search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத்தில் எங்கள் வேட்பாளரை மிரட்டி வாபஸ் பெற செய்துவிட்டார்கள்... பாஜக மீது ஆம் ஆத்மி பரபரப்பு புகார்
    X

    ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா

    குஜராத்தில் எங்கள் வேட்பாளரை மிரட்டி வாபஸ் பெற செய்துவிட்டார்கள்... பாஜக மீது ஆம் ஆத்மி பரபரப்பு புகார்

    • வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
    • பாஜக தோல்வி பயத்தில் இருப்பதாகவும், அதனால் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை கடத்தியதாகவும் மணீஷ் சிசோடியா விமர்சனம்

    அகமதாபாத்;

    குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகளின் பிரசாரத்தால் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

    இந்நிலையில், தங்கள் வேட்பாளர்களில் ஒருவரை பாஜகவினர் கடத்தி தேர்தல் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று, துப்பாக்கியை காட்டி மிரட்டி வேட்பு மனுவை வாபஸ் பெற செய்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் புகார் கூறி உள்ளனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆம் ஆத்மி கட்சியின் சூரத் (கிழக்கு) வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா பாஜகவினரால் கடத்திச் செல்லப்பட்டதாகவும், காவல்துறையினரால் தேர்தல் அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டு பின்னர் வேறு இடத்திற்கு கொண்டு சென்றதாகவும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் டுவிட்டரில் பதிவிட்டனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ஆம் ஆத்மி கட்சி புகார் அளித்துள்ளது.

    வேட்பாளரையும் அவரது குடும்பத்தினரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை, அவரது வீடு பூட்டி கிடக்கிறது என்றும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

    ஜரிவாலா 500 போலீஸ்காரர்களால் சூழப்பட்டு குஜராத் தேர்தல் தேர்தல் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். பாஜக தோல்வி பயத்தில் இருப்பதாகவும், அதனால் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை கடத்தியதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

    ஜரிவாலாவை இழுத்து வந்து அவரது வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தியதாக கூறி ஒரு வீடியோவை ஆம் ஆத்மி கட்சித் தலைவரான ராகவ் சத்தா, வெளியிட்டார். காவல்துறையும் பாஜக குண்டர்களும் சேர்ந்து, எங்கள் சூரத் கிழக்கு வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலாவை தேர்தல் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று, வேட்புமனுவை வாபஸ் பெறும்படி வற்புறுத்தியதைப் பாருங்கள்... 'சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்' என்ற வார்த்தை ஜோக் ஆகிவிட்டது என அவர் ட்வீட் செய்துள்ளார்.

    கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இது தொடர்பாக டுவிட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில், "எங்கள் சூரத் (கிழக்கு) வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா மற்றும் அவரது குடும்பத்தினரை நேற்று முதல் காணவில்லை. முதலில் அவரது வேட்புமனுவை நிராகரிக்க பாஜக முயற்சி செய்தது. ஆனால் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது. அதன்பின்னர், வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவர் என்ன ஆனார்? கடத்தப்பட்டாரா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. இந்த சம்பவம் ஆம் ஆத்மி கட்சியின் உண்மை முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது என்று பாஜக கூறியுள்ளது.

    Next Story
    ×