என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Resignation"

    • 16 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர்.
    • இன்று இரவு ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்தை முதல்வர் சந்திக்க உள்ளார்.

    குஜராத் பாஜக அரசின் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் இன்று (வியாழக்கிழமை) ராஜினாமா செய்தனர்.

    நாளை (வெள்ளிக்கிழமை) அமைச்சரவை மாற்றம் நடைபெற இருந்த நிலையில் இன்று முதல்வர் பூபேஷ் படேலை தவிர அனைவரும் கூட்டாக ராஜினாமா செய்தனர்.

    முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. குஜராத் பாஜக தலைவர் ஜெகதீஷ் விஸ்வகர்மா, மாநில அமைச்சரவையை முழுமையாக மறுசீரமைக்க வசதியாக அமைச்சர்களை பதவி விலகுமாறு உத்தரவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    கூட்டத்தைத் தொடர்ந்து, 16 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர். இன்று இரவு ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்திடம் அவற்றை பூபேஷ் படேல் ஒப்படைக்க உள்ளார்.

    புதிய அமைச்சரவை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு காந்திநகரின் மகாத்மா மந்திரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அறிவிக்கப்பட உள்ளது.     

    • பதிவு செய்யப்படாத தளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது.
    • நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது.

    நேபாள அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 28 முதல் சமூக ஊடக நிறுவனங்கள் பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

    இந்த காலக்கெடு முடிவடைந்தபோதும், மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), ஆல்பாபெட் (யூடியூப்), எக்ஸ் (ட்விட்டர்), ரெடிட் மற்றும் லிங்க்ட்இன் உள்ளிட்ட முக்கிய தளங்கள் எதுவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே பதிவு செய்யப்படாத தளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது.

    நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் பரவுவதை தடுக்க, கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாகக் கூறி இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் காத்மாண்டுவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக போராட்டத்தில் குதித்த இளைஞர்கள் நேபாள பாராளுமன்ற வளாகத்தின் நுழைவாயிலை சூறையாடியதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. நேபாள அரசு போராட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்துள்ளது.

    போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் உயிரழந்தோரின் எண்ணிக்கை 19 பேர் ஆக உயர்ந்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், போராட்டம் கலவரமாக மாறியதில் 19 இளைஞர்கள் பலி எதிரொலியாக நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லோகாக் ராஜினாமா செய்துள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கைக்கு பல்வேறு கட்சியினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
    • செங்கோட்டையன் ஆதரவாளர்கள், தங்களையும் கட்சிப் பதவில் இருந்து நீக்கக் கோரி இபிஎஸ்-க்கு கடிதம்.

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து இருந்தார். இதனை தொடர்ந்து திண்டுக்கலில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

    எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கைக்கு பல்வேறு கட்சியினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், செங்கோட்டையன் ஆதரவாளர்கள், தங்களையும் கட்சிப் பதவில் இருந்து நீக்கக் கோரி எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி வருகின்றனர்.

    மாவட்ட மகளிரணிச் செயலாளர் சத்தியபாமா, ஐடி பிரிவுச் செயலாளர் செந்தில் குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் அணி இணைச் செயலாளர் அருள் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் கணேஷ் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கடிதம் எழுதியுள்ளனர்.

    ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய, நகர, கிளை மற்றும் சார்பு அணிகளைச் சேர்ந்த சுமார் 2,000 நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதே போல் கோபிசெட்டிபாளையம் பகுதி நிர்வாகிகளும் தனித்தனியாக ராஜினாமா கடிதங்களை அனுப்புகின்றனர்.

    • ராஜினாமா செய்வதாக ஆயுதப்படை ஏடிஜிபி செயராமுக்கு அருண் கடிதம்.
    • கடந்த 2013ம் ஆண்டு குரூப் 1 தேர்வு மூலம் டிஎஸ்பியாக பணிக்கு சேர்ந்தார்.

    ஆயுதப்படை பிரிவில் 12வது பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றிய அருண் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    அருண் வெளிநாட்டிற்கு செல்வதால் ராஜினாமா செய்வதாக ஆயுதப்படை ஏடிஜிபி செயராமுக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், ராஜினாமா கடிதம் டிஜிபி சங்கர் ஜிவால் மூலம் உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏற்கப்பட்டுள்ளது.

