search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pulwama attack"

    பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் 5 நகரங்களில் தயார் நிலையில் உள்ளது. #PulwamaAttack #CRPFAdvisory
    புதுடெல்லி:

    காஷ்மீரில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை நேற்று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தியது.

    பாகிஸ்தானில் உள்ள பாலகோட் முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அந்த முகாமில் இருந்த சுமார் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இது தவிர பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் முசாபராபாத், சகோதியில் செயல்பட்ட 2 முகாம்களும் நேற்றைய தாக்குதலின்போது அழிக்கப்பட்டன. முகாம்களை இழந்ததோடு, கணிசமான அளவுக்கு முக்கியமான பயங்கரவாதிகளையும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பறிகொடுத்துள்ளது.

    இந்திய விமானப் படையின் குவாலியர் பிரிவில் உள்ள 12 மிராஜ்ரக விமானங்கள் 21 நிமிடங்களில் இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இந்த திடீர் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பயங்கரவாதிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பயங்கரவாதிகள் மீது இதுவரை இல்லாத அளவுக்கு 1000 கிலோ அளவுக்கு இந்தியா வெடிகுண்டுகளை வீசி இருப்பது உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    நேற்றைய தாக்குதலின் போது பாகிஸ்தானுக்குள், இந்திய போர் விமானங்கள் சுமார் 60 கி.மீ. அளவுக்கு சென்று விட்டு வந்தன. இதன் மூலம் பாகிஸ்தானுக்குள் இந்திய விமானபடையால் எப்போது வேண்டுமானாலும் அதிரடியாக ஊடுருவ முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் பாகிஸ்தான் அரசியல்வாதிகளாலும் ராணுவத்தாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    எனவே இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர்கள், பிரதமர் இம்ரான்கானுக்கு நெருக்கடி கொடுத்த படி உள்ளனர். இதைத் தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் நேற்று ராணுவ உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். ஆனால் அவரால் எந்த முடிவும் எடுக்க இயலவில்லை.

    பாகிஸ்தானுக்கு ஏற்கனவே ஈரான் மூலம் நெருக்கடி நீடித்தபடி உள்ளது. ஈரான் எல்லை அருகே ராணுவத்தை குவித்துள்ள பாகிஸ்தான், இந்தியா மீது எப்படி தாக்குதலை தொடங்குவது என்று தயங்கியபடி உள்ளது. இந்த வி‌ஷயத்தில் அவசரப்பட்டால் அது மிகப்பெரிய போருக்கு வழிவகுத்து விடும், அது இந்தியாவை விட பாகிஸ்தானுக்குத்தான் அதிக அழிவை ஏற்படுத்தி விடும் என்பதை உணர்ந்துள்ள இம்ரான்கான் என்ன முடிவு எடுப்பது என்பது புரியாமல் தவித்தபடி உள்ளார்.

    1971-ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்திய விமானப்படை குண்டு மழை பொழிந்து இருப்பதால் பயங்கரவாதிகளும் மிரண்டு போய் உள்ளனர். இந்தியா மீது உடனடியாக நேரடி தாக்குதல் நடத்தும் பலமும் அவர்களிடம் இல்லை. இத்தகைய காரணங்களால் பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் கோழைத்தனமான மறைமுக தாக்குதல்களை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக வட மாநிலங்களில் உள்ள தங்களது சிலிப்பர் செல்களை தூண்டிவிட்டு தாக்குதல் நடத்த முயற்சி செய்வார்கள் என்று மத்திய அரசை உளவுத்துறை எச்சரித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த சிலிப்பர் செல்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். இந்த சிலிப்பர் செல்களை மசூத்அசார் நிறைய மூளை சலவை செய்து வைத்துள்ளான்.

    இந்திய ராணுவத்தால் தனது உறவினர்கள் கொல்லப்படும் போதெல்லாம் இந்த அப்பாவி சிலிப்பர்செல்களை தற்கொலை தாக்குதல் நடத்த தூண்டி விடுவது மசூத்அசாரின் வழக்கமாகும். “புனிதப் போர்” என்று ஏமாற்றப்படும் சிலிப்பர் செல்களும் அதை நம்பி தாமாக முன் வந்து தற்கொலை தாக்குதல் நடத்துவது உண்டு.

