை உதவி இயக்குனர் கோபால கிருஷ்ணன், ஆர்.டி.ஓ/ சந்திரசேகர், ஓவியர் சந்துரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

    திராவிட மொழியின் முதல் மொழி தமிழில் இருந்து தொடங்கியது என முதலில் சொன்னவர் கால்டுவெல். இந்தியாவின் நாகரிகம் தென் மாவட்டங்களில் இருந்து தொடங்கியது என சொல்லிய தமிழக முதலமைச்சர் தாமிரபரணி நாகரிகத்தை கண்டறிய அகழாய்வு செய்ய உத்தரவிட்டார்.

    பல நூற்றாண்டுகளை கடந்தும் இயற்கை வண்ண ஓவியங்கள் பல கோவில்களில் இன்றளவும் அழகு மிகுந்து காணப்படுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு எழுத்தாளர்கள், ஓவியர்கள், கலை இலக்கியவாதிகளை ஊக்குவித்து பண்பாட்டு நாகரிகத்தை அரசு காத்து வருகிறது.

    15 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 2.30 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டின் நூவர் அருங்காட்சியகத்தில் மிக அழகாக பல வண்ண தொன்மையான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது.

    ஓவியங்கள் பண்டைய வரலாற்று நாகரிகங்களை தாங்கி படித்து வருகிறது. பிரான்ஸ் நாட்டைவிட அழகாக நம் தமிழகத்தில் பல நூற்றாண்டு தொன்மையான ஓவியங்கள் இன்றளவும் பல கோவில்களில் காணப்படுகிறது.

    பண்டைய கால அற்புதங்கள் நிறைந்த இடங்கள் பாழடைந்து கிடந்ததை தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்றப் பின்னர் புனரமைத்து அடையாள சின்னங்களாக மாற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    கலை, மொழி போன்றவைகளுக்காக தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் ஆட்சியை தமிழகத்தில் தமிழக முதலமைச்சர் நடத்தி வருகிறார். தமிழகத்தில் சித்தன்னவாசல் தொடங்கி பல கோவில்களில் இயற்கை ஓவியங்கள் அமைந்துள்ளது. ஆனால் அதனை பெரிதாக யாரும் மதிப்பதில்லை. அதனை புனரமைப்பு செய்கிறோம் என்ற பெயரில் வெள்ளையடித்து அதனை கெடுத்து விடுகின்றனர்.

    தஞ்சை பெரிய கோவில் சுவரில் இருக்கும் ஓவியங்கள் மீது தேர்வு எண்களை எழுதி வைக்கின்றனர். அந்த எண்களை குறித்து வைத்து கொண்டு அவர்களை தேர்வில் தோல்வியடைய செய்து விடலாம் என தோன்றும்.

    தொன்மைகள் குறித்து நமக்கு அக்கறை இல்லாததை இதுபோன்ற செயல்காட்டுகிறது. பல மொழிகள் தொன்மையாக இருந்தாலும் அதைப் பேசக்கூடிய நபர்கள் இல்லாவிட்டாலும் கோடிக்கணக்கில் அரசு அந்த மொழிக்கு தான் நிதி ஒதுக்கீடு செய்து உதவுகிறது. கல்வெட்டுகளை படிப்பதற்கு கூட ஆட்கள் இல்லாத நிலை தற்போது தமிழகத்தில் உள்ளது.

    வாழ்க்கை என்பது கலை. கலைஞர்கள் வாழ்க்கையில் இருந்துதான் கலையை கண்டெடுக்க முடியும். தொழில்நுட்பம், எந்திரமயமாக்கல் நிறைந்த இந்த உலகில் நாம் வாழக்கூடிய தகுதியை இழந்து வருகிறோம். காலநிலை மாற்றம் என்ற மிகப்பெரிய காலகட்டத்தில் நாம் இருந்து வருகிறோம். வரும் காலங்களில் காலநிலை மாற்றத்தால் பல பிரச்சினைகளை சந்திக்க கூடிய சூழல் உருவாகும்.

    நம் கருத்துக்கள் எடுத்து வைக்கும் விஷயங்களுக்கு எதிராக வன்முறையை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் பெண்கள் வைக்கக்கூடிய கருத்துக்களுக்கு எதிராக செயல்கள் நடந்து வருகிறது. இயற்கை பதிலடி கொடுக்கும் நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சபாநாயகர் அப்பாவு கோவிலின் சிறப்புகள் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
    • கொடை விழா கலை நிகழ்ச்சிகளை 12 மணி நேரமும் நடத்தி கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கியுள்ளார் என்றார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமலைநம்பி கோவில் உள்ளது.

    அன்னதானம்

    இந்த கோவிலில் தமிழ் மாத முதல் மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் பக்தர்க ளுக்கு காலை, மதியம் வழங்கப்பட்டு வந்த அன்ன தானம் களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினர் தடை விதித்ததால் நிறுத்தப்பட்டது.

    இதனால் பாதிப்படைந்த பக்தர்கள் கோவிலில் அன்னதானம் வழங்க வனத்துறையினர் விதித்துள்ள தடையை அகற்ற வேண்டும் என்று கடந்த மாதம் சபாநாயகர் அப்பாவுவிடம் மனு அளித்தனர்.

    சபாநாயகர் தொடங்கி வைத்தார்

    இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று அன்னதானம் வழங்க உடனடி நடவடிக்கை எடுத்தார்.

    இதனைத்தொடர்ந்து திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் அன்னதானம் வழங்க வனத்துறையினர் விதித்த தடை அகற்றப்பட்டது. சித்திரை மாத கடைசி சனிக்கிழமையான நேற்று அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

    கோவிலின் சிறப்பு

    முன்னதாக அவர் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். கோவிலின் சிறப்புகள் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.

    அதன் பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாக, தொன்று தொட்டு நடந்து வரும், எந்த மத வழிபாடாக இருந்தாலும், அதற்கு தடையோ, இடையூறோ ஏற்படுத்தக் கூடாது என்பதிலும், வழிபாட்டிற்கு பாதுகாப்பாக அரசும், அதிகாரிகளும் இருக்க வேண்டும் என்பதே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் எண்ணமாகும்.

    12 மணி நேரம்

    கிராமங்களில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கோவில் கொடை, திருவிழாக்களின் போது தான் மக்கள் மகிழ்ச்சியுடனும், உற்சா கத்துடனும் இருப்பார்கள். விழாக்களில் கிராமிய கலை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    இவ்வாறு கோவில் விழாக்கள் கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளாக மட்டுமின்றி கலைஞர்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கொடை விழாக்களுக்கு கோர்ட்டு வரை சென்று தான் அனுமதி பெற முடிந்தது. ஆனால் தி.மு.க. அரசு அமைந்ததும், முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடை விழாக்களுக்கும், ஆடல் பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் கொடை விழா கலை நிகழ்ச்சிகளை 12 மணி நேரமும் நடத்தி கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கியுள்ளார் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது திருக்குறுங்குடி வன சரகர் யோகேஸ்வரன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் நம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், களக்காடு தெற்கு ஒன்றிய செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான ராஜன், திருக்குறுங்குடி சுரேஷ், முன்னாள் கவுன்சிலர் மாடசாமி, நகர செயலாளர் கசமுத்து, ஸ்ரீதர், ராஜேந்திரன், ம.தி.மு.க. நகர செயலாளர் ஆறுமுகநயினார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • விடுதலை சிறுத்தைகள் விருதுகள் வழங்கும் விழா மே 28-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது.
    • “அம்பேத்கர் சுடர்” விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யாவுக்கு வழங்கப்படுகிறது.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

    அந்த வரிசையில் 2023-ம் ஆண்டுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி- விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.

    இந்த ஆண்டுக்கான "அம்பேத்கர் சுடர்" விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா-வுக்கும், "பெரியார் ஒளி" விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் து.ராஜாவுக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.

    2023-ஆண்டுக்கான வி.சி.க.-விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் வருமாறு:-

    1. அம்பேத்கர் சுடர்-திபங்கர் பட்டாச்சார்யா, பொதுச்செயலாளர், சி.பி.ஐ. (எம்.எல்).

    2. பெரியார் ஒளி-து.ராஜா, பொதுச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

    3. காமராசர் கதிர்-மு.அப்பாவு, தலைவர், தமிழ்நாடு சட்டப் பேரவை.

    4. அயோத்திதாசர் ஆதவன்-ராஜேந்திரபால் கவுதம், முன்னாள் அமைச்சர், டெல்லி மாநில அரசு.

    5. மார்க்ஸ் மாமணி-கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சி.பி.ஐ.(எம்)

    6. காயிதேமில்லத் பிறை-முனைவர் மோகன் கோபால், முன்னாள் துணைவேந்தர், சட்டப் பல்கலைக்கழகம், பெங்களூர்.

    7. செம்மொழி ஞாயிறு-தாயம்மாள் அறவாணன், தமிழறிஞர்.

    விடுதலை சிறுத்தைகள் விருதுகள் வழங்கும் விழா மே 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் சென்னையில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கோவை கார் வெடிப்பு தொடர்பாக விரைவான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தது.
    • தமிழ்நாட்டில் மட்டும் இருந்த திராவிட மாடல், தற்போது இந்தியா முழுவதும் பரவி உள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் சூலூரில் மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் 2-வது ஆண்டு விழா, தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

    தமிழக அரசு வர்த்தகர்களை அழைத்து பேசி ஆலோசனைகளை பெற்று நிதிநிலை அறிக்கை தயார் செய்து வணிகர்களுக்கு உதவி செய்து வருகிறது.

    மாநில கவர்னர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பணியாற்ற வேண்டியவர்கள். இந்தியா மத சார்பற்ற நாடு. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது. மதசார்பற்ற நாடு என்பதை மறைத்து, மதசார்புள்ள நாடுதான் என்று திணிப்பது போன்று கவர்னர்கள் பேசுவது தவறானது.

    அரசியல் கட்சி பிரமுகர்களை போல ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தமிழக கவர்னர் பரப்பி வருவதும், திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது என்பது போல சொல்வதும் சரியானது இல்லை.

    கோவை கார் வெடிப்பு தொடர்பாக விரைவான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தது. இது தொடர்பாக ஏதாவது ஆதாரம் இருந்தால் அரசிடமோ, உள்துறையிடமோ அல்லது பிரதமர், ஜனாதிபதியை சந்தித்தோ புகார் தெரிவிக்காமல் நான்காம் தர அரசியலை தமிழக கவர்னர் செய்கிறார்.

    சட்டத்துக்கு புறம்பாக பேசி நான்காம் தர அரசியல் செய்ய வேண்டாம். தமிழ்நாட்டில் மட்டும் இருந்த திராவிட மாடல், தற்போது இந்தியா முழுவதும் பரவி உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×