    கடந்த 2013ம் ஆண்டு குரூப் 1 தேர்வு மூலம் டிஎஸ்பியாக பணிக்கு சேர்ந்த அருண் 2024ல் எஸ்.பி., ஆனார்.

    • டெல்லி சட்டமன்றத் தேர்தலில், முகேஷ் கோயல் ஆம் ஆத்மி கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
    • ஆம் ஆத்மி கட்சி சார்பாக டெல்லி மாநகராட்சியில் அவை தலைவராக முகேஷ் கோயல் இருந்துள்ளார்.

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர்.

    ராஜினாமா செய்த 13 கவுன்சிலர்களும் முகேஷ் கோயல் என்பவரின் தலைமையில் இந்திரபிரஸ்த விகாஸ் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்தனர்.

    இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில், முகேஷ் கோயல் ஆம் ஆத்மி கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மேலும், ஆம் ஆத்மி கட்சி சார்பாக டெல்லி மாநகராட்சியில் அவை தலைவராக முகேஷ் கோயல் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அது நடந்து 36 வருடங்கள் கடந்துவிட்டன, இப்போது நிறைய விஷயங்கள் மாறிவிட்டன.
    • இது ஒரு தீவிரமான விஷயம் எனக் கூறிய ஐஸ்லாந்தின் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தெரிவித்தார்.

     ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இவரது அமைச்சரவையில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ஆஸ்தில்டர் லோவா தோர்ஸ்டாட்டிர் (58 வயது).

    ஆஸ்தில்டர் சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தனது இள வயது அனுபவங்கள் குறித்து பேசியிருந்தார். அப்போது தனது 22 ஆவது வயதில், 16 வயது மாணவர் ஒருவருடன் உடலுறவு வைத்து குழந்தை பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

    ஆஸ்தில்டர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அந்நாட்டில் கடும் கண்டனங்களை குவித்தது. இதனால் ஆஸ்தில்டர் வகித்து வந்த அமைச்சர் பதவிக்கே நெருக்கடி வந்தது. இந்த சர்ச்சை தொடர்பாக பிரதமர் கிறிஸ்ட்ரூன், நேற்று முன் தினம் இரவு ஆஸ்தில்டரை அலுவலகத்துக்கு வரழைத்து பேசினார். இதன்பிறகு ஆஸ்தில்டர் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

    தனது ராஜினாமாவுக்கு பின் பேசிய அவர், "அது நடந்து 36 வருடங்கள் கடந்துவிட்டன, இப்போது நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. இன்று இந்தப் பிரச்சினைகளை நான் நிச்சயமாக வித்தியாசமாகக் கையாண்டிருப்பேன். அப்போது அதற்கான முதிர்ச்சி என்னிடம் இல்லை" என்று கூறினார்.

    இதற்கிடையே இது ஒரு தீவிரமான விஷயம் எனக் கூறிய ஐஸ்லாந்தின் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர், "இது மிகவும் தனிப்பட்ட விஷயம், சம்பந்தப்பட்ட நபருக்கு மரியாதை அளிக்கும் விதமாக, இந்த விஷயத்தில் நான் மேலும் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன்" என்று தெரிவித்தார்.

    • உத்தரகண்ட் "பஹாடிகளுக்கு" மட்டுமே உருவாக்கப்பட்டதா என்று அகர்வால் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
    • எனது மாநிலம் வளர்ச்சியடைந்து முன்னேற வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன்.

    பாஜக ஆளும் உத்தரகாண்ட் நிதியமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரது இல்லத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கண்ணீர் விட்டு அழுதார்.

    கடந்த பிப்ரவரி மாதம் மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அவர் தெரிவித்த கருத்துகளைச் சுற்றியுள்ள சர்ச்சையை காரணம் காட்டி, பதவி விலகுவதாக கூறி, முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் தனது ராஜினாமாவை அவர் சமர்ப்பித்தார். நாடாளுமன்ற விவகாரத் துறையையும் பிரேம்சந்த் நிர்வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    பட்ஜெட் கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ மதன் பிஷ்ட்டின் கருத்துக்கு பிரேம்சந்த் பதிலளித்தபோது சர்ச்சை வெடித்தது. உத்தரகண்ட் "பஹாடிகளுக்கு" மட்டுமே உருவாக்கப்பட்டதா என்று பிரேம்சந்த் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

    மேலும் சூடான விவாதத்தின் போது நாடாளுமன்றத்திற்குப் புறம்பான மொழியைப் பயன்படுத்தினார். அவரது கருத்துக்கு பரவலான எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக பஹாடி மலைவாழ் மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. மேலும் எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களைப் முன் வைத்தன.

