search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SC"

    • செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் உள்ளார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது.

    சென்னை:

    கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணி வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு, அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செந்தில்பாலாஜி மீது 3 குற்ற வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இதே விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

    இந்த கைது நடவடிக்கையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட அவருக்கு அங்கு 'பைபாஸ்' அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். அமைச்சரை நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். மேலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்றும் அவர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி வகித்து வந்த அரசு துறைகள், வெவ்வேறு அமைச்சருக்கு மாற்றி வழங்கப்பட்டன.

    அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்த உத்தரவை கவர்னர் நிறுத்திவைத்தார்.

    தற்போது, செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்யுமாறு செந்தில் பாலாஜிக்கு கோர்ட்டு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரனையின்போது ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அவரால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்பியது.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

    இந்த கடிதம், நேற்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட நிலையில், செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை கவர்னர் ஆர்.என்.ரவி. ஏற்றுக்கொண்டார்.

    முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்பதாக கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.

     

    • ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 184 இடங்களில் 98 இடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் மந்திரி தெரிவித்தார்.
    • பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தப் புதிய வழிகாட்டு விதிகளை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    "உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் அவற்றைப் பொதுப் பிரிவினருக்கான இடங்களாக மாற்றி மற்ற பிரிவினரைக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம்" என்று பல்கலைக்கழக மானியக்குழு புதிய வழிகாட்டு விதிகளை உருவாக்கியுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பல்லாயிரக்கணக்கான பணி இடங்களை நிரப்பாமல் காலியாக வைத்திருந்தார்கள். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 12.12.2022 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்குப் பதில் அளித்த ஒன்றிய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் "பின்னடைவு காலிப் பணியிடங்களையெல்லாம் உடனடியாக நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும், இதற்காகக் கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு மாதந்தோறும் அது ஆய்வு செய்கிறது என்றும்; 2019-ம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்கள் ( ஆசிரியர் இட ஒதுக்கீடு) சட்டம் 2019 நடைமுறைக்கு வந்ததற்குப் பிறகு இட ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்தவொரு பணியிடமும் பொதுப் பிரிவுக்கு மாற்றப்படவில்லை என்றும் பதிலளித்திருந்தார்.

    அதுமட்டுமின்றி, மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்.சி. பிரிவினருக்கென ரிசர்வ் செய்யப்பட்ட 307 பேராசிரியர் பதவிகளில் 231 இடங்களும்; 620 இணைப் பேராசிரியர் பதவிகளில் 401 இடங்களும்; 1,357 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 276 இடங்களு ம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என்றும்; எஸ்.டி. பிரிவினருக்கு அது போலவே 123 பேராசிரியர், 232 இணைப்பேராசிரியர் மற்றும் 188 உதவிப்பேராசிரியர் பதவிகள் காலியாக உள்ளன என்றும் தெரிவித்தார்.

    ஓ.பி.சி. பிரிவினருக்கு 367 பேராசிரியர் பதவிகளில் 311 இடங்களும்; 752 இணைப்பேராசிரியர் பதவிகளில் 576 இடங்களும்; 2332 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 672 இடங்களும் நிரப்பப்படவில்லை என்றும், ஐ.ஐ.டி.-களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கென ஒதுக்கப்பட்ட 11,170 ஆசிரியர் பதவிகளில் 4,502 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன என்றும், ஐ.ஐ.எம்.களில் எஸ்.சி. பிரிவினருக்கு ரிசர்வ் செய்யப்பட்ட 97 பதவிகளில் 53 இடங்களும் எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 40 பதவிகளில் 34 இடங்கள் நிரப்பப்படவில்லை. ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 184 இடங்களில் 98 இடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் மந்திரி தெரிவித்தார்.

    நாடாளுமன்றத்தில் இவ்வாறு பதிலளித்துவிட்டு இப்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினரின் இட ஒதுக்கீட்டையே ஒழித்துக் கட்டுவதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.

    அதன் அடிப்படையிலேயே, இப்போது பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டு விதிகளை வகுத்திருக்கிறது. பார்ப்பனர் அல்லாதார் அனைவரையும் தற்குறிகளாக மாற்ற முயற்சிக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தப் புதிய வழிகாட்டு விதிகளை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இதனை வலியுறுத்தி அனைத்து ஜனநாயக சக்திகளும் களமிறங்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
    • பா.வளர்மதியின் தரப்பு வாதங்களை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.

    புதுடெல்லி:

    2001-2006-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு, 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் கடந்த செப்டம்பர் 9-ந்தேதி தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.

