search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம் ஆத்மி கட்சி"

    • 6 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
    • தற்போது 7-வது முறையாகவும் ஆஜராகுவதை தவிர்த்துள்ளார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது.

    இதனால் அவருக்கு சம்மன் அனுப்பி, அமலாக்கத்துறை அலுவலகம் வந்து விசாரணைக்கு ஆஜராகும்படி அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக மறுத்துவிட்டார்.

    5 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராக நிலையில், அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றம் ஆஜராகும்படி தெரிவித்தது. இதையடுத்து 7-வது முறையாக சம்மன் அனுப்பியது. அந்த சம்மனில் இன்று நேரில் ஆஜராகும்படி கேட்டுக்கொண்டிருந்தது.

    இதனால் இன்று நேரில் ஆஜராகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கெஜ்ரிவால் இந்த முறையும் நேரில் ஆஜராவதை தவிர்த்துள்ளார்.

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்கத் துறை விசாரணைக்கு செல்லவில்லை. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அடுத்த விசாரணை மார்ச் 16-ம் தேதி நடைபெற உள்ளது.

    தினமும் சம்மன் அனுப்புவதற்கு பதிலாக நீதிமன்றத்தின் முடிவுக்காக அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும். இந்தியா கூட்டணியை விட்டு விலகமாட்டோம். மோடி அரசு இதுபோன்ற அழுத்தத்தை உருவாக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வரும் 10-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.
    • வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 12 ஆகும்.

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான சுஷில் குமார் குப்தா, சஞ்சய் சிங் மற்றும் என்.டி. குப்தா ஆகியோரின் பதவிக் காலம் வருகிற 27-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    இதற்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி சார்பாக அந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு சஞ்சய் சிங் மற்றும் என்.டி. குப்தா ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

    இந்த நிலையில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் என்பதால், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் சஞ்சய் சிங் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ளதால் பாதுகாப்புடன் போலீஸ் வாகனத்தில் வந்து மனு தாக்கல் செ ய்தார்.

    வருகிற 10-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 12 என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

    அதன்பின், டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத் துறை கடந்த மார்ச் 9-ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. கைதுசெய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவரை சி.பி.ஐ. அமலாக்கத் துறை தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றன.

    இதற்கிடையே, பணமோசடி வழக்கு விசாரணை தொடர்பாக மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நீட்டிக்கும்படி அமலாக்கத் துறை டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

    மேலும், மறு ஆய்வு மனுக்களையும், அதற்கான ஆதாரங்களையும் கவனமாக ஆய்வு செய்துள்ளோம். எங்கள் கருத்துப்படி அக்டோபர் 30-ம் தேதியிட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கான எந்த வழக்கும் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது.

    • ‘இந்தியா’ கூட்டணிக்கு எதிரான பா.ஜ.க.வின் தாக்குதல் என்கிற ரீதியில், ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் இந்த விஷயத்தை பேச வேண்டிய சூழல் உள்ளது.
    • ஊழலுக்கு துணை போவதாக எழும் விமர்சனத்தை எதிர்கொள்ள அவர்கள் விரும்பவில்லை.

    ஆம் ஆத்மி அரசு மீதான தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படும் சூழல் ஆகியவற்றால், ஆம் ஆத்மி கட்சி, 'இந்தியா' கூட்டணிக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது. இந்த ஊழல் வழக்குகள், 'இந்தியா' கூட்டணிக்கு எதிரான பா.ஜ.க.வின் தாக்குதல் என்கிற ரீதியில், 'இந்தியா' கூட்டணி கட்சிகள் இந்த விஷயத்தை பேச வேண்டிய சூழல் உள்ளது. பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.

    ஆனால், காங்கிரஸ் உட்பட, 'இந்தியா' கூட்டணி கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிய அளவில் கையில் எடுக்கவில்லை. ஆம் ஆத்மிக்கு ஆதரவாக கடுமையாகக் குரல் எழுப்பவில்லை.

    அதாவது, ஊழலுக்கு துணை போவதாக எழும் விமர்சனத்தை எதிர்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. அதேசமயம், ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் ஆம் ஆத்மி கட்சியை கூட்டணி யில் இருந்து விலக்கவும் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் தயாராக இல்லை. துப்புரவும் முக்கியம். அதற்கு துடைப்பமும் முக்கியமாச்சே! என்ற கதையில் உள்ளது.

    • ஆம் ஆத்மி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது.
    • போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுக்பால் சிங் கைரா கைது செய்யப்பட்டார். இதனால் அந்த மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது.