    இத்தகைய தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை மீண்டும் எச்சரித்ததைத் தொடர்ந்து வட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து ராணுவ முகாம்கள், விமானப்படை தளங்களில் பாதுகாப்பு 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு மிக, மிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ராணுவத்தினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    அதுபோல குஜராத், பஞ்சாப், காஷ்மீரில் எல்லை நெடுகிலும் நிறுத்தப்பட்டுள்ள வீரர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் பதிலடி தாக்குதலுக்கு தயார் நிலையில் இருக்குமாறு எல்லையில் பாதுகாப்புப் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவமும் திடீர் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு, இந்தியாவின் முப்படைகளையும் மிகப் பெரிய போருக்கு தயாராக இருக்கும் வகையில் மத்திய அரசு களப்பணிகளை செய்து வைத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் சிறிய தாக்குதலுக்கு முயற்சி செய்தாலும் பலத்த பதிலடி கொடுக்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கடல் வழியாக பாகிஸ்தான் வாலாட்ட கூடும் என்று மேற்கு மண்டல கடற்படையையும் முழு அளவில் மத்திய அரசு தயார்படுத்தி உள்ளது. மும்பை கடல் பகுதியில் நூற்றுக்கணக்கான போர் கப்பல்களை இந்தியா தயார் நிலையில் நிறுத்தியுள்ளது.

    அந்தமானில் உள்ள கடற்படையும் விரைந்து வரும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    முக்கிய நகரங்களில் குறிப்பாக மும்பை, டெல்லி மீது பாகிஸ்தான் ராணுவம் அல்லது பயங்கரவாதிகள் கைவரிசை காட்ட முயற்சி செய்யலாம் என்று ராணுவ உளவுப் பிரிவு கூறியிருந்தது. இதையடுத்து டெல்லி, மும்பை நகரங்களில் 72 மணி நேர உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரு நகரங்களிலும் வாகன சோதனை உள்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் குஜராத், பஞ்சாபில் உள்ள 5 முக்கிய நகரங்களும் 72 மணி நேர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த 7 நகரங்களிலும் சந்தேகப்படும்படி ஊடுருவி வருபவர்களை சுட்டுத்தள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நகரங்களில் இருக்கும் “சிலிப்பர்செல்கள்” என்ற சந்தேகப்பட்டியலில் இருப்பவர்கள் மீது 24 மணி நேர கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்திய விமானப்படை 3 முகாம்களை அழித்ததும் குஜராத் மாநிலத்துக்குள் உளவு பார்க்க குட்டி விமானத்தை பாகிஸ்தான் அனுப்பி இருந்தது. அதை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினார்கள். இதையடுத்து குஜராத் மாநிலத்துக்குள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்யலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து குஜராத்தில் எந்த தாக்குதல் முயற்சி நடந்தாலும் பதிலடிக்கு தயாராக இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குஜராத் மாநில போலீசார் அனைவருக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் போலீசார் அனைவரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #PulwamaAttack  #CRPFAdvisory
    இந்திய விமான படையின் மிராஜ் போர் விமானங்கள் பாகிஸ்தான் படையை ஏமாற்றி பயங்கரவாதிகள் முகாம்களை குண்டு வீசி அழித்தது எப்படி? என்ற விவரம் வெளியாகி உள்ளது. #Mirage2000 #PulwamaAttack #IAFAttack
    புதுடெல்லி:

    காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்ரவாதிகள் முகாம்களை குண்டுகளை வீசி அழித்தனர்.

    இந்த அதிரடி தாக்குதலுக்கு ‘மிராஜ்-2000’ போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

    பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு, ரேடார்களை ஏமாற்றி விட்டு வெற்றிகரமாக தாக்குதலை மிராஜ்-2000 விமானங்கள் நிறைவேற்றியது. இந்த போர் விமானங்கள் துல்லியமாக தாக்குதலை நடத்தியது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

    முதலில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு வளையத்தில் குழப்பத்தை உண்டாக்க முடிவு செய்யப்பட்டது அதன்படி இந்தியாவின் மேற்கு-மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பல்வேறு விமானப்படை தளத்தில் போர் விமானங்களும், பிற விமானங்களும் ஒரே நேரத்தில் புறப்பட்டு சென்றன.

    இப்படி ஒரே சமயத்தில் பல விமானங்கள் புறப்பட்டு சென்றதால் அதன் எண்ணம் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் குழம்பி விட்டனர்.