    இதனிடையே, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் டிசம்பர் 4-ந்தேதி வாதங்களை தொடங்க வேண்டுமென அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வளர்மதி தரப்பிற்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த நவம்பர் 6-ந்தேதி உத்தரவிட்டது.

    இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரிய முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியின் மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அனிருதா போஸ் தலைமையிலான அமர்வு கடந்த டிசம்பர் 1-ந் தேதி விசாரித்தது. பா.வளர்மதியின் தரப்பு வாதங்களை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.

    இருப்பினும் விசாரணைக்கு பட்டியலிடவில்லை. இதையடுத்து, சொத்து குவிப்பு வழக்கில் தனது விடுதலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி சார்பில் முன்வைக்கப்பட்ட முறையீட்டை ஏற்ற சுப்ரீ்ம் கோர்ட்டு, ஜனவரி இறுதி வாரத்தில் மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்துள்ளது.

    • சமுதாய அக்கறையுள்ள அரசு என கூறும்போது, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியதும் உங்களது வேலைதானே? என்று தெரிவித்தனர்.
    • தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், குருவிமலை அருகே வளத்தோட்டம் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

    இதையடுத்து பட்டாசு ஆலை விபத்தில் பலியான குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணத்தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    இதேப்போல் காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணத்தொகையை பிரதமர் நரேந்திர மோடியும் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 10 லட்சமும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் எனவும் இந்த தொகையை பட்டாசு குடோன் உரிமையாளரிடம் இருந்து மாநில அரசு வசூலிக்கலாம், அதில் தீர்ப்பாயம் எந்த நிபந்தனையும் இல்லாமல் அனுமதி வழங்குகிறது என்றும் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டு இருந்தது.

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தொடர்ந்தது.

    இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.

    அப்போது நீதிபதிகள் இத்தகைய பட்டாசு ஆலைகள் ஒழுங்காக செயல்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டியது அரசின் வேலையாகும்.

    மேலும், சமுதாய அக்கறையுள்ள அரசு என கூறும்போது, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியதும் உங்களது வேலைதானே? என்று தெரிவித்தனர்.

    தமிழக அரசு தரப்பில் கூறும்போது, இழப்பீடு வழங்குவதில் எந்த தயக்கமும், பிரச்சனையும் இல்லை. ஆனால் அதை எவ்வளவு வழங்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை நிர்ணயம் செய்யவும் முடியாது.

    அவ்வாறு இழப்பீட்டை நிர்ணயம் செய்ய தொடங்கினால், இதுதொடர் பழக்கமாக மாறிவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்ததில் எந்த முகாந்திரமும் இல்லை எனவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    மேலும், சொத்து குவிப்பு வழக்கு தண்டனையை எதிர்த்து பொன்முடி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு வருகிற வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறைச்சாலை கையேடுகள் சிறைக் கைதிகளுக்கான பணிகளை ஒதுக்குவதிலும், கைதிகளை அடைத்து வைப்பதிலும் சாதிய பாகுபாட்டை ஊக்குவிப்பதாக உள்ளன.
    • விசாரணை கைதிகளையும், தண்டனை கைதிகளையும் தனித்தனியாக பிரித்து வைப்பது வழக்கம்.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரத்தை சேர்ந்த சுகன்யா சாந்தா சார்பில் வக்கீல் எஸ்.பிரசன்னா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சிறைச்சாலைகளில் உள்ள கையேடுகள், விதிகள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் எஸ்.முரளிதர் ஆஜராகி, 'தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களின் சிறைச்சாலை கையேடுகள் சிறைக் கைதிகளுக்கான பணிகளை ஒதுக்குவதிலும், கைதிகளை அடைத்து வைப்பதிலும் சாதிய பாகுபாட்டை ஊக்குவிப்பதாக உள்ளன' என வாதிட்டார்.

    மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'சிறைச்சாலைகளில் சாதிய பாகுபாடு குறித்து கேள்வி எழவில்லை. விசாரணை கைதிகளையும், தண்டனை கைதிகளையும் தனித்தனியாக பிரித்து வைப்பது வழக்கம்' என வாதிட்டா்ா.

    இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 'தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களின் சிறைக் கையேடுகளை தொகுக்குமாறு மூத்த வக்கீல் எஸ்.முரளிதரை கேட்டதுடன், சிறைச்சாலை கையேடுகள் சிறைகளில் சாதி பாகுபாட்டை ஊக்குவிப்பதாக தெரிவித்து தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.

    • ரெயில்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்துகள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன.
    • ரெயில்கள் மோதலை தடுக்க ‘கவாச்’ என்ற தானியங்கி தொழில்நுட்பத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

    புதுடெல்லி:

    விஷால் திவாரி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஒடிசா மாநிலம் பலசோர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 3 ரெயில்கள் மோதிக்கொண்டதில், 288 பேர் பலியானார்கள். ரெயில்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்துகள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன.