    இதன் காரணமாக 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து அந்த கூட்டணியில் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் மாசுக்கட்டுப்பாடு தொடர்பான குளிர்கால செயல்திட்டத்தை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

    இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் 'இந்தியா' கூட்டணி தர்மத்தை நிலைநாட்ட உறுதி பூண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், 'இந்தியா' கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி விலகாது என்று உறுதியளித்தார்.

    • ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் எதிர்ப்பை முக்கிய கொள்கையாக கொண்டுள்ளார்.
    • பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டால் வடமாநில மக்கள் ஆதரவோடு கணிசமான எம்.பி.க்களை கொண்டு மத்தியில் ஆட்சி அமைப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கலாம்.

    சென்னை:

    நமதுரிமை காக்கும் கட்சி பொது செயலாளர் டாக்டர் செங்கை பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் எதிர்ப்பை முக்கிய கொள்கையாக கொண்டு பயணித்ததால் முதலில் தலைநகர் டெல்லியையும் பின்னர் பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சி அமைத்து அக்கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டால் வடமாநில மக்கள் ஆதரவோடு கணிசமான எம்.பி.க்களை கொண்டு மத்தியில் ஆட்சி அமைப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கலாம் என்று கூறியுள்ளார்.

    • ஏழு தொகுதிகளிலும் போட்டியிட தயாராக கேட்டுக்கொண்டதாக காங்கிரஸ் தலைவர் தகவல்
    • தனித்து போட்டி என்றால், இந்தியா கூட்டணி என்? என ஆம் ஆத்மி கேள்வி

    இந்தியா பாராளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. சுமார் ஏழு மாதங்களே உள்ளதால் பா.ஜனதா கட்சி, எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கான வியூகங்களை அமைக்க தொடங்கிவிட்டன.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், வியூகம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று காங்கிரஸ் கட்சி தலைமை, 18 மாநில கட்சித் தலைவர்களுடன் சுமார் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தியது.

    ஆலோசனைக்குப் பிறகு டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் லம்பா, ''டெல்லியில் உள்ள மக்களவை தொகுதிகளிலும் போட்டியிட தயாராகும்படி தங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    2024 தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும் என எங்களுக்கு கூறப்பட்டது. டெல்லி மாநில ஆலோசனைக்கு முன், தலைமை 18 மாநில தலைவர்களை சந்தித்து பேசியது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் உடனடியாக பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஏழு மாதங்களே உள்ளது. ஏழு தொகுதிகளுக்காக அனைத்து தொண்டர்களும் தயாராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது'' எனத் தெரிவித்தார்.

    இதனால் ஆச்சர்யம் அடைந்த ஆம் ஆத்மி, கட்சிகள் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டால், I.N.D.I.A. கூட்டணி தேவையா? எனவும் கேள்வி எழுப்பியது.

    உடனடியாக இதுகுறித்து டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பாபரியா ''லம்பா கூறியது அவரது கருத்தாகும். கூட்டத்தில் இடம் பகிர்வு குறித்து எந்த திட்டமும் இல்லை. டெல்லியில் கட்சியை எப்படி வலுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது'' என்றார்.

    இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் ஆகியோர் மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வருகிற 19-ந்தேதி மற்றும் 20-ந்தேதி பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    பா.ஜனதாவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இடம் பிடித்துள்ளன. பா.ஜனதா- காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி மோதல் உள்ள இடங்களில் ஆம் ஆத்மி கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி, எப்படியும் அதிக இடங்களில் போட்டியிட விரும்பும்.

    இந்த விவகாரம் I.N.D.I.A. கூட்டணியில் கருத்து மோதலை உருவாக்க முக்கிய காரணமாக கருதப்படும் சீட் பகிர்வின் முதற்படி என பார்க்கப்படுகிறது.

    இதுபோன்று பல மாநிலங்களில் காங்கிரஸ், மாநில கட்சிகள் இடையே முரண்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. முரண்பாடுகள் அனைத்தும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டால், பா.ஜனதா கூட்டணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    • ஜம்மு-காஷ்மீரில் 8,617 பெண்களும், 1,148 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.
    • யூனியன் பிரதேசத்தில் நடப்பதாகக் கூறப்படும் 'மனித கடத்தல்' பற்றியும் நவாப் சின்ஹாவிடம் கேட்டார்.

    ஜம்மு காஷ்மீரில் இருந்து 9,000க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேசிய குற்ற ஆவணக் காப்பகம், நாட்டில் காணாமல் போன பெண்கள் குறித்த பட்டியல் வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த தரவு சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, 2019 முதல் 2021 வரையிலான மூன்று ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் 8,617 பெண்களும், 1,148 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவித்திருந்தது.

    இதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஸ்ரீநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இங்குள்ள பிரஸ் காலனியில் ஏராளமான ஆம் ஆத்மி கட்சியினர் "ஏன்? யார்? எங்கே? 9765 காணவில்லை" என்ற கேள்விகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட்டம் நடத்தினர்.

    ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவிடம், காணாமல் போன பெண்கள் குறித்து பதில் அளிக்குமாறு ஆம் ஆத்மி ஊடக குழு தலைவர் நவாப் கேட்டுக் கொண்டார்.

    மேலும் அவர்," ஏன் இது நடந்தது, உங்கள் அமைப்பில் உள்ள குறைபாடு என்ன என்று நாங்கள் கேட்கிறோம்? இந்த 9,765 பேர் யார், அவர்கள் காணாமல் போனதற்குக் என்ன காரணம்? காணாமல் போன பெண்கள் எங்கே? காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க நீங்கள் ஏதாவது செய்கிறீர்களா?" என்று கேட்டார்.

    யூனியன் பிரதேசத்தில் நடப்பதாகக் கூறப்படும் 'மனித கடத்தல்' பற்றியும் நவாப் சின்ஹாவிடம் கேட்டார்.

    ஜம்மு காஷ்மீர் பெண்களின் கவுரவம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் துறை ஏதேனும் உள்ளதா? இது அரசியல் பிரச்சினை அல்ல, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு பற்றியது என்று கூறினார்.

    • ஜூலை 5ம் தேதி, 70 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவசரச் சட்டத்தின் நகல்கள் எரிக்கப்படும்.
    • மத்திய அரசின் நடவடிக்கையானது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறும் செயல் என ஆம் ஆத்மி அரசாங்கம் கூறியது.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜூலை 3ம் தேதி, மத்திய டெல்லியில் உள்ள அவரது ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற அவசர சட்டத்தின் நகலை எரிப்பார் என்று அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.

    செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரும், டெல்லி அமைச்சருமான சௌரப் பரத்வாஜ் கூறியதாவது:

    கருப்பு அவசரச் சட்டம் மூலம் டெல்லியை சட்டவிரோத கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. இதனை எதிர்த்து, ஜூலை 3ம் தேதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேபினட் அமைச்சர்கள் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்சி அலுவலகத்தில் கருப்பு அவசரச் சட்டத்தின் நகல்களை எரிக்க வேண்டும். பிறகு, ஜூலை 5ம் தேதி, 70 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவசரச் சட்டத்தின் நகல்கள் எரிக்கப்படும். அதற்கு பிறகு, ஜூலை 6 முதல் ஜூலை 13 வரை, டெல்லியின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அவசரச் சட்டத்தின் நகல்கள் தீ வைத்து எரிக்கப்படும். கட்சியின் 7 துணைத்தலைவர்களும் டெல்லியின் ஒவ்வொரு பகுதியிலும் அவை எரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    செய்தியாளர்கள் சந்திப்பில், அக்கட்சியின் 7 துணைத் தலைவர்களான திலீப் பாண்டே, ஜர்னைல் சிங், குலாப் சிங், ஜிதேந்தர் தோமர், ரிதுராஜ் ஜா, ராஜேஷ் குப்தா மற்றும் குல்தீப் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    டெல்லியின் காவல்துறை, பொது ஒழுங்கு மற்றும் நிலம் உள்ளிட்ட சேவைகளின் கட்டுப்பாட்டை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் மே-11 அன்று உச்சநீதிமன்றம் ஒப்படைத்தது. உச்ச நீதிமன்றத்தின் மே-11 தீர்ப்புக்கு முன்னர் டெல்லி அரசாங்கத்தின் அனைத்து அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பணியிடமர்த்தல் அதிகாரங்கள், டெல்லி லெப்டினன்ட் கவர்னரின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.

    டெல்லியில் ஐ.ஏ.எஸ். (IAS) மற்றும் டானிக்ஸ் (DANICS) அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கும், பணியமர்த்துவதற்கும் அதிகாரத்தை உருவாக்குவதற்கான ஒரு அவசரச் சட்டத்தை மே 19 அன்று மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசு கொண்டு வந்த இந்த அவசர சட்டம், குரூப்-ஏ அதிகாரிகளுக்கு எதிராக இடமாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைக்க வழி செய்கிறது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது, சேவைக் கட்டுப்பாடு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறும் செயல் என ஆம் ஆத்மி அரசாங்கம் கூறியது.

    ஜூன் 11ம் தேதி இந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக அக்கட்சி ஒரு மகா பேரணியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • ஒருமித்த கருத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாமல் அதை செயல்படுத்த முடியாது.
    • இந்த பிரச்சினையில் பெரிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

    பொது சிவில் சட்டம் அவசியம் என்று தெரிவித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் ஜாபியத் உலமா-இ-ஹிந்த் ஆகிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி இந்த சட்டத்திற்கு ஆதரவாக உள்ளது.

    இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சந்தீப் பதக் கூறியதாவது:-

    கொள்கை அளவில் நாங்கள் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறோம். அரசியலமைப்பு சட்டத்தின் 44வது பிரிவு நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறது. ஆனால் இது அனைத்து மதங்களுடனும் தொடர்புடையது என்பதால், இந்த பிரச்சினையில் பெரிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அனைத்து மதத்தினரிடம் இருந்தும், அரசியல் கட்சியினரிடம் இருந்தும் ஆலோசனைகளை பெறவேண்டும். ஒருமித்த கருத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாமல் அதை செயல்படுத்த முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2024 பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு பொது சிவில் சட்டம் என்ற ஆயுதத்தை பாஜக கையில் எடுத்துள்ள நிலையில், ஆம் ஆத்மி தலைவரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவருக்கு ஒரு சட்டம் இருந்தால் வீட்டை ஒழுங்காக நடத்த முடியாது, அதுபோல்தான் இரண்டு சட்டங்களில் நாடு இயங்க முடியாது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    • அவசரச் சட்டத்திற்கு எதிராக ஆதரவு திரட்ட முயற்சி மேற்கொள்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
    • காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

    தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நீடிக்கும் நிலையில், டெல்லியில் நிர்வாக சேவைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    மேலும், பாஜக அல்லாத கட்சிகளின் தலைவர்களை அணுகி, அவசரச் சட்டத்திற்கு எதிராக அவர்களின் ஆதரவைத் திரட்டவும், இந்த அவசர சட்டத்தை பாராளுமன்றம் வழியாக சட்டமாக்கப்படுவதை தடுக்கவும் அர்விந்த் கெஜ்ரிவால் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த சட்டம் குறித்து பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

    இந்நிலையில், 'டெல்லியின் நிர்வாக சேவைகள் குறித்த மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான எங்களின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை என்றால், நாளை பீகார் மாநிலம் பாட்னாவில் நடக்கவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை புறக்கணிப்போம்' என ஆம் ஆத்மி கட்சி மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நாளைய கூட்டத்தின்போது காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால், தற்போதுவரை காங்கிரஸ் எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்காததால், ஆம் ஆத்மி கட்சி இறுதி எச்சரிக்கை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 

    • பேரணியில் சுமார் 1 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • அவசர சட்டத்திற்கு எதிராக கெஜ்ரிவால் நாடு முழுவதும் ஆதரவு திரட்டினார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நீடிக்கிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது என்றும், ஜனநாயக நாட்டில் துணைநிலை ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும் என்றும் கூறியது. டெல்லி அரசுக்கு பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் உள்ளன. குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கே உள்ளது எனவும் தெரிவித்தது.

    இந்த தீர்ப்பை நீர்த்து போகச் செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது. அதாவது, குடிமைப்பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் வகையில், நிரந்தரமாக தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (என்சிசிஎஸ்ஏ) உருவாக்குவதற்காக இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

    இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஆம் ஆத்மி கட்சி, மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அவசர சட்டத்திற்கு எதிராக கெஜ்ரிவால் நாடு முழுவதும் ஆதரவு திரட்டினார். பாராளுமன்றத்தில் அவசர சட்டத்தை தோற்கடிக்கவும் அவர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

    இந்நிலையில், மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரமாண்டமான பேரணி நடத்தப்பட உள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலர்கள் அந்தந்த தொகுதிகளில் இருந்து ஆதரவாளர்களுடன் பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். பேரணி காலை 10 மணிக்குத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரணியின் நிறைவில் ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்தில் முதல்வர் கெஜ்ரிவால் உரையாற்றுகிறார்.

    இந்த பேரணியில் சுமார் 1 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரீனா குப்தா தெரிவித்துள்ளார். இதனால் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் ராம்லீலா மைதானத்திலும், மைதானத்தை சுற்றியும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. மைதானத்தின் நுழைவு வாயில்களில் மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட உள்ளனர். மைதானத்திற்குள் வருபவர்கள் அனைவரும் சோதனை செய்யப்படுவார்கள்.

    ×