    அப்போது பல்வேறு விமானங்களுக்கும் சென்று பறந்து சென்று கொண்டிருந்த மிராஜ் போர் விமானங்கள் உள்ளிட்ட 12 விமானங்கள் மட்டும் தனிக்குழுவாக பிரிந்து பாகிஸ்தானுக்குள் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தியது.

    தீவிரவாதிகள் முகாம்கள் மீது 1000 கிலோ எடையுள்ள குண்டுகளை வீசியது. 20 நிமிட தாக்குதலை முடித்து விட்டு வெற்றிகரமாக இந்திய பகுதிக்குள் திரும்பின.

    மிராஜ்-2000 ரக விமானங்கள் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். இஸ்ரேல் நாட்டிலிருந்து பெறப்பட்ட பி.ஜி.எம். என்ற நவீன குண்டுகள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன.

    மிராஜ் போர் விமானம் நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளையும் மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. மேலும் பல்வேறு வகையிலான வெடிகுண்டுகள், ஏவுகணைகள் ஆகியவற்றையும் வீசும் திறன் கொண்டது.



    ‘மிராஜ் 2000’ போர் விமானம் 30 ஆண்டுக்கு முன்பே இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. அதன்பிறகு ரூ.20 ஆயிரம் கோடி செலவில் தர மேம்பாடு செய்யப்பட்டது.

    அனைத்து சீதோஷ்ண நிலைகள் மற்றும் குறைந்த உயரத்திலும் பறக்க கூடியது. ஒரு நிமிடத்துக்கு 60 ஆயிரம் அடி என்ற வகையில் தரையிலிருந்து வானில் உயரும்.

    இரவிலும் துல்லியமாக பார்க்க வசதி, கூகுள் வசதியுடன் கூடிய காக்பிட் கண்ணாடிகள் மிகவும் முன்னேறிய வழிகாட்டுதல் வசதி என பல நவீன வசதிகளை உள்ளடக்கியது. 14.36 மீட்டர் நீளமுள்ள இந்த விமானம் 7,500 கிலோ எடை கொண்டது. 17 ஆயிரம் கிலோ எடையை தூக்கி செல்லக்கூடியது.

    ரேடார் கருவிகளாலும் மிராஜ் விமானத்தின் நடமாட்டத்தை கண்காணிக்க முடியாது. இந்த விமானத்தின் தாக்குதல் வெற்றி 100 சதவீதமாகும்.

    இதுபோன்ற காரணங்களால் தாக்குதலுக்கு மிராஜ் விமானங்கள் தேர்வு செய்யப்பட்டன. #Mirage2000 #PulwamaAttack #IAFAttack
    புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா சார்பில் இன்று பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் வெளியாகாது என்று பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். #IndianMoviesBannedinPakistan
    இஸ்லாமாபாத்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய, தற்கொலைத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரி வந்தனர். இந்த நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாங்களை குறிவைத்து இந்திய விமானப்படை விமானங்கள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

    இந்த நிலையில், இந்திய திரைப்படங்களுக்கு பாகிஸ்தான் திரைப்பட விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்திய படங்கள் பாகிஸ்தானில் வெளியாகாது என்று பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை மந்திரி சவுத்ரி ஃபவாத் ஹூசைன் தெரிவித்துள்ளார். இந்திய விளம்பரங்களை புறக்கணிக்கவும் பாகிஸ்தான் தொலைதொடர்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.



    முன்னதாக பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அனைத்து இந்திய திரை தொழிலாளர் சங்கம், இந்திய திரையுலகில் பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த திரைப்பட கலைஞர்களும் பணியாற்ற முடியாது என்று தடை விதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #PulwamaAttack #IndianMoviesBannedinPakistan

    பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல், 40 வீரர்களின் தியாகத்திற்கு கிடைத்த பரிசு என்று கயத்தாறு வீரரின் மனைவி தெரிவித்துள்ளார். #PulwamaAttack #Surgicalstrike2 #Subramaniyan
    கயத்தாறு:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த வீரர் சுப்பிரமணியனும் பலியானார். இதையடுத்து சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி, தந்தை கணபதி மற்றும் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர். அவர்களை பல்வேறு கட்சியினர், அமைப்பினர் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.