    அவற்றை கருத்தில்கொண்டு, ரெயில்கள் மோதலை தடுக்க 'கவாச்' என்ற தானியங்கி தொழில்நுட்பத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், அந்த குறிப்பிட்ட வழித்தடத்தில் 'கவாச்' தொழில்நுட்பத்தை அமல்படுத்தவில்லை.

    பொதுமக்களின் பாதுகாப்புக்கும் உயிருக்கும் முன்னுரிமை அளிப்பதாக மத்திய அரசு அடிக்கடி கூறுகிறது. நான் எழுப்புவது மக்கள் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினை.

    ஆகவே, 'கவாச்' தொழில்நுட்பத்தை உடனடியாக அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும். அதுவரை ரெயில்கள் இயக்கத்தை நிறுத்திவைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

    மனுதாரர் தனது மனுவின் நகலை அட்டார்னி ஜெனரலிடம் ஒப்படைக்க வேண்டும்.

    ரெயில் விபத்துகளை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட 'கவாச்' தொழில்நுட்பம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும், இனி எடுக்க திட்டமிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அட்டார்னி ஜெனரல் தெரிவிக்க வேண்டும். நாடு முழுவதும் 'கவாச்' தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்து ஏதேனும் ஆய்வு செய்யப்பட்டதா என்றும் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    அடுத்தகட்ட விசாரணையை 4 வாரங்களுக்கு பிறகு தள்ளி வைத்தனர்.

    • கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
    • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    சென்னை:

    தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கவில்லை.

    இதுதொடர்பாக கவர்னருக்கு தமிழக அரசு பலதடவை கோரிக்கை விடுத்தது. ஆனால் அதற்கு பலன் கிடைக்காததால் கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    கடந்த 1-ந் தேதி அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர். தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, பார்தி வாலா ஆகியோரை கொண்ட பெஞ்ச் இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்தது.

    தமிழக அரசு சார்பிலும், கவர்னர் சார்பிலும் வக்கீல்கள் வாதாடினார்கள். அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். இந்த விவகாரத்துக்காக கோர்ட்டுக்கு வர வேண்டுமா? என்றும் தெரிவித்தனர்.

    சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு கவர்னர் தாமதம் செய்வது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

    அப்போது தமிழக அரசு வக்கீல் கூறுகையில், "கவர்னர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இது தொடர்பாக கோர்ட்டு வழிகாட்டுதல் வேண்டும். தமிழக அரசின் 5 ஆண்டு பதவி காலத்துக்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காவிட்டால் மக்கள் பணி முடங்க வாய்ப்பு உள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது" என்று வாதாடினார்.

    இந்தநிலையில் கவர்னர் சில மசோதாக்களை திருப்பி அனுப்பினார். இதையடுத்து சட்டசபை கூடி அந்த மசோதாக்களை நிறைவேற்றி மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் கவர்னர் அதற்கும் ஒப்புதல் வழங்காமல் மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியதாக தகவல் வெளியானது.

    இதுபற்றியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சில அறிவுறுத்தல்களை வெளியிட்டனர். சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாது என்ற அரசியலமைப்பின் 200-வது பிரிவை சுட்டிக்காட்டினார்கள்.

    மேலும் தமிழக முதலமைச்சர், கவர்னரிடையே பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டி உள்ளது. எனவே முதலமைச்சரை கவர்னர் அழைத்து பேசி இந்த முட்டுக்கட்டைகளுக்கு தீர்வு காண வேண்டும். அப்படி செய்தால் இந்த நீதிமன்றம் வெகுவாக பாராட்டும் என்று நீதிபதிகள் கருத்து வெளியிட்டனர்.

    அதன்பிறகு தமிழக அரசு வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.

    இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

    இதற்கிடையே தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தினார். இதனால் கவர்னருடனான சந்திப்பு தாமதமாகி இருந்தது.

    இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு சந்தித்து பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் பற்றி கவர்னரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவார்.

    குறிப்பிட்ட சில மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதால் மக்கள் நல பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் தகவல்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கி கூறுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஜனவரி 2-வது வாரம் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கவும் கவர்னருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுப்பார் என்று தெரிய வந்துள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு இன்று காலை முதல் குறைக்கப்பட்டது.
    • 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69.57 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியது.

    அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 136 அடியை எட்டியதைத் தொடர்ந்து இடுக்கி மாவட்டத்துக்கு முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி வரை உயர்ந்து 138 அடியை கடந்தது.