    தற்போது ராஜினாமா குறித்து செய்தியாளர்களிடம் அழுதபடி பேசிய பிரேம்சந்த் , எனது வார்த்தைகளுக்கும் அவற்றின் தாக்கத்திற்கும் நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்.

    எனது மாநிலம் வளர்ச்சியடைந்து முன்னேற வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன். எனது பங்களிப்பு என்னவாக இருந்தாலும், அதை நான் செய்வேன். எனவே, இன்று, எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்தார்.  

    • மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக என அ.தி.மு.க. குழு தலைவர் சோலைராஜா பேட்டியளித்துள்ளார்.
    • உள்ளாட்சித் தினமான இன்று மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாநகர சபா குழு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    மதுரை

    உள்ளாட்சித் தினமான இன்று மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாநகர சபா குழு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் மாநகர சபை குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கவுன்சிலர்கள் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

    இது தொடர்பாக மதுரை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் குழு தலைவர் சோலைராஜா கூறியதாவது:-

    மதுரை மாநகராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 15 பேர் உள்ளோம். இன்று உள்ளாட்சித் தினத்தில் மாநகர சபை குழு கூட்டம் நடத்த அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு வார்டுகளிலும் கவுன்சிலர் தலைமையில் 10 பேர் குழு பட்டியல் கேட்கப்பட்டன.

    நாங்கள் அந்தந்த வார்டுகளில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் சேவை மனப்பான்மை கொண்டவரை இந்த பட்டியலில் உறுப்பினராக சேர்த்து ஒப்புதலுக்காக அனுப்பினோம். ஆனால் நாங்கள் அளித்த அந்த 10 பேர் குழு வில் 5 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். மீதம் 5 பேர் தி.மு.க.வை சேர்ந்த வட்ட செயலாளர், ஏற்கனவே கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் மற்றும் தி.மு.க.வினர் சேர்க்கப்பட்டுள்ளனர். நாங்கள் இவர்களுடன் சேர்ந்து எப்படி செயல்படமுடியும்?

    எங்கள் வார்டுகளில் எந்த பணியும் செய்யாமல் திட்டமிட்டு புறக்கணிப்பு செய்கின்றனர். இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ள மாநகர சபை குழுவிலும் எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திமுகவினரே சேர்க்கப்பட்டுள்ளனர். இது எப்படி நியாயமாகும்.

    ஏற்கனவே மதுரை மாநகராட்சி நிர்வாகம் செயல்படாமல் முடங்கி இருக்கின்றது. வார்டுகளில் எந்த பணியும் நடக்கவில்லை. ஒவ்வொரு மாமன்ற கூட்டத்தின் போதும் மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசுகிறோம். ஆனால் அதற்கு முறைப்படியான எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

    தெருவிளக்கு, பாதாள சாக்கடை, சாலை வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகளை தீர்க்க பலமுறை கோரிக்கை விடுத்தும் எங்களது கோரிக்கைகளை கேட்க மறுக்கிறார்கள். இப்படி செயல்படாத மாநக ராட்சியில் கவுன்சிலராக இருப்பதைவிட இந்த பதவியை ராஜினாமா செய்யும் சூழ்நிலைதான் உருவாகப்போகிறது.

    எனவே அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 15 பேரும் ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை. மக்களுக்கு சேவை செய்ய முடியாத பதவியில் எதற்காக இருக்க வேண்டும்?

    தி.மு.க.வினர் தொடர்ந்து பழிவாங்கும் போக்கில் நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள். இதனை மதுரை மக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வார்டுகளில் எந்த பணியும் நடக்கவில்லை. பணியே நடக்காத வார்டுக்கு குழு ஒரு கேடா? செயல்படாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    முன்னதாக மதுரை மாநகராட்சி ஆணையாளரை நாங்கள் சந்தித்து பேச உள்ளோம்.அவரிடம் நாங்கள் அளித்த மாநகர சபா குழு பட்டியலின்படி மாநகர சபை குழு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவோம்.எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் இந்த கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்.கூட்டத்தையும் நடத்த விட மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 15 பேரும் உடனிருந்தனர்.