    இந்த நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தன. இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு தலைவர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

    இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு சுப்பிரமணியனின் கிராமமான சவலாப்பேரி மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ராணுவ வீரர் சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி மற்றும் தந்தை கணபதி ஆகியோர் சுப்பிரமணியன் படத்திற்கு இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கையால் எங்கள் கிராமமே சந்தோ‌ஷம் அடைந்துள்ளது. இந்திய ராணுவத்திற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இது 40 வீரர்களின் தியாகத்திற்கு கிடைத்த பரிசு ஆகும். இதற்கு இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சுப்பிரமணியனின் தந்தை கணபதி கூறுகையில், ‘பயங்கரவாதிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பது வரவேற்க கூடியது. இதில் அப்பாவி மக்கள் யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது’ என்றார். இதனிடையே சவலாப்பேரி முழுவதும் ஆங்காங்கே இளைஞர்கள், பொதுமக்கள் கூடிநின்று ராணுவ நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர். #PulwamaAttack #Surgicalstrike2 #Subramaniyan
    பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய விமான படை நடத்திய தாக்குதலுக்கு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். #Surgicalstrike2 #Narayanasamy
    புதுச்சேரி:

    புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் பயங்கரவா முகாம்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

    ஜம்மு, காஷ்மீர் அருகே விமான படையினர் நடத்திய தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்திய விமான படை வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    இதுகுறித்து புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், ஜம்மு, காஷ்மீர் அருகிலுள்ள பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படைக்கு என் வணக்கங்களை தெரிவிக்கிறேன். உங்களால் நாட்டுக்கு பெருமை.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    புதுவை முன்னாள் எம்.பி. கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    இன்று அதிகாலை நேரத்தில் இந்திய ராணுவத்தின் விமானப் படையானது பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் மீது குறிப்பாக புல்வாமா தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது சரியான பதிலடி.

    நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன. இது இந்திய மக்களுக்கு மட்டுமல்ல பயங்கரவாதத்தை எதிர்க்கக் கூடிய மனிதாபிமானம் உடைய அத்தனை பேரும் வரவேற்கக்கூடிய செயலாகும்.

    இந்த தருணத்தில் நாம் அத்தனை பேரும் ஜாதி, மதம், பாகுபாடு அத்தனையும் மறந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்களுக்கும், முப்படை தளபதிகளுக்கும், இந்திய பிரதமருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

    மேலும் இந்திய அரசுக்கும், இந்திய ராணுவத்துக்கும் துணை நிற்க வேண்டிய நேரம் என்பதை தெரியப்படுத்த வேண்டியது எனது தேசிய கடமை. உலகில் எந்த பகுதியில் பயங்கரவாதம் இருந்தாலும் எதிர்க்க வேண்டியது மனிதகுலத்தின் தலையாய கடமை. ஜெய் ஜவான், ஜெய்பாரத்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். #Surgicalstrike2 #Narayanasamy
    பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்திய செய்தி மனதுக்கு ஆறுதல் அளிப்பதாகவும், உற்சாகம் தருவதாகவும் அமைந்துள்ளது என்று இல.கணேசன் கூறியுள்ளார். #Surgicalstrike2 #BJP #LGanesan
    மதுரை:

    பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் தமிழகத்தில் இளைஞர்களின் தேசபக்தி உணர்வு பீரிட்டு எழுந்ததை பார்த்தோம்.

    பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியது இதுவரை சந்தித்திராத பெரிய தாக்குதல். இந்திய தேசம் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருந்த இந்த நேரத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரவேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருந்தார்.

    அதன்படி இன்று அதிகாலை இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது துல்லிய தாக்குதல்களை நடத்தி விட்டு வெற்றிகரமாக திரும்பிவிட்டது. இதை யாரும் அரசியல் ரீதியாக பார்க்கக்கூடாது.

    இறந்தவர்களின் ஆன்மா நற்கதி அடையவும், இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டால் ஒட்டுமொத்த தேசமே ஆர்த்தெழுந்து பதிலடிதரும் என்பதை பாகிஸ்தானுக்கு உணர்த்தும் வகையிலும் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

    பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்திய செய்தி மனதுக்கு ஆறுதல் அளிப்பதாகவும், உற்சாகம் தருவதாகவும் அமைந்துள்ளது.