    இதனைத் தொடர்ந்து இடுக்கி மாவட்ட நிர்வாகத்துக்கு 2-ம் கட்ட தகவலை தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டும்போது முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 141 அடியை எட்டும்போது 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் 142 அடியான பின் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு 13 ஷட்டர்கள் வழியாக இடுக்கி மாவட்டம் பெரியாற்றில் திறந்து விடப்படும்.

    உச்சநீதிமன்றம் முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்று உத்தரவிட்ட பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-வது முறையாக அணையின் நீர்மட்டம் 142 அடி வரை தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    எனவே இந்த வருடமும் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் 6-வது முறையாக அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு இன்று காலை முதல் குறைக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 139.25 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 2515 கன அடியாக உள்ளது. நேற்று வரை 1867 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 105 கன அடி மட்டுமே திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6937 மி.கன அடியாக உள்ளது. தற்போது மழை அளவு குறைந்துள்ள போதிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஓரிரு நாளில் அணையின் நீர்மட்டம் உயரும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69.57 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4944 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 3699 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5720 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டும்போது அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மதகுகள் வழியாகவும், கால்வாய்கள் மூலமாகவும் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தற்போதே வைகை அணையின் கரையோரப்பகுதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் காட்சி கடல்போல் உள்ளது. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முறையே 214 மற்றும் 236 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    • மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

    அதன்பின், டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத் துறை கடந்த மார்ச் 9-ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. கைதுசெய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவரை சி.பி.ஐ. அமலாக்கத் துறை தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றன.

    இதற்கிடையே, பணமோசடி வழக்கு விசாரணை தொடர்பாக மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நீட்டிக்கும்படி அமலாக்கத் துறை டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

    மேலும், மறு ஆய்வு மனுக்களையும், அதற்கான ஆதாரங்களையும் கவனமாக ஆய்வு செய்துள்ளோம். எங்கள் கருத்துப்படி அக்டோபர் 30-ம் தேதியிட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கான எந்த வழக்கும் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வந்ததாக அரசு புகார் கூறியது.
    • கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நிலுவையில் வைத்திருந்த 8 மசோதாக்களில், ஒன்றுக்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆளும் இடது சாரி ஆட்சிக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வந்ததாக அரசு புகார் கூறியது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பஞ்சாப் கவர்னருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், எந்த நடவடிக்கையும் இல்லாமல் அரசு அனுப்பி உள்ள மசோதாக்களை காலவரையின்றி நிலுவையில் வைத்திருக்க ஆளுநர்களுக்கு சுதந்திரம் அளிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. கேரள அரசின் கூடுதல் தலைமை செயலாளரிடம் இதனை குறிப்பிடும்படியும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்த சூழலில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நிலுவையில் வைத்திருந்த 8 மசோதாக்களில், ஒன்றுக்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ளார். சர்ச்சைக்குரிய பல்கலைக்கழக திருத்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்களை, ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளதாக கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.
    • 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் சர்வே ஆஃப் இந்தியாவுக்கு உத்தரவிட்டார்.

    புதுடெல்லி:

    முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது.

    இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.

    கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நில அளவை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்படும் மேற்பார்வை குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும். இதுகுறித்து இரு மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் வழக்கின் விசாரணையை நவ.28ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் பார்க்கிங் விவகார வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, முல்லைப்பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்த மையம் அமைக்கும் விவகாரத்திற்கு தீர்வு காண கூட்டு சர்வே நடத்த உத்தரவிட்டார்.

    3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் சர்வே ஆஃப் இந்தியாவுக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்த மைய விவகாரத்துக்கு தீர்வு காண கூட்டு சர்வே நடத்த தமிழ்நாடு-கேரள மாநில அரசுகள் இசைவு அளித்துள்ளது.

    • மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்க கோரி ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது.
    • ஆட்சேபம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தள்ளி வைக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட நீக்க தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்து சென்னை ஐகோர்ட்டு கடந்த மார்ச் 28-ந்தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பில், பொதுக்குழு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளதால், 2,460 பொதுக்குழு உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே என நீதிபதி தெளிவுபடுத்தி இருந்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனடியாக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு, தடை விதிக்க மறுத்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் வக்கீல் கவுதம்சிவசங்கர் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் 5-ந்தேதி மேல்முறையீடு செய்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இந்த மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்க கோரி ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது.

    இதற்கு ஆட்சேபம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 'சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துவிட்டு, சிவில் கோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்கு வசதியாக விசாரணையை தள்ளிவைக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்கக்கூடாது' என்று கூறப்பட்டிருந்தது.

    சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டனர். பிறகு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை ஏற்றனர்.

    அதன்படி அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

    ×