search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இன்று மாலை கவர்னரை சந்திக்கிறார் முதலமைச்சர்
    X

    இன்று மாலை கவர்னரை சந்திக்கிறார் முதலமைச்சர்

    • கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
    • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    சென்னை:

    தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கவில்லை.

    இதுதொடர்பாக கவர்னருக்கு தமிழக அரசு பலதடவை கோரிக்கை விடுத்தது. ஆனால் அதற்கு பலன் கிடைக்காததால் கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    கடந்த 1-ந் தேதி அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர். தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, பார்தி வாலா ஆகியோரை கொண்ட பெஞ்ச் இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்தது.

    தமிழக அரசு சார்பிலும், கவர்னர் சார்பிலும் வக்கீல்கள் வாதாடினார்கள். அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். இந்த விவகாரத்துக்காக கோர்ட்டுக்கு வர வேண்டுமா? என்றும் தெரிவித்தனர்.

    சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு கவர்னர் தாமதம் செய்வது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

    அப்போது தமிழக அரசு வக்கீல் கூறுகையில், "கவர்னர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இது தொடர்பாக கோர்ட்டு வழிகாட்டுதல் வேண்டும். தமிழக அரசின் 5 ஆண்டு பதவி காலத்துக்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காவிட்டால் மக்கள் பணி முடங்க வாய்ப்பு உள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது" என்று வாதாடினார்.

    இந்தநிலையில் கவர்னர் சில மசோதாக்களை திருப்பி அனுப்பினார். இதையடுத்து சட்டசபை கூடி அந்த மசோதாக்களை நிறைவேற்றி மீண்டும் கவர்னருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் கவர்னர் அதற்கும் ஒப்புதல் வழங்காமல் மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியதாக தகவல் வெளியானது.

    இதுபற்றியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சில அறிவுறுத்தல்களை வெளியிட்டனர். சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாது என்ற அரசியலமைப்பின் 200-வது பிரிவை சுட்டிக்காட்டினார்கள்.

    மேலும் தமிழக முதலமைச்சர், கவர்னரிடையே பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டி உள்ளது. எனவே முதலமைச்சரை கவர்னர் அழைத்து பேசி இந்த முட்டுக்கட்டைகளுக்கு தீர்வு காண வேண்டும். அப்படி செய்தால் இந்த நீதிமன்றம் வெகுவாக பாராட்டும் என்று நீதிபதிகள் கருத்து வெளியிட்டனர்.

    அதன்பிறகு தமிழக அரசு வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.

    இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

    இதற்கிடையே தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தினார். இதனால் கவர்னருடனான சந்திப்பு தாமதமாகி இருந்தது.

    இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு சந்தித்து பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் பற்றி கவர்னரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவார்.

    குறிப்பிட்ட சில மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதால் மக்கள் நல பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் தகவல்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கி கூறுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஜனவரி 2-வது வாரம் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கவும் கவர்னருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுப்பார் என்று தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×