    பா.ஜனதாவை பொறுத்தவரை காஷ்மீர் பிரச்சனை சுமுகமாக தீர்க்கப்பட வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீர் மீட்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.



    தேசிய அளவில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பிரதமர் மோடி தமிழகத்தில் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி 5 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தோம் என்பதை எடுத்துச்சொல்லி பிரசாரம் செய்து வருகிறார்.

    ஆனால் காங்கிரஸ் கட்சி தனி நபருக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார் என்பதை மறந்து கீழ்த்தரமான வார்த்தைகளால் ராகுல்காந்தி அர்ச்சித்து வருகிறார். இது தரமான அரசியலுக்கும், தரமற்ற அரசியலுக்கும் இடையே நடக்கும் தேர்தல்.

    இது லோட்டசுக்கும் (தாமரை), லூட்டர்சுக்கும் (கொள்ளையர்கள்) இடையே நடக்கும் தேர்தல். காங்கிரஸ் என்றாலே ஸ்கேம் (ஊழல்) என்று அர்த்தம். மோடி என்றால் ஸ்கீம் (திட்டம்) என்று அர்த்தம். பிரதமர் மோடிக்கு தேசமே சக்தி. ராகுல்காந்திக்கு குடும்பமே சக்தியாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Surgicalstrike2 #BJP #LGanesan
    எல்லையில் போர் நடந்து இந்தியா தனது பலத்தை காட்டினாலும் பாரதிய ஜனதா வாக்கு வங்கி உயராது என்று முத்தரசன் கூறினார். #Mutharasan #BJP #Surgicalstrike2
    கோவை:

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவையை சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் குறும்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்டு வாழ்த்து தெரிவித்து கொள்கிறது.

    வருகிற தேர்தல் மிக பெரிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியில் 100 நாளில் கருப்பு பணத்தை மீட்போம் என்றார். தற்போது இந்த வாக்குறுதி குறித்து பேச மறுக்கிறார்.

    ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் தமிழ்நாடு தொடர்ந்து பாதிக்கப்பட்ட போது மத்திய அரசு தேவையான நிதி ஒதுக்கவில்லை.

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக பேசினார். ஆனால் அ.தி.மு.க. அரசு மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கிறது.

    அவர்களுடன் தற்போது பா.ம.க. கூட்டணி வைத்துள்ளது. எங்கள் அணி கொள்கை அடிப்படையிலான அணி. மாநில உரிமைகளை காக்க தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து செயல்படுகிறோம்.

    கோவையில் நாளை 7 கட்சிகளின் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து எங்கள் குழு பேசி உள்ளது. முதல் கட்ட பேச்சு வார்த்தையில் திருப்தி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

    நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். தி.மு.க.வுடன் இணைந்து பல்வேறு போராட்டம் நடத்தி உள்ளோம். இந்த கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. பாரதிய ஜனதாவை தோற்கடிக்க சேர்ந்த கூட்டணி.

    மாயமாகி உள்ள சமூக ஆர்வலர் முகிலனை மாநில அரசு தேடி கண்டுபிடித்து கொடுக்க வேண்டும்.

    இந்தியா-பாகிஸ்தான் போர் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும். எல்லையில் போர் நடந்து இந்தியா தனது பலத்தை காட்டினாலும் பாரதிய ஜனதா வாக்கு வங்கி உயராது. இது தேர்தலில் எதிரொலிக்காது.

    தேர்தல் சமயத்தில் இது போன்று பல சாகசங்களை பாரதிய ஜனதா மேற்கொண்டாலும் தேர்தலில் பலிக்காது. அ.தி.மு.க. கூட்டணி மர்ம கூட்டணி. எங்களது கூட்டணி பகிரங்கமான வெளிப்படையான கூட்டணி.

    இவ்வாறு முத்தரசன் கூறினார். #Mutharasan #BJP #Surgicalstrike2
    புல்வாமா தாக்குதல் மற்றும் இந்திய விமான படையின் பதிலடியால் 2 நாடுகளுக்கும் இடையே யுத்தம் ஏற்படும் நிலை உருவாகி விடக்கூடாது என்று வைகோ கவலை தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #Surgicalstrike2 #PulwamaAttack
    திருச்சி:

    திருச்சியில் இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர்களில் முஸ்லிம் ஒருவரும் ஆவார். உணர்ச்சிகளை தூண்டி எரிமலை போல் ஆக்கக்கூடாது. இந்த சம்பவங்களால் 2 நாடுகளுக்கும் இடையே யுத்தம் ஏற்படும் நிலை உருவாகுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது. ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு தலை வணங்குகிறேன்.