    • வைகோவின் பேச்சாற்றல் 4 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததே தவிர தற்போது எதுவும் இல்லை.
    • தற்போது நான் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்குகிறேனே தவிர பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கவில்லை.

    திருப்பூர்:

    ம.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்த அவைத்தலைவர் துரைச்சாமி திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ம.தி.மு.க. இனி தனியாக வளர்வதற்கு வாய்ப்பில்லை. ஏற்கனவே நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் கருணாநிதியின் முன்னணி தோழர்களை ம.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்யக்கூறியதுடன், அவர்கள் தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுதான் உதயசூரியன் சின்னம் கொடுக்கப்பட்டது. அப்படி என்றால் ஏற்கனவே நாம் தி.மு.க.வில் இணைந்துவிட்டோம். இனி தனிக்கட்சி வைத்து நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை.

    வைகோவின் பேச்சாற்றல் 4 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததே தவிர தற்போது எதுவும் இல்லை. இனியும் ஒரு அமைப்பை வைத்து நடத்த முடியாது. தற்போது நான் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்குகிறேனே தவிர பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • கன்னியாஸ்திரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
    • ராஜினாமாவை போப்பாண்டவர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் முள்ளக்கல்லை சேர்ந்தவர் பிராங்கோ முள்ளக்கல். இவர் ஜலந்தர் ஆயராக இருந்தார். அப்போது கன்னியாஸ்திரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அப்போது இந்த பிரச்சினை கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் பிராங்கோ முள்ளக்கல் ஜலந்தர் ஆயர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியானது. அவரது ராஜினாமாவை போப்பாண்டவர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    பாலியல் புகார் தொடர்பாக அவர் ராஜினாமா செய்யவில்லை என்றும், மறைமாவட்ட நன்மைக்காக ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    • செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சியில் நிர்வாகம் வெளிப்படையாக நடைபெறவில்லை.
    • 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கலெக்டர் சங்கீதாவிடம் கொடுத்தனர்.

    மதுரை மாவட்டம் கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தனம், ஜெயலட்சுமி, ஜெயக்கொடி, பஞ்சு, தங்கசாமி, பாண்டியராஜன் ஆகியோர் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் சங்கீதாவை சந்தித்து தாங்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து கோவிலாங் குளம் ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் கலெக்டர் விளக்கம் கேட்டார். அவர்கள் ஊராட்சியில் வெளிப்படை தன்மை இல்லை எனக்கூறி ராஜினாமா செய்வதாக தெரிவித்தனர்.

    ராஜினாமா கடிதம் கொடுத்த பின்பு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நிருபர்களிடம் கூறியதா வது:-

    செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சியில் நிர்வாகம் வெளிப்படையாக நடைபெறவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து கேட்டால் உரிய பதில் இல்லை. வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார்கள். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனை கண்டித்து நாங்கள் ராஜினாமா கடிதத்தை கலெக்டரிடம் கொடுத்துள்ளோம். அவர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் பதவி வகித்தவர் முரளி என்ற ரகுராமன்.
    • ரகுராமன் தனது பதிவியை ராஜினாமா செய்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் பதவி வகித்தவர் முரளி என்ற ரகுராமன். இவரை நேற்று அ.தி.மு.க. வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அ.தி.முக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து கடந்த 9 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக இருந்த முரளி என்ற ரகுராமன் தனது பதிவியை ராஜினாமா செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    கடந்த 35 ஆண்டுகளாக அதிமுக கட்சி பதவியில் வகித்து பல்வேறு கட்சி பணிகளை செய்து வந்தேன். எனது இளைய மகன் திருமணத்திற்கு புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வந்து கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் திண்டிவனத்தில் ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் 39 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதனால் அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து எந்தவித அறிவிப்பும் இன்றி என்னை நீக்கியுள்ளனர் இவ்வாறு அவர் கூறினார்.அவரிடம் நீங்கள்பாஜக கட்சியில் இணைந்துள்ளீர்களா? என நிருபர்கள் கேட்டபோது இதற்கு பதில் கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்று கூறினார்.

    ×