search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடை விழா கலை நிகழ்ச்சிகளை 12 மணி நேரம் நடத்தி கொள்ளலாம் - சபாநாயகர் அப்பாவு பேட்டி
    X

    திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலில் சபாநாயகர் அப்பாவு அன்னதானம் வழங்கிய காட்சி.

    கொடை விழா கலை நிகழ்ச்சிகளை 12 மணி நேரம் நடத்தி கொள்ளலாம் - சபாநாயகர் அப்பாவு பேட்டி

    • சபாநாயகர் அப்பாவு கோவிலின் சிறப்புகள் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
    • கொடை விழா கலை நிகழ்ச்சிகளை 12 மணி நேரமும் நடத்தி கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கியுள்ளார் என்றார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமலைநம்பி கோவில் உள்ளது.

    அன்னதானம்

    இந்த கோவிலில் தமிழ் மாத முதல் மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் பக்தர்க ளுக்கு காலை, மதியம் வழங்கப்பட்டு வந்த அன்ன தானம் களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினர் தடை விதித்ததால் நிறுத்தப்பட்டது.

    இதனால் பாதிப்படைந்த பக்தர்கள் கோவிலில் அன்னதானம் வழங்க வனத்துறையினர் விதித்துள்ள தடையை அகற்ற வேண்டும் என்று கடந்த மாதம் சபாநாயகர் அப்பாவுவிடம் மனு அளித்தனர்.

    சபாநாயகர் தொடங்கி வைத்தார்

    இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று அன்னதானம் வழங்க உடனடி நடவடிக்கை எடுத்தார்.

    இதனைத்தொடர்ந்து திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் அன்னதானம் வழங்க வனத்துறையினர் விதித்த தடை அகற்றப்பட்டது. சித்திரை மாத கடைசி சனிக்கிழமையான நேற்று அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

    கோவிலின் சிறப்பு

    முன்னதாக அவர் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். கோவிலின் சிறப்புகள் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.

    அதன் பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாக, தொன்று தொட்டு நடந்து வரும், எந்த மத வழிபாடாக இருந்தாலும், அதற்கு தடையோ, இடையூறோ ஏற்படுத்தக் கூடாது என்பதிலும், வழிபாட்டிற்கு பாதுகாப்பாக அரசும், அதிகாரிகளும் இருக்க வேண்டும் என்பதே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் எண்ணமாகும்.

    12 மணி நேரம்

    கிராமங்களில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கோவில் கொடை, திருவிழாக்களின் போது தான் மக்கள் மகிழ்ச்சியுடனும், உற்சா கத்துடனும் இருப்பார்கள். விழாக்களில் கிராமிய கலை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    இவ்வாறு கோவில் விழாக்கள் கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளாக மட்டுமின்றி கலைஞர்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கொடை விழாக்களுக்கு கோர்ட்டு வரை சென்று தான் அனுமதி பெற முடிந்தது. ஆனால் தி.மு.க. அரசு அமைந்ததும், முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடை விழாக்களுக்கும், ஆடல் பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் கொடை விழா கலை நிகழ்ச்சிகளை 12 மணி நேரமும் நடத்தி கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கியுள்ளார் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது திருக்குறுங்குடி வன சரகர் யோகேஸ்வரன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் நம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், களக்காடு தெற்கு ஒன்றிய செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான ராஜன், திருக்குறுங்குடி சுரேஷ், முன்னாள் கவுன்சிலர் மாடசாமி, நகர செயலாளர் கசமுத்து, ஸ்ரீதர், ராஜேந்திரன், ம.தி.மு.க. நகர செயலாளர் ஆறுமுகநயினார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×