    அதே நேரத்தில் பாசிச மனப்பான்மை உடையவர்கள் அதிகாரத்தை தக்க வைப்பதற்காக எந்த செயலுக்கும் துணிவார்கள். பாசிச கொள்கை அடிப்படையில் தான் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த நாடு கலாசாரம், மொழி, இனம், மதம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இங்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி விடக்கூடாது. பிரதமர் நரேந்திர மோடி பாசிச மனப்பான்மையுடன் செயல்படுகிறார். இதனால் விபரீத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

    மாயமான சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி சென்னையில் நாளை நடைபெறும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும். அவரை யாராவது சிறைப்பிடித்தால் உடனே விடுவிக்க வேண்டும். காவல் துறையினர் மீது குற்றச்சாட்டுக்கள் கூறிய நிலையில் அவர் மாயமாகி இருப்பதால் காவல் துறையினர் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவருக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அதற்கு தமிழக அரசும், காவல் துறையும் தான் பொறுப்பு.



    பிரதமர் நரேந்திர மோடி 1-ந்தேதி கன்னியாகுமரி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் வருகை தந்தால் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி எனது தலைமையில் போராட்டம் நடைபெறும். கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்க நரேந்திர மோடி வரவில்லை. முல்லை பெரியாறு, மேகதாது அணைக்கு அனுமதி அளித்துள்ளார். தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். அவர் மீது எனக்கு தனிப்பட்ட பகை எதுவும் கிடையாது. தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதால்தான் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்கள் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கே: பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளதே?

    ப : அது குறித்த முழு தகவல் எனக்கு தெரியவில்லை. தகவல் தெரிந்த பிறகுதான் அது பற்றி கருத்து கூற முடியும். இருப்பினும் எந்த நிலையிலும் யுத்தம் ஏற்படும் நிலை உருவாகி விடக்கூடாது. இதனால் இரு தரப்புக்கும் பெரும் சேதம் ஏற்படும்.

    கே: தி.மு.க-காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி என்று தம்பிதுரை எம்.பி. கூறியுள்ளாரே?

    ப : அரசியல் தலைவர்கள் சொல்லும் கருத்துக்கள்தான் பதில் கருத்துகளாக கூறப்படுகிறது.

    கே: தேர்தல் பிரசாரத்தை எப்போது தொடங்குவீர்கள்?

    ப: நான் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டேன்.

    கே: தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவாகி விட்டதா?

    ப: பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார். #MDMK #Vaiko #Surgicalstrike2 #PulwamaAttack
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்தது குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். #IAFAttack #LoC #VijayGokaley
    புதுடெல்லி:

    புல்வாமா தக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக , ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது. இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசின. இதில் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது.



    இந்த தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவு துறை செயலாளர் விஜய் கோகலே டெல்லியில் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பின்னணியில் உள்ளது. இது தொடர்பாக பலமுறை பாகிஸ்தான் அரசுக்கு தகவல் தந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு மீண்டுமொரு தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்த இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தடுக்கவே, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலக்கோட்டில் உள்ள அந்த இயக்கத்தின் மிகப்பெரிய முகாம் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் உறவினர் ஒருவரும் கொல்லப்பட்டார். பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    இதனையடுத்து பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறித்து அந்நாட்டிற்கு தகவல் கொடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #IAFAttack #LoC #VijayGokaley

    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேரோடு அழிக்க வேண்டும் என்று புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிவச்சந்திரன் மனைவி காந்திமதி கூறியுள்ளார். #PulwamaAttack #SivaChandran #Surgicalstrike2 #IndianAirForce
    அரியலூர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40 பேர் பலியாகினர். இதில் தமிழகத்தில் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவச்சந்திரன் ஆகியோரும் பலியானார்கள்.

    இருவரின் உடல்களும் கடந்த 16-ந்தேதி அவர்களது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பொது மக்கள் ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு திரண்டு நின்ற இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பியதோடு, அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் வலியுறுத்தினர்.

    இதேபோல் சிவச்சந்திரன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், பாகிஸ்தானுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

    மேலும் பலியான சிவச்சந்திரனின் மனைவி காந்திமதியும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டு இருந்த பயங்காரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்தின. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

    திறமையுடன் செயல்பட்ட இந்திய விமானப்படை வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த தாக்குதல் குறித்து சிவச்சந்திரனின் மனைவி காந்திமதி நிருபர்களிடம் கூறியதாவது:-



    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேரோடு அழிக்க வேண்டும். பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    பெண்கள் தங்களது கணவர்களை இழந்து தவிக்கிறார்கள். குழந்தைகள் அப்பா என்று அழைக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் வேரோடு அழிக்க வேண்டும். தற்போது நடந்துள்ள இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதல் சற்றே ஆறுதல் அளித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #PulwamaAttack #SivaChandran #Surgicalstrike2 #IndianAirForce
    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு ராகுல் காந்தி சல்யூட் தெரிவித்துள்ளார். #PulwamaAttack #IAFAttack #LoC
    புதுடெல்லி:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தன.

    இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு தலைவர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் ‘இந்திய விமானப்படை விமானிகளுக்கு சல்யூட்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய தேசிய கொடி லோகோவையும் பதிவிட்டுள்ளார்.

    காங்கிரஸ் கட்சி சார்பிலும் இந்திய விமான படைக்கு பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் வாழ்த்து வெளியிடப்பட்டுள்ளது.

    அதில், ‘‘இந்தியர்களை பாதுகாக்க இந்திய விமான படை மேற்கொண்ட உறுதியான தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு நாங்கள் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறோம் ஜெய்ஹிந்த்’’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.



    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி பெருமைப்படுத்தி உள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறுகையில், ‘‘சகோதி, முசாபராபாத், பாலாகோட் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. உண்மையில் இந்தப் பகுதிகள் நமக்கு சொந்தமானவை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. எனவே நாம் நமது மண்ணில்தான் குண்டுவீசி இருக்கிறோம். இதில் தவறு இல்லை. நம் பகுதியை காக்க நாம் தாக்குதல் நடத்தி இருக்கிறோம்.

    இதுவே அவர்களது (பாகிஸ்தான்) எல்லை என்றால் ஐ.நா. படை மூலம் தான் தாக்குதல் நடத்தி இருக்க முடியும். எங்களை தாக்கினால் நாங்கள் இந்தியாவை ஆயிரம் கூறு போடுவோம் என்று பாகிஸ்தான் மிரட்டி இருந்தது. எனவே 1000 குண்டுகளை இந்தியா வீசியிருப்பது சரியானது என்று குறிப்பிட்டுள்ளார்.

    பா.ஜனதா எம்.பி. இல.கணேசன் கூறுகையில், “40 வீரர்கள் பலியானபோது வேதனை அடைந்தோம். இப்போது பதிலடி கொடுப்பது ஆறுதல் அளிக்கிறது” என்றார். #PulwamaAttack #IAFAttack #LoC
    பாகிஸ்தான் தங்கள் மண்ணில் உள்ள பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐரோப்பிய கூட்டமைப்பு கண்டிப்புடன் கூறியது. #PulwamAttack #EuropeanUnion
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது. இது ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகும்.

    இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை அறிவுறுத்தின.

    இந்த நிலையில் பாகிஸ்தான் தங்கள் மண்ணில் உள்ள பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐரோப்பிய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

    இது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ஐரோப்பிய கூட்டமைப்பின் துணைத்தலைவரும், வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கான உயர்மட்ட பிரதிநிதியுமான பெடெரிகா மோகேரினி, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி முகமது குரேஷியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

    அப்போது இருவரும் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நீடித்து வருவது குறித்து தீவிரமாக விவாதித்தனர். இருநாடுகள் இடையிலான மோதல் போக்கை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும்படி பெடெரிகா மோகேரினி வலியுறுத்தினார்.

    மேலும், ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மட்டும் இன்றி, தங்கள் மண்ணில் இருக்கும் ஒவ்வொரு பயங்கரவாதிகள் மீதும் பாரபட்சமின்றி, கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என அவர் கண்டிப்புடன் கூறினார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்பதே ஐரோப்பிய கூட்டமைப்பின் கருத்தாக